அமெரிக்காவுக்கு ஒபாமா... தமிழகத்துக்கு அம்மா... விவேக் காமெடி

அமெரிக்காவுக்கு ஒபாமா... தமிழகத்துக்கு அம்மா... விவேக் காமெடி

சினிமா நூற்றாண்டு விழாவில் நடிகர், நடிகையர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளோடு காமெடி நடிகர் விவேக் நகைச்சுவை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.

தியாகராஜ பாகவதர் கெட்டப்பில் மன்மத லீலையை வென்றார் உண்டோ என பாடியபடி காமெடி நடிகர் விவேக் மேடையில் தோன்றியதும் களை கட்டியது.

நகைச்சுவை நடிகர் செல் முருகன் தியாகராஜ பாகவதராக வந்த விவேக்கிடம் பேட்டி எடுத்தார்.

நான்தான் கதாநாயகன்

கேள்வி:- எதற்கு வந்தீர்கள்?

பதில்:- சினிமா நூற்றாண்டு வைபவத்தை பார்க்க வந்தேன். மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசை உள்ளது.

கே:- அனுஷ்கா, அமலாபால் அப்பா வேடத்திலா?

ப:- கிராதகா நான் கதாநாயகனாகத்தான் நடிப்பேன்.

கே:- நாயகனாக நடிக்க சிக்ஸ்பேக், பிக்கெப் எல்லாம் வேண்டுமே?

சூர்யா - ஆர்யா

ப:- சிக்ஸ்பேக்குக்கு சூர்யா இருக்காரே பிக்கெப்புக்கு ஆர்யா இருக்காரே.

கே:- நாயகனாக நடிக்க பைக் வீலிங் சாகசம் தெரியனுமே

ப:- பைக் சாகசம் 'தல'க்கு மட்டும்தான் சரியா இருக்கும்.

அனிருத் கொலை வெறி

புதியவர்கள் பிரமாதமாக நடிக்கிறாங்க அனிருத்னு ஒரு இசை அமைப்பாளர். பேன்ட் சட்டை சேர்த்து உடம்பின் மொத்த எடையே 3 கிலோதான் இருக்கும். கொலை வெறி பாட்டு போட்டு கலக்குகிறார்.

பிரியாமணியை பிடிக்கும்

கே:- கவுண்டமணி பிடிக்குமா போண்டோ மணி பிடிக்குமா?.

ப:- பிரியாமணியை பிடிக்கும்.

பஞ்ச் வசனம்

கே:- பஞ்ச் வசனம் தெரியுமா?

ப:- அமெரிக்காவுக்கு ஒபாமா, நமக்கு நம்ம அம்மா.

இயக்குநர்கள் நாடகம்

டைரக்டர்கள் மனோஜ் குமார், ரவிமரியா இருவரும் மேடையில் நடத்திய சூட்டிங் பற்றிய நாடகம் கரகோஷம் எழுப்ப வைத்தது.

ஸ்டண்ட் நடிகர்கள் அசத்தல்

ஸ்டண்ட் நடிகர்கள் உடம்பில் ஒளிரும் அலங்கார மின் விளக்குகள் பொருத்தி இருட்டுக்குள் மயிர் கூச்செரியும் சண்டை காட்சிகளை நடத்தி பிரமிக்க வைத்தனர்.

 

சினிமா நூற்றாண்டு விழா: கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் வரவில்லை!

சென்னை: இன்று மாலை நடக்கும் இந்திய சினிமாவின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கர்நாடக, தெலுங்கு முதல்வர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு சர்ச்சைகள், மனஸ்தாபங்களுக்கிடையே நடந்து வருகிறது இந்திய சினிமா நூற்றாண்டு விழா.

முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பு வெறுப்புகளுக்கேற்பவே இந்த விழா வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிருப்திக் குரல்கள் அதிகரித்து வருகின்றன.

கன்னடம், தெலுங்கு, மலையாள சினிமா நிகழ்ச்சிகள் கடந்த இரண்டு தினங்களாக நடந்து வந்தன. இன்று நிறைவு விழா.

சினிமா நூற்றாண்டு விழா: கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் வரவில்லை!

இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார். முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.

ஆந்திர, கேரள மற்றும் கர்நாடக முதல்வர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை. இன்றை அரசு விளம்பரத்திலும் அவர்கள் பெயர் இல்லை. கேரள முதல்வர் உம்மன் சாண்டி மட்டும் வருகிறார்.

தமிழக ஆளுநர் ரோசய்யாவும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

 

சொந்தக் குரலில் பாட... ரொம்பநாளா ஆசைப்படும் ‘டைம்’நடிகை

ஏற்கனவே, யோக நேரமாக இருப்பதால் தான் ஒருபடம் வெளிவந்த நிலையிலேயே பல முண்ணனி நடிகளுக்கு போட்டி நாயகி ஆகிவிட்டார் அம்மணி.

இந்நிலையில், தனக்கு பாடும் ஆசை இருப்பதாக சம்பந்தப்பட்ட இயக்குநர்களிடம் தெரிவித்துள்ளாராம் நடிகை. பாடகியின் இனிமையான குரலும், கிளிப்பேச்சும் கேட்டு ஏற்கனவே மயங்கிப் போயிருக்கும் ரசிகர்கள் விரைவில் நடிகையின் குயிலோசை பாடலையும் கேட்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

கொலைவெறி நாயகன் தனது படங்களில் ஒரு பாடலாவது பாடி வரும் சூழ்நிலையில், அவருடன் உடன் நடித்த நாயகியும் தற்போது பாட்டுப்பாட ஆசை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ( முன்னாடியே சொல்லிருந்தாவது ஒரு டூயட் சாங் ரெடி பண்ணிருப்பாங்க...)

புதிய பாடகர்களை அறிமுகப் படுத்துவதையே தனது முக்கியக் குறிக்கோளாகக் கொண்டுள்ள இன்சியல் இசையமைப்பாளர் காதுக்கும் இந்தத் தகவல் போகாமலா இருக்கும்.

 

நயன ராணியைத் தவற விட்ட வாலிபர் சங்க தலைவர்...

விரைவில் வெளியாகவுள்ள கிங் அண்ட் குயின் படத்தின் இயக்குநர் முன்பு பிரபல இயக்குநரிடம் உதவி இயக்குநராக இருந்த போது ஒரு குறும்படம் எடுத்தாராம்.

அதில், நீச்சல் நாயகன் தான் ஹீரோவாக நடித்தாராம். அப்போதே இயக்குநரின் மனக் கண்ணில் கிங் படத்தில் இந்த நடிகர் தான் ஹீரோ என முடிவு செய்து வைத்திருந்தாராம். ஆனால், தயாரிப்பாள இயக்குநர் கதைக்கு கடவுள் நடிகர் ஹீரோவானால் தான் கல்லா கட்டும் எனத் தெரிவித்து விட, வேறு வழியில்லாமல் ஓகே சொன்னாராம் இயக்குநர்.

விரைவில் படம் ரிலீசாக உள்ள நிலையில், படத்தில் நம்பர் நடிகை மற்றும் கடவுள் நடிகை கெமிஸ்ட்ரியைப் பார்த்து, ‘வட போச்சே' என புலம்பித் தள்ளுகிறாராம் நீச்சல் நடிகர்.

 

'த்ரிஷா குடிக்கிறதை நிறுத்தவே மாட்டாரா?'

-இப்படித்தான் ஆரம்பிக்கிறது த்ரிஷா பற்றி ஒரு தெலுங்கு மீடியா வெளியிட்டு செய்தி.

என்ன நடந்தது?

சமீபத்தில் ஹைதராபாதின் தாஜ் பஞ்சாரா ஹோட்டலில் நடந்த இரவு விருந்துக்குப் போயிருக்கிறார் நடிகை த்ரிஷா. அவருடன் நடிகை சங்கீதாவும் மகேஸ்வரியும் போயிருக்கிறார்கள்.

உடன் வந்தவர்கள் கொஞ்சம் லைட்டான சரக்கில் இறங்கி, த்ரிஷா மட்டும் செம ஹாட்டில் இறங்கி, போதையின் உச்சத்துக்குப் போய் ஆட்டம் போட்டிருக்கிறார்.

'த்ரிஷா குடிக்கிறதை நிறுத்தவே மாட்டாரா?'  

அங்கிருந்தவர்களுடன் தகராறு, கலாட்டா என விவகாரம் எல்லை மீற, ஓட்டல் சிப்பந்திகள் வலுக்கட்டாயமாக த்ரிஷாவை வெளியேற்றினார்களாம்.

த்ரிஷா - நள்ளிரவு மது விருந்துகள் - கலாட்டா என்பது வாசகர்களுக்குப் புதிய விஷயமும் இல்லை. கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஆரம்பித்த த்ரிஷாவின் போதை கலாட்டா வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் என எங்கே போனாலும் தொடர்கிறது.

பார்க் ஷெராட்டன் ஓட்டலில் முற்றாக நினைவிழந்த த்ரிஷாவை போலீசார் காரில் அழைத்துவந்து விட்டதாக முன்பு ஒரு செய்தி வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம்.

 

தீபாவளி ரேஸில் குதித்தது விஷாலின் பாண்டிய நாடு!

ஏற்கெனவே மூன்று படங்கள் தீபாவளிக்கு வரிசை கட்டி நின்றபடி 900 தியேட்டர்களைக் கேட்டுக் கொண்டிருக்க, அடுத்ததாக களமிறங்கியிருக்கிறது விஷாலின் பாண்டிய நாடு.

விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாராகும் முதல் படம் இது. சுசீந்திரன் இயக்க, டி இமான் இசையமைத்துள்ளார்.

முதல் முறையாக விஷாலும் லட்சுமி மேனனும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

தீபாவளி ரேஸில் குதித்தது விஷாலின் பாண்டிய நாடு!

இந்தப் படத்தை தீபாவளி ஸ்பெஷலாக களமிறக்க முடிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் விஷால்.

மதகஜராஜா திட்டமிட்டபடி வெளியாகியிருந்தால், இந்தப் படத்தை ஒரு மாதம் தள்ளி வெளியிடவிருந்தார் விஷால். ஆனால் மதகஜராஜாவுக்கு சிக்கல் இன்னும் தீராததால், தீபாவளிக்கு பாண்டிய நாடு படத்தை வெளியிடலாம் என களமிறங்கியுள்ளார்.

ஏற்கெனவே ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் இரண்டாம் உலகம் ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவித்துள்ளன. இந்தப் படங்களுக்கு 900 தியேட்டர்கள் தேவைப்படுகின்றன. ஆனால் 700 அரங்குகள்தான் கிடைக்கும் சூழல் உள்ளது. இந்த நிலையில் விஷால் படமும் வந்தால் எப்படித் தியேட்டர்களை ஒதுக்குவது என திணறிப் போயுள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள்.

 

6 மெழுகுவர்த்திகள்- சிறப்பு விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
4.0/5

நடிப்பு: ஷாம், பூனம் கவுர், ரமேஷ்
ஒளிப்பதிவு: கிருஷ்ணசாமி
இசை: ஸ்ரீகாந்த் தேவா
தயாரிப்பு: ஷாம்
வெளியீடு: ஸ்டுடியோ 9
இயக்கம்: வி இஸட் துரை

பாசம் என்பது எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பதல்ல... அது உணர வேண்டிய விஷயம். ஷாமின் 6 மெழுகுவர்த்திகள் பார்த்த ஒவ்வொரு கணமும் பாசத்தின் மேன்மையும் வலியும் இதயத்தை உரசிக் கொண்டே இருந்ததென்றால் மிகையல்ல.

இத்தனைக்கும் இந்தப் படம் ஒன்றும் தவறுகளே இல்லாத உன்னதமான படம் அல்ல. தவறே இல்லாமல் படமெடுக்கும் பர்பெக்ஷனிஸ்ட் இன்னும் இந்த சினிமா உலகில் பிறக்கவே இல்லை. ஆனால் அந்தத் தவறுகள் எதுவும் பிரதானமாய் நின்று பார்வையாளனை உறுத்தவில்லை.

6 மெழுகுவர்த்திகள்- சிறப்பு விமர்சனம்

அங்கேதான் 6 படம் உயர்ந்து நிற்கிறது, வெற்றியைத் தொடுகிறது.

நிச்சயம் இந்தப் படம் ஒரு சின்சியரான முயற்சி என்பதில் சந்தேகமில்லை. காமெடி, பாட்டு என நேரத்தைக் கொல்ல முயற்சித்து பார்வையாளரைக் கொல்லாமல், நேரடியாக விஷயத்தைக்கு வந்துவிடுகிறார் இயக்குநர்.

ஒரு சின்ன, ஆனால் வலுவான இழைதான் கதை...

தன் மகனின் 6வது பிறந்த நாளன்று குழந்தையுடன் மெரினா பீச்சுக்குப் போகிறார்கள் ஷாமும் அவர் மனைவி பூனம் கவுரும். ஒரு சின்ன கவனக்குறைவான தருணத்தில் குழந்தை காணாமல் போகிறான்.

போலீசுக்குப் போகிறார்கள். பலனில்லை. ஒரு போலீஸ்காரர் கொடுக்கும் க்ளூ, கார் ஓட்டுநர் தரும் தகவல்களை வைத்துக் கொண்டு தானே குழந்தையைத் தேடிப் புறப்படுகிறார் ஷாம். வராங்கல், மும்பை, போபால், புனே, கொல்கத்தா என நாடு முழுக்க நீள்கிறது அவர் தேடல். போகும் இடமெல்லாம் பிள்ளைக் கறி தின்னும் கொடியவர்களின் கூடாரங்கள்... மானுட ஜென்மமே பாவம் என வெறுக்க வைக்கும் அளவுக்கு கொடுமைகள்...

அந்தக் கொடுமைகளை முடிந்தவரை அழுத்தமாகவும் நம்பகத்தன்மையுடனும் பதிவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

ஷாமின் உழைப்புக்கு எழுந்து நின்று கைத்தட்டி.. அவர் தோள்தட்டிப் பாராட்ட வேண்டும். தன் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, தோற்றத்தில் அசாதாரண மாற்றங்களைச் செய்த அவர், அதை எல்லோருக்கும் காட்டும் வகையில் துருத்திக் கொண்டு நிற்கவில்லை. ஜஸ்ட் போகிற போகிற போக்கில், அந்தக் கதாபாத்திரம் பட்ட சிரமங்களைக் காட்டுவது போல காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அதுவே அவர்கள் மீது புதிய மரியாதையைத் தருவதாக உள்ளது.

போபாலில், மகன் கிடைக்கவிருக்கும் தருணத்தில், தன்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சும் சிறுமியை உதறவும் முடியாமல், அந்தப் பெண்ணின் சோகத்தைத் தாங்கவும் முடியாமல் ஷாம் பதறுமிடம் அவர் நடிப்பில் எந்த அளவு பக்குவப்பட்டிருக்கிறார் என்பதற்கு சான்று. அந்தப் பெண்ணைக் காப்பாற்றி நகரின் பிரதான பகுதிக்கு வரும் அவர் எதிரில் உள்ள ஒரு பத்திரிகை அலுவலகத்தைக் காட்டி, 'இங்கே போ.. நல்லவர்கள் இருக்கிறார்கள்.. காப்பாற்றுவார்கள்,' என்று கூறிவிட்டு மீண்டும் மகனைத் தேடிப் போவார். எத்தனை நம்பிக்கை!

6 மெழுகுவர்த்திகள்- சிறப்பு விமர்சனம்

எங்கெங்கிருந்தோ கடத்தப்பட்டு வந்த சிறுவர்களை கொல்கத்தாவின் இருட்டறையில் அடைத்து அழுக்கு குப்பைகளுக்கு மத்தியில் அடித்து உதைத்து சோறுபோடும் காட்சி கண்களைக் குளமாக்கியது. இது சினிமா காட்சி மட்டுமல்ல, நிஜமான உண்மை என்பதை உணர்ந்து மனம் பட்ட பாட்டை எழுத வார்த்தைகளுக்கு வலிமையில்லை. அந்தக் காட்சியில் திரும்பத் திரும்ப 'இது கொடும பாய்... ஏன் இப்படி பண்றாங்க...இவங்கள்லாம் மனுசங்களே இல்லையா' என்ற ஷாமின் வேதனைக் கதறல் இன்னும் காதுகளை விட்டு அகலவில்லை.

குழந்தை திரும்பக் கிடைப்பான் என காத்திருந்து வெறுத்து வேதனை மிஞ்சி, 'தொலைந்து போன மகனைத் தேடுவதை விட்டுவிடு.. உனக்கு எத்தனை குழந்தை வேண்டுமானாலும் நான் பெத்துத் தர்றேன்.. நீ திரும்பி வா' என கணவனிடம் போனில் கதறுகிறாள் மனைவி. அவளை ஆற்றுப்படுத்திவிட்டு, தன் மகனைத் தேடும் முயற்சியைத் தொடரும் அந்தத் தந்தையை, தம்பதியை படமாக்கிய யதார்த்தம் இதுவரை பார்க்காதது. அந்தக் காட்சியில் பூனம் கவுர் ஒரு சினிமா நடிகையாகவே தெரியவில்லை.

அந்தக் க்ளைமாக்ஸ்... அத்தனை இயல்பு...!

6 மெழுகுவர்த்திகள்- சிறப்பு விமர்சனம்

(6 மெழுகுவர்த்திகள் படங்கள்)

டாக்சி ஓட்டுநர் ரங்கனாக வரும் ரமேஷ் மனதில் பதிந்துவிட்டார். பாந்தமான இயல்பான நடிப்பு.

கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு, இந்தியாவின் இன்னொரு படுபயங்கர பக்கத்தை அத்தனை நிஜமாகப் பதிவு செய்திருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா சீரியஸாகக் கொஞ்சம் முயற்சி செய்திருப்பது தெரிகிறது.

நான்கைந்து பாத்திரங்களை மட்டுமே வைத்து, மிகக் கச்சிதமாக காட்சிகளைத் தொகுத்திருந்ததால், படத்தில் ஹீரோயிசம் தலைதூக்கும் அந்த சண்டைக் காட்சிகளில் கூட லாஜிக் பார்க்க முடியவில்லை.

ரொம்ப நாளைக்குப் பிறகு தலைப்புக்குப் பொருத்தமான கதை, காட்சிகளோடு வந்த படம் இந்த 6!

படம் முடிந்தபோது, வீட்டுக்குப் போன் செய்து, 'பையனை எங்கும் வெளியில அனுப்பாதே. நான் வர்ற வரைக்கும் பத்திரமா பாத்துக்கோ' என்று மனைவியை எச்சரிக்கும் கணவர்களைப் பார்க்க முடிந்தது. ஒரு சினிமாவுக்கு இதை விட வேறென்ன பெருமை வேண்டும்!

வாழ்த்துகள் ஷாம், துரை!

Shaam's 6 Mezhuguvarthikal is a sincere effort to give a good and meaningful cinema.

 

பாண்டியநாடு படத்தில் டீச்சராக வரும் லட்சுமி மேனன்

சென்னை: நிஜவாழ்க்கையில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவியான லட்சுமி மேனன், பாண்டிய நாடு படத்தில் டீச்சர் வேடத்தில் நடித்துள்ளாராம்.

பாண்டியநாடு படத்தில் டீச்சராக வரும் லட்சுமி மேனன்

விஷால் தயாரித்து நடிக்கும் படமான பாண்டிய நாடு படத்தில் அவரது ஜோடியாக நடித்து வருகிறார் லட்சுமிமேனன். இயக்கம் சுசீந்திரன். தீபாவளியன்று ரிலீசாக உள்ள இப்படத்தை வேந்தர் மூவிஸ் வெளியிடுகிறது.

சென்ற ஆண்டு, பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்வான நடிகை லட்சுமி மேனன், தற்போது திரைப்படங்களில் நடித்தபடியே பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ரியல் வாழ்க்கையில் பள்ளி மாணவியாக உள்ள லட்சுமி மேனன், இப்படத்தில் ஆசிரியராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தின் போஸ்டரைப் பார்க்கும் போது, லட்சுமி மேனனின் மேக்கப், ‘காக்க காக்க' படத்தில் வரும் ஜோதிகாவை நினைவூட்டுகிறது.

 

புன்னகை அரசி கே.ஆர்.விஜயா மீண்டும் நடிக்க வருகிறார்!

புன்னகை அரசி கே.ஆர்.விஜயா மீண்டும் நடிக்க வருகிறார்!

புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா மீண்டும் வெள்ளித்திரையில் நடிக்க வருகிறார்.

கே.வி. சினி ஆர்ட்ஸ் சார்பில் டாக்டர் இளங்கோவன் கதை, வசனம் எழுதி தயாரிக்கும் புதிய படம் ‘தனுஷ் 5-ம் வகுப்பு'. இப்படத்திற்கு கதாக.திருமாவளவன் திரைக்கதை எழுதி இயக்குகிறார். அகில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அஷ்ரிதா நடிக்கிறார்.

ஒரு அழகான குடும்பத்தில் வேலைக்குப் போகும் அப்பா, அம்மா. அவர்களுக்குள் நடக்கும் சின்ன சின்ன ஈகோ பிரச்சினைகளால் குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை கருவாக வைத்து படத்தை உருவாக்கி வருகிறார் கதாக.திருமாவளவன். இவர் நான்கு மொழிகளில் இயக்கப்பட்ட அஜந்தா மற்றும் வெண்மணி படங்களை இயக்கியவர்.

பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா சுமார் 2 வருட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதையைக் கேட்டதும் மறுப்பு ஏதும் சொல்லாமல் உடனே ஒப்புக் கொண்டாராம். இந்த படத்தில் நிழல்கள் ரவி, மீனாள், தயாரிப்பாளர் இளங்கோவன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்திற்கு ஷாம் டி.ராஜ் இசையமைத்துள்ளார். ஜி.சிவசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஓகேனக்கல், பாலக்கோடு, ராயக்கோட்டை ஆகிய பகுதிகளில் நடத்தி முடித்துள்ளனர்.

தற்போது இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. விரைவில் படம் வெளியிடப்பட உள்ளது.