சென்னை: அடுத்த வாரம் நடக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தயாரிப்பாளர் கேயார் தலைமையில் 27 பேர் போட்டியிடுகின்றனர்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் மொத்தம் 824 உறுப்பினர்கள் உள்ளனர். சங்கத்துக்கு 2013-15 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்ய செப்டம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதில் தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணியில் கேயார் தலைவராகப் போட்டியிடுகிறார். இந்த அணியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
நடிகர் சரத்குமார், மூத்த தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் ஆகியோர் தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்துவைத்தனர்.
துணைத் தலைவர் பதவிக்கு டி.ஜி.தியாகராஜன், சுபாஷ் சந்திரபோஸ் (லிங்குசாமி சகோதரர்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
டி.சிவா, ஞானவேல்ராஜா ஆகியோர் கௌரவச் செயலாளர் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர்.
இதைத்தொடர்ந்து, செயற்குழுவுக்கு ஏ.எல்.அழகப்பன், பிரமிட் நடராஜன், நடிகை தேவயானி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
ஓய்வுபெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன், ஜெகதீசன் ஆகியோரின் மேற்பார்வையில் தேர்தல் நடைபெறுகிறது.