சென்னை: விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து தற்போது சுமூக நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அப்படத்தில் இயேசுநாதரை இழிவுபடுத்தும் விதமாக காட்சி அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரி வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.
விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமுக்கும் எதிரான, இழிவுபடுத்தக் கூடிய காட்சிகள் இருப்பதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இதனால் தமிழக அரசு படத்தையே தடை செய்தது. தற்போது பிரச்சினை சரியாகி சுமூக நிலை ஏற்பட்டு படம் திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், கிறிஸ்தவர்கள் சார்பில் ஒரு பிரச்சினை கிளப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜெபக்குமார் ஜார்ஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், விஸ்வரூபம் படத்தில் இயேசு கிறிஸ்துவை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் உள்ளன. எனவே இப்படத்தை நாடு முழுவதும் திரையிடக் கூடாது என்று ஜார்ஜ் கோரியிருந்தார்.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி எலிப்பே தர்மாராவ் மற்றும் வேணுகோபாலன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.