தூங்கா வனம் படப்பிடிப்பு முடிந்தது... கேக் வெட்டி கொண்டாடிய கமல்!

கமல் ஹாஸன், த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் தூங்கா வனம் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததாக இன்று கமல் ஹாஸன் அறிவித்துள்ளார்.

ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கமல் ஹாஸன் தயாரித்து, திரைக்கதை எழுதி நடித்துள்ள படம் தூங்கா வனம்.

Thoonga Vanam shooting completed

ராஜேஷ் எம் செல்வா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் சுகா வசனம் எழுதியுள்ளார். பிரகாஷ்ராஜ், கிஷோர், ஆஷா சரத் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Thoonga Vanam shooting completed

தெலுங்கில் சீகட்டி ராஜ்யம் என்ற பெயரில் வெளியாகும் இந்தப் படத்திந் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையிலும், இறுதிக் கட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப் புறங்களிலும் நடந்தது.

வைரமுத்து எழுதி, ஜிப்ரான் இசையில் கமல் பாடிய ஒரு பாடலுடன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. விரைவில் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று கமல் ஹாஸன் அறிவித்துள்ளார்.

Thoonga Vanam shooting completed

படப்பிடிப்பு நிறைவடைந்ததை, கேக் வெட்டி கொண்டாடினர் கமல் ஹாஸன் மற்றும் குழுவினர்.

 

சண்டி வீரன் விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
3.0/5

நடிகர்கள்: அதர்வா, ஆனந்தி, லால், போஸ் வெங்கட்

Chandi Veeran (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

ஒளிப்பதிவு: பிஜி முத்தையா

இசை: அருணகிரி, சபேஷ் - முரளி

தயாரிப்பு: பாலா

இயக்கம் : சற்குணம்

தண்ணீர் பிரச்சினை என்று வந்தாலே பக்கத்து மாநிலங்கள் மட்டுமல்ல, பக்கத்து பக்கத்து கிராமங்கள் கூட பகை நிலங்களாக மாறி வெட்டிக் கொள்வதை விறுவிறுப்பான கதையாக சொல்லும் படம் சண்டி வீரன்.

Chandi Veeran Review

காவிரி பாயும் டெல்டா மாவட்டமான தஞ்சையின் மன்னார்குடிக்குப் பக்கத்தில் உள்ள நெடுங்காடு மற்றும் வயல்பாடி கிராமங்களுக்கிடையே தண்ணீர்ப் பிரச்சினை. நெடுங்காட்டில் நல்ல தண்ணீர் குளமிருக்கிறது. உப்புத் தண்ணீர் குடித்து குடித்து பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு செத்து விழும் வயல்பாடி மக்களுக்கு, அந்தக் குளத்திலிருந்து ஒரு சொட்டு நீர் தர மறுக்கிறார்கள் நெடுங்காடு மக்கள். குறிப்பாக பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரனும் கவுன்சிலர் லாலும்.

இந்தப் பிரச்சினைக்காக இரு கிராமத்தினருக்குமிடையே நடந்த சண்டையில் நெடுங்காட்டைச் சேர்ந்த கொல்லப்படுகிறார் போஸ் வெங்கட். அவரது மகன் அதர்வா சிங்கப்பூருக்குப் போய், விசா முடிந்தும் தங்கியிருந்த குற்றத்துக்காக தண்டனை பெற்று ஊர் திரும்புகிறார். வயல்பாடி மக்களின் கஷ்டம் அறிந்து அவர்களுக்கு உதவ முயல்கிறார்.

இதனிடையே லாலின் மகள் ஆனந்திக்கும் அதர்வாவுக்கும் காதல் ஏற்பட, இதைத் தெரிந்து அதர்வாவை எச்சரிக்கிறார் லால். கேட்க மறுக்கும் அதர்வாவை போட்டுத் தள்ள ஏற்பாடு செய்கிறார்.

Chandi Veeran Review

இந்த நேரத்தில்தான், நெடுங்காடு கிராம தலைவர் ரவிச்சந்திரன் ஒரு விபத்தில் சிக்குகிறார். இதற்கு காரணம் வயல்பாடியைச் சேர்ந்தவர்தான் என்று கூறி, அந்த ஊரையே பழிவாங்க நெடுங்காடு மக்களை ஆயுதங்களுடன் திரட்டுகிறார் லால். அந்தக் கலவரத்தில் அதர்வாவையும் போட்டுத் தள்ள திட்டமிடுகிறார்.

இதைத் தெரிந்து கொண்ட அதர்வா, அந்த பெரும் கலவரத்தைத் தடுக்க முயற்சிக்கிறார். அதில் எப்படி வெற்றி காண்கிறார்? ஆனந்தியைக் கைப்பிடித்தாரா? வயல்பாடி மக்களுக்கு நல்ல தண்ணீர் கிடைத்ததா? என்பது மீதிக் கதை.

இரண்டு மணி நேரத்துக்குள் முடிகிற மாதிரி பரபரவென ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் சற்குணம். முதல் பாதியில் கலகலப்பும், இரண்டாம் பாதியில் விறுவிறுப்புமாகப் போகிறது கதை. ஆனால் களவாணி மாதிரியோ, வாகை சூடவோ போலோ இல்லாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாக இருந்திருக்கிறார்.

Chandi Veeran Review

நாயகன் அதர்வா, கிராமத்து இளைஞனாக கவர்ந்தாலும், அவரது உச்சரிப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

தோற்றம், நடிப்பில் நெடுங்காட்டுப் பெண்ணாகவே தெரிகிறார் ஆனந்தி. மிகை ஏதும் இல்லாத நடிப்பு.

மில்லுக்காரராக வரும் லால் மிகக் கச்சிதமாக நடித்திருக்கிறார். பஞ்சாயத்துத் தலைவராக வரும் ரவிச்சந்திரன், அதர்வாவின் நண்பர்கள், நெடுங்காடு கிராமவாசிகள் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சபேஷ் முரளியின் பின்னணி இசை காட்சிகளுக்குப் பொருத்தமாக உள்ளது. அருணகிரி இசையில் பாடல்களும் கேட்கும்படி உள்ளன.

நெலாவுல தண்ணி இருக்கான்னு
ராக்கெட்டு அனுப்புறோம்
பூமியில குடிநீர விலைபோட்டு விக்கிறோம்

Chandi Veeran Review

என்ற வரிகள் ஒவ்வொருவரையும் வெட்கித் தலைகுனிய வைக்கின்றன. ஆனால் சில காட்சிகளை இன்னும் உணர்வுப்பூர்வமாக, அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். ஏற்கெனவே பகை கொண்ட இரண்டு ஊர் பற்றிக் கொண்டு எரியப் போகும் தகவலைச் சொன்னால் போலீஸார் இப்படியா நடந்து கொள்வார்கள். இது சினிமாத்தனமாக உள்ளது.

ஆனால் இன்றைய கிராமங்கள், அதன் மனிதர்கள், பிரச்சினைகளைப் பதிவு செய்த விதத்துக்காக சண்டி வீரனைப் பார்க்கலாம்!

 

ஒரு வாரத்தில் ரூ 50 கோடியை வசூலித்த இந்தி த்ரிஷ்யம்!

இந்தியில் சரியாகப் போகவில்லை என்று கூறப்பட்ட த்ரிஷ்யம், ஒரு வாரத்தில் ரூ 50 கோடியை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜய் தேவ்கன், ஸ்ரேயா, தபு நடிப்பில் வெளியான த்ரிஷ்யம், முதல் வாரத்தில் மட்டும் ரூ. 50 கோடி வசூலைப் பெற்றுள்ளது.

Dhrishyam Hindi collects Rs 50 cr in first week

ஜூலை 31 அன்று வெளியான இந்தப் படம் ஆரம்ப வார முடிவில் மட்டும் (வெள்ளி, சனி, ஞாயிறு) ரூ. 30.03 கோடி வசூல் செய்தது. (வெள்ளி - ரூ. 8.50 கோடி, சனி - ரூ. 9.40 கோடி, ஞாயிறு - ரூ. 12.13 கோடி)

அதன் பிறகும் இதன் வசூல் பரவாயில்லை எனும் அளவுக்குத் தொடர்கிறது. திங்கள் - ரூ. 4.05 கோடி, செவ்வாய் - ரூ. 4.50 கோடி, புதன் - ரூ. 4.10 கோடி, வியாழன் - ரூ. 3.60 கோடி என முதல் வாரத்தில் மட்டும் ரூ. 46.28 கோடி வசூல் பெற்றுள்ளது. நேற்று கிடைத்த வசூலுடன் சேர்த்து இதுவரை ஒட்டுமொத்தமாக ரூ. 50 கோடி வரை அள்ளியுள்ளது.

நிஷிகாந்த் காமத் இயக்கிய இந்தப் படம், முதல் வாரத்தில் ரூ 100 கோடி க்ளப்பில் சேரமுடியவில்லை என்றாலும், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால், வெற்றிப் படமே!

 

இந்த தீபாவளிக்கு கமல்- அஜீத் மோதல்?

இந்த தீபாவளிக்கு தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீசில் கடும் போட்டி இருக்கும் போலிருக்கிறது.

சத்தமில்லாமல் தூங்காவனம் படத்தை சீக்கிரமே முடித்துவிட்ட கமல் ஹாஸன், அதை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டு வேலைப் பார்த்து வருகிறார்.

Kamal - Ajith clash on Diwali day?

இதே தேதியில் சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தை வெளியிடப் போவதாக தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் அறிவித்திருந்ததை நேற்றே வெளியிட்டிருந்தோம்.

இரண்டுமே பெரிய நடிகர்களின் படங்கள். குறைந்தது 400 அரங்குகளாவது கேட்பார்கள். இதுதான் இப்போதுள்ள சிக்கலே.

இரண்டு படங்களுக்கும் சேர்த்து 800 அரங்குகளை ஒதுக்குவது இப்போதைய சூழலில் கடினம் என்கிறார்கள்.

கமல் ஹாஸன் படத்தைப் பொருத்தவரை அடுத்த மாதமே அனைத்துப் பணிகளும் முடிந்து, படம் தயாராகிவிடும். ஆனால் அஜீத் படம் இன்னும் 30 சதவீதம் ஷூட்டிங் பாக்கியுள்ளது.

எனவே அஜீத் படம் வருகிறதோ இல்லையோ.. கமல் படம் தீபாவளிக்கு நிச்சயம் என்பதுதான் இப்போதைய நிலவரம் என்கிறார்கள்.

 

கல்லூரி காலத்து காதலை இப்போது திரும்பிப் பார்க்கக் கூடாது!- ஐஸ்வர்யா ராய்

கல்லூரி காலத்தில் யாருக்கும் காதல் இருக்கலாம். அது சககஜமும் கூட. ஆனால் அதிலிருந்து வந்த பிறகு மீண்டும் திரும்பிப் பார்க்கக் கூடாது என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

குழந்தை பிறந்த பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய், இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

Dont look back your college day love affairs - Aishwarya Rai Bachchan

சமீபத்தில் மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த அவரிடம், "இந்த வயதிலும் அழகை அப்படியே பராமரிக்கிறீர்களே.. அதன் ரகசியம் என்ன?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராய், "எனது அழகு ரகசியம் என்பது பழைய வாழ்க்கையை திரும்பி பார்க்காமல் இருப்பதுதான். என் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடந்திருக்கின்றன.

இப்போது அவற்றில் இருந்து விடுபட்டு புது வேலையை துவங்கி இருக்கிறேன். நான் இப்போது திருமணம் ஆனவள். என் குடும்பத்தின் கௌரவத்தையும் மரபையும் கட்டிக்காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.

அதிலிருந்து எப்போதும் நழுவ மாட்டேன். யாருக்கும் காதல் இருக்கலாம். கல்லூரி வாழ்க்கையில் காதலிப்பது சகஜமானது. ஆனால் அதில் இருந்து வெளியே வந்த பிறகு திரும்பி பார்க்கக் கூடாது. நினைக்கவும் கூடாது. அதுதான் வாழ்க்கைக்கு நல்லது," என்றார்.

 

புகைப் பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்!- ஆர்யா

இனி வரும் படங்களில் புகைப் பிடிக்கும் காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று நடிகர் ஆர்யா தெரிவித்தார்.

"வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' என்ற திரைப்படத்தின் விளம்பரத்திற்காக வெள்ளிக்கிழமை மதுரை வந்த நடிகர் ஆர்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Arya says no to smoking scenes in future movies

"இது என்னுடைய 25-ஆவது படம். ஒவ்வொரு நடிகருக்கும் 25-ஆவது படம் என்பது ஒரு மைல்கல். இதனை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான "ஷோ பீப்பிள்' நிறுவனம் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளேன்.

வருகிற 14-இல் படம் வெளிவர உள்ளது.

நடிகர் சங்கத் தேர்தலில் இளைஞர்கள் பொறுப்பு வகிக்க வேண்டும் என்பது மட்டுமே விஷால் அணியின் விருப்பமாகும். இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தால் பல நல்ல காரியங்களை முன்னெடுத்துச் செல்ல முடியும். இதைக் கருத்தில் கொண்டுதான் நடிகர் சங்கத் தேர்தலில் இளம் நடிகர்கள் போட்டியிடுகிறோம்.

திரைப்படங்களில் நடிகர்கள் மது அருந்துவது, புகைபிடிக்கும் காட்சிகள் கதையின் தேவையைப் பொருத்து அமைக்கப்படுபவை. பொதுமக்கள் யாரும் அவற்றைப் பின்பற்ற வேண்டாம். ஒரு நடிகனாக எனக்கும் சமூக அக்கறை உண்டு. இதைக் கருத்தில் கொண்டு இனி வரும் படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளைத் முடிந்தவரை தவிர்க்க முடிவெடுத்துள்ளேன்," என்றார்.

 

ரஜினிக்கு யார்தான் வில்லன்னு சீக்கிரம் சொல்லுங்கப்பா!

ரஜினிக்கு யார்தான் வில்லன்னு சீக்கிரம் சொல்லுங்கப்பா!

ரஜினி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கப் போவது யார் என்பது குறித்து விதவிதமான தகவல்கள் உலா வருகின்றன.

Who is going to play Rajini's Villain?

ரஞ்சித் இயக்கும் இந்தப் படத்தில் முதலில் பிரகாஷ்ராஜ்தான் வில்லனாக நடிப்பார் என்று கூறப்பட்டது.

இப்போது அந்த வேடத்தில் சத்யராஜ் நடிப்பார் என்கிறார்கள். ஆனால் அவர் அதற்கு ஒப்புக் கொண்டாரா என்பது சந்தேகமே.

காரணம் கடந்த சில ஆண்டுகளாக ரஜினியைப் பற்றி மிகுந்த வன்மத்துடன் பேசி வருபவர் சத்யராஜ்.

இத்தனைக்கும் மூன்று முகம் படத்தில் ரஜினிக்கு வில்லனாகத்தான் சத்யராஜ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து தம்பிக்கு எந்த ஊரு படத்தில் பிரதான வில்லனாக நடித்தார். மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிக்கு இணையான வேடம் அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் ஹீரோவாகிவிட்டார்.

சிவாஜி த பாஸ் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க அழைத்தபோது, நடிக்க மறுத்ததுடன், என் படத்தில் ரஜினி வில்லனாக நடிப்பாரா? என்று கேட்டார்.

அமைதிப்படை 2 பட விழாவில் இதைக் குறிப்பிட்ட சத்யராஜ், வில்லனாக நடித்து யாரிடமும் அடிவாங்க நான் தயாராக இல்லை என்று கூறியது நினைவிருக்கலாம்.

எனவே சத்யராஜ் படத்தில் நடிப்பாரா என்பது கேள்விக்குறிதான்.

அப்படியெனில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கப் போவது யாரு? இன்னும் இரண்டு வாரங்கள் காத்திருங்க, பதில் கிடைத்துவிடும் என்கிறார் தயாரிப்பாளர் தாணு!