கை நிறையப் படங்கள்: ஸ்ருதி ரொம்ப பிஸி!


ஸ்ருதி ஹாசன் கைவசம் 5 படங்கள் உள்ளதாம். இதனால் அவர் படுபிசியாக உள்ளாராம்.

கமல் மகள் ஸ்ருதி ஹாசன் காட்டில் மழை தான். தமிழ், தெலுங்கில் பெரிய படங்களை கையில் வைத்துள்ளார். தமிழில் சூர்யாவுடன் ஏழாம் அறிவு படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் ஆடியோ நாளை வெளியிடப்படுகிறது. படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

இத்தனை பிஸியான நேரத்திலும் ஸ்ருதி ஒஸ்தி படத்தில் ஒரு குத்துப்பாட்டை பாடியுள்ளார். இந்தி படம் தபாங்கின் தமிழ் ரீமேக் தான் ஒஸ்தி. தபாங் டோலிவுட்டுக்கும் போயுள்ளது. அதில் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ருதி நடிக்கிறார்.

அந்த படத்திற்கு கப்பார் சிங் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தவிர ஜூனியர் என்.டி.ஆருடன் தம்மு மற்றும் சித்தார்த்துடன் ஓ மை பிரண்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

முதலில் பாட ஆரம்பித்தார், பிறகு அப்பா படத்திற்கு மியூசிக் போட்டார், இப்போது படு பிசியாக நடிக்கவும் ஆரம்பித்துள்ளார். நல்ல முன்னேற்றம்தான்...!

'சுருதி' குறையாமல் போனால் சரி!
 

ஜான் ஆபிரகாமிற்கு கல்யாண ஆசை வந்தாச்சு!


நடிகர் ஜான் ஆபிரகாமிற்கு திருமண ஆசை வந்துவிட்டது. பிபாஷா பாசுவின் காதலிலிருந்து சமீபத்தில்தான் விடுபட்ட நிலையில் நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று முதன்முறையாக தெரிவித்துள்ளார் ஆபிரகாம்.

பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம். கை நிறையப் படங்கள் வைத்துக் கொண்டு ஓடி, ஓடி நடிக்கிறார். ஜானும், நடிகை பிபாஷா பாசுவும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அன்மையில் தான் ஆளுக்கொரு திசையைப் பார்த்துக் கொண்டு சென்றுவிட்டனர். அதன் பிறகு பிபாஷா டகுபதி ராணா, ஜாஷ் ஹார்ட்னெட், ஷாஹித் கபூருடன் நெருங்கிப் பழகுவதாக செய்திகள் வந்தன.

அதேபோல ஜானும் ஜெனிலியா, தீபிகா படுகோனே என நேரத்தை செலவிடுவதாகப் பேசப்பட்டது. இந்நிலையில் ஜானுக்கு திருமண ஆசை வந்துள்ளதாம். அதை அவரே தனது வாயால் தெரிவித்துள்ளார்.

பிபாஷா டக்குபதி, ஜாஷ், ஷாஹித் ஆகியோருடன் நெருக்கமாக உள்ளார் என்கிறார்களே, அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு,

பிபாஷா எது செய்கிறாரோ அது அவருக்கு மகிழ்ச்சி அளித்தால் போதுமானது என்றார் நாசூக்காக. உங்க பேரு கூட தீபிகா படுகோனேவுடன் சேர்ந்து அடிபட்டதே என்றதற்கு, தீபிகா நல்ல தோழி. அவ்வளவு தான். இது போன்ற வதந்திகளைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் அதில் என்னுடன் சேர்த்துப் பேசப்படும் பெண்களை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.

அதை விடுங்க, யாரோ பிரியா மர்வா என்பவரை காதலிக்கிறீர்களாமே? பிரியா மர்வா என்று யாரும் இல்லை. அட்லீஸ்ட் என் வாழ்க்கையில் இல்லை என்றார்.

மறுபடியும் காதலில் விழுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.

தாராளமா காதலில் விழுங்க, கல்யாணம் பண்ணுங்க, நல்லாருங்க...!
 

பிலிம்பேர் பத்திரிக்கைக்காக டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்த காஜல்


நடிகை காஜல் அகர்வால் பிலிம்பேர் பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்காக மீண்டும் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் எப்ஹெச்எம் பத்திரிக்கைக்கு டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஆனால், நான் டாப்லெஸ்ஸா போஸே கொடுக்கவில்லை என்று கூப்பாடு போட்டார். உடனே அந்த பத்திரிக்கை தாங்கள் சொல்வது தான் உண்மை என்பதை நிரூபிக்க பேஸ்புக்கில் காஜலின் இன்னொரு டாப்லெஸ் போட்டோவை வெளியிட்டது.

அதன் பிறகு காஜல் சத்தத்தையே காணோம். இந்நிலையில் பிலிம்பேர் பத்திரிக்கையின் செப்டம்பர் மாத இதழின் அட்டைப் படத்திற்காக மீண்டும் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார். நெட் போன்ற துணியையும், பச்சை நிற ஆப்பிளையும் வைத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

இதுக்கு என்ன 'டாப் கிளாஸ்' விளக்கத்தைக் கொடுக்கப் போகிறாரோ காஜல்??
 

சஞ்சிதா ஷெட்டியின் மனதைக் கொள்ளையடிக்கும் விதார்த்!


கொள்ளைக்காரன்.... - மைனா, முதல் இடம் படங்களுக்குப் பிறகு விதார்த் நடிக்கும் புதிய படம் இது.

தலைப்பே சொல்லிவிடும் படம் எப்படியென்பதை. இந்தப் படத்தில் சின்னச்சின்ன ஜாலி திருட்டுகள் செய்யும் இளைஞனாக வரும் விதார்த்தின் வாழ்க்கையை, ஒரு கட்டத்தில் தலைகீழாகப் புரட்டிப் போடுகிறதாம் ஒரு திருப்பம்.

இந்தப் படத்தை தமிழ்ச் செல்வன் கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

படத்தில் விதார்த்துக்கு ஜோடி சஞ்சிதா ஷெட்டி. சின்னச் சின்னதாய் திருட்டுகள் செய்த விதார்த், ஒரு நாள் பெரிதாகக் கொள்ளையடிக்கிறார் சஞ்சிதாவின் மனதை. அதைத் தொடர்ந்து வரும் காட்சிகள் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளன, என்கிறார் இயக்குநர் தமிழ்ச்செல்வன்.

பிரசாத் சினி ஆர்ட்ஸ் பேனரில் தயாராகும் இந்தப் படத்துக்கு ஜோகன் இசையமைத்துள்ளார்.
 

குரு வசந்தபாலனுக்காக அரவாணில் நடிக்கும் அஞ்சலி


அங்காடித் தெரு இயக்குனர் வசந்தபாலன் இயக்கி வரும் அரவான் படத்தில் அஞ்சலியும் நடிக்கிறார்.

மிருகம், ஈரம் படங்களில் நடித்த ஆதி, தன்ஷிகா நடிக்கும் படம் அரவான். சரித்திரப் பின்னணி கொண்ட கதை இது. இந்த படத்தை அங்காடித் தெரு இயக்குனர் வசந்தபாலன் இயக்க, அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரிக்கிறார்.

இந்த படத்தில் இன்னொரு ஹீரோவாக பரத் வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கவர்ச்சி நடிகை ஸ்வேதா மேனன் தாசி வேடத்தில் நடி்ககிறார். இந்த படத்தின் மூலம் பிரபல இந்திய - ஹாலிவுட் நடிகர் கபீர் பேடி தமிழில் அறிமுகமாகிறார். பசுபதி, அர்ச்சனா கவியும் நடிக்கின்றனர். இப்படி ஒரு நட்சத்திரப் பட்டாளமே இருக்கும் இந்த படத்தில் தற்போது அஞ்சலியும் நடிக்கிறார். கௌரவ வேடத்தில் வந்து செல்கிறார்.

டீக் கடை பன் போல சில படங்களில் வந்து போய்க் கொண்டிருந்த அஞ்சலியை, அங்காடித் தெரு படம் மூலம் ஸ்டிராங் டீயாக மாற்றிக் காட்டியவர் வசந்த பாலன். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில்தான், அரவாண் படத்தில் கெஸ்ட் ரோல் செய்ய வேண்டும் என்று வசந்தபாலன் கேட்டதும் ஓ.கே சொல்லி விட்டாராம் இந்த 'எக்ஸ்பிரஷன்' நாயகி.

என்ன மரியாதை, என்ன மரியாதை...!
 

அடுத்த 9 நாட்களில் 9 புதுப்படங்கள்!!


செப்டம்பர் மாத இறுதியை நெருங்கிவிட்டோம். என்ன அவசரமோ தெரியவில்லை, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

தீபாவளிக்கு முன் படங்களை வெளியிட்டு வசூல் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கை போலிருக்கிறது.

அடுத்த ஒன்பது நாட்களில் 9 படங்களை வெளியிடவிருக்கிறார்கள்.

நாளை மறுநாள் செப்டம்பர் 23-ம் தேதி சத்யராஜ்-சாந்தனு நடித்த ஆயிரம் விளக்கு, புதியவர்கள் படைப்பான 'அடுத்தது' மற்றும் இரு சின்ன பட்ஜெட் படங்கள் திரையைத் தொட உள்ளன. இந்த நான்கில் இரு படங்களுக்கு சென்னையில் தியேட்டர் கிடைப்பதே குதிரைக்கொம்பாகிவிட்டதாம்.

நவராத்திரி வாரமான செப்டம்பர் 29-30 தேதிகளில் மட்டும் 5 புதிய படங்கள் வரவிருக்கின்றன.

இந்த இரு தினங்களிலும் சன் பிக்சர்ஸ் வெளியிடும் விஷாலின் வெடி, சற்குணத்தின் வாகை சூடவா, பிரசன்னா நடித்துள்ள சேரன் தயாரிப்பான முரண், ராரா, வர்ணம் என படங்கள் காத்திருக்கின்றன.
 

தேர்தல் விதிமீறல் வழக்குகள்: குஷ்பூவுக்கு முன்ஜாமீன்


மதுரை: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட 2 வழக்குகளிலும் நடிகை குஷ்பூவுக்கு மதுரை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது நடிகை குஷ்பூ திமுகவை ஆதரித்து ஊர், ஊராக பிரச்சாரம் செய்தார். அவர் பழனிச்செட்டி பகுதியிலும் பிரச்சாரம் செய்தார். அப்போது போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தேனி மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளில் அனுமதி பெறாமலேயே அவர் வாகனத்திற்குப் பின் 8 வாகனங்கள் சென்றுது. இதற்காகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த 8 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த 2 வழக்குகளில் நடிகை குஷ்பூவுக்கு மதுரை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
 

சைபுடன் அமைதியாகப் பிறந்தநாள் கொண்டாடும் கரீனா


காதலர் சைப் அலி கானின் தந்தை மன்சூர் அலிகான் பட்டோடிக்கு உடல் நலம் சரியில்லாததால், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கரீனா கபூர் தனது பிறந்தநாளை சைப் அலி கானுடன் இன்று அமைதியான முறையில் எளிமையாக கொண்டாடினார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கரீனா கபூர் இன்று தனது 31-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சைப் அலி கானின் தந்தை மன்சூர் அலி கான் படோடிக்கு உடல் நிலை சரியில்லாததால் கரீனா தனது பிறந்தநாளை அமைதியாகக் கொண்டாடுகிறார்.

அவர் சைப் அலி கானுடன் வழிபாட்டுத் தளத்திற்கு சென்று மன்சூர் அலி கான் படோடிக்காக பிரார்த்தனை செய்யவிருக்கிறார். வருங்கால மாமனாரிடம் ஆசி வாங்குகிறார்.

குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் ஆடம்பரமில்லாமல் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

தன் தந்தைக்காக கரீனா பிரார்த்தனை செய்யவிருக்கிறார் என்பது அறிந்து சைப் உருகிவிட்டாராம். அதனால் இன்று முழுவதும் கரீனாவுடன் இருப்பது என்று முடிவு செய்துள்ளார். கரீனாவுக்கு என்று ஸ்பெஷல் கிப்ட் ஒன்று வாங்கியுள்ளார். ஆனால் அது என்ன கிப்ட் என்று தான் தெரியவில்லை.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரீனா...
 

அஜீத்தை அடுத்து இயக்குபவர் ஷங்கரா, ராஜாவா?


ஏ எம் ரத்னம் தயாரிப்பில் அஜீத் அடுத்து நடிக்கும் மெகா பட்ஜெட் படத்தை அஇயக்கப் போவது யார் என்ற விறு விறு ரேஸ் தொடங்கிவிட்டது.

இதில் இப்போதைக்கு அஜீத்தின் வழக்கமா இயக்குநர்கள் யாருமில்லை. ஆனால் பெரு்ம் எதிர்ப்பார்ப்புக்குரிய இருவர் உள்ளனர்.

அதில் ஒருவர் ஜெயம் ராஜா. இவருடன் ஏற்கெனவே அஜீத் சில கதைகளை விவாதித்துள்ளார். கடைசியாக மகேஷ்பாபு நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் தூக்குடு படத்தை ரீமேக் பண்ண திட்டம் உள்ளதாகத் தெரிகிறது.

சமீபத்தில் இந்தப் படத்தை அஜீத்தும் ராஜாவும் பார்த்து விவாதித்ததாகச் சொல்கிறார்கள்.

ஆனால் இதைவிட முக்கிய செய்தி, நண்பன் படத்தை முடித்த கையோடு, இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கக் கூடும் என்பதுதான்.

காரணம் ஏற்கெனவே ஏஎம் ரத்னத்துக்கு ஒரு படம் செய்து தருவதாகக் கூறியுள்ளாராம் ஷங்கர். இந்தப் படம் மூலம் அந்த வாக்குறுதி நிறுவேறவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏஎம் ரத்னத்துக்காக ஏற்கெனவே இந்தியன், பாய்ஸ் படங்களைத் தந்தவர் ஷங்கர் என்பது நினைவிருக்கலாம்.
 

எஸ்பிபி சரண் பகிரங்க மன்னிப்பு கேட்டால் வழக்கை வாபஸ் பெறுகிறேன் - சோனா


சென்னை: தன்னை பாலியல் பலாத்காரம் செய்த நடிகர் - தயாரிப்பாளர் பகிரங்க மன்னிப்பு கேட்டால், வழக்கை வாபஸ் பெறத் தயாராக இருப்பதாக கவர்ச்சி நடிகை சோனா இன்று கூறினார்.

இந்த விவகாரத்தில் கடந்த இரு தினங்களாக நடிகை சோனா, எஸ்.பி.பி. சரண் இடையே சமரச பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. வழக்கை வாபஸ் பெறும்படி சோனாவிடம் நேரில் போய் கேட்டுக் கொண்டார் சரணின் தந்தை எஸ்பி பாலசுப்ரமணியன்.

சரணின் நண்பர்களும் சோனாவிடம் இதுகுறித்து வலியுறுத்த ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால் எஸ்.பி.பி. சரண் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனுவில், "சோனா பாலியல் உணர்வை தூண்டும் விதமாக நடந்து கொண்டார். சினிமாவில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டு பணக்கஷ்டத்தில் உள்ளார். கடனும் இருக்கிறது. என் குடும்ப பின்னணியை மனதில் வைத்து என்னை கவர்ச்சியால் மயக்கி பணம் பறித்து கடன் பிரச்சினையை தீர்க்க திட்டமிட்டார். அவரை நான் எச்சரித்ததால் என் மேல் பொய் புகார் அளித்துள்ளார்," என்றெல்லாம் கூறியிருந்தது, சோனாவை ஆத்திரப்படுத்திவிட்டதாம்.

எஸ்பி பாலசுப்பிரமணியன் சந்திப்பைத் தொடர்ந்து வழக்கை வாபஸ் வாங்கத் தயாராக இருந்த அவர், அப்போது சரண் பகிரங்க மன்னிப்பு கேட்காமல் வழக்கை வாபஸ் பெற மாட்டேன் என்று கூறிவிட்டார்.

இது குறித்து சோனா கூறுகையில், "மது விருந்தில் பலர் முன்னிலையில் எஸ்பிபி சரண் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அங்கிருந்த எல்லோருக்குமே அது தெரியும். அவர்கள் சாட்சிகள் என்பதால் நடந்த உண்மைகளை வெளியிட வேண்டும். சரணுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தால் அவர்கள் மீதும் வழக்கு தொடருவேன். எஸ்பிபி சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். நான் போய் சரணை பாலியல் தொந்தரவு செய்வேனா... இதை யாராவது நம்புகிறீர்களா...

சரண் பகிரங்க மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கை வாபஸ் பெற நான் தயாராக இருக்கிறேன். மன்னிப்பு கேட்காமல் எந்த சமரசத்துக்கும் நான் தயாராக இல்லை," என்றார்.

எஸ்பிபி சரண் தவறாக நடந்து கொண்டதற்கு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை சோனா வைத்துள்ளதால், சரணின் தரப்பு பலவீனமாக உள்ளது. எனவே இன்றோ நாளையோ மன்னிப்புப் படலம் அரங்கேறலாம் எனத் தெரிகிறது.
 

சினிமா நடிகையை திருமணம் செய்ய மாட்டேன்! - நந்தா


ஒருபோதும் நடிகைகளை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். கணவன் மனைவி இருவரும் சினிமாவில் இருந்தால் சரிப்படாது என்கிறார் நடிகர் நந்தா.

நல்ல நடிகர் என்று பெயரெடுத்தாலும், இன்னும் தனக்கான இடத்துக்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருபவர் நந்தா.

அடுத்து வரும் படம் 'வேலூர் மாவட்டம்' தனக்கு ஒரு சரியான இடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுத் தரும் என நம்புகிறார் நந்தா. இந்தப் படம் வரும் அக்டோபரில் வெளியாகிறது.

இந்த படம் குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நந்தாவிடம், நடிகைகளை திருமணம் செய்வீர்களா என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், "நிச்சயமாக நான் நடிகைகளை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். கணவன், மனைவி இருவரும் சினிமாவில் இருந்தால் சரிவராது.

என் குடும்பத்தினர் பார்க்கும் பெண்ணைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன். குடும்பத்தை கவனித்துக் கொள்பவராக மட்டும்தான் மனைவி இருக்க வேண்டும்," என்றார்.
 

கோவையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தும் ஹாரிஸ்!


கோவையில் அக்டோபர் 16-ந் தேதி ஹாரிஸ் ஜெயராஜின் முதல் மேடை இசை நிகழ்ச்சி நடக்கிறது.

இதுகுறித்து கோவையில் நிருபர்களிடம் பேசிய ஹாரிஸ் ஜெயராஜ், "2001ம் ஆண்டு மின்னலே படம் மூலம் அறிமுகமானேன். இப்போது 2011ல் அடியெடுத்து வைத்துள்ளேன். இதுவரை மேடை நிகழ்ச்சிகளில் ரசிகர்களை சந்திக்கவில்லை. அதற்கு நேரமின்மையே காரணம். இப்போது தான் அதற்கான நேரம் கிடைத்துள்ளது.

டெக்பிரன்ட் நிறுவனத்துடன் இணைந்து கோவையில் வரும் அக்டோபர் 16-ந் தேதி இசை நிகழ்ச்சி கோவை இந்துஸ்தான் கலை கல்லூரியில் நடைபெறுகிறது.

இதில் முன்னணி பாடகர்கள் கார்த்திக், ராகேஷ் ஐயர், ஹரிஷ்ராகவேந்திரா, ஸ்வேதா மேனன், கிரிஷ், சின்மயி, ஸ்ரீலேகா பார்த்த சாரதி உள்ளிட்ட 18 பேர் கலந்து கொண்டு பாடுகிறார்கள்.

மேலும் சீனா மற்றும் வடமாநிலங்களில் இருந்து நடனக்கலைஞர்கள் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.

மேடை நிகழ்ச்சி வடிவமைப்பு ஆகிய பணிகளை பட இயக்குனர் விஜய் கவனிகிறார்," என்றார்.

நிகழ்ச்சிக்கு 25 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், டிக்கெட் கட்டணம் ரூ. 500, ரூ. 1000, ரூ. 2000, ரூ. 5000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
 

நடிகர் தர்ஷன் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு!


பெங்களூர்: மனைவியைக் குத்திக் கொல்ல முயன்று கைதாகியுள்ள கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் மறுத்துள்ளது பெங்களூர் நீதிமன்றம்.

தனது மனைவி விஜயலட்சுமியை அடித்து காயப்படுத்தியதாகவும் குத்திக் கொல்ல முயன்றதாகவும் செப் 9 -ல் கைது செய்யப்பட்டார் தர்ஷன்.

சிறையில் அவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது மனைவி விஜயலட்சுமி வழக்கை வாபஸ் பெறுவதாக கூறியும் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. பிரபல நடிகரான தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் அவர் இந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிட வாய்ப்புள்ளது என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தர்ஷனுக்கு ஜாமீன் மறுக்கப்படுவது இது இரண்டாவது முறை.

தர்ஷன் விவகாரத்தில் விஜயலட்சுமி கூறியதை மட்டுமே நம்பி, முன்னணி நடிகை நிகிதாவை கன்னட தயாரிப்பாளர்கள் தடை செய்ததும், அதைத் தொடர்ந்து திரையுலகில் ஏற்பட்ட கொந்தளிப்பு மற்றும் இறுதியில் நிகிதாவிடம் தயாரிப்பாளர்கள் மன்னிப்பு கேட்டு தடையை விலக்கியதும் நினைவிருக்கலாம்.

 

ரூ 2 கோடி வசூலித்த 'எங்கேயும் எப்போதும்'!


ஹாலிவுட் நிறுவனமான பாக்ஸ் ஸ்டாருடன் இணைந்து இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் முதல் முறையாக தயாரித்த படம் எங்கேயும் எப்போதும்.

ஜெய், அஞ்சலி, அனன்யா, சர்வானந்த் நடித்த இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. நல்ல பப்ளிசிட்டியை ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டுக் கொடுத்து வந்ததால், படத்துக்கு ஏக எதிர்ப்பார்ப்பு இருந்தது.

அதன் விளைவு, தமிழகத்தில் 128 திரையரங்குகளில் மட்டுமே வெளியான இந்தப் படத்துக்கு பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. ஆரம்ப வசூலாக தமிழகம் முழுவதும் ரூ 2 கோடியை ஈட்டியுள்ளது எங்கேயும் எப்போதும். முதல் மூன்று நாட்களில் சராசரியாக 80 சதவீத கூட்டத்துடன் ஓடியுள்ளது இந்தப் படம்.

வணிக ரீதியாக படம் தப்பித்துவிட்டது என்ற செய்தியே, முருகதாஸையும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தையும் மீண்டும் இணைய வைத்துள்ளது.

அடுத்த படத்துக்கான வேலைகளில் இப்போதே களமிறங்கிவிட்டனர். அடுத்த படத்துக்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என முருகதாஸும், பெரிய நட்சத்திரங்கள், பட்ஜெட் இல்லாமல் சுவாரஸ்யமான படங்களைத் தரும் எங்கள் முயற்சிக்கு பெரிய உந்துதலைத் தந்துள்ளது எங்கேயும் எப்போதும் என பாக்ஸ் ஸ்டார் சிஇஓ விஜய் சிங்கும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இப்போது தமிழகத்தில் மட்டுமே வெளியாகியுள்ள எங்கேயும் எப்போதும், அடுத்த வாரம் இந்தியாவின் பிற பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் ரிலீசாகிறது.