மோகன்லால் மருத்துவமனையில் அனுமதி

மோகன்லால் மருத்துவமனையில் அனுமதி

மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் கடுமையான கால் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் சிறிது காலமாகவே உள்வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும் தொடர் படப்பிடிப்பு காரணமாக சிகிச்சையைத் தள்ளிப் போட்டுள்ளார்.

இப்போது வலி அதிகரித்திருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆரம்பத்தில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரை செய்தபோதிலும் தற்போது மருந்துகள் மற்றும் முழு ஒய்வின்மூலம் இதனை குணப்படுத்திவிட முடியும் என்று கூறியிருப்பதால் அவர் தற்போது முழு ஓய்வில் இருந்து வருகின்றார்.

மோகன்லாலின் அடுத்த படம் பெருச்சாழி. இதனை இயக்குபவர் தமிழ் திரையுலகைச் சேர்ந்த அருண் வைத்தியநாதன்.

படத்தின் தயாரிப்பாளர் சான்ட்ரா தாமஸ் தனது வலைப்பக்கத்தில், "எங்கள் 'பெருச்சாழி'யின் கால் வலி குணமடைந்து இன்னும் நான்கு நாட்களில் அவர் படப்பிடிப்பிற்கு வருவார் என்று கூறப்படுகின்றது. இந்த படத்தின் இசை வெளியீட்டை அவர் கையால் செய்யவேண்டும் என்று காத்திருக்கின்றோம். கடவுள் அவருக்கு அருள் புரியட்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ராபின் வில்லியம்ஸ் மரணம் தற்கொலை என்றால் அவரை வெறுக்கிறேன்! - கமல் ஹாஸன் இரங்கல்!

ஆஸ்கர் விருதுபெற்ற ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் கமல் ஹாஸன்.

ராபின் வில்லியம்ஸ் மரணம் குறித்து கமல் ஹாஸன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:

நகைச்சுவை நடிகர்கள்தான் இந்த சமூகத்தின் மிகச் சிறந்த விமர்சகர்கள். தங்கள் கோபத்தை நகைச்சுவை எனும் முகமூடிக்குள் மறைத்துக் கொண்டவர்கள். தொடர்ந்து அப்படி கோபத்தை அடக்குவதாலேயே மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.

ராபின் வில்லியம்ஸ் மரணம் தற்கொலை என்றால் அவரை வெறுக்கிறேன்! - கமல் ஹாஸன் இரங்கல்!

மிக எளிதில் கண்ணீர் சிந்தும் இயல்புடையவர் ராபின் வில்லியம்ஸ். அதை அவரது படங்களில் பார்க்கலாம். அமெரிக்க ஹீரோக்களுக்கு திரையில் கதறி அழும் காட்சிகளே பிடிக்காது. அமெரிக்கர்களின் மனநிலையை மாற்றியது வியட்நாம் போர்.

வேதனை, பயத்தில் திரையில் கதறியழுது காட்டியவர் ராம்போ எனும் ஆக்ஷன் ஹீரோதான்.

ஆண்களின் அழுகைக்கு கண்ணியம் தேடித் தந்தவர் ராபின் வில்லியம்ஸ். அவரது திறமைக்காக அவரை எனக்குப் பிடிக்கும்.

ராபின் வில்லியம்ஸ் மரணம் தற்கொலை என்றால் அவரை வெறுக்கிறேன்! - கமல் ஹாஸன் இரங்கல்!

செய்திகளில் வருவதுபோல, அவர் உண்மையில் தற்கொலை செய்து கொண்டிருந்தால், தனது முடிவு தேதிக்கு முன்பே வாழ்க்கையை முடித்துக் கொண்ட அவரை வெறுக்கிறேன். அவரைப் போன்ற திறமையானவர்களிடம் நான் இந்த முடிவை எதிர்ப்பார்க்கவில்லை. இது எனது சக இந்திய ஹீரோ குருதத்துக்கும் பொருந்தும்!

-இவ்வாறு கமல் ஹாஸன் குறிப்பிட்டுள்ளார்.

 

சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் ரஜினியைத் தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது!- சூர்யா

சென்னை: சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார் மட்டும்தான். வேறு யாரையும் அந்த பட்டத்தில் நினைத்துப் பார்ப்பது கூட கஷ்டமான விஷயம், என்று கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

சூர்யா நடித்த அஞ்சான் படம் இன்னும் இரு தினங்களில் வெளியாகிறது. இந்தப் படம் தெலுங்கிலும் வெளியாகிறது. கேரளாவில் நேரடி தமிழ்ப் படமாக வெளியாகிறது.

சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் ரஜினியைத் தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது!- சூர்யா

இந்தப் படத்தின் விளம்பரத்துக்காக கொச்சிக்கு சென்றிருந்தார் சூர்யா. அப்போது அவரிடம், 'இந்தியாவின் சூப்பர் ஸ்டார் சூர்யாதான் என அஞ்சான் இசை வெளியீட்டு விழாவில் சொன்னார்களே.. அது பற்றி உங்கள் கருத்து?' என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சூர்யா, 'இதெல்லாம் தப்புங்க. சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் பார்த்து வளர்ந்தவன் நான். இந்தியாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அது ரஜினி மட்டுமே. அந்தப் பட்டப்பெயரில் வேறு யாரையும் நினைத்துப் பார்ப்பதே கஷ்டமாக உள்ளது.

தயவு செய்து என் படங்களை ரஜினி சார், கமல் சார் படங்களோடு ஒப்பிடாதீர்கள்," என்றார்.

 

மீண்டும் தயாளன் இயக்கத்தில் வடிவேலு... நல்லவேளை மன்னராக இல்லை!!

வடிவேலு மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை அவரை வைத்து தெனாலிராமன் படம் இயக்கிய யுவராஜ் தயாளனே இயக்குகிறார்.

மூன்று ஆண்டுகள் திரையுலகிலிருந்து விலகியிருந்த வடிவேலு கடந்த நடித்து வெளியான படம் தெனாலிராமன்.

மீண்டும் தயாளன் இயக்கத்தில் வடிவேலு... நல்லவேளை மன்னராக இல்லை!!

கலவையான விமர்சனங்களை அந்தப் படம் சந்தித்தாலும், பரவாயில்லை, வடிவேலுவுக்காக பார்க்கலாம் என பலரும் பார்த்த படம் அது.

அதற்குப் பிறகு வடிவேலு எந்தப் படத்தில் நடிக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது. சிலர் அவர் மீண்டும் காமெடிக்குத் திரும்பிவிட்டார் என்றார்கள். சிலர், இல்லை மீண்டும் மன்னர் வேடம் போடப் போகிறார் என பீதி கிளப்பினார்கள்.

இந்த நிலையில், அவர் மீண்டும் கதாநாயகனாகவே நடிக்கப் போவதாகவும், ஆனால் இந்த முறை மன்னர் வேஷ உடைகளுக்கு ரெஸ்ட் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் புதிய படத்தை இயக்கும் வாய்ப்பையும் அவர் தெனாலிராமன் யுவராஜுக்கே கொடுத்துள்ளார். இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் இசை டி இமான். ஹீரோயின் உள்ளிட்ட விவரங்கள் இரண்டொரு நாளில் வெளியாக உள்ளது.

ஓஹோ பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது (கடைசியில் நாகேஷ் கற்பனையில் தமாஷ் செய்ய ஓஹோ புரொடக்ஷன்ஸ் உருவாகியே விட்டது!)

 

ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் ராபின் மர்ம சாவு.. தற்கொலையா?

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர், நகைச்சுவைக் கலைஞர் ராபின் வில்லியம்ஸின் மரணம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

63 வயதான ராபின் வில்லியம்ஸ் உடல் தெற்கு கலிஃபோர்னியாவின் டிபூரனில் உள்ள இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டது.

இது மரணமா.. தற்கொலையா என்பதில் இன்னும் சந்தேகம் நீடிக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் ராபின் மர்ம சாவு.. தற்கொலையா?

திங்கள் கிழமை முற்பகல் 11:55 மணிக்கு அளவில் அவரது வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது ஒருவர் சுயநினைவற்ற மற்றும் மூச்சு இல்லாமல் வீட்டில் கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அவசர குழு அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சென்ற குழு அவர் வில்லியம்ஸ் என்று கண்டுபிடித்தது. பின்னர் அவர் இறந்துவிட்டார் என்று மதியம் 12:02 மணிக்கு டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.

ராபின் வில்லியம் சமீப காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக, அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

சமீப காலமாக மன அழுத்த பாதிப்புக்கு உள்ளான ராபின் வில்லியம்ஸ், கடந்த 1997-ல் வெளிவந்த 'குட் வில் ஹான்டிங்' படத்தின் நடிப்புக்காக ஆஸ்கர் விருதை வென்றவர். அப்படத்தில் ராபின் வில்லியம்ஸ் மனக் கோளாறுகளுக்கு சிகிச்சை தரும் நிபுணராக நடித்தது குறிப்பிடத்தக்கது.

"என் கணவர் - சிறந்த நண்பரை இன்று காலை இழந்துவிட்டேன். இந்த உலகம் அன்புக்குரிய கலைஞரையும், அன்பான மனிதரையும் இழந்துவிட்டது. என் இதயம் நொறுங்கிவிட்டது" என்று ராபின் வில்லியம்ஸ்சின் மனைவி சூசன் ஷைனிடர் தெரிவித்துள்ளார்.

ராபின் வில்லியம்ஸின் மிஸஸ் டவுட்பயர்தான், நடிகர் கமல்ஹாசனின் 'அவ்வை சண்முகி' படத்துக்கு மூலம். அதேபோல முன்னாபாய் எம்.பி.பி.எஸ் (வசூல்ராஜா எம்பிபிஎஸ்) படத்தின் மூலம் ராபின் வில்லியம்ஸின் 'பேட்ச் ஆடம்ஸ்'தான்.

சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த 'நைட் அட் தி மியூஸியம்', 'ஜூமான்ஜி', 'ரோபோட்ஸ்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ராபின் வில்லியம்ஸ்.

 

விவாகரத்து முடிவை மட்டும் எக்காரணம் கொண்டும் எடுக்காதீங்க! - சிவகுமார்

ஈரோடு: எந்தக் காரணம் கொண்டும் தம்பதிகள் விவாகரத்து முடிவுக்கு மட்டும் வந்துவிடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார் நடிகர் சிவகுமார்.

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடந்த புத்தக திருவிழாவில் ‘வாழ்க்கை ஒரு வானவில்' என்ற தலைப்பில் பேசினார் நடிகர் சிவகுமார்.

அவர் தனது பேச்சில், "குடும்ப வாழ்க்கை என்பது உன்னதமான வாழ்க்கை. ஒருவன் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதன் மூலம்தான் அவன் முழு மனிதன் ஆகிறான்.

விவாகரத்து முடிவை மட்டும் எக்காரணம் கொண்டும் எடுக்காதீங்க! - சிவகுமார்

இப்படி திருமண வாழ்க்கையில் ஈடுபடும் ஆண்களில் பலர் மனைவி என்ற உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. மனைவியை பலர் அடிமைத்தனமாகவே நடத்துகிறார்கள். இந்த அவலநிலை அடியோடு மாற வேண்டும்.

இன்னைக்கு ஒரு வீட்டில் அதிகாலை 5.30 மணிக்கு ‘லைட்' எரிகிறது என்றால் அந்த வீட்டில் ஒரு பெண் சமைத்து கொண்டிருப்பாள். அவர் 2 குழந்தைகளுக்கு தாயாகவும் இருக்கலாம். 70 வயது மூதாட்டியாகவும் இருக்கலாம்.

அந்த பெண் தானும் வேலைக்கு போய், வேலைக்கு போகும் கணவனுக்கும், பள்ளிக்கூடம் போகும் தனது குழந்தைக்கும் காலையிலேயே எழுந்து சமைக்கிறாள். இப்படி அதிகாலையிலேயே நமக்காகவும், நம் குடும்பத்துக்காகவும் உழைக்கும்... பாடுபடும் பெண்களுக்கு நாம் என்ன கைமாறு செய்கிறோம்?

அட, பாராட்ட வேண்டாமுங்க... சமையலில் குறை சொல்லி அது சரியில்லை.. இது சரியில்லை.. என்று திட்டாமல் இருந்தாலே போதுமுங்க.

நான் இன்றைக்கு முழு மனிதனாக உங்கள் முன் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் தாய். அதற்கு அப்புறம் என் மனைவியே காரணம். திருமணத்துக்கு பிறகு இருவரும் ஒருவரையொருவர் முழுமையாக புரிந்து கொண்டு வாழ வேண்டும். எந்த குழந்தைகள் பிறந்தாலும் அந்த குழந்தைகள் நமக்கு வந்துள்ள புது உறவுகளாக பாவிக்க வேண்டும்.

குடும்ப உறவுகளை மதிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் விவாகரத்து என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது. இங்கே வந்திருக்கும் பல பெண்களுக்கும் முக்கியமாக ஒன்றை சொல்லி கொள்கிறேன். உங்களது மருமகள் வந்து விட்டால் அவளிடம் கொத்து சாவியை கொடுத்து விடுங்கள். அவள் ஒன்றும் அந்த சாவியை எடுத்து கொண்டு ஓடிவிட மாட்டாள்.

வாழ்க்கையை நாம் முழுமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக குடும்ப உறவுகளை நாம் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்," என்றார்.

 

மயில் இறகாய் வருடும் காவியத் தலைவனின் 'யாருமில்லா' பாடல்: ஃபேஸ்புக்கில் டிரெண்ட் ஆகிறது

சென்னை: சித்தார்த், பிரித்விராஜ் நடித்து வரும் காவியத் தலைவன் படத்தின் யாருமில்லா தனியரங்கில் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பாடல் தான் தற்போது ஃபேஸ்புக்கில் டிரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது.

வசந்த பாலன் இயக்கத்தில் சித்தார்த், பிரித்விராஜ், வேதிகா, நாஸர் நடித்து வரும் படம் காவியத் தலைவன். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசைப்பணியை கவனிக்கிறார். இந்நிலையில் படத்தில் வரும் யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே என்று துவங்கும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

மயில் இறகாய் வருடும் காவியத் தலைவனின் 'யாருமில்லா' பாடல்: ஃபேஸ்புக்கில் டிரெண்ட் ஆகிறது

இந்த பாட்டு தான் தற்போது ஃபேஸ்புக்கில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. ரஹ்மானின் இனிய இசையில் வெளியாகியுள்ள இந்த பாடல் கேட்டதுமே மனதில் பதிந்துவிடும் வகையில் உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு பாடலுக்கே இப்படி அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் வரும் 18ம் தேதி இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது. யாருமில்லா பாடலின் இசை மனதை மயில் இறகால் வருடுவது போன்று உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆக காவியத் தலைவன் ஏற்கனவே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டான்.

 

மீண்டும் பெரிய திரைக்கு திரும்புகிறார் பூ நடிகை... 5 படங்கள் தயாரிக்கிறார்!

அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வில் இருக்கும் பூ நடிகை, மீண்டும் பெரிய திரையில் களமிறங்க முடிவு செய்துள்ளாராம். ஆனால், நடிகையாக அல்ல, தயாரிப்பாளராக.

அதிரடியாக ஐந்து படங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம் நடிகை. அதில் ஒன்று மட்டும் கணவரின் இயக்கத்தில் உருவாகிறதாம். மற்ற படங்களை வேறு சில இயக்குநர்கள் இயக்குகிறார்களாம்.

அதில் ஒரு படத்தில் புதிய கராத்தேவைக் கண்டு பிடித்த ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்து நடிக்கிறார்களாம். இந்தப் படம் மட்டும் அதிக பட்ஜெட்டில் தயாராகிறதாம். மற்ற படங்கள் குறைந்த முதலீட்டுப் படங்கள் தானாம்.

இவ்வாறு நடிகை அரசியலில் இருந்து தனது கவனத்தை சினிமா பக்கம் திருப்பியதில் மிஸஸ் நாட்டாமைக்குத் தான் சந்தோஷம் ஜாஸ்தி. ஏனெனில் தங்களுக்குப் போட்டியாக இலையில் வந்து பூ இணைந்து விடுமோ என பயத்தில் இருந்தவர் அவர் தானே.

நடிகை தற்போதைக்கு படத் தயாரிப்பு வேலைகளில் மட்டும் தன் முழுக் கவனத்தையும் செலுத்துவார் என்றும், அரசியல் மறுபிரவேசம் குறித்து ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பார் என்றும் அவரது நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கடன் தொல்லை: குடும்பத்துடன் தற்கொலை செய்த மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் உடல் துபாயில் தகனம்

துபாய்: துபாயில் உள்ள தங்களின் வீட்டில் பிணமாகக் கிடந்த மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சந்தோஷ் குமார், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரின் உடல்கள் அந்த நாட்டிலேயே தகனம் செய்யப்பட்டது.

கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் குமார் சவுபர்னிகா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி மலையாள படங்களை தயாரித்து வந்தார். மாதம்பி என்ற ஹிட் படத்தின் துணை தயாரிப்பாளர் அவர் தான். இந்நிலையில் அவர் தனது மனைவி மஞ்சு மற்றும் 9 வயது மகள் கௌரியுடன் துபாயில் செட்டில் ஆனார். அங்கு அவர் நடத்தி வந்த வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அவர் பிறருக்கு செலுத்த வேண்டிய தொகை மட்டும் ரூ.66 லட்சம் இருந்துள்ளது. இது தவிர அவர் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் அவர் கடந்த மாதம் 15ம் தேதி தனது குடும்பத்தாருடன் துபாய் என்.எம்.சி. மருத்துவமனை அருகே உள்ள அவரது வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் அவர் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம், கடன் தொல்லை காரணமாகவே குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து சந்தோஷ் குமார் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோரின் உடல்கள் கடந்த சனிக்கிழமை துபாயில் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.

அவர்கள் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு சுமார் ஒரு மாதம் கழித்து அவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளது.

 

ஈஷிக்கிட்டிருந்த அந்த 2 நடிகைகளுக்கும் இடையே சண்டையாம்ப்பா!

சென்னை: சுருட்டை முடியழகி நடிகைக்கும், நயன நடிகைக்கும் இடையே லடாயாம்.

சுள்ளான் தேசிய விருது பெற்ற படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் அந்த சுருட்டை முடி நடிகை. சிவப்பழகு கிரீம் விளம்பரத்தில் வருவது போன்ற அழகிய தோல் கொண்ட அந்த நடிகையும், நயன நடிகையும் சேர்ந்து தல நடிகர் படத்தில் நடித்திருந்தனர். அந்த படத்தின் படப்பிடிப்பின்போது அவர்கள் இருவரும் முகத்தோடு முகம் வைத்து போட்டோ எடுத்து வெளியிட்டனர்.

இந்நிலையில் அவர்களுக்கு இடையே தற்போது சண்டை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி என்ன சண்டை என்று பார்த்தால் சுருட்டை முடி நடிகையின் தெலுங்கு படத்தில் நடிக்க நயன நடிகை மறுத்துவிட்டாராம். பதிலுக்கு நயன நடிகை தனது முன்னாள் காதலருடன் நடித்து வரும் படத்தில் முன்னாள் காதலி கதாபாத்திரத்தில் நடிக்க சுருட்டை முடி நடிகை மறுத்துவிட்டாராம்.

இதனால் தான் இருவருக்கும் இடையே பிரச்சனையாம். வடிவேலு சொல்வது போன்று சின்னப்புள்ளத் தனமாக இருக்கே.