சென்னை: தலைப்பு ஒரு பிரச்சினையே அல்ல. புறம்போக்கு தலைப்பை நட்ராஜ் வேண்டும் என்று கேட்டால், நானே விட்டுக் கொடுத்து விடுகிறேன். என்னால் இதுபோல ஏராளமான தலைப்புகளைச் சொல்ல முடியும், என்கிறார் இயக்குநர் எஸ்பி ஜனநாதன்.
இயற்கை, ஈ, பேராண்மை என வித்தியாசமான படங்கள் தந்த எஸ்பி ஜனநாதன் அடுத்து புறம்போக்கு என்ற தலைப்பில் ஆர்யா - விஜய் சேதுபதியை வைத்து புதிய படம் இயக்குகிறார். இந்தப் படத்தை யுடிவி தயாரிக்கிறது.
அறிவிப்பு வெளியான அடுத்த நாளே இந்தத் தலைப்பு தனக்கே சொந்தம் என நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் அறிவித்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து இயக்குநர் எஸ்பி ஜனநாதனிடம் கருத்து கேட்டபோது, "நட்ராஜ் அப்படிக் கூறியதை மீடியாக்கள் மூலம் தெரிந்து கொண்டேன். பின்னர் இருவரும் போனில் பேசினோம்.
தலைப்பு ஒரு பிரச்சினை இல்லை. எந்தத் தலைப்பாக இருந்தால் என்ன, கதைதான் முக்கியம். புறம்போக்கு தலைப்பை நட்ராஜ் எனக்கு விட்டுக் கொடுக்கவும் தயாராக இருப்பதாகச் சொன்னார். எனக்கும் இதில் பெரிய பிரச்சினை இல்லை. அவருக்கு இதே தலைப்பு வேண்டும் என்றால் நானே விட்டுக் கொடுத்துவிடுகிறேன்.
என்னால் இதுபோல பல தலைப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும் எனும்போது எதற்காக வீண் பிரச்சினை?
இனி இதுபோன்ற தலைப்புப் பிரச்சினையே வராத அளவுக்கு, ஒரு புதிய நடைமுறையை தமிழ் சினிமாவில் உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது," என்றார்.