நடிகர் ரவிச்சந்திரன் தொடர்ந்து கவலைக்கிடம்


நடிகர் ரவிச்சந்திரனின் உடல் நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், நடிகர் ரவிச்சந்திரன் சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நுரையீரல் மற்றும் கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த 5 நாட்களாக கோமாவில் உள்ளார்.

மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவரின் உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
 

''என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா


நடிகை சோனா என்னை வைத்து மலிவான விளம்பரம் தேடிக் கொள்ளும் வேலையில் இறங்கியுள்ளார். இவரது இந்த செயலுக்கு எனது அங்கீகாரத்தை வேறு அவர் எதிர்ப்பார்க்கிறார். இது கடைந்தெடுத்த முட்டாள்தனம், என்று நடிகை நமீதா கூறியுள்ளார்.

இதுகுறித்து நமீதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்த ஆண்டு மட்டுமே இதுவரை ஐந்தாறு படங்களில் நான் நடிக்காமலேயே, என் பெயர், போஸ்டர் அல்லது ரசிகர் மன்றம் என என்னைச் சம்பந்தப்படுத்தி காட்சிகளை வைத்துள்ளனர். என்னைப் போன்ற பிரபல நடிகைகளுக்கு நேரும் வழக்கமான சங்கடம் இது என்பதை நான் புரிந்து கொண்டு இத்தனை நாள் அமைதி காத்தேன். அதற்காக இதுவரை யாரையும் குற்றம் சொன்னதில்லை.

ஆனால் இப்போது நடிகை சோனா என் பெயரைப் பயன்படுத்தி செய்து வரும் செயல் அநாகரீகமானது.

சமீப காலமாக என்னை இமிடேட் செய்வது போலவும் கிண்டலடிப்பது போலவும் சில படங்களில் நடித்து வருகிறார் சோனா. நானும் போனால் போகட்டும் என்று கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டேன். ஆனால் இன்றைய ஆங்கில நாளிதழ் ஒன்றில், 'நமீதாவுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினேன். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. என்னை அவர் பாராட்டவில்லை' என்றெல்லாம் பேட்டி கொடுத்துள்ளார். இதற்கு முன்பும் கூட சில பத்திரிகைகளில் அவர் இப்படிச் சொன்னதாக தெரியவந்துள்ளது.

முதலில் இவர் என் நம்பருக்குத்தான் எஸ்எம்எஸ் அனுப்பினாரா என்று பார்க்கட்டும். அதுபோன்ற எஸ்எம்எஸ் எதுவும் எனக்கு அவரிடமிருந்து வந்ததில்லை.

யார் இந்த சோனா? நான் பதில் சொல்லும் அளவுக்கு இவர் ஒரு நடிகையே அல்ல. நான் எதற்காக இவரிடம் பேச வேண்டும்? முதலில் அவருக்கு அடிப்படை நாகரீகம், மரியாதை ஏதாவது தெரிகிறதா?

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையான என்னை கொச்சைப்படுத்தும் விதத்தில் 'கோ' படத்தில் கேவலமான காட்சியில் நடித்ததற்காக அவரல்லவா வெட்கப்பட வேண்டும்? உண்மையிலேயே இவருக்கு என் மீது மரியாதை இருந்தால், இப்படி ஒரு காட்சியில் நடிக்கச் சொன்னபோதே கோ பட இயக்குநர் கேவி ஆனந்திடம் தனது எதிர்ப்பை இவர் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? அந்தப் படத்தில் வருவதுபோல நான் எந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தேன்...? எந்த அரசியல் கட்சிக்காவது ஆதரவு காட்டினேனா...? அப்படியிருக்கும்போது, என்னை எப்படி இந்த மாதிரி இழிவுபடுத்தலாம்?

என்னைப் பற்றி இதற்கு முன் எத்தனையோ படங்களில் காட்சி வைத்துள்ளனர். அந்தப் படங்களின் இயக்குநர்கள் அல்லது சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் யாரிடமும் நான் அதுபற்றி பேசியது கூட இல்லை. அந்த அளவு நான் உண்டு என் வேலை உண்டு என அமைதியாக இருக்கும் என்னை தேவையில்லாமல் சீண்டுவது ஏன்?

ஆனால் சோனாவின் செயல், இந்த முறை என் பொறுமையை சோதித்துவிட்டது.

இத்தனை தவறுகளை, தனிமனித தாக்குதலை செய்துள்ள சோனா மீது நான்தான் கோபப்பட வேண்டும். இந்த லட்சணத்தில் நான் அவர் எஸ்எம்எஸ்ஸுக்கு பதில் தரவில்லை என்று கூறியுள்ளார் சோனா.

இந்த மாதிரி மலிவான விளம்பரம் தேடிக் கொள்வதை சோனா இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

-இவ்வாறு நமீதா தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏன் கொந்தளித்தார் நமீதா?

சினிமாவில் கவர்ச்சியாக நடித்து பிரபலமானாலும், திரையுலகில் எந்த சர்ச்சையிலும் சிக்கிக் கொள்ளாதவர் நமீதா. அவரைப் பற்றி இதுவரை எந்த கிசுகிசுவும் வந்ததில்லை. அவரது நடத்தை குறித்த தவறான செய்திகளும் கூட எந்தப் பத்திரிகையிலும் இடம்பெற்றதில்லை.

ஆனால் அவர் பெயரை, அவர் தொடர்பான காட்சிகளை புதுப்படங்களில் அதிகம் பயன்படுத்துகின்றனர். தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படத்தில் கூட விவேக் நமீதா ரசிகராக வருவார். இன்னொரு புதுப்படம் எத்தனிலும் நமீதா இடம்பெறும் காட்சி உள்ளது. ஆனால் இதையெல்லாம் நமீதா எதிர்க்கவில்லை.

இந்த நிலையில் கோ படத்தில் நமீதா போல வேடமிட்டு தேர்தல் பிரச்சார மேடையில் இரட்டை அர்த்தத்தில் சோனா பேசுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும் நமீதா போலவே, ரசிகர்களைப் பார்த்து மச்சான்ஸ் மச்சான்ஸ் என்று அவர் அந்தப் படத்தில் இமிடேட் பண்ணியிருப்பார். இதுபற்றி முன்பே நமீதாவிடம் சிலர் கேட்டனர். அதற்கு நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டார் நமீதா. இப்போது சோனாவின் தோவையில்லாத பேட்டி அவரை இந்த அளவு கொந்தளிக்க வைத்துள்ளது!
 

பிரபல பாடகி எமி ஒயின்ஹவுஸ் மர்ம சாவு: வீட்டில் பிணமாக கிடந்தார்


லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த மிகப் பிரபலமான பாடகி எமி ஒயின்ஹவுஸ் (27) அவரது வீட்டில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். அதிகளவில் போதை மருந்தை எடுத்துக் கொண்டதால் அவர் பலியாகியிருக்கலாம் என்று தெரிகிறது.

வடக்கு லண்டனில் உள்ள கேம்டன் சதுக்கத்தில் உள்ள தனது வீட்டில் இவர் நேற்று பிணமாகக் கிடந்தார்.

எமி ஒயின்ஹாசுக்கு போதை மருந்து மற்றும் மதுப் பழக்கம் இருந்தது. அதற்காக மறுவாழ்வு மையத்தில் தங்கி பலமுறை சிகிச்சை பெற்றுள்ளார்.

ஹவுஸ் பேக் டூ பிளாக், சோல் உள்ளிட்ட பாப் இசை ஆல்பங்கள் மூலம் புகழ் பெற்ற இவர் போதை பழக்கத்தால் சீரழிய ஆரம்பித்தார்.

இங்கிலாந்தின் கார்ன்வெல் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது, கடும் போதையில் பாடலையே மறந்துவிட்ட இவர், கூடியிருந்த ரசிகர்கள் மீது எச்சிலைத் துப்பிவிட்டு, இரும்பு மைக்கால் தன்னைத் தானே அடித்துக் கொண்டார். இன்னொரு நிகழ்ச்சியில் போதையில் தடுமாறி கீழே விழுந்தார்ய

இது போன்ற செயல்களால் ரசிகர்களின் ஆதரவை இழந்து வந்தார். இறுதியாக கடந்த மாதம் பெல்கிரேட் நகரில் ஒரு நிகழ்ச்சியில் பாடினார். ஆனால், அங்கும் போதை மருந்து உட்கொண்டு நிகழ்ச்சிக்கு வந்ததால் வாந்தி எடுத்தார், நிகழ்ச்சியில் முறையாகப் பாடவும் இல்லை.

இதைத் தொடர்ந்து அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று வீட்டில் பிணமாகக் கிடந்தார்.

10 வயதாக இருக்கும் போதே தனது நண்பர்களுடன் சேர்ந்து பாப் பாடல்கள் பாடி புகழ் பெற்ற இவர், பேக்டூ பிளாக் ஆல்பம் மூலம் உலகப் புகழ் பெற்றார். இந்த ஆல்பம் 5 கிரம்மி விருதுகளை வென்றது.

பிளேக் பீல்டர் என்பவர் உதவியோடு பாப் இசை உலகில் கால் வைத்த எமி, பின்னர் அவரை விட்டுப் பிரிவதும் சேருவதுமாக இருந்தார். அவரைப் பிரிந்தபோதெல்லாம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, போதைக்கு அடிமையானார். பின்னர் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

ஆனாலும், இவர்களிடையே நடுரோட்டில் கூட அடிதடி சண்டை நடந்து இருவருக்கும் ரத்தக் காயமும் ஏற்பட்டுள்ளது.

 

வி.சி.குகநாதன் ராஜினாமா: 'பெப்சி' தலைவராக எம்.ஏ.ராமதுரை தேர்வு


சென்னை: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன (பெப்சி) தலைவராக இருந்த விசி குகநாதன் ராஜினாமா செய்துவிட்டதால், அவருக்கு பதில் புதிய தலைவராக வி ஏ ராமதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெப்சி பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பெப்சி தலைவர் பொறுப்பில் இருந்த வி.சி.குகநாதன் உடல்நிலை சரியில்லாததால் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். நேற்று (23-ந் தேதி) அவர் கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில், புதிய தலைவராக எம்.ஏ.ராமதுரை தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பெப்சி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை பற்றி தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பிலிம் சேம்பரில் பேசுவதற்கு, பேச்சுவார்த்தை குழு தலைவராக இயக்குனர் அமீர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தகவலை பெப்சி பொதுச்செயலாளர் ஜி.சிவா தெரிவித்துள்ளார்.

 

மம்முட்டி வீட்டில் நாளை மீண்டும் ரெய்டு: அதிகாரிகள் முடிவு


பிரபல மலையாள நடிகர் மம்முட்டி வீட்டில் மீண்டும் சோதனை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த சோதனை நாளை நடக்கவிருக்கிறது.

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் கடந்த 22ம் தேதி காலையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த நட்சத்திரங்களின் சென்னை, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 80 அதிகாரிகள் சோதனை நடத்தியதாகத் தெரிகிறது.

இந்த சோதனைகளில் ரொக்கம், ஆவணங்கள், யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டது.

இதில் மம்முட்டியின் கொச்சி வீட்டில் இருந்து மட்டும் ரூ. 20 லட்சம் ரொக்கம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

இந்த சோதனைகள் நடந்தபோது மம்முட்டி சென்னையில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கொச்சி சென்ற அவரிடம் வருமான வரித்துறையினர் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.

அவரிடம் ரூ. 20 லட்சம் ரொக்கம் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. இது தொடர்பாக உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்படும் என்று மம்முட்டி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாளை மீண்டும் மம்முட்டி வீட்டில் சோதனை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

 

சிரஞ்சீவியின் 24 மணி நேர செய்தி சேனலுக்கு மத்திய அரசு அனுமதி!


தெலுங்கில் சிரஞ்சீவி தொடங்கவிருக்கும் புதிய 24 மணி நேர செய்திச் சேனலுக்கு அனுமதி வழங்கிவிட்டது மத்திய அரசு என செய்திகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் காங்கிரஸில் இணைந்துள்ள பிரஜா ராஜ்யம் தலைவர் சிரஞ்சீவி தெலுங்கில் 24 மணி நேர செய்தி சேனலை தொடங்குகிறார்.

இந்த சேனலுக்கு ‘பவர் நியூஸ்’ என்று பெயரிட்டுள்ளார். சிரஞ்சீவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 22-ல் தன் ஒளிபரப்பைத் தொடங்குகிறது பவர் நியூஸ்.

இந்த தொலைக்காட்சிக்கான அனுமதியை மத்திய அரசு சமீபத்தில் சிரஞ்சீவியின் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.

“நடுநிலையான செய்தி சேனல் ஒன்றை தொடங்க வேண்டும் என்பது என் லட்சியங்களில் ஒன்று. அது கிட்டத்தட்ட கைகூடி வந்துவிட்டது. நல்ல செய்தி சேனலுக்கு உதாரணமாக பவர் நியூஸ் திகழும்’ என ஒரு சமீபத்தில் சினிமா விழாவில் சிரஞ்சீவி பேசியது குறிப்பிடத்தக்கது.

 

புதிய தலைவரை தீர்மானிக்க ஆக 28-ல் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம்!


சென்னை: புதிய தலைவரை தீர்மானிக்க வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூடுகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த ராம நாராயணன் பதவி விலகினார். தற்காலிக தலைவராக எஸ் ஏ சந்திரசேகரன் பொறுப்பேற்றார்.

இவர் இந்த பதவியில் தொடர, சங்கத்தின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு காட்டி வந்தனர்.

இந்த நிலையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு பட அதிபர்கள் சங்க பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

துணைத் தலைவர் அன்பாலயா கே.பிரபாகரன், செயலாளர் கே.முரளீதரன், பொருளாளர் காஜா மைதீன் உள்பட பல பட அதிபர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், காலியாக உள்ள செயலாளர் பதவிக்கு பொறுப்பு செயலாளராக கதிரேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தை ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தின்போது, சங்கத்தின் புதிய தலைவர் குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

 

அன்னக்கொடியும் கொடிவீரனும் பாரதிராஜாவும்!


மண்ணின் மைந்தன் பாரதிராஜா தன் அடுத்த படைப்புக்கான பணியை ஆரம்பித்துவிட்டார்.

அவர் இயக்கத்தில் வெளியான லேட்டஸ்ட் படம் பொம்மலாட்டம். பாரதிராஜா என்ற அற்புதமான கலைஞன், இன்னும் ஜீவனும் துடிப்பும் கொண்ட படைப்பாளியாய் திகழ்வதை பறைசாற்றிய படம் அது.

இப்போது தனது அடுத்த படைப்பாக ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்தை அறிவித்துள்ளார்.

இந்தப் படத்துக்கான கதை திரைக்கதை எழுதும் பணியை சமீபத்தில் நிறைவு செய்துவிட்ட பாரதிராஜா, தேனி, தென்காசி பகுதிகளில் படத்துக்காக லொகேஷன் பார்த்து வருகிறார்.

இந்தப் படத்தில் மீண்டும் தன் நண்பன் இசைஞானியுடன் கைகோர்க்கிறார் பாரதிராஜா. வைரமுத்துவும் இளையராஜாவும் இந்தப் படம் மூலம் மீண்டும் இணையவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படம் குறித்து பாரதிராஜா சமீபத்தில் கூறுகையில், “இந்தப் படம் இந்த பாரதிராஜாவின் இன்னொரு பரிமாணம். இன்றைய இயக்குநர்கள் பலர் என் படத்தை முன்னுதாரணமாகச் சொல்கிறார்கள். என்னை விட அற்புதமாக அவர்கள் சினிமா எடுத்தாலும், மரியாதை காரணமாக அப்படிச் சொல்வது எனக்குப் புரியாமலில்லை.

ஆனால் இப்போது நான் எடுக்கப்போகும் ‘அன்னக் கொடியும் கொடி வீரனும்’ படம், அடுத்த முப்பது வருடங்களுக்கு பேசப்படப் போகும் படமாக இருக்கும் என்பதை மட்டும் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்,” என்றார்.

 

ரஜினிக்காக காத்திருக்கும் ஏ ஆர் ரஹ்மான்!


பொதுவாக இன்றைக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை வேண்டும் என்றால் படத்தை முடித்துவிட்டு பல மாதங்கள் வரை கூட காத்திருக்கும் நிலைதான் உள்ளது.

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி விஷயத்தில் நிலைமை தலைகீழ். ரஹ்மான் பாட்டு தயாராக உள்ளது. அதை ஓகே செய்ய ரஜினியின் வருகைக்காக காத்திறார்கள்.

ராணா படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். இதுவரை நான்கு பாடல்களை தயார் செய்துவிட்டாராம் ரஹ்மான். ரஜினி வந்து கேட்டுவிட்டு ஓகே செய்தால் வைரமுத்து தன் வேலையை ஆரம்பித்துவிடுவார்.

ரஜினி இப்போது ஓய்விலிருப்பதால், இன்னும் சில தினங்களில் ட்யூன்களை கேட்டு திருத்தங்களைச் சொல்லிவிடுவார் என எதிர்ப்பார்க்கிறார்கள்.

பொதுவாக ரஹ்மான் வேறு எந்த நடிகருக்காகவும் இந்த மாதிரி காத்திருப்பதில்லை. ஆனால் ரஜினி விஷயத்தில் அவர் விரும்பி காத்திருக்கிறார். இதுகுறித்து ரஹ்மான் இப்படிக் கூறுகிறார்:

“ரஜினி சாருடன் பணியாற்றுவது மிகவும் சந்தோஷமான அனுபவம். அவருக்காக காத்திருக்கிறேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். என் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து அவர் என்னைப் பார்க்கிறார். பல சிக்கலான தருணங்களில் அவரது வார்த்தைகள் உந்துதலாக இருக்கின்றன. அவரிடம் நான் கற்றுக் கொண்டது நிறைய. அவர் திரும்ப பழைய உற்சாகத்துடன் வந்து பட வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். அவருக்காக காத்திருக்கிறேன். ராணாவுக்கு நான்கு பாடல்கள் ரெடி. ரஜினி சார் கேட்டுவிட்டு திருத்தங்கள் சொல்ல வேண்டும். அவ்வளவுதான்,” என்றார்.

பொதுவாக அதிகம் பேசாத ரஹ்மான் இந்த அளவு உணர்ச்சிவசப்பட்டு பேசுவது இதுவே முதல்முறை.

சமீபத்தில் கூட, லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஹ்மான், அங்கு ரஜினியின் ரோபோ பாடலை இசைத்தபோது, ரஜினியின் படம் அரங்கிலிருந்த பெரிய திரைகளில் ஒளிரச் செய்தார். ரஜினி படத்தை பார்த்ததும் அந்த அரங்கில் இருந்த அனைவரும் கைதட்டி ரசித்தனராம். இதனை தனது தளத்தில் ‘ரோபோ ரஜினி’க்கு கிடைத்த வரவேற்பு என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார் ரஹ்மான்.