பாகுபலி 2: திருட்டுத்தனமாக வெளியான தீம் சாங்... ஜெட் வேகத்தில் வைரலாகிறது

சென்னை: பாகுபலி படத்தின் முதல் பாகம் வந்து உலகமெங்கும் வசூல் மழையில் நனைந்து கொண்டிருக்கின்றது, இந்த வெற்றியை பாகுபலி குழுவினர் கொண்டாடி மகிழ்ந்திருக்கும் இவ்வேளையில் அவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.

பாகுபலி படத்தின் 2 ம் பாகத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் படத்தின் தீம் சாங் தற்போது இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.

மிகவும் ரகசியமாக வைத்திருந்த பாடல் எப்படிக் கசிந்தது என்று படப்பிடிப்புக் குழுவினர் அதிர்சிக்கு உள்ளாகியுள்ளனர், திருட்டுத்தனமாக வெளியான இந்த தீம் சாங் தற்போது இணையத்தில் ஜெட் வேகத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

2016 ம் ஆண்டில் திரையைத் தொடவிருக்கும் பாகுபலி படத்தின் 2 ம் பாகத்திற்கான படப்பிடிப்பு 40% நிறைவு, பெற்றுள்ள நிலையில் 2 ம் பாகத்திற்கான அடுத்தக் கட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

நம்மால் இதையும் செய்ய முடியும்.. இதற்கு மேலும் முடியும்! - பாகுபலிக்கு ஏ ஆர் ரஹ்மான் பாராட்டு

பாகுபலி படத்தைப் பார்த்த ஏ ஆர் ரஹ்மான், அந்தப் படத்தை வியந்து பாராட்டியுள்ளார்.

பாகுபலி பார்த்த பிரபலங்கள் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் சென்னை சத்யம் திரையரங்கில் பாகுபலியை பார்த்துள்ளார்.

AR Rahman hails Bahubali

படம் பார்த்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில், "லைஃப் ஆப் பை படத்துக்குப் பிறகு என்னைக் கவர்ந்த இந்திய திரைக்காவியம் என்றால் அது பாகுபலிதான். படம் பார்த்துவிட்டு நல்ல உணர்வுடன் திரும்பினேன். ஆம்.. நம்மால் இதையும் செய்ய முடியும்... இதற்கு மேலும் செய்ய முடியும்," என்றார்.

படத்தைப் பாராட்டி சமூக வலைத் தளங்களிலும் எழுதியுள்ளார் ரஹ்மான்.

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இன்னும் கூட பாகுபலிக்கு ரசிகர் கூட்டம் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

அமலா பால்- ப்ரியதர்ஷன் படத்துக்கு இசை யார்?- இயக்குநர் விஜய்யின் விளக்கம்

அமலா பால் தயாரிப்பில், ப்ரியதர்ஷன் இயக்கும் படத்தின் தயாரிப்பாளர் குறித்து இயக்குநர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தப் படம் முடிக்கும் வரை யாரையும் இசையமைப்பாளராக அறிவிக்கப்போவதில்லை என்றும், படத்தை ஏ ஆர் ரஹ்மான் பார்த்து பிடித்திருந்தால், அவரே இசையமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Who is music director for Priyadharshan - Amala Paul movie?

இதுகுறித்து விஜய் அளித்துள்ள விளக்கம்:

எனது குரு பிரியதர்ஷனின் மானசீகமான படம் இது. தேசிய, சர்வதேச தரத்திலான படத்திற்கு சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒருங்கிணைப்பின் அவசியத்தை அறிந்துள்ளோம். சர்வதேச அடையாளத்தை எதிர்நோக்கும் இப்படத்தில் எல்லைகளை தாண்டி உணர்வுகளை கொணரும் இசையும் அவசியம். தற்போது பிரியதர்ஷன் படப்பிடிப்பிற்கான வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

முழு படப்பிடிப்பும் முடிந்த பின்னர் படத்தை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு காண்பிக்க இருக்கிறோம். படத்தை பார்த்த பிறகு அவருக்குப் பிடித்திருந்தால் இப்படத்திற்கு பின்னணி இசையமைப்பார்.

பிரகாஷ் ராஜ், அசோக் செல்வன் மற்றும் ஸ்ரேயா ரெட்டி ஆகியோரது நடிப்பின் பெரும் பங்கும், திறன் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் பிரியதர்ஷனின் காட்சிகளுக்கு பேருதவியாய் இருக்கும்."

 

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க... "லக்கா மாட்டிகிச்சு" ... ரிலீஸ்!

சென்னை: ஆர்யா - தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தில் இடம்பெற்ற லக்கா மாட்டிகிச்சு பாடல் இன்று வெளியானது.

5 ஆண்டுகளுக்குப் பின்னர் இயக்குநர் ராஜேஷ், நடிகர் ஆர்யா மற்றும் சந்தானம் மீண்டும் இணைந்திருக்கும் படம் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இந்த சூழ்நிலையில் இன்று இமானின் இசையில் படத்தில் இடம்பெற்ற லக்கா மாட்டிகிச்சு பாடல் வெளியாகி உள்ளது, சோனி மியூசிக் வெளியிட்டுள்ள இந்தப் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

பெண்களைத் திட்டி வரும் பாடல்களுக்கு மத்தியில் பெண்களைப் பாராட்டி இந்த பாடல் வரிகள் அமைந்து இருக்கின்றன, கானா ஜெகன் செந்தில் தாஸ் மற்றும் பழனியம்மாள் என்ற 3 பாடகர்கள் இந்தப் பாடலின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகி உள்ளனர்.

இந்தப் பாடல் நன்றாக இருப்பதாக பாடலைக் கேட்ட ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

 

பாட்ஷா 2-ல் அஜீத் நடிப்பதாக வரும் செய்திகள் பொய்யானவை! - சுரேஷ் கிருஷ்ணா

பாட்ஷா 2 படத்தில் அஜீத் நடிக்கப் போவதாக இணைய தளங்கள், நாளிதழ்களில் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.

ஆனால் இவை அனைத்தும் பொய்யானவை என்று இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

No truth in Badsha 2 with Ajith, says Suresh Krishna

ரஜினி நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ஆர் எம் வீரப்பன் தயாரிப்பில் 1995-ல் வெளியாகி வசூலில் தனி வரலாறு படைத்த படம் பாட்ஷா. 365 நாட்களுக்கு மேல் ஓடி சாதனைப் படைத்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பல முறை பேசப்பட்டு, பின் கைவிடப்பட்டது.

இதன் இரண்டாம் பாகத்தில் நடிக்குமாறு ரஜினியிடம் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பேசியபோது, "பாட்ஷா என்ற படமே போதும். அதை ரீமேக் செய்வது, இரண்டாம் பாகம் எடுப்பதெல்லாம் சரியாக வராது. எனவே அந்த எண்ணம் வேண்டாம்," என்று கூறிவிட்டார்.

இந்த நிலையில் பாட்ஷா இரண்டாம் பாக கதையை அஜீத்தை சந்தித்து சுரேஷ் கிருஷ்ணா கூறியதாகவும், அந்தக் கதை பிடித்துப் போனதால் அஜீத் நடிக்க சம்மதித்து விட்டதாகவும் செய்திகள் பரவின. மேலும் இந்தப் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, ஆர் எம் வீரப்பனே தயாரிப்பதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் கேட்டபோது, "அஜீத்தை இயக்கும் வாய்ப்பு வந்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன். ஆனால் நான் சமீபத்தில் அவரைச் சந்திக்கவும் இல்லை, பாட்ஷா 2 குறித்து பேசவும் இல்லை. அதுபற்றி வரும் செய்திகள் பொய்யானவை," என்றார்.

 

10 நாட்களில் ரூ 355 கோடி... வசூலில் புதிய சாதனைப் படைக்கும் பாகுபலி!

பாகுபலியின் இப்போதைய வசூலை நிச்சயம் அதன் இயக்குநரும் படக்குழுவினரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

ரூ 240 கோடியில் தயாரான இந்தப் படம், வெளியான பத்து தினங்களில் ரூ 355 கோடியைக் குவித்து புதிய சாதனைப் படைத்துள்ளது.

Baahubali collects Rs 355 cr in just 10 days

வசூல் விபரம்:

1. ஆந்திரா/தெலங்கானா - ரூ. 120 கோடி

2. கர்நாடகா - ரூ. 55 கோடி

3. தமிழ்நாடு - ரூ. 35 கோடி

4. கேரளா ரூ. 10 கோடி

5. வட இந்தியா (ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் சேர்த்து) - ரூ. 80 கோடி. இதில் இந்தி பாகுபலி மட்டும் ரூ. 60 கோடி வசூலித்துள்ளது. தென்னிந்தியப் படம் ஒன்று இந்த வசூலை வட இந்தியாவில் பெற்றுள்ளது இதுவே முதல் முறை.

6. வெளிநாடுகளில் - ரூ. 55 கோடி

இதுவரை எந்த ஒரு இந்திய சினிமாவும் முதல் 10 நாள்களில் 350 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியதில்லை. இதற்கு முன்பு அமீர் கானின் பிகே படத்துக்கு, 300 கோடியைத் தொட 17 நாள்கள் ஆயிற்று.

இதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகம் வசூலித்த தெலுங்குப் படம் என்கிற சாதனையையும் பாகுபலி நிகழ்த்தியுள்ளது.

இன்னும் கூட படத்துக்கு கூடும் மக்கள் கூட்டம் குறையவில்லை என்பதால், அடுத்த அடுத்த 10 நாள்களில் இதன் வசூல் இன்னும் பிரமிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

பிரபல தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் மரணம்!

சென்னை: உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பிரபல தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 63.

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்தவர் அ செ இப்ராகிம் ராவுத்தர்.

இவரது தமிழன்னை சினி கிரியேஷன்ஸ் மூலம் புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், தாலாட்டுப் பாடவா, பூந்தோட்டக் காவல்காரன், பரதன், தாய் நாடு உள்ளிட்ட ஏராளமான படங்களைத் தயாரித்தார். தொன்னூறுகளில் தமிழ் சினிமாவின் பெரிய வெற்றிப் படங்களைத் தந்தவர்கள் இப்ராகிம் ராவுத்தரும் அவர் நண்பரான விஜயகாந்தும்.

Producer Ibrahim Rawther passed away

இரண்டு முகம், புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் போன்ற படங்களை அவர் சமீப ஆண்டுகளில் தயாரித்தார்.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்துடன் மிக நெருக்கமான நட்பு கொண்டவர் இப்ராகிம் ராவுத்தர். தான் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், தன் நண்பன் விஜயகாந்துக்கு திருமணம் செய்து வைத்தவர் ராவுத்தர்.

கடந்த சில மாதங்களாகவே அவர் உடல் நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இருதயம் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தன் நண்பன் இப்ராகிம் ராவுத்தரை நேரில் பார்த்த விஜயகாந்த், கண்ணீர்விட்டு கதறி அழுது, நலம் பெற பிரார்த்தனை செய்தார்.

இந்த நிலையில் இன்று காலை உடல்நிலை மிக மோசமடைந்து, மரணமடைந்தார் இப்ராகிம் ராவுத்தர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராகப் பதவி வகித்த இப்ராகிம் ராவுத்தர், அரசியலில் முதலில் தமாகாவில் இணைந்தார். மூப்பனார் மறைவுக்குப் பிறகு அரசியலில் ஆர்வமின்றி இருந்த அவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.

 

ட்விட்டரில் விஜயைக் கலாய்த்து கடுப்பேற்றும் அஜீத் ரசிகர்கள்

சென்னை: நாட்டில் தீவிரவாதம் கூட ஒழிந்துவிடும் ஆனால் இவர்களின் சண்டைகள் முற்றுப் பெறாது போல, வாராவாரம் ஆரம்பித்து விடுகிறார்கள். எது என்று கேட்கிறீர்களா விஜய் அஜீத் ரசிகர்களின் சண்டைதான்.

விஜய் ரசிகர்கள் அஜீத்தைக் கலாய்ப்பதும், பதிலுக்கு அஜீத் ரசிகர்கள் விஜயை மரண ஓட்டு ஓட்டுவதும், என்று முடிவுக்கு வரப்போகிறது என்று தெரியவில்லை இவர்களின் சண்டைகள்.

இன்று காலையில் இருந்து #mentalvijayfans என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர் அஜீத் ரசிகர்கள். அதுவும் இந்திய அளவில் முதல் இடத்தில் இதனை வைத்து அழகு பார்க்கும் அளவிற்கு இவர்களின் சண்டைகள் வைரலாகிக் கொண்டிருக்கின்றது இணைய தளத்தில்.

ஏற்கனவே பாலிவுட்டில் இந்த மாதிரி சண்டைகள் ஷாரூக் மற்றும் சல்மான் ரசிகர்களுக்கு இடையில் உருவானபோது, சல்மான் கான் இதில் தலையிட்டு தீர்வு கண்டார். அதே போல நீங்கள் இருவரும் உங்கள் ரசிகர்களுக்கு அறிவுரை கூறுங்கள் என்று பலபேர் கூறியும் கூட சம்பந்தப்பட்ட இரு நடிகர்களும் இதில் எதையும் செய்ய முன்வரவில்லை.

இப்படியே தொடர்ந்து கொண்டே செல்லும் இந்த சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவது யார்?

 

20 நாட்களில் 60 கோடியைத் தொட்ட பாபநாசம்.. பாகுபலி அலையையும் மீறி அசத்தல்!

சென்னை: உலகநாயகன் கமல் - கவுதமி நடித்து வெளிவந்த பாபநாசம் திரைப்படம் கடந்த ஜூலை 3 ம் தேதி வெளியாகி இன்றுவரை வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. தொடர்ந்து 3 வாரங்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாபநாசம் திரைப்படம் பாகுபலியின் தாக்கத்தில் கூட கீழே இறங்கவில்லை.

3 வது வாரத்திலும் கூட 60% அதிகமான இருக்கைகள் நிரம்புவதாக தியேட்டர் அதிபர்கள் தெரிவித்து உள்ளனர், எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்து விட்டார் கமல் என்று படத்தைப் பார்த்தவர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

Papanasam Movie Box Office Collection

படம் வெளிவந்து இன்றோடு 20 நாட்கள் ஆகின்றன, தொடர்ந்து நிதானமாக சென்று கொண்டிருக்கும் பாபநாசம் வசூலில் இதுவரை 60 கோடியைத் தொட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் வசூல் இதுவரை 40 கோடியைத் தொட்டு இருக்கிறது, மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் சுமார் 20 கோடியை நெருங்கி இருக்கிறது பாபநாசம். ஆக மொத்தம் இதுவரை வசூலில் 60 கோடியைத் தொட்டு இருக்கும் பாபநாசம் 100 கோடி கிளப்பில் இணையுமா?

படம் 100 கோடியைத் தொட்டால் அது ஒரு சாதனையாக மாறி, குடும்பப் படங்களின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும்.

 

அந்த நடிகர் திருமண செய்தி பப்ளிசிட்டி ஸ்டண்ட்டாம்: நல்லா தேடுறாங்க விளம்பரம்!!

சென்னை: தேசிய விருது பெற்ற அந்த நடிகருக்கும், மேனன் நடிகைக்கும் திருமணம் என்று வெளியான செய்தி அவர்கள் நடித்துள்ள படத்திற்கு விளம்பரம் தேட செய்ததாம்.

தேசிய விருது பெற்ற அந்த நடிகரும், மேனன் நடிகையும் ஜோடி சேர்ந்து மீன் படத்தில் நடித்துள்ளனர். படத்தில் நடிக்கையில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் படம் சம்பந்தப்பட்ட பார்ட்டி ஒன்றில் அவர்கள் இருவரும் சுற்றி இருந்தவர்களை கண்டுகொள்ளாமல் ஓரங்கட்டி ஜாலியாக இருந்துள்ளனர்.

அவர்கள் ஓரங்கட்டியதை பார்த்த படக்குழுவினர் அடடா படத்திற்கு விளம்பரம் தேட ஒரு விஷயம் சிக்கிவிட்டது என்று நினைத்தார்களாம். இதையடுத்து தான் நடிகருக்கும், மேனன் நடிகைக்கும் ரகசிய திருமணம் நடக்க உள்ளது என்ற செய்தியை படக்குழுவினரே பரப்பிவிட்டார்களாம்.

திருமண செய்தி வெளியான வேகத்தில் அதை மறுத்தார் நடிகர். உண்மையில் நடிகர் அந்த நடிகையைத் தான் காதலிப்பதாகவும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வர வர படங்களுக்கு நல்லா தேடுகிறாங்கப்பா விளம்பரத்தை!

 

திரைத் துறைக்கு இணையதளங்கள் கைகொடுக்க வேண்டும்!- பிரபல தயாரிப்பாளர்

திரைத்துறை மிக கடினமான சூழலில் உள்ள நிலையில், சிறு படங்களுக்கு இணையதளங்கள் கைகொடுக்க வேண்டும் என்றார் தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமார்.

தயாரிப்பாளர் சங்கம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சினிமா விளம்பரங்கள் குறித்து புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி படங்களை வாங்கும் தொலைக்காட்சிக்கு மட்டுமே விளம்பரங்கள், அதுவும் குறிப்பிட்ட தொகைக்குள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அப்படி படங்களை வாங்காத சேனல்களுக்கு விளம்பரங்கள் முற்றிலும் கிடையாது என்றும், திரைப்பட நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பில்லை என்றும் கூறியுள்ளது.

J Sathishkumar prefers websites instead of chennels

நாளை மறுநாள் முதல் இதனை அமலுக்குக் கொண்டு வரவிருக்கிறார்கள்.

இந்த சூழலில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரபல தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமார் (ஜேஎஸ்கே), தொலைக்காட்சிக்கு விளம்பரங்கள் தருவதை விட இணையதளங்களுக்கு முக்கியத்துவம் தரப் போவதாகக் கூறினார்.

அவர் கூறுகையில், "இனி என் படங்களின் விளம்பரங்களை இணையதளங்கள் மூலமாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். தயாரிப்பாளர் சங்கத்தின் வழிகாட்டுதல்படி இந்த விளம்பரங்களைத் தரவிருக்கிறேன்.

வரும் 24- ம் தேதி வெளியாகவிருக்கும் எனது படமான நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படம் இணையதளங்கள் மூலம்தான் உலகம் முழுக்க தெரிந்திருக்கிறது. இதனை நானே அனுபவத்தில் உணர்ந்தேன். அதனால் இந்தப் படத்திலிருந்து இணைய தளங்கள் மூலம் விளம்பரம் தரவிருக்கிறேன். இதன் மூலம் நல்ல பப்ளிசிட்டியும் கிடைக்கும், செலவும் குறையும்.

எனவே இனி என் போன்ற தயாரிப்பாளர்களுக்கு இணையதளங்கள் கைகொடுக்க வேண்டும்," என்றார்.