இன்னும் 10 பேரை மணக்கப் போகிறேன்-கேத்தி பிரைஸ் பலே பேட்டி


33 வயதான டிவி நடிகையும், மாடல் அழகியுமான கேத்தி பிரைஸ் 2 முறை கல்யாணம் செய்து 2 பேரையும் விவாகரத்து செய்தவர். முதலில் பீட்டர் ஆன்ட்ரேவை மணந்தார். அவர் மூலம் ஜூனியர் மற்றும் பிரின்ஸஸ் டியாமி என இரு குழந்தைகள் கிடைத்தன.

அடுத்து அலெக்ஸ் ரீடை மணந்தார். இவருடன் ஒரே ஒரு ஆண்டு மட்டும் குடித்தனம் நடத்தியவர் கடந்த பிப்ரவரி மாதம் விவாகரத்து செய்தார்.

அப்புறம் அடுத்த திட்டம் என்ன என்று கேத்தியிடம் கேட்டால், எனக்கு நிறைய குழந்தைகள் வேண்டும், நிறைய குதிரைகள் வேண்டும், நிறைய கணவர்களும் வேண்டும். இன்னும் பத்து பேரையாவது மணப்பேன் என்று நினைக்கிறேன் என்கிறார் படு கூலாக.

அடேங்கப்பா, 'பிரைஸ்' ஜாஸ்தியாத்தான் இருக்கு!
 

தமிழுக்கு வருவாரா துங்காஸ்ரீ?


கன்னடத்தில் நடித்து வரும் நடிகை துங்காஸ்ரீ தமிழுக்கும் விரைவில் வருவார் என்று தெரிகிறது.

சின்னட தாலி என்ற படத்தில் நடித்தவர் துங்காஸ்ரீ. கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட இப்படத்தில் அவர் நடித்துள்ளார். இவரை இப்போது தமிழுக்குக் கூட்டி வரும் முயற்சிகளில் சிலர் இறங்கியுள்ளனராம்.

வழக்கமான மசாலாக் கதையுடன் கூடிய படம்தான் இந்த சின்னட தாலி. வீட்டை விட்டு ஓடிப் போகும் பணக்கார வாலிபானும், ஏழைப் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த ஆரம்பிக்கின்றனர். அதன் பிறகு பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர். அதிலிருந்து எப்படி மீளுகின்றனர் என்பதுதான் படத்தின் கதை.

இப்படத்தில் துங்காஸ்ரீக்கு கவர்ச்சிக் காட்சிகள் நிறையவே. நடிப்பை விட இவருக்கு கவர்ச்சிதான் பொருத்தமாக வருவதாக விமர்சனங்களிலும் எழுதித் தள்ளியுள்ளனர். இதனால் கவர்ச்சிப் பாதையில் ராஜ நடை போட முடிவு செய்துள்ளார் துங்காஸ்ரீ என்கிறார்கள்.

இதை அறிந்த கோலிவுட்டினர் துங்காஸ்ரீயை இங்கு கூட்டி வந்து படம் எடுக்க முயற்சிகளில் இறங்கியுள்ளனராம். கன்னடத்தை விட தமிழில் நடித்தால் சீக்கிரமே கல்லா கட்டலாம் என்பதால் துங்காஸ்ரீயும் தமிழுக்கு வர சம்மதிப்பார் என்றே தெரிகிறது.

வாணிஸ்ரீ காலம் முதல் எத்தனையோ ஸ்ரீக்களைப் பார்த்த தமிழ் திரையுலகம், இந்த ஸ்திரீயையும் ஏற்காமலா போய் விடும்!
 

துபாயிலிருந்து திரும்பி மாயமான துணை நடிகை காதலர் வீட்டில் மீட்பு


சென்னை: சென்னை விமான நிலையத்தில் காணாமல் போனதாக தேடப்பட்ட துணை நடிகை, திருவான்மியூரில் காதலனின் வீட்டில் இருந்து போலீசார் மீட்டு கணவரிடம் ஒப்படைத்தனர்.

கன்னியாக்குமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்தவர் ராஜா (35). சினிமா நடனக் கலைஞர். இவரது மனைவி மீனா (25) துணை நடிகை. இவர்களது மகன்கள் அஜீத் (8), ஆனந்த் (6). கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி, துபாயில் நடந்த கலை நிகழ்ச்சிக்காக, சில துணை நடிகைகளுடன் மீனாவும் ஒரு குழுவாக சென்றிருந்தார்.

துபாயில் 3 மாத கலை நிகழ்ச்சிகளை முடித்த குழுவினர், ஜூலை 22ம் தேதி பெங்களூர் வந்து இறங்கினர். அங்கிருந்து 23ம் தேதி காலை பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தனர். மீனாவிற்காக விமான நிலையத்தில் காத்திருந்த ராஜா, மனைவியைக் காணாமல் திடுக்கிட்டு, மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

விமான நிலைய போலீசார் மீனாவின் மொபைல்போன் எண்ணை கண்காணித்தபோது, அவர் திருவான்மியூரில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, திருவான்மியூரில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த ரியாஸ் என்ற உடற்பயிற்சியாளருடன் மீனா இருப்பது தெரிந்தது.

மீனாவிடம் நடத்திய விசாரணையில், என்னை யாரும் கடத்தவில்லை. நான் விருப்பப்பட்டு தான் ரியாஸ் உடன் வந்தேன். ரியாஸூடனே வாழ விரும்புகிறேன், என்றார்.

இந்நிலையில், அவரது மகன்களை பார்த்த உடன் மனம் மாறிய மீனா, கணவருடன் வாழ சம்மதித்தார். ரியாஸ், மீனா ஆகியோருக்கு அறிவுரை கூறிய போலீசார் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
 

வேலூர் மாவட்டம் பூர்ணா!


இன்னும் ஒரு காவல்துறைக் கதைதான் வேலூர் மாவட்டம். அதேசமயம், காவல்துறையை தூக்கிப் பிடிக்கும் வகையிலான கதையுடன் கூடியதாக இந்தப் படம் அமைந்துள்ளதாம்.

மாசிலாமணி படத்தை இயக்கிய ஆர்.என்.ஆர். மனோகர் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் நந்தா. அவருடன் டூயட் பாடி ஆடும் கேரக்டரில் தலை காட்டியுள்ளார் பூர்ணா. கைவசம் பெரிய அளவில் படம் இல்லாமல் காற்று வாங்கிக் கொண்டிருக்கும் பூர்ணா இந்தப் படத்தை எதிர்பார்த்துள்ளாராம்.

காமெடிக்கு சந்தானம், குணச்சித்திர வேடத்துக்கு ஸ்ரீமன் என படத்தில் முக்கியக் கலைஞர்கள் நிரம்பியுள்ளனர்.

காவல்துறை அதிகாரியாக வருகிறாராம் நந்தா. காவல்துறை அதிகாரி வேடங்களில் நடித்த பல ஹீரோக்களுக்கு அது பெரும் உயர்வைக் கொடுத்துள்ளது. அதே போல இந்தப் படமும், நந்தாவுக்கு பெரிய பிரேக் தரும் என்கிறார் இயக்குநர் மனோகர்.

படம் சிறப்பாக வர வேண்டும், கதையில் சிக்கல் வந்து விடக் கூடாது என்பதற்காக சில காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து பல்வேறு ஆலோசனைகளைப் பெற்று அதன்படி திரைக்கதையை வடிவமைத்துள்ளாராம் மனோகர்.
 

மும்பையில் வைத்து நடிகை நயனதாராவை மணம் முடிக்க பிரபுதேவா முடிவு


மனைவி ரமலத்தை விவாகரத்து செய்து விட்ட டான்ஸ் டைரக்டர் பிரபுதேவா தனது காதலியான நடிகை நயனதாராவை மும்பையில் வைத்து மணம் புரிய திட்டமிட்டுள்ளாராம்.

சென்னை அல்லது கேரளாவில் கல்யாணத்தை நடத்தினால் ரசிகர்களும், பத்திரிக்கைக்காரர்களும் 'தொல்லையாக' அமைவார்கள் என்று அஞ்சுவதால் கல்யாணத்தை மும்பைக்கு ஷிப்ட் செய்துள்ளார்களாம்.

மும்பைக்கு கல்யாணத்தை மாற்றலாம் என்று முக்கிய நடிகர் ஒருவர்தான் பிரபுதேவாவுக்கு அட்வைஸ் கொடுத்தாராம். அங்கு வைத்தால்தான் இந்த மீடியா தொல்லையைத் தவிர்க்கலாம் என்பது அவரது அறிவுரையாம்.

மனைவியாக ரமலத் நீடித்து வந்த நிலையில், நயனதாராவுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த பிரபுதேவா, கடும் கஷ்டப்பட்டு சமீபத்தில்தான் ரமலத்தை விவாகரத்து செய்தார். இதையடுத்து தற்போது நயனதாராவைக் கல்யாணம் செய்து கொள்ள படு வேகமாக ஏற்பாடுகளை செய்துவருகிறார்.

சென்னை, ஹைதராபாத், கொச்சி என பல இடங்களை முதலில் பரிசீலித்தனர். இறுதியில், மும்பை என தற்போது தீர்மானித்துள்ளனர்.

மிக மிக நெருங்கிய உறவினர்கள், நட்பு வட்டாரத்தை மட்டும் திருமணத்திற்கு அழைக்கப் போகிறார்களாம் இருவரும்.

நடிகர் சிம்பு, நடிகை மீனா உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுப்பார்களா என்பது தெரியவில்லை!
 

வயித்தெரிச்சலில் வதந்தியைப் பரப்புகிறார்கள்: குத்து ரம்யா குமுறல்


கன்னடத்தில் நம்பர் 1 நடிகையாக இருக்கும் குத்து ரம்யா எனப்படும் திவ்யா ஸ்பாந்தனா தான் சம்பளத்தை உயர்த்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இன்றைய தேதிக்கு கன்னட சினிமாவில் நம்பர் 1 நடிகை திவ்யா ஸ்பாந்தனா. அவர் சினிமாவில் மட்டுமல்ல பிரச்சனைகள் மற்றும் வதந்திகளில் சிக்குவதிலும் நம்பர் 1 தான்.

அண்மையில் தான் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுடன் பெரிய பிரச்சனையாகி இறுதியில் கன்னட நடிகர் அம்பரீஷ் தலையிட்டு பிரச்சனையைத் தீர்த்து வைத்தார்.

திவ்யா நடித்து அன்மையில் வெளிவந்த ‘ஜானிமேரா நாம்', ‘சஞ்சு வெட்ஸ் கீதா' ஆகிய படங்கள் ஹிட்டாகிவிட்டன. இதனால் திவ்யா தனது சம்பளத்தை ரூ. 27 லட்சத்தில் இருந்து 32 லட்சமாக உயர்த்திவிட்டார் என்று கூறப்படுகின்றது.

திவ்யாவுக்கு அடுத்தபடியாக சம்பளம் வாங்குபவர் பிரியாமணி. பூஜா காந்தி ரூ. 22லட்சமும், பாவனா ரூ. 15 லட்சமும் வாங்குகிறார்களாம்.

என்ன திவ்யா திடுதிப்புன்னு சம்பளத்தை உயர்த்திட்டீங்களாமே என்று கேட்டதற்கு,

நான் எதைப்பற்றியும் பேச விரும்பவில்லை. முதலில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுடன் நான் அடிக்கடி தகராறு செய்வதாக சொன்னார்கள். அடுத்து என்னைப் பற்றி இல்லாததும், பொல்லாததுமாய் பரப்பிவிட்டார்கள்.

அவர்கள் அத்தனை செய்தும் நான் வெற்றிகரமாகத் தான் உள்ளேன். நான் நடிக்கவிருக்கும் ‘காந்தி நகர மகாத்மே' இந்திய சினிமாக்களில் முக்கியமானது. அதில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதை பொறுக்க முடியாமல் தான் சிலர் என்னைப் பற்றி வதந்திகளைப் பரப்புகிறார்கள்.

இதில் சில நடிகைகளுக்கும் பங்கு உள்ளது என்று எனக்கு தெரியும். விரைவில் அவர்களை சந்திப்பேன். என் மார்க்கெட்டுக்கு ஏற்பத் தான் சம்பளம் வாங்குகிறேன் என்றார்.

கன்னடத்தில் நம்பர் 1 நடி்கையாக இருந்தாலும் தமிழில் இப்போது பெரிய அளவில் நடிப்பதில்லை திவ்யா என்கிற ரம்யா.
 

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராக தேவா நியமனம்: முதல்வர் உத்தரவு


சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக இசையமைப்பாளர் தேவாவையும், உறுப்பினர்-செயலாளராக குமாரி சச்சுவையும் நியமித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக இசையமைப்பாளர் தேவாவையும், மன்றத்தின் புதிய உறுப்பினர்-செயலாளராக குமாரி பி.எஸ்.சச்சுவையும் நியமித்து முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.