அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ஷூட்டிங் இந்தியாவில்!


உலகப் புகழ் பெற்ற ஒற்றன் ஜேம்ஸ் பாண்ட் விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளார். அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ஷூட்டிங்கை இந்தியாவில் நடத்தத் திட்டமிட்டுள்ளனராம்.

டெல்லியின் சரோஜினி நகர் மார்க்கெட் மற்றும் அகமதாபாத்தின் நவகாம் நகர் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெறவுள்ளதாம். மேலும் மும்பை மற்றும் கோவா கடற்கரைப் பகுதிகளிலும் ஷூட்டிங் நடைபெறும் என்று தெரிகிறது.

இந்தியாவில் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ஷூட்டிங்கை நடத்தத் தேவையான அனுமதியை மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஏற்கனவே கொடுத்து விட்டதாம். பாண்ட் பட வரிசையில் இது 23வது படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் டெல்லியில் தொடங்கவுள்ளது. சரோஜினி நகர் மார்க்கெட் தவிர அன்சாரி சாலை, தார்யாகஞ்ச் ஆகிய பகுதிகளிலும் ஷூட்டிங் நடைபெறவுள்ளது. சாம் மென்டிஸ் படத்தை இயக்குகிறார். 2012ல் இப்படம் திரைக்கு வரும். பாண்ட் பட நிறுவனம் மற்றும் அப்படத்தின் முக்கிய கேரக்டரான டாக்டர் நோ ஆகியோருக்கு இது 50வது வருடம் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி தவிர வடக்கு கோவா, தென் கிழக்கு ரயில்வேயின் கீழ் வரும் துத்சாகர் சுரங்கப் பாதை, ஜூவாரி ரயில் பாலம் ஆகியவற்றிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

வெளிநாட்டுப் படம் ஒன்றின் ஷூட்டிங் இந்தியாவில் நடைபெறுவது இது முதல் தடவையல்ல. ஏற்கனவே டாம் க்ரூஸ் நடித்த மிஷன் இம்பாசிபிள் உள்பட இதுவரை 22 வெளிநாட்டுப் படங்களுக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்துள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் 007, ஒரு கற்பனைக் கதாபாத்திரமாகும். இயான் பிளமிங் என்ற இங்கிலாந்து எழுத்தாளர் 1953ல் இந்த கதாபாத்திரத்தை வைத்து நூல்களை எழுதினார். மொத்தம் 12 நாவல்களையும், 2 சிறுகதைத் தொகுப்புகளையும் பாண்ட் கேரக்டரை வைத்து அவர் உருவாக்கியுள்ளார். அதை அடிப்படையாக வைத்துத்தான் இதுவரை 22 படங்கள் உருவாகி உலகெங்கும் பாண்ட்டுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களைத் தேடிக் கொடுத்துள்ளன.

1962ம் ஆண்டு முதல் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளியாகத் தொடங்கின. முதல் படத்தின் பெயர் டாக்டர் நோ. இது ஜேம்ஸ் பாண்ட் கதைகளில் இடம்பெறும் முக்கிய கேரக்டராகும். 1964ல் பிளமிங் மரணமடைந்தார். இதையடுத்து பின்னர் வெளியான பாண்ட் கதைகளை கிங்ஸ்லி அமிஸ், ஜான் கார்டினர், ரேமான்ட் பென்சன், செபாஸ்டியன் பால்க்ஸ், ஜெப்ரி டீவர் ஆகியோர் எழுதினர்.

ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்த முதல் நடிகர் சீன் கானரி. மொத்தம் 6 படங்களில் அவர் நடித்துள்ளார். அதிகபட்ச ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்தவர் ரோஜர் மூர். மொத்தம் 7 படங்களில் இவர் நடித்துள்ளார். இவர்களுக்கு அடுத்து, அதிகபட்சமாக 4 படங்கள் வரை பியர்ஸ் பிராஸ்னன் நடித்துள்ளார்.

தற்போது ஜேம்ஸ் பாண்ட் வேடங்களில் நடித்து வருபவர் டேணியல் கிரேக். இவர்தான் இதுவரை நடித்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர்களிலேயே அதிக அளவில் பிரபலமாகாத பாண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்ட் வேடங்களுக்கு நடிக்கப் பொருத்தமில்லாதவர் என்று ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டவர் கிரேக்.

இயான் புரடக்ஷன்ஸ் நிறுவனம்தான் இப்படங்களைத் தயாரித்து வருகிறது. கடைசியாக வெளியான ஜேம்ஸ் பாண்ட் படம் குவான்டம் ஆப் சொலஸ். 2008ல் இது வெளியானது.
 

மைக்கேல் ஜாக்சனின் தோல் மருத்துவரிடம் விசாரிக்க நீதிமன்ற தடை


லாஸ் ஏஞ்சல்ஸ்: மைக்கேல் ஜான்சனின் இறப்பு வழக்கில், அவரது தோல் டாக்டரையும் சேர்த்து விசாரிக்க, லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் தடைவிதித்தது.

பிரபல பாப் பாடகரான மைக்கேல் ஜாக்சன் இறப்பிற்கு அதிக அளவில் அளிக்கப்பட்ட தூக்க மாத்திரையே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. அது தொடர்பாக, அவரது டாக்டர் கன்ராடு முரேயிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, மைக்கேல் ஜான்சன் பல முறை தோல் அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில், தோல் நிபுணராக டாக்டர் அர்னால்டு கெலீன் என்பவரிடமும் விசாரிக்க வேண்டும் என, முரேயின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

ஆனால், இதற்கு நீதிபதி மறுத்துவிட்டார். முன்னதாக, ஜாக்சனின் இறப்பு வழக்கில், சாட்சியளித்த மற்றோரு டாக்டரான ஆடம்ஸ், 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜான்சனுக்கு சிகிச்சை மேற்கொண்டு வந்தவர் முரே. அவரது இறப்பிற்கு 2 மாதங்களுக்கு முன்வரை முரே தான் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

பிரோப்போபோல் மருந்தை, ஜான்சன் விரும்பி உட்கொண்டு வந்தார். அதை அவர் செல்லமாக பால் என்றே அழைப்பார். இந்த மருந்தை தருமாறு, ஜாக்சன் பலமுறை முரேயிடம் கேட்டுள்ளார். என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மைக்கேல் ஜான்சனின் வழக்கில் சிக்கியுள்ள டாக்டர் முரேயின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது. அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 8ம் தேதி நடைபெற உள்ளது.
 

நட்புக்காக பணம் வாங்காமல் கமல்ஹாஸன் நடித்த 'அன்புள்ள கமல்'


தெனாலி, பஞ்சதந்திரம் ஆகிய படங்களை அடுத்து மலையாள நடிகர் ஜெயராமுடன் உலக நாயகன் கமலஹாசன் நடித்த படம் போர் பிரண்ட்ஸ்.

மலையாளப் படமான இதில் கமல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நட்புக்காக நடித்துக் கொடுத்துள்ளார். பொதுவாக இம்மாதிரி சிறப்புத் தோற்றத்துக்கு நல்ல சம்பளம் வாங்கிவிடுவார்கள் கமல் ரேஞ்சில் உள்ள நடிகர்கள். ஆனால் இந்தப் படத்துக்கு காசே வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார் அவர்.

இப்படத்தை தமிழில் 'அன்புள்ள கமல்' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படம் தமிழிலும் வெற்றியைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் கமலுடன் ஜெயராம், ஜெயசூர்யா, குஞ்சாக்கோ போபன், மீரா ஜாஸ்மின் உட்பட பலர் நடித்துள்ளனர்.

சாஜி சுரேந்திரன் இயக்கி உள்ளார். விரைவில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.
 

மம்தாவுக்கு பஹ்ரைன் மாப்பிள்ளை!


மம்தா மோகன்தாஸின் மாப்பிள்ளையாக பஹ்ரைனில் வசிக்கும் அவரது பால் நண்பரை முடிவு செய்துள்ளனர் பெற்றோர்.

சிவப்பதிகாரம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் மம்தா மோகன்தாஸ். குசேலன், குரு என் ஆளு போன்ற படங்களில் நடித்தார். தற்போது அருண் விஜய் ஜோடியாக தடையற தாக்க படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கு மற்றும் கன்னடத்தில் அவர் படங்கள் நடித்து வருகிறார். சினிமாவுக்கு பின்னணியும் பாடி வருகிறார்.

மம்தாவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்த பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வந்தனர்.

தற்போது அவருக்குப் பொருத்தமான வரனை முடிவு செய்துவிட்டனர். மம்தாவின் சிறு வயது நண்பரையே மாப்பிள்ளையாக தேர்வு செய்துள்ளனர். இவர் பக்ரைனில் வசிக்கிறார். திருமண நிச்சயதார்த்தம் நவம்பரில் நடக்கிறது. அடுத்த வருடம் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு வெளிநாட்டில் தங்க முடிவு செய்துள்ளாராம் மம்தா.
 

மங்காத்தா - சினிமா விமர்சனம்


நடிப்பு: அஜீத், த்ரிஷா, அர்ஜுன், அஞ்சலி, லட்சுமி ராய், ஜெயப்பிரகாஷ், பிரேம்ஜி
ஒளிப்பதிவு: சக்தி சரவணன்
இசை: யுவன் சங்கர் ராஜா
இயக்கம்: வெங்கட் பிரபு
தயாரிப்பு: க்ளவுட் நைன் மூவீஸ்

பிஆர்ஓ: விகே சுந்தர் - சுரேஷ் சந்திரா

பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வந்துள்ள அஜீத்தின் பொன்விழாப் படம் மங்காத்தா. அஜீத்துக்காக இந்த ஆட்டத்தில் வென்றிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு என்பதுதான் சரியாக இருக்கும். உள்ளூர் சமாச்சாரத்தை கொஞ்சம் ஹாலிவுட் சாயத்தில் முக்கியெடுத்திருக்கிறார். களைகட்டுகிறது ஆட்டம்!

இந்தியாவின் நிஜ சூதாட்டமான ஐபிஎல் கிரிக்கெட்டில், பெட்டிங் பணமாக கட்டப்படும் ரூ 500 கோடியை அப்படியே தனதாக்கிக் கொள்ள திட்டமிடுகிறார் ஜெயப்பிரகாஷ். இவர்தான் கிரிக்கெட் சூதாட்டத்தின் முக்கியப் புள்ளி.

இந்தப்பணத்தை அவரிடமிருந்து பறிக்கத் திட்டமிடுகின்றனர், ஜெயப்பிரகாஷிடம் வேலைப் பார்க்கும் வைபவ் உள்ளிட்ட நால்வர் கோஷ்டி. இன்னொரு பக்கம், இந்த சூதாட்டத் தொகை பற்றி கேள்விப்படும் போலீஸ் உஷாராகி, அர்ஜுன் தலைமையில் ஒரு போலீஸ் படையை மும்பையில் களமிறக்குகிறது. விஷயம் புரிந்து உஷாராகிறது வைபவ் கோஷ்டி. அப்போதுதான் இந்த நால் அணியை மோப்பம் பிடித்து, அவர்கள் மூலமே விஷயத்தைக் கறந்துவிடுகிறார் அஜீத். சஸ்பென்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி இவர்.

இப்போது இவரும் அந்த ரூ 500 கோடியை தானே திட்டமிட்டுக் கொள்ளையடிக்கிறார் அஜீத். அந்தப் பணத்துக்காக அஜீத், ஜெயப்பிரகாஷ், போலீஸ் அதிகாரி அர்ஜூன் மற்றும் அஜீத்தின் உடனிருக்கும் நால்வரும் பெரும் சேஸிங்கை நடத்துகின்றனர். இதில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் மங்காத்தா ஆட்டத்தின் க்ளைமாக்ஸ்.

தனது 50 வது படத்தை முன்னணி கலைஞர்களுடன் இணைந்து பங்குபோட்டுக் கொண்ட அஜீத்தின் பக்குவத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.

கிட்டத்தட்ட சரிபாதி வெளுத்த நரை, ஐந்தாறு நாள் தாடி, அசத்தலான கறுப்புக் கண்ணாடி கெட்டப்பில் மனதை அள்ளுகிறார் அஜீத். இதற்கு முன் முன்னெப்போதும் பார்த்திராத ஒரு அசத்தல் தோற்றம் இந்தப் படத்தில். எதிர்மறை நாயகன் வேடம் என்றாலே பலவித நடிப்பையும் பரீட்சித்துப் பார்க்கும் ஒரு சுதந்திரமும் தைரியமும் வந்துவிடுகிறது போலும். நடிப்பில் ரசிகர்களுக்கு நல்ல விருந்தே படைத்துவிடுகிறார் அஜீத். சண்டை, நடனம், ரொமான்ஸ் என கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் பவுண்டரி, சிக்ஸர் என வெளுத்திருக்கிறார் அஜீத்.

பல ஆண்டுகளுக்கு தனது 50வது படம் இது என தைரியமாக அவர் சொல்லிக் கொள்ளலாம்.

அஜீத்துக்கு இணையான வேடத்தில் ஆக்ஷன் கிங்காக ஜொலிப்பவர் அர்ஜூன். நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் சண்டைக் காட்சிகள், சேஸிங்குகளில் அர்ஜுன் காட்டும் வேகம் அசாத்தியமானது. ஆங்கிலத்தில் Show stealer என்பார்களே, அது சாட்சாத் அர்ஜூன்தான்!

ஹீரோயின் த்ரிஷாவுக்கு பெரிய ரோல் இல்லைதான். ஆனால் கிடைத்த வாய்ப்பை அழகாகப் பயன்படுத்தி மனதை கவர்கிறார். குறிப்பாக, ரொம்ப அழகாக இருக்கிறார், இதற்கு முந்தைய படங்களில் பார்த்ததை விட!

பிரேம்ஜி வழக்கம்போல. ஆனால் கடி கொஞ்சம் ஓவர். கத்தரி போட்டிருக்கலாம் சில காட்சிகளுக்கு. அஞ்சலியை வீணடித்திருக்கிறார்கள்.

மங்காத்தா பாடலில் லட்சுமிராய் அசத்தல். ஆண்ட்ரியா, வைபவ், ஜெயப்பிரகாஷ் என அனைவரிடமிருந்தும் ஒரு ஆக்ஷன் படத்துக்குத் தேவையானதை பெற்றுக் கொண்டுள்ளார் இயக்குநர்.

மைனஸ் என்று பார்த்தால் படத்தில் வரும் கெட்ட வார்த்தைகள். சென்ஸார் ஊமையாக்கிய பகுதிகளில் இடம்பெறும் வசனங்களை பாத்திரங்களின் வாயசைவை வைத்தே ரசிகர்கள் கண்டுபிடித்து கத்துகிறார்கள். இதை பெண்களால் ரசிக்க முடியுமா (வெளிப்படையாக!) என்பதை யோசித்திருக்க வேண்டும்.

ஆரம்ப காட்சிகள் கொஞ்சம் இழுவைதான். பாத்திரங்களை அறிமுகப்படுத்தவே அரைமணிநேரத்துக்கும் மேல் இயக்குநர் எடுத்துக் கொண்டது சலிப்பை தருகிறது. அஜீத், அர்ஜூன் நன்றாக சண்டை போடுவார்கள் என்பதற்காக எவ்வளவு நேரம்தான் அதையே பார்த்துக் கொண்டிருப்பது என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

டெக்னிக்கலாகப் பார்த்தால், இந்தப் படம் சின்ன பட்ஜெட்டில் ஹாலிவுட் ஸ்டைலில் எடுக்கப்பட்ட படம் எனலாம். ஒளிப்பதிவில் ஜாலம் காட்டியிருக்கிறார் சக்தி சரவணன்.

யுவன் சங்கர் ராஜாவை இன்னொரு ஹீரோ எனலாம். பாடல்கள் எல்லாமே அட்டகாசம். ரசிகர்கள் ஆடித் தீர்க்கிறார்கள் அரங்கில். பின்னணி இசையும் விறுவிறுப்பு கூட்டுகிறது படத்துக்கு.

இந்தப் படத்தின் விளம்பரங்களில் எ வெங்கட் பிரபு கேம் என விளம்பரப்படுத்துகிறார்கள். அது உண்மைதான். அஜீத்துக்காக வெங்கட் ஆடிய இந்த ஆட்டத்தில் 'தல' டாப் கியரில் எகியிருக்கிறார்!
 

'டர்ட்டி பிக்சர்ஸ்' வித்யா பாலனின் 'ஹாட்' படங்கள் வெளியீடு


80களில் தென்னிந்தியத் திரையுலகைக் கலக்கிய கவர்ச்சி நாயகி சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் நாயகி வித்யா பாலனின் படு ஹாட்டான படங்கள் வெளியாகியுள்ளன.

சில்க்கின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் படம் டர்ட்டி பிக்சர்ஸ். இதில் சில்க் வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். நஸிருதீன் ஷா உள்ளிட்டோரும் படத்தில் உள்ளனர்.

இதில் வித்யா பாலன் படு கவர்ச்சிகரமாக பல காட்சிகளில் நடித்துள்ளார். அந்த புகைப்படங்களும், சூடான டிரெய்லரும் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் 80களில் உருவான திரைப்படங்களின் பாணியில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. சில்க் போன்றே கவர்ச்சிகரமான காஸ்ட்யூம்களில் படு கவர்ச்சியாக காட்சியளிக்கிறார் வித்யா பாலன்.

இந்தப் படங்களைப் பார்க்கும்போது சில்க் வேடத்தில் நடிக்க பொருத்தமில்லாதவர் வித்யா என்ற வாதம் அடிபட்டுப் போகும் என்றே தெரிகிறது.
 

மாற்றானிலிருந்து பிரகாஷ்ராஜ் நீக்கம்!


கால்ஷீட் சொதப்பல் மற்றும் சரியான நேரத்துக்கு ஷூட்டிங்கில் பங்கேற்காதது போன்ற விஷயங்களில் பிரகாஷ்ராஜுக்கு நிகர் யாருமில்லை என்பது தமிழ், தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் - இயக்கநர்களுக்கு அத்துப்படி.

இதற்காக இருமுறை தெலுங்கு திரையுலகம் அவருக்கு தடை விதித்து பின்னர் மன்னித்துவிட்டது. இடையில் சில காலம் திருந்திவிட்டதாகக் கூறிவந்தார்.

ஆனால் இப்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது.

கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாற்றான் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது. இதில் பிரதான வேடத்தில் நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்.

இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட போது தாமதமாக வந்த பிரகாஷ்ராஜ், தனக்கு கொடுக்கப்பட்ட விக் சரியாக இல்லை என்று கூறி, நடிக்க மறுத்துவிட்டாராம். ஆனால் காட்சிப்படி அந்த விக் மற்றும் லுக் அவசியம் என்பதில் பிடிவாதமாக இருந்துள்ளார் இயக்குநர் கேவி ஆனந்த்.

ஆனால் இயக்குநரின் பேச்சை கேட்காத பிரகாஷ்ராஜ், படப்பிடிப்புத் தளத்திலிருந்து வெளியேறிவிட்டாராம். இதனால் அன்றைய படப்பிடிப்பையே ரத்து செய்ய வேண்டிய நிலை. அடுத்தடுத்த இரு நாட்களும் பிரகாஷ்ராஜ் ஒத்துழையாமையால் படப்பிடிப்பு தடைபட, படத்திலிருந்தே பிரகாஷ்ராஜை தூக்கிவிட்டார் ஆனந்த்.

இப்போது பிரகாஷ்ராஜுக்குப் பதில் பாலிவுட் நடிகர் சச்சின் கெட்கேகர் நடிக்கிறார். தெய்வத்திருமகள் படத்தில் அமலா பாலுக்கு அப்பாவாக நடித்தவர் கெட்கேகர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ரிலீஸானது மங்காத்தா-ரசிகர்கள் அமோக வரவேற்பு-அதிரடி வெற்றி!


அஜீத்தின் மங்காத்தா படம ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பல தடைகளைக் கடந்து பெரும் எதிர்ப்பார்ப்புகிடையில் வெளியான அஜீத்தின் பொன்விழாப் படமான மங்காத்தாவை அஜீத்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பில்லா படத்துக்குப் பிறகு சொல்லிக் கொள்ளும்படி அஜீத்துக்கு படமே அமையாத நிலையில், இந்த மங்காத்தா படத்தை அவர் ஒப்புக் கொண்டார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாநிதி அழகிரியின் தயாரிப்பில் கடந்த ஓராண்டாக இந்தப் படம் தயாராகி வந்தது. ஆனால் வெளியாகும்போது பல்வேறு சிக்கல்களை இப்படம் சந்தித்தது. படம் வெளியாகும் தேதியை கூட அறுதியிட்டு கூறமுடியாத நிலை.

ஆனால் கடைசி நேரத்தில் ரெட்ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு, படத்தை சன் பிக்சர்ஸ் மூலம் வெளியிட வைத்தார். உடன் ராதிகாவின் சரத்குமாரின் ராடான் மீடியாவும் படத்தை இணைந்து வெளியிட்டது.

இன்று காலை படத்தின் முதல்காட்சிக்கு அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதியது. சிறப்புக் காட்சிகள் காலை 4 மணியிலிருந்தே ஆரம்பித்துவிட்டன. படம் பார்த்த அத்தனை பேரும் மீண்டும் படத்தைக் காண டிக்கெட்டுகளுக்காக அலைய ஆரம்பித்துள்ளனர்.

ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி மற்றும் அடுத்த இரு தினங்களில் வாரவிடுமுறை என தொடர்ந்து ஹாலிடே மூடில் உள்ள ரசிகர்களுக்கு பெரும்திரை விருந்தாக மங்காத்தா அமைந்துவிட்டது. இந்த ஒரு வாரத்தில் பல கோடிகளை மங்காத்தா அள்ளிவிடும் என்பதால் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ரசிகர்களுடன் ரசித்தார் சிம்பு

இன்று காலை சத்யம் தியேட்டரில் மங்காத்தா படத்தை நடிகர் சிம்பு அஜீத் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்து ரசித்தார்.சிம்பு, தான் ஒரு அஜீத் ரசிகர் என்பதை பகிரங்கமாகவே பிரகடனப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இல்ல இல்ல... செப்டம்பர் மாசம்தான்! - நயன், பிரபுதேவா அறிவிப்பு


நயன்தாராவுக்கும் பிரபு தேவாவுக்கும் இரு தினங்களுக்கு முன் ரகசியமாக மும்பையில் திருமணமாகிவிட்டது என நேற்று தகவல் வெளியானது. ஆனால் இதனை இருவரும் மறுத்துவிட்டனர்.

தங்களுக்கு செப்டம்பர் மாதம்தான் திருமணம் நடக்க உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரபுதேவா இயக்கிய செய்த வில்லு படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடித்தார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இரண்டு பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு பிரபுதேவாவின் மனைவி ரமலத் முதலில் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுதொடர்பாக குடும்பநல கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் சமாதானமடைந்து விவாகரத்துக்கு ரமலத் சம்மதித்தார். அதைத் தொடர்ந்து 2 பேருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

பிரபுதேவாவை திருமணம் செய்வதற்கு வசதியாக நயன்தாரா கிறிஸ்தவ மதத்தில் இருந்து மாறி இந்து மதத்தை தழுவினார்.

இதைத் தொடர்ந்து இருவருக்கும் சில தினங்களுக்கு முன் மும்பையில் திருமணம் நடந்ததாக தகவல் வெளியானது. இதை நயன்தார்-பிரபுதேவா இருவருமே மறுத்துவிட்டனர்.

செப்டம்பரில் தங்கள் திருமணம் நடக்கும் என்றும், இந்தத் திருமணம் மும்பை அல்லது ஹஐதராபாத்தில் விமரிசையாக நடைபெறும் என்றும் தெரிகிறது.