கோலி சோடாகாரங்க எனக்கு பணம் தரலீங்க - பவர் ஸ்டார் புலம்பல்

கோலி சோடாகாரங்க எனக்கு பணம் தரலீங்க - பவர் ஸ்டார் புலம்பல்

கோலி சோடா படத்தில் நடித்த தனக்கு அந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான விஜய் மில்டன் பணம் தராமல் ஏமாற்றியதாக பவர் ஸ்டார் சீனிவாசனம் புலம்பியுள்ளார்.

இன்றைய சினிமா எனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன், "கோலி சோடா படத்தில் நடிக்க 6 நாட்களுக்கு கால்ஷீட் கேட்டார்கள். ஆனால் மூன்றே நாட்களில் முடித்துவிட்டார்கள்.

இதில் நடிக்க ஒரு சிறிய தொகையை மட்டும் முதலில் கொடுத்தாங்க. மீதிப் பணத்தை அப்புறம் தர்றதா சொன்னவங்க, கடைசி வரைக்கும் தரவே இல்லை.

கேட்டா, கொடுக்க முடியாது போய்யா.. யார் கிட்ட வேணா சொல்லிக்க'ன்னு கேவலமாக பேசறாங்க.

ஆனா பலரும் நான்தான் அடுத்தவங்களை ஏமாத்தறதா சொல்றாங்க. உண்மையில நான் கஷ்டப்பட்டு உழைக்கிறேன். அந்த உழைப்புக்குக் கூட உரிய பணம் தராம ஏமாத்தறாங்க," என்றார்.

 

இனி எங்கப்பா படத்தை போட்டு கிங்மேக்கர்னெல்லாம் எழுதக்கூடாது.. புரிஞ்சுதா?- விஜய்

சென்னை: நடிகர் விஜய்க்கும் அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரனுக்கும் மோதல் முற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் விளைவாக, ரசிகர் மன்ற நிர்வாகிகளை தன் நீலாங்கரை வீட்டுக்கு அழைத்து ஆலோசனை நடத்திய விஜய், இனி மன்றம் குறித்து தன் தந்தை எஸ்ஏசியிடம் யாரும் கலந்தாலோசிக்கத் தேவையில்லை என்று கறாராகக் கூறிவிட்டாராம்.

இனி எங்கப்பா படத்தை போட்டு கிங்மேக்கர்னெல்லாம் எழுதக்கூடாது.. புரிஞ்சுதா?- விஜய்

கஷ்டப்பட்டு சினிமாவில் பெரிய இடத்தைப் பெற்றுள்ள விஜய்யை அரசியலில் பெரிய ஆளாக ஆக்க வேண்டும் என்பது அவர் தந்தை எஸ் ஏ சியின் கனவு.

அதற்காக மெல்ல மெல்ல காய் நகர்த்தி வந்த அவருக்கு பெரும் அடியாக விழுந்தது தலைவா விவகாரத்தில் தமிழக முதல்வரின் நிலைப்பாடு.

அரசியல் பற்றிய பேச்சை எடுப்பதையே தவிர்க்க ஆரம்பித்துள்ளார் விஜய்.

தலைவாவுக்குப் பிறகு விஜய்யின் சினிமா மற்றும் ரசிகர் மன்ற நடிவடிக்கைகள் அனைத்திலும் ஒதுங்கியே நிற்கிறார் எஸ் ஏ சந்திரசேகர்.

இந்த நிலையில் சமீபத்தில் 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை தனது நீலாங்கரை இல்லத்துக்கு அழைத்த விஜய், 'இனி மன்றத்தின் பேனர்கள், போஸ்டர்களில் எஸ்ஏசி பெயரை, படத்தைப் போடக்கூடாது.. குறிப்பாக கிங்மேக்கர் என்றெல்லாம் எழுதக்கூடாது' என்று உத்தரவிட்டுள்ளாராம்.

வழக்கமாக இதுபோன்ற கூட்டங்கள், விஜய்யின் வடபழனி கல்யாண மண்டபத்தில்தான் நடக்கும். ஆனால் இனி அங்கு யாரும் போக வேண்டாம்... நீலாங்கரை வீட்டுக்கே வந்துவிடுங்கள் என்று விஜய் கூறிவிட்டாராம்.

தந்தையும் மகனும் இப்படி மோதிக் கொள்ளக் காரணம் என்று மன்றத்தின் செயலாளரான புஸ்ஸி ஆனந்தைக் குறிப்பிடுகிறார்கள். இவர் புதுவை மாநில புஸ்ஸி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ.

அவரோ, இந்த விவகாரத்தில் அனைத்து முடிவுகளையுமே விஜய்தான் எடுத்தார். ஒருவேளை அவர் தன் தந்தையுடன் கலந்து பேசிக்கூட இப்படியொரு முடிவை எடுத்திருக்கலாம், என்கிறார் ஒரேயடியாக‍!

 

பாலாவுக்கு தேவையா இது?

காலம் சென்ற பாலு மகேந்திராவின் உடலுக்கு அவரது மூன்றாவது மனைவியான மௌனிகாவை அஞ்சலி செலுத்த விடாமல் தடுத்தார் என்று இயக்குநர் பாலா மீது பலரும் பரவலாக குற்றம்சாட்ட ஆரம்பித்துள்ளனர்.

இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு கிட்டத்தட்ட வளர்ப்பு மகன் மாதிரி இருந்தவர்தான் பாலா. பாலு மகேந்திராவின் மனைவி அகிலாவையே தன் சொந்தத் தாயாக பாவித்து வந்தார். வெளியிலும் அவர் அப்படித்தான் சொல்லிக் கொள்வார்.

பாலு மகேந்திரா 2000-ல் நடிகை மௌனிகாவை திருமணம் செய்து கொண்டார். இதனை ஒரு பத்திரிகை மூலம் ஊர் உலகத்துக்கு அம்பலமாக்கியும்விட்டார்.

பாலாவுக்கு தேவையா இது?

இருவரும் சிலமுறை கணவன் மனைவியாக நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில்தான் பாலு மகேந்திரா மரணத்தைத் தழுவினார். அவருக்கு மாரடைப்பு என்ற தகவல் வந்ததுமே, விஜயா மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார் மௌனிகா.

ஆனால் பாலாதான், 'இந்தப் பக்கம் மௌனிகா வந்தால் நடப்பதே' வேறு என்று மிரட்டியதாக குற்றம்சாட்டியுள்ளார் மௌனிகா.

அதன்பிறகு பாலுமகேந்திரா மரணித்துவிட்ட செய்தி வந்ததும், ஒரு மனைவியாக அவருக்கு அஞ்சலி செலுத்த முயன்றபோது, மௌனிகா வரக்கூடாது என்பதில் அடமாக இருந்தாராம் பாலா.

மூத்த இயக்குநர் பாரதிராஜாவே கூறியும்கூட, இந்த விஷயத்தில் பாலா சமாதானமாகவில்லைாயாம். பாலு மகேந்திராவின் மனைவி அகிலா, மகன் ஷங்கி போன்றவர்களே கூட, சரி பரவாயில்லை, வந்துவிட்டுப் போகட்டும் என்று கூறிய பின்னரும் மௌனிகாவை வர விடாமல் தடுத்து நின்றது பாலாதான் என்கிறார்கள்.

பின்னர் இயக்குநர் சங்க நிர்வாகிகள், பாரதிராஜா உள்ளிட்டோர் மீண்டும் பாலாவிடம் பேசிய பிறகே அமைதியானாராம். நிலைமை புரிந்து போலீஸ் துணையுடன் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுப் போனார் மௌனிகா.

'தாலி கட்டிய கணவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஒரு மனைவிக்குள்ள உரிமையைத் தடுக்க பாலா யார்?' இதுதான் பாலாவின் நண்பர்களே கூட இப்போது எழுப்பும் கேள்வி.

இது தேவையா பாலா?

 

லண்டனில் குழுமும் இளையராஜா ரசிகர்கள்... 29வது சந்திப்பு!

சென்னை: இசைஞானி இளையராஜாவின் யாஹு குழும ரசிகர்கள் கலந்துரையாடல் அடுத்து லண்டனில் நடக்கப் போகிறது. ஹூத்ரூவில் இந்தக் கூட்டம் நடைபெறும்.

மார்ச் 2ம் தேதி லண்டனில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரம், கால அளவு, கூட்டம் நடைபெறும் இடம் உள்ளிட்டவை குறித்த விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று யாஹு குழும நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் குழுமும் இளையராஜா ரசிகர்கள்... 29வது சந்திப்பு!

இளையராஜாவின் ரசிகர்கள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் இளையராஜா யாஹு குழுமம், கடந்த பல வருடங்களாக அவ்வப்போது கூடி இளையராஜாவின் பாடல்கள், இசை குறித்த கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் சென்னையில் 28வது இளையராஜா யாஹு குழுமக் கூட்டம் நடந்தது. அதில் பெரும் திரளானோர் கூடி அருமையான கலந்துரையாடலை மேற்கொண்டனர். இந்த நிலையில் தற்போது 29வது கலந்துரையாடல் லண்டனில் நடைபெறப் போகிறது.

இங்கிலாந்தில் வசிக்கும் ராஜா ரசிகர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு இசைஞானி குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளலாம் என்று குழும நிர்வாகிகள் அழைத்துள்ளனர்.

இளையராஜா யாஹு குழுமத்தில் இணையவும், மேலும் தகவல்களை அறியவும் http://groups.yahoo.com/group/ilaiyaraaja என்ற முகவரிக்குச் சென்று பார்க்கலாம்.

 

காதலர் தினத்தன்று சிம்புவை 'கை கழுவிய' ஹன்சிகா?

காதலர் தினமான பிப்ரவர் 14-ம் தேதி சிம்புவைப் பிரிந்த செய்தியை சிம்பாலிக்காக சொல்லியிருக்கிறார் ஹன்சிகா, தன் ட்விட்டர் பக்கத்தில்.

சிம்புவும் ஹன்சிகாவும் தங்கள் காதலைச் சொன்னது இதே ட்விட்டரில்தான். ஒரு நாள் அதிகாலை இருவரும் காதலிப்பதாக ட்வீட் செய்து பரபரப்பு கிளப்பினர்.

ரொம்ப குறுகிய காலமே இந்த காதல் நிலைத்தது. ஹன்சிகாவுடன் காதல் செய்து கொண்டே, தனது அடுத்த படத்துக்காக முன்னாள் காதலி நயன்தாராவை கரெக்ட் பண்ணிக் கொண்டிருந்தார் சிம்பு.

காதலர் தினத்தன்று சிம்புவை 'கை கழுவிய' ஹன்சிகா?

இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கும் செய்தி வெளியானதும், ஹன்சிகா தன் கோபத்தை வெளிப்படையாகவே காட்டினார்.

அடுத்து ட்விட்டரிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்தார்.

இப்போது மீண்டும் ட்விட்டருக்கு வந்துள்ள ஹன்சிகா, காதலர் தினத்தன்று, தனக்கு யாருடனும் உறவில்லை என்றும், 'சிங்கிளாக' மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். 'Celebrating my day with my single ladies!' - இதுதான் அந்த ட்வீட்!

 

40 லட்சம் பேர் பார்த்த கோச்சடையான் ட்ரைலர்!

ரஜினியின் கோச்சடையான் படத்தின் ட்ரைலர் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இதுவரை எந்த தமிழ்ப் படத்தின் ட்ரைலருக்கும் கிடைக்காத 40 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து ரசித்த ட்ரைலர் என்ற பெருமை கிடைத்துள்ளது.

யு ட்யூபில் சில மாதங்களுக்கு முன் இந்த ட்ரைலர் வெளியானபோது, முதல் வாரத்திலேயே இரண்டு மில்லியன் பேர் பார்த்திருந்தார்கள்.

40 லட்சம் பேர் பார்த்த கோச்சடையான் ட்ரைலர்!

இப்போது படத்தின் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 40 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது கோச்சடையான்.

தமிழில் வேறு எந்த நடிகரின் படத்தின் ட்ரைலக்கும் இந்த அளவு பார்வையாளர்கள் கிடைக்கவில்லை.

கோச்சடையான் படம் வரும் ஏப்ரல் 11-ம் தேதி உலகமெங்கும் 10 மொழிகளில் வெளியாகிறது. 6000 திரையரங்குகளில் இந்தப் படத்தை திரையிடுகிறார்கள்.

 

இது கதிர்வேலன் காதல்- விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
3.0/5

நடிப்பு: உதயநிதி ஸ்டாலின், சந்தானம், நயன்தாரா, நரேன், சரண்யா, மயில்சாமி, ஜெயப்பிரகாஷ்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியன்

தயாரிப்பு: ரெட் ஜெயன்ட் மூவீஸ்

இயக்கம்: எஸ் ஆர் பிரபாகரன்

காதல் என்றாலே பிடிக்காத அப்பா நரேனின் மகன், ஆஞ்சநேய பக்தன் உதயநிதி ஸ்டாலின். அப்பாவுக்கு விரோதமாக காதலித்து திருமணம் செய்து கோவையில் வாழும் அக்கா சாயா சிங் வீட்டில் பிரச்சினை.

அதைச் சரிசெய்ய கோவை வருகிறார் உதயநிதி. எதிர்வீட்டில் நயன்தாரா. 'அந்தப் பெண்ணை மட்டும் பார்க்காதே... அந்த வீட்டுக்கும் உங்க மாமாவுக்கும் சண்டை' என சாயா சிங் எச்சரிக்க, சொல்லி வைத்த மாதிரி நயன்தாராவைப் பார்க்கிறார்.. காதல் கொள்கிறார் உதயநிதி.

இது கதிர்வேலன் காதல்- விமர்சனம்

இந்தக் காதலுக்கு உதவியாக நண்பர் சந்தானம். இன்னொரு பக்கம் நயன்தாராவை எப்படியாவது மடக்கிவிடத் துடிக்கிறார் சுந்தர்.

அப்பாவை சமாதானப்படுத்தி, காதலியை உதயநிதி எப்படி அடைகிறார் என்பது இடைவேளைக்குப் பிந்தைய பகுதி மற்றும் க்ளைமாக்ஸ்.

ஒரு கல் ஒரு கண்ணாடி வெற்றியைத் தக்க வைக்க வேண்டிய கட்டாயம் உதயநிதிக்கு. சுந்தர பாண்டியன் வெற்றியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரனுக்கு.

இரண்டு படங்களிலின் கலவையாக இந்த கதிர்வேலன் காதலை உருவாக்கியிருக்கிறார்கள். அருவெறுப்பு, டாஸ்மாக் காட்சிகள் இல்லாமல் இந்தப் படத்தை உருவாக்கியிருப்பது சிறப்பு.

உதயநிதி முதல் படத்தில் ஓகே என்றால், இந்தப் படத்தில் டபுள் ஓகே. ரொம்ப இயல்பாக நடித்திருக்கிறார்.

இது கதிர்வேலன் காதல்- விமர்சனம்

நயன்தாரா ரேஞ்சுக்கு அழுத்தமான பாத்திரமில்லை இது. ஆனால் அவரது ஸ்க்ரீன் பிரசன்ஸ் நன்றாக இருக்கிறது. சில காட்சிகளில் முகத்தில் சீனியாரிட்டி எட்டிப் பார்ப்பதை ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் கவனிக்கத் தவறிவிட்டார் போலிருக்கிறது.

உதயநிதி - நயன்தாரா இருவரது பொருத்தமும் உறுத்தாமல் இருப்பதே பெரிய விஷயம்தான்!

வழக்கம்போல இந்தப் படத்தையும் சந்தானம்தான் தன் தோள்களில் சுமக்கிறார். ஆனால் அவரது ஒன்லைனர்கள் இந்த முறை அவ்வளவு பஞ்சிங்காக இல்லை. பல காட்சிகளில் வலிந்து எழுதப்பட்டவையாக இருப்பதால் சிரிப்பை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

அக்காவாக வரும் சாயா சிங், அவரது கணவர், அப்பா நரேன், அம்மா சரண்யா, எதிர்வீட்டுக்கார ஜெயப்பிரகாஷ், அவர் ஜோடியாக வரும் வனிதா, சுந்தர் ராமு.. அந்த கேரளப் பெண் என மற்ற கேரக்டர்கள் அனைத்திலும் டிவி சீரியல் பாணி.

ஒரே காட்சியில் வந்தாலும் வெடிச்சிரிப்புக்கு உத்தரவாதம் தருபவர் பல குரல் மன்னன் மயில்சாமி. அவரை வைத்து பல ஆண்டு குடும்ப சண்டையை தீர்க்கும் விதம் ட்ராமாவாக இருந்தாலும், நல்ல டெக்னிக்.

இது கதிர்வேலன் காதல்- விமர்சனம்

முணுக்கென்றால் ஒரு பாட்டு... நயன்தாரா - உதயநிதி மட்டும் நான்கு பாடல்களில் ஆடுகிறார்கள். பாட்டை பார்க்கும் பொறுமைகூட போய்விடுகிறது. பின்னணி இசையும் சொல்வதற்கில்லை.

பல காட்சிகள் சீரியல் மாதிரிதான் நகர்கின்றன. ப்ளாஷ்பேக்.. ப்ளாஷ்பேக்குக்குள் ப்ளாஷ்பேக் என சில காட்சிகளில் பொறுமைக்கு டெஸ்ட் வைக்கிறார்கள்.

என்னதான் காதல் என்றாலும் பெற்றோர் சம்மதமும் முக்கியம் என்பதை வலியுறுத்திச் சொன்ன விதத்தில் கதிர்வேலன் பாஸ் பண்ணிவிட்டான்!

 

மணிவண்ணன் மரணம் என்னை ரொம்பப் பாதித்தது!- சத்யராஜ்

கோவை: இயக்குநர் மணிவண்ணன் மரணம் என்னை மிகவும் பாதித்துவிட்டது என்று நடிகர் சத்யராஜ் கூறினார்.

கோவை அரசு கலைக் கல்லூரியின் வரலாற்று துறை விழாவில் பங்கேற்று சத்யராஜ் பேசுகையில், "நானும், மறைந்த இயக்குனர் மணிவண்ணனும் இந்த கல்லூரியில் படிப்பதற்காக ஒன்றாக வந்து விண்ணப்பம் வாங்கி சேர்ந்தோம். நான் தாவரவியல் துறையில் சேர்ந்தேன். அவர் முதன்மை ஆங்கிலத்துறையில் சேர்ந்தார்.

பாடம் மிகவும் கடினமாக இருந்ததால் மணிவண்ணன் சென்னை சென்று சினிமா இயக்குநர் ஆகிவிட்டார்.

மணிவண்ணன் மரணம் என்னை ரொம்பப் பாதித்தது!- சத்யராஜ்

என்னை வைத்து 25 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார் மணிவண்ணன். அவரது மறைவுதான் என்னை மிகவும் பாதித்துவிட்டது. இனி என்னடா பண்ணப் போறோம் என்ற அளவுக்கு மனசுக்குள் உடைந்துபோனேன்.

எனக்கு படிப்பு வரவில்லை. சினிமாவுக்குள் நுழைந்ததால் தப்பித்தேன். இல்லாவிட்டால் என்னுடைய நிலைமை என்னவாகியிருக்கும்? என்று நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை.

நான் இந்த கல்லூரியில் படித்தபோது தான் எனக்குள் பகுத்தறிவு சிந்தனை உருவானது. அதாவது ஒரு இடத்தில் உள்ள சுவரில் கருத்தரிக்க அரச மரத்தை சுற்றவேண்டும் என்றால் கருத்தடைக்கு எந்த மரத்தை சுற்றுவது? என்று எழுதப்பட்டிருந்தது. அந்த வரிகள் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. அதன்பின்னர் பெரியாரின் கொள்கைகள் என்னை மிகவும் ஈர்த்தது. எனக்குள் பகுத்தறிவு சிந்தனையும் அதிகரித்தது.

அந்த காலத்தை விட தற்போதைய நவீன உலகம் சிறப்பாக உள்ளது. நாங்கள் படித்த காலத்தில் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. ஆனால் இப்போது படிப்புக்கு ஏற்ற வேலை, நல்ல சம்பளத்துடன் கிடைக்கிறது.

படித்தவர்களுக்கு ஏராளமான புதிய புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இன்றைய தலைமுறையினர் மிகுந்த புத்திசாலிகள், அறிவாளிகள்.

இதனால் அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டியதில்லை. நாம்தான் அவர்களிடம் அறிவுரை கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இளைஞர்கள் ஏராளமான விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள். தொழில்நுட்பம் அறிந்தவர்களாக இருக்கிறார்கள். அத்தோடு அவர்கள் பெரியார், அம்பேத்கார், மார்க்ஸ் போன்ற பெரியவர்களின் வழியை பின்பற்றி நடக்க வேண்டும்,' என்றார்.

இயக்குநர் மணிவண்ணன் கடந்த ஜூன் மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார்.