சென்னை: ரஜினியை நான் அறிவேன்... என்னை அவர் அறிவார்.. அவர் கடைசியாக வாழ்த்தினாலும் முதலில் வாழ்த்தியதற்கு சமம்.. எங்களுக்குள் அந்த புரிதல் உள்ளது, என்றார் கமல்ஹாஸன்.
சினிமா உலகில் இரு சிகரங்களாகத் திகழ்பவர்கள் ரஜினியும் கமலும். இருவரும் ஒருவரை ஒருவர் நேசிப்பதிலும் மதிப்பதிலும் இளம் தலைமுறை கலைஞர்களுக்கே எடுத்துக்காட்டாக உள்ளனர். ஒருவருக்குச் சோதனை என்றாலும் கவுரவம் கிடைத்தாலும் உடனடியாக அதில் பங்கேற்கும் உன்னதமான நண்பர்களாகத் திகழ்கின்றனர்.
கடந்த முறை விஸ்வரூபம் படத்துக்கு பிரச்சினை வந்தபோது, ரூ 100 கோடியைக் கொட்டி படமெடுத்துவிட்டு, அதை வெளியிட முடியாத சூழலில் உள்ள கமலின் தவிப்பை நினைத்து மனம் கலங்குகிறேன், என அறிக்கை வெளியிட்டவர் ரஜினி.
கமல் பிறந்த நாள் அல்லது அவருக்கு விருதுகள் கிடைக்கும்போது முதல் வாழ்த்து ரஜினியிடமிருந்துதான் வரும்.
இப்போது கமல் பத்மபூஷண் விருது பெற்றிருப்பதால், அதற்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தாரா என்று நிருபர்கள் கமலிடம் கேட்டனர்.
அதற்கு கமல் அளித்த பதில், அவருக்கும் ரஜினிக்குமான அற்புதமான நட்பை வெளிப்படுத்துவதாக இருந்தது.
"ரஜினியை நான் அறிவேன்... என்னை அவர் அறிவார்.. அவர் கடைசியாக வாழ்த்தினாலும் முதலில் வாழ்த்தினாலும் எனக்கு ஒன்றே. அவருக்கும் நான் அப்படியே. எங்களுக்குள் அந்த புரிதல் இருக்கிறது! அவர் கண்டிப்பாக வாழ்த்துவார். எதிலும் அவர் நிதானமாகத்தான் செயல்படுவார் என்பது எனக்கு தெரியும்," என்றார்.