லட்சுமி ராமகிருஷ்ணன் படத்தில் நடிக்கும் மதுபாலா

லட்சுமி ராமகிருஷ்ணன் படத்தில் நடிக்கும் மதுபாலா

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிகை மதுபாலா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆரோகணம் என்ற படத்தை எடுத்து திறமையான இயக்குநர் என்று பெயரெடுத்தவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த திரைப்படத்தில் விஜி சந்திர சேகர் நடித்திருந்தார்.

பல இயக்குநர்கள், விமர்சகர்கள் பாராட்டிய இந்தப் படம் சமீபத்தில் விஜய் விருது விழாவில் சிறப்பு விருதினை பெற்றது.

சிறிய இடைவெளிக்குப் பின்னர் இரண்டாவது படம் ஒன்றை இயக்க ஆரம்பித்துள்ளார். இந்தப் படத்தில் ரோஜா, ஜென்டில்மேன் படத்தில் நடித்த நடிகை மதுபாலா நடிக்க உள்ளார்.

திருமணம், குழந்தைகள் என்று செட்டில் ஆகிவிட்ட மதுபாலா, சீரியலில் நடித்தார். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக முக்கிய வேலைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதாக கூறும் லட்சுமி ராமகிருஷ்ணன், 2014ம் ஆண்டு பிறப்பிற்கு முன்பாகவே தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

நடிகை ஹேமமாலினியின் இளைய மகள் நிச்சயதார்த்தம்

நடிகை ஹேமமாலினியின் இளைய மகள் நிச்சயதார்த்தம்

மும்பை: பாலிவுட் நட்சத்திர தம்பதியான, தர்மேந்திரா - ஹேமமாலினியின் இளைய மகளும், பிரபல ஒடிசி நடன கலைஞருமான, அகானா தியோலின் திருமண நிச்சயதார்த்தம், மும்பையில் நேற்று நடைபெற்றது.

தர்மேந்திராவும், ஹேமமாலினியும், தம்பதியருக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர். தர்மேந்திரா, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்; ஹேம மாலினி, தமிழகத்தின் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர்.

இந்த தம்பதியரியரின் இளைய மகள், அகானா தியோல், 27 ஒடிசி நடனக்கலைஞர். இவர் ஒரு சில திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றினார். ஒடிசி நடனத்தில் திறமை பெற்ற அகானா, பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட நடனங்களிலும், தேர்ச்சி பெற்றவர். பேஷன் டிசைனிங்கிலும், ஆர்வம் உடையவர்.

அகானாவுக்கும், டில்லியைச் சேர்ந்த தொழில் அதிபர், வைபவ் வோராவுக்கும், நேற்று முன்தினம் இரவு, மும்பையில் ஜூஹூ பகுதியில் உள்ள, ஹேமமாலினியின் இல்லத்தில், திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில், பாலிவுட் திரையுலக பிரபலங்கள் மற்றும் வி.ஐ.பி.,க்கள் பங்கேற்றனர். திருமண தேதி பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

ஹேமாமாலினி தர்மேந்திரா தம்பதியரின் மூத்த மகளும், பிரபல பாலிவுட் நடிகையுமான, இஷா தியோலுக்கு கடந்தாண்டு பரத் தகாடனி என்ற தொழில் அதிபருடன், திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

கிண்டலடிப்பதா? ஸ்ருதி நடித்த தெலுங்கு படத்துக்கு பிராமணர்கள் எதிர்ப்பு

கிண்டலடிப்பதா? ஸ்ருதி நடித்த தெலுங்கு படத்துக்கு பிராமணர்கள் எதிர்ப்பு

ஐதராபாத்: நடிகை ஸ்ருதி நடித்துள்ள தெலுங்கு படத்தில் பிராமணர்களை கிண்டல் செய்யும் விதமாக காட்சியமைக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ரவி தேஜா, ஸ்ருதிஹாசன், அஞ்சலி நடித்துள்ள தெலுங்கு படம் ‘பலுபு'. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதில் பிராமணர்களுக்கு எதிரான காட்சியமைப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பிராமணர் சங்கத்தினர், ‘கடந்த ஆண்டு எங்கள் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு எதிராக ஒரு படம் திரைக்கு வந்தது. அதை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். அந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில வெளியான பலுபு படத்தில் கடந்த ஆண்டு நாங்கள் நடத்திய நியாயமான போராட்டதை கிண்டல் செய்யும் விதமாக வசனங்கள் வைத்திருக்கின்றனர். இதற்கு சென்சார் குழுவினர் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சான்றிதழ் அளித்துள்ளனர்.

எங்கள் சமூகத்துக்கு எதிராக உள்ள வசனத்தை நீக்க வேண்டும் என்று சென்சார் குழு, பிலிம்சேம்பர் மற்றும் ஆந்திர அரசுக்கு மனு அளித்திருக்கிறோம்‘ என்றார்.

இதற்கு பதில் அளித்த பட இயக்குனர் மலினேனி கோபிசந்த் கூறும்போது,‘எந்த சமூகத்துக்கும் எதிராக படம் எடுக்கவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையை சுமுகமாக பேசி தீர்ப்போம். படத்தை சங்கத்தினருக்கு திரையிட்டு காட்ட உள்ளோம்‘ என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில்தான் படத்தை தனியாக திரையிட்டுக் காட்ட வேண்டும் என்று பல அமைப்பினரும் போராட்டம் நடத்துவார்கள். இப்போது ஆந்திராவிலும் ஆரம்பித்துவிட்டார்கள் என்கின்றனர் பட தயாரிப்பாளர்கள்.