சிறைக்கு செல்லும் முன் சஞ்சய் நடித்த கடைசி படமான போலீஸ் கிரியை தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுகிறார் இயக்குநர் ராம நாராயணன் மகன் என் ராமசாமி. அதே நாளில் வெளியாகிறது இன்னொரு போலீஸ் படமான சிங்கம் 2.
விக்ரம் தமிழில் நடித்த சாமி படம் இந்தியில் போலீஸ் கிரி என்ற பெயரில் உருவாகியுள்ளது. விக்ரம் வேடத்தில் சஞ்சய் தத் நடித்துள்ள இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார்.
வரும் ஜூலை 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தை தமிழகம் முழுவதும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இராம.நாராயணனின் மகன் என்.ராமசாமி வெளியிடுகிறார்.
தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ள போலீஸ் கிரி, மிகப்பிரமாண்டமான முறையில் அதிரடி, ஆக்ஷன் காட்சிகளோடு உருவாகியுள்ளது.
'சூரியா நடிப்பில் வெளியாகவுள்ள சிங்கம் 2 படமும் போலீஸ் சம்மந்தப்பட்ட படம் தான், அதே நாளில் வெளியாகும் போலீஸ் கிரி படமும், போலீஸ் சம்மந்தப்பட்ட கதைதான். மிகப் பெரிய பொருட்செலவில் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஆக்ஷன் காட்சிகளோடு உருவாகியுள்ள போலீஸ் கிரி இந்திப் படமாக இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில், கே.எஸ்.ரவிகுமார் இப்படத்தை உருவாக்கியுள்ளதாக' ராமசாமி தெரிவித்துள்ளார்.