இன்று முதல் இளையராஜா ஃபேன் கிளப்... ஒரு கோடி உறுப்பினர்களுடன் ஆரம்பம்!

இன்று முதல் இளையராஜா ஃபேன் கிளப்... ஒரு கோடி உறுப்பினர்களுடன் ஆரம்பம்!

மதுரை: இன்று முதல் இளையராஜாவின் ஃபேன் கிளப் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிறது. எடுத்த எடுப்பிலேயே ஒரு கோடி உறுப்பினர்களுடன் இந்த அமைப்பு செயல்படும் என்று அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார் இசைஞானி இளையராஜா.

இந்த விழாவின் ஹைலைட்... இளையராஜா ஃபேன் கிளப் எனும் பெயரில், இளையராஜாவின் ரசிகர்களை ஒருங்கிணைப்பதாகும்.

கடந்த ஒரு மாத காலமாக இந்த ரசிகர் மன்ற அமைப்பில் உறுப்பினர் சேர்ப்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்று முதல் சுமார் 1 கோடி உறுப்பினர்களுடன் இந்த அமைப்பு செயல்படத் தொடங்குகிறது.

இதனை இளையராஜாவே இன்று மேடையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார். இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இளையராஜாவின் மகள் பவதாரிணியும், ட்ரஸ்டிகளாக இயக்குநர் ரத்னகுமார் மற்றும் தயாரிப்பாளர் வேலுச்சாமியும் இருப்பார்கள் என அறிவிக்கபப்ட்டுள்ளது.

 

பாப் மன்னன் “மைக்கேல் ஜாக்சன்” கெட்டப்பில் “கானா பாலா”

சென்னை: "மொழிவது யாதெனில்' படத்தில் ஒரு பாட்டுக்கு "மைக்கேல் ஜாக்சன்" வேடத்தில் குத்தாட்டம் போட்டுள்ளார் "கானா" பாலா.

யுவராஸ் இண்டெர்நேஷனல் தயாரிக்கும் படம் "மொழிவது யாதெனில்". இந்தப் படத்தில் பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தரின் மகன் விராஜ், ராஜன், ரியாஷ், தேஜ், மீனு கார்த்திகா, லஸ்யா, பாலு ஆனந்த், தேனி முருகன், அஞ்சலிதேவி உட்பட பலர் நடிக்க கதை எழுதி இயக்கி உள்ளார் எஸ்.கோபாலகிருஷ்ணன்.

இந்தப் படத்துக்காக நித்யன் கார்த்திக் இசையமைபில் நிகரன் எழுதிய, ‘அட்டக்கத்தி... மொக்க பீசு.... வெத்துவேட்டு... சப்பகேசு..." என்கிற தத்துவார்த்தம் மிக்க பாடலை கானா பாலா பாடியதுடன் படத்தில் அந்தப் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் ஆடிப் பாடி நடித்திருக்கிறார்.

பாப் மன்னன் “மைக்கேல் ஜாக்சன்” கெட்டப்பில் “கானா பாலா”

இந்தப் பாடல் பற்றி இசையமைப்பாளர் நித்யன் கார்த்திக் கூறுகையில், "இப்போது வரும் படங்களில் கானா பாலா, தவறாமல் ஒரு பாடலை பாடி நடித்து விடுகிறார். கானா பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பை அவரது பாடல்கள் உருவாக்கி தருகிறது.

அதே போல "மொழிவது யாதெனில்" படத்தில் கானா பாலாவுக்காக ஒரு பாடலை பிரத்யேகமாக வெஸ்டர்ன் மெட்டில் உருவாக்கி அவரை பாட வைத்தோம். இந்தப் பாடல் அவருடைய பாடல்களில் மிகவும் முக்கியமானதாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

 

'ரெண்டு டிக்கெட் கிடைக்குமாய்யா?'- மதுரை இசைக் கச்சேரி ஏற்பாட்டாளர்களிடம் கேட்ட இளையராஜா!!

மதுரை: இளையராஜாவின் சங்கீதத் திருநாள் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து அனைவரும் கேட்டு வந்த கேள்வி, டிக்கெட் கிடைக்குமா? என்பதுதான்.

கடைசியில் இந்த கேள்வியை இளையராஜாவே கேட்கும் அளவுக்கு டிக்கெட்டுகளுக்கு ஏக டிமாண்டாகி, விற்றுத் தீர்ந்துவிட்டன என்பதுதான் உண்மை.

இளையராஜா கச்சேரி.. அதுவும் நம்ம மண்ணில் முதல் முறையாக நடக்குது என்ற பெருமையும் மகிழ்ச்சியும் ஒவ்வொரு மதுரைவாசிகளிடமும் பார்க்க முடிந்தது.

'ரெண்டு டிக்கெட் கிடைக்குமாய்யா?'- மதுரை இசைக் கச்சேரி ஏற்பாட்டாளர்களிடம் கேட்ட இளையராஜா!!

காலையிலிருந்தே களைகட்டியிருந்தது மதுரை தமுக்கம் மைதானம். ஆன்லைன் புக்கிங் முழுவதும் முடிந்துவிட்டதால், டிக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்ட மையங்களில் ஏக டிமான்ட்.

டிக்கெட் கிடைக்காதவர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை ஏதோ ஒருவிதத்தில் பிடித்து நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

மேற்கொண்டு டிக்கெட்டுகள் கிடைப்பது கஷ்டம் என்ற சூழல். அப்போது தன் உதவியாளர்களில் ஒருவரான கண்ணனுக்கு ஒரு போன். வந்தது இசைஞானி இளையராஜாவிடமிருந்துதான்...

"என்னய்யா டிக்கெட் தீர்ந்துடுச்சாமே... ரெண்டு டிக்கெட் கிடைக்குமா பாரு. என்னோட நண்பர்கள் ரெண்டு பேர் கேட்கிறார்கள்," என்றாராம்.

பாருங்க.. கச்சேரியை நடத்துற நம்ம சாருக்கே டிக்கெட் கிடைக்கவில்லை எனும் அளவுக்கு போயிடுச்சி நிலைமை.. என்றார் அவர்.

 

இன்று மதுரையில் இளையராஜாவின் இன்னிசை விருந்து!

இன்று மதுரையில் இளையராஜாவின் இன்னிசை விருந்து!

மதுரை: இன்று இசைஞானி இளையராஜா முதல் முறையாக மதுரை மாநகரில் மிகப் பெரிய இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.

இளையராஜாவின் சங்கீதத் திருநாள் என்ற பெயரில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கிறது இந்த இன்னிசை நிகழ்ச்சி.

இளையராஜா பிறந்தது தேனி மாவட்டம் பண்ணைப் புரத்தில் என்றாலும், அவர் உலகம் போற்றும் இசையமைப்பாளராக உச்சம் தொட்ட பிறகு, மதுரையில் இசைக் கச்சேரி நடத்தியதில்லை.

இப்போதுதான் முதல் முறையாக இசைக் கச்சேரி நடத்துக்கிறார். இளையராஜாவுடன் பணியாற்றும் 80-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சி இது. சர்வதேசத் தரத்தில் இந்த இசை நிகழ்ச்சி இருக்க வேண்டும் என்பது ராஜாவின் ஆசை. அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ராஜாவின் இசைக் கலைஞர்கள் மூன்று தினங்களுக்கு முன்பே மதுரைக்கு வந்துவிட்டனர். இங்கே வைத்து தொடர்ந்து ஒத்திகைகள் நடந்து வருகின்றன.

டிக்கெட்டுகள் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டுள்ளன.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள், கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். வெளிநாடுகளிலிருந்தும் பல ரசிகர்கள் இந்த இசை நிகழ்ச்சியைக் காண டிக்கெட் எடுத்து மதுரைக்கு வந்துள்ளனர்.

இந்த இசை நிகழ்ச்சி பற்றிய செய்திகளை இன்று மாலை உங்கள் ஒன்இந்தியாவில் உடனுக்குடன் பார்க்கலாம்!