கமல் உதவியாளரின் கள்ளத்துப்பாக்கியும் விஜய்யின் துப்பாக்கியும்! - வெடிக்கும் சர்ச்சை

Vijay S Thuppakki Trouble
விஜய்யின் துப்பாக்கி படம் இன்னும் ஒரு தலையாய சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளது. இது தலைப்பு சர்ச்சை.

பல மாதங்களுக்கு முன்பே கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பை பதிவு செய்து படப்பிடிப்பையும் தொடங்கியவர் சி ரவிதேவன் மற்றும் முருகேசன். இந்தப் படத்தை இயக்குபவர் லோகியாஸ்.

நடிகர் கமல் ஹாஸனிடம் உதவியாளராக இருந்தவர் தயாரிப்பாளர் ரவிதேவன்.

படத்தையே, பத்மஸ்ரீ கமல்ஹாஸன் ஆசீர்வாதத்துடன்' என்றுதான் ஆரம்பித்தார். கமல் அட்வைஸ்படி ஒத்திகையெல்லாம் பார்த்துதான் படப்பிடிப்பைத் தொடங்கினாராம்.

படம் குறித்த விளம்பரங்கள், செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன கடந்த இரு ஆண்டுகளாக. இந்தத் தலைப்பை 2009-லேயே அவர்கள் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதனைப் புதுப்பித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், நண்பன் படத்துக்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு துப்பாக்கி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தலைப்பை இந்த ஆண்டுதான் விஜய் மற்றும் முருகதாஸ் முடிவு செய்துள்ளனர்.

துப்பாக்கி டைட்டில் டிஸைனும் கிட்டத்தட்ட 'கள்ளத்துப்பாக்கி' பாணியில் உள்ளது. மே முதல் நாள் அன்று துப்பாக்கி மற்றும் கள்ளத்துப்பாக்கி போஸ்டர்கள் கோடம்பாக்கம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன. அதுவும் இரண்டும் அடுத்தடுத்து ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பைக் கிளப்பியது.

இன்னொரு பக்கம் தங்கள் பட போஸ்டர் ஒட்டப்பட்ட இடத்தில் அதற்கு மேலேயே விஜய் பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக குற்றச்சாட்டியிருந்தனர் கள்ளத்துப்பாக்கி குழுவினர்.

விஜய்யின் துப்பாக்கி தலைப்பு அறிவிக்கப்பட்ட போதே, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார்களாம் ரவிதேவனும் அவரது குழுவினரும். ஆனால் அப்போது சங்கத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் எஸ் ஏ சந்திரசேகரனும் துப்பாக்கி தயாரிப்பாளர் தாணுவும். இவர்கள் புகாரை யாரும் கண்டுகொள்ளவில்லையாம்.

ஆனால் சங்கம் இப்போது உடைந்துள்ள நிலையில், இப்ராகிம் ராவுத்தரிடம் போய் முறையிட்டுள்ளார்களாம்.

இதுகுறித்து கள்ளத்துப்பாக்கி தயாரிப்பாளர் ரவிதேவன் நம்மிடம் கூறுகையில், "விஜய்யின் துப்பாக்கி படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே எங்கள் கள்ளத்துப்பாக்கி படத்துக்கு பிரச்சினை வந்துவிட்டது.

மே 1-ம் தேதி எங்கள் படத்தின் போஸ்டர்களை ஒட்ட திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதை ஒட்டவிடாமல் சதி நடந்திருக்கிறது. நாங்கள் போஸ்டர் ஒட்டவிருந்த இடத்தில், அதே தேதியில் 'துப்பாக்கி' போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

எனவே அடுத்த நாள் நாங்கள் போஸ்டர் ஒட்டினோம். உடனே, அன்று இரவே மீண்டும் போஸ்டர் அடித்து எங்கள் கள்ளத்துப்பாக்கி போஸ்டர் மீது ஒட்டி எங்கள் படத்தை மறைத்துவிட்டனர்.

ஆரம்பத்தில் நாங்கள் விஜய் படத்தை எங்களுக்கு எதிராக நினைக்கவில்லை. ஆனால் இப்போது மிகப் பெரிய அச்சுறுத்தலாகப் பார்க்கிறோம். துப்பாக்கி என்ற தலைப்பை அவர்கள் பயன்படுத்துவதற்காக, எங்கள் படத்துக்கு எந்த அளவுக்கு போயும் பிரச்சினை செய்வார்கள் என நாங்கள் பயப்படுகிறோம். எனவே விஜய் படத்துக்கு துப்பாக்கி என்ற தலைப்பை பயன்படுத்தக் கூடாது," என்றார்.

இந்தப் பிரச்சினை இப்போது தயாரிப்பாளர் சங்கத்துக்கு போயுள்ளது.
 

'குனிஞ்சி நிமிர்ந்த'ததை க்ளிக்கியவருக்கு குத்துவிட்ட நடிகை!

கொஞ்சம் ;அரோகன்டான' நடிகை என்றுதான் அம்மணிக்கு பெயர். குணத்தில் மட்டுமல்ல, ஒன்றாக இருக்கும் குடும்பத்தைப் பிரிப்பதிலும் நடிகையின் மூர்க்கம் கோடம்பாக்கம் அறிந்தததுதான்.

மிக சமீபத்தில் அண்மையில் ஒரு பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருக்கிறார் இந்த நடிகை. ஏடாகூடமான உடையில், எக்கச்சக்க கவர்ச்சி ததும்ப வந்திருந்தாராம்.

அவர் ஒவ்வொரு முறை குனிந்து நிமிரும்போதும் புகைப்படக்காரர்கள் வேறு பக்கம் பார்க்கும்படி இருந்ததாம் நிலைமை. அவர் எதையும் கண்டு கொள்ளாமல், மீண்டும் மீண்டும் குனிந்து நிமிர, எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு க்ளிக் அடித்திருக்கிறார் போட்டோகிராபர்.

அவ்வளவுதான். கோபத்தின் உச்சிக்கே போய்விட்ட நடிகை, போட்டோகிராபரை அருகில் அழைத்து பளார் விட்டாராம். கடுமையாக அவரை எச்சரித்ததோடு, அந்த போட்டோக்களையும் அழித்துவிட்டாராம்.

கன்னத்தைத் தடவிக் கொண்டே, கேமராவைக் கொடுக்கும்போது நடிகை குனிந்து நிமிர்ந்ததை கடைசியாகப் பார்த்தபடி வெளியேறினாராம் போட்டோகிராபர்!
 

கலகலப்பு... அஞ்சலி - ஓவியாவின் கவர்ச்சி தந்த பெரும் பப்ளிசிட்டி!

Anjali Oviya S Glamour Make Kalakalappu Big
சுந்தர் சியின் 25 வது படமான கலகலப்பு, விநியோகஸ்தர்களின் நம்பிக்கைக்குரிய படமாக மாறியிருக்கிறது.

அஞ்சலி, ஓவியா என இரு இளம் நடிகைகளை மேக்ஸிமம் கவர்ச்சி காட்ட வைத்திருப்பதும், இன்றைய தேதிக்கு பரபரப்பான காமெடியனான சந்தானத்துக்கு படத்தில் பிரதான இடம் கொடுத்திருப்பதும், கேட்ட விலையைத் தர வைத்துள்ளது விநியோகஸ்தர்களை.

ஒரு படத்தை கமர்ஷியலாகக் கொடுப்பது சுந்தருக்கு கைவந்த கலை.

"பொழுதுபோக்குக்கு கியாரண்டியான படமாக இருக்கும் இந்த மசாலா கபே" எனும் சுந்தர், நான் யாரையும் கட்டாயப்படுத்தி கவர்ச்சி காட்டச் சொல்லவில்லை. கதை மற்றும் காட்சிகளைக் கேட்டபின், அவர்களாகவே இந்த அளவு கிளாமராக நடித்துக் கொடுத்தனர். கவர்ச்சியாக இருக்கும். ஆனா நிச்சயம் விரசமாக இருக்காது", என்கிறார்.

அஞ்சலி, ஓவியாவின் இந்த அதிரடி கவர்ச்சியே படத்துக்கு பெரிய பப்ளிசிட்டியாகவும் உள்ளதை ஒப்புக் கொள்கிறார் சுந்தர்.

அனைத்து ஏரியாக்களும் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது. வரும் மே 11-ம் தேதி உலகமெங்கும் பெரிய அளவில் ரிலீசாகிறது கலகலப்பு.
 

வழக்கு எண் 18/9 - சிறப்பு விமர்சனம்

Vazhakku Enn 18 9 Review
-எஸ் ஷங்கர்

நடிகர்கள்: ஸ்ரீ, ஊர்மிளா மஹந்தா, மனிஷா யாதவ், மிதுன் முரளி, முத்துராமன், சின்னசாமி

இசை: பிரசன்னா

ஒளிப்பதிவு: விஜய் மில்டன்

தயாரிப்பு: சுபாஷ் சந்திர போஸ் & ரோனி ஸ்க்ரூவாலா

எழுத்து - இயக்கம்: பாலாஜி சக்திவேல்

சம்பிரதாயமான ஒரு பாராட்டை முன்னுரையாகத் தருவது கூட, இந்தப் படைப்பின் இயல்புக்கு விரோதமாகிவிடுமோ என யோசிக்க வைக்கும் அளவு ஒரு நேர்மையான படம் வழக்கு எண் 18/9.

தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தப் போகிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்காமல், சத்தமின்றி அந்த வேலையைச் செய்யும் மிகச் சில படைப்பாளிகளுள் ஒருவர் பாலாஜி சக்திவேல். படங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதில் நம்பிக்கையில்லாத, ஜீவனுள்ள படைப்புகளைத் தருவதை மட்டுமே பிரதானமாகக் கொண்ட இயக்குநர்.

தனது முந்தைய காதல், கல்லூரி படங்களை விட பல மடங்கு உயர்வான ஒரு படைப்பை தமிழ் ரசிகர்கள் கண்முன் வைத்திருக்கிறார்.

காதலும் அந்த உணர்வும் எல்லாவுயிர்க்கும் பொதுவானது. அந்தஸ்துகளுக்கு அப்பால் உயர்ந்து நிற்பது என்பதையும், சட்டம் ஏழைகளுக்கு எப்படி எட்டாத உயரத்தில் நிற்கிறது என்ற பேருண்மையை வெகு எளிதாகவும் சொல்லியிருக்கிறார்.

கதையின் முடிவில் கொஞ்சம் சினிமாத்தனம் இருந்தாலும், ஒரு துயருற்ற மனதுக்கு இளைப்பாறக் கிடைக்கும் சிறு மேடை போல அந்த முடிவு அமைந்திருப்பதால் பலத்த கைத்தட்டலுடன் வரவேற்கிறார்கள் ரசிகர்கள்.

கதை?

ஆசிட் வீச்சில் முகம் வெந்து துடித்தபடி மருத்துவமனைக்கு தூக்கி வருகிறார்கள் ஒரு வேலைக்காரப் பெண்ணை. போலீஸ் விசாரணை தொடங்குகிறது. அந்தப் பெண் வேலை செய்யும் வீட்டுக்கு எதிரே நடைபாதைக் கடையில் வேலை செய்யும் இளைஞன் மீது சந்தேகம் என்கிறாள் பெண்ணின் தாய். விசாரிக்கிறது போலீஸ். அந்த விசாரணையில் இளைஞனின் கண்ணீர்க் கதையும் அந்த வேலைக்காரி மீதான காதலும் மட்டுமே தெரியவருகிறது.

அப்போதுதான், அந்தப் பெண் வேலை செய்த வீட்டு எஜமானியின் மகள் வருகிறாள். வேறு ஒரு இளைஞனை விசாரிக்க வேண்டும் என அவள் புகார் கொடுக்க, விசாரிக்கிறது போலீஸ். அந்த விசாரணை வேலைக்காரிக்கு நீதியைப் பெற்றுத் தந்ததா என்பது கொஞ்சம் சினிமா, கொஞ்சம் Poetic Justice கலந்த க்ளைமாக்ஸ்!

இரண்டு கோடுகளாய் பயணிக்கும் இந்தக் கதை, ஒரு புள்ளியில் இணைவதே தெரியாமல் இணைகிறது. திரைக்கதையில் அத்தனை நேர்த்தி.

ஹீரோவின் ப்ளாஷ்பேக் தர்மபுரியின் வறட்சி மிக்க கிராமத்தில் தொடங்குகிறது. அந்த மனிதர்கள், அவர்களின் துயர்மிகு வாழ்க்கை, மண்மூடி மறைந்து போகும் அவர்கள் வாழ்க்கை ஒரு கண்ணீர் அத்தியாயம்.

பெற்றோர் இறந்ததைக் கூட மறைத்துவிடும் அந்த முறுக்குக் கம்பெனி முதலாளி, நடைபாதையில் பசி மயக்கத்தில் வீழ்ந்து கிடப்பவனை எல்லோரும் வேடிக்கை மட்டுமே பார்த்துச் செல்ல, அவன் பசி தீர்த்து, வேலையும் வாங்கிக் கொடுக்கும் ஒரு செக்ஸ் தொழிலாளி, மெல்ல மெல்ல உயிர் விட்டுக் கொண்டிருக்கும் கிராமத்து கட்டைக் கூத்திலிருந்து சினிமா வாய்ப்பு தேடி வரும் சின்னசாமி, நொடியில் குணம் மாறும் அந்த தள்ளுவண்டி சாப்பாட்டுக் கடை முதலாளி, மகளைக் காக்க எல்லோர் மீதும் எரிந்து விழும் வயதான வேலைக்காரி... இவர்கள் அனைவரையும் நாம் அடிக்கடி சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இவர்களுக்குப் பின்னாள் உள்ள கதைகள் நமக்குத் தெரிவதில்லை. காரணம் நமது மனிதாபிமானம் என்பதே ஒரு demonstration effect என்பதால்தான். அடுத்தவர் மெச்சிக் கொள்ள வேண்டும் என்பதுதான் நமது மனிதாபிமானங்களின் உள்ளார்ந்த நோக்கம் இல்லையா! இந்த நோக்கம் இல்லாமல் அணுகினால் நம்மாலும் வேலு, ஜோதி, சின்னசாமிகளைக் காண முடியும்!

இவர் நாயகன், அவர் நாயகி என்றெல்லாம் இனம் பிரித்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை இந்தப் படத்தில். காரணம், ஒரு நிமிடம் வந்து செல்லும் அந்த பஞ்சர் ஒட்டும் பாத்திரம் கூட மனசுக்குள் வந்துவிடுவதுதான். நடித்த அனைவருமே புதுமுகங்கள். ஆனால் அவர்களின் நடிப்பு படத்தையே தூக்கி நிறுத்துகிறது.

நடைபாதை சாப்பாட்டுக்கடையில் வேலை பார்க்கும் வேலுவாக வரும் ஸ்ரீ, வேலைக்காரப் பெண் ஜோதியாக வரும் ஊர்மிளா மஹந்தா, பணக்காரப் பையனாக வரும் மிதுன் முரளி, எஜமானி மகளாக வரும் மனீஷா நால்வரையும் பிரதான பாத்திரங்களில் ஜொலிக்க வைத்துள்ளார் இயக்குநர்.

கூத்துக் கலைஞனாக வரும் சின்னசாமி அசத்தியிருக்கிறார்.

ஆனால் இவர்கள் அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடுகிறார் இன்ஸ்பெக்டராக வரும் முத்துராமன். தமிழ் சினிமாவில் இதுவரை இத்தனை இயல்பாக போலீஸ் வேடத்தைச் செய்ததில்லை.

காட்சிகளை மீறி ரசிகனின் கவனத்தைக் கவர வேண்டும் என்ற பிரயத்தனம் துளிகூட வசனங்களில் இல்லை. அந்த பாத்திரம் தன் இயல்பில் பயன்படுத்தும் சொற்களே வசனங்கள்!

சதா சர்வகாலமும் செல்போனை நோண்டிக் கொண்டே இருக்கும் இளம் பெண்கள், இளைஞர்களுக்கு இந்தப் படம் சொல்லும் எச்சரிக்கை செய்திகள் ஏராளம்.

பார்ப்பவருக்கு, இது பக்கத்து தெருவில் நடக்கும் சமகால நிகழ்வு என்பதை உணர்த்தும் அளவு உறுத்தலில்லாத ஒளிப்பதிவு. அதுவும் ஸ்டில் கேமிராவில். விஜய் மில்டன் பாராட்டுக்குரியவர்.

முதல் முறையாக எந்த பாடலுக்கும் பின்னணி இசை இல்லை. வெறும் பாடல் மட்டும்தான். 'ஒரு குரல் கேட்குது பெண்ணே...' மனதுக்குள் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

எதற்கெடுத்தாலும் ஈரானிய, மெக்சிகன் படங்களை உதாரணத்துக்கு தேடும் அறிவு ஜீவிகளின் வேலையைக் குறைத்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்!

இந்த வழக்கால் தமிழ் சினிமா தலை நிமிர்ந்தது!
 

மாமியார் வீட்ல செம ஜாலி! - ஜெனிலியா உற்சாகம்

Post Marriage Life Is Very Beautiful Says Genelia
மாமியார் வீட்டுக்குப் போன பிறகு கிட்டத்தட்ட சினிமாவையே மறந்து விடும் அளவுக்கு செம ஜாலியாக இருக்கிறாராம் நடிகை ஜெனிலியா.

ஆனால், கேரியர் முக்கியம் என்பதால் கொஞ்ச நாள் ஜாலிக்குப் பின் நடிக்க வந்துவிட்டாராம்.

இப்போது புதிதாக ஒரு இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "திருமணத்துக்கு பின் சந்தோஷமாக இருக்கிறேன். என் கணவர் என்னை அருமையாகப் பார்த்துக் கொள்கிறார். அவருக்கு என்னைப் பற்றி எல்லாமே தெரியும். அதனால் என் மனம் புரிந்து நடக்கிறார். என் கணவர் வீட்டினர் காட்டும் அன்பு அற்புதமானது.

இதனால் மாமியார் வீடு எனக்கு சொர்க்கமாக தெரிகிறது. நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.

திருமணமான பெண்கள் கணவர் மனம் அறிந்து நடந்து கொள்ள வேண்டும். நான் என் கணவருக்காகவே ஹேர்ஸ்டைலை மறந்து விட்டேன். ஜடை போடாமல் முடியை அப்படியே விட்டாலும் கூட அழகாக இருக்க வேண்டும் என்று ரிதேஷ் விரும்புகிறார். இதனால் முடியை கட்பண்ணி விட்டேன். இதுவரை எனக்காக வாழ்ந்தேன். இனிமேல் என் கணவருக்காக வாழ்வேன்," என்றார்.
 

மக்கள் நினைத்தால் நாளையே நான் ரஜினி, கமல் - 'தேவர்' கருணாஸ்

Karunaas Launches New Movement Devar Caste
தேவர் புலிப்படையின் நிறுவனத் தலைவராகிவிட்டார் நடிகர் கருணாஸ். இந்த அமைப்பை தொடங்கிய பிறகு முதல் முறையாக இன்று கோவையில் நிருபர்களைச் சந்தித்த கருணாஸ் கூறுகையில், "சாதி ரீதியாக கள்ளர், மறவர், அகமுடையர் என்று தேவர் சமுதாயம் பிரிந்து கிடக்கிறது. இவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைப்பதற்காக சாதி வாரியான கணக்கெடுப்பில் தேவர் என்று மட்டுமே தேவர் இன மக்களை கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்.

தேவர் இனத்துக்கென்று பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஆனால் அந்த அரசியல் கட்சிகளெல்லாம் ஓட்டுக்காக மட்டுமே மக்களை உபயோகப்படுத்துகிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சொன்னதுபோல், தேசத்திற்காக எதையும் கொடுப்பவன் தேசியவாதி. தேசத்தில் இருந்து எதையும் எடுப்பவன்தான் அரசியல்வாதி அப்படி ஒரு அரசியல்வாதிகயாக நான் மாறமாட்டேன்.

எந்த காலத்திலும் இந்த அமைப்பு அரசியல் கட்சியாக உருவெடுக்காது. ஆனால் சினிமாவில் இருப்பவர்கள் சினிமாவின் மூலம் புகழை வளர்த்துக்கொண்டு, தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்பார்கள். ஜெயிப்பார்கள். பின் தன் மகனை வைத்து கட்சியை துவங்குவார்கள்.

நாளைக்கே நான் ரஜினி, கமல்

அரசியல்வாதிக்கும் சரி, சினிமாகாரர்களுக்கும் சரி பொதுமக்கள் மட்டுமே எஜமானர்கள். பொதுமக்கள் நினைத்தால் நாளைக்கே நான் ரஜினிகாந்த், நாளைக்கே நான் கமலஹாசன் என மாறமுடியும். அப்படிப்பட்ட பொதுமக்களுடன் நான் தனிப்பட்ட சாதியைச் சேர்ந்தவனாக காட்டிக்கொள்ளவில்லை. எல்லா சாதியினருடனும் தேவர் இன மக்கள் ஒன்றிணைந்து இருக்கவே நான் பாடுபடுகிறேன்," என்றார்.
 

தாய்லாந்து தீவில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய த்ரிஷா - பென்ஸ் கார் பரிசு!

Trisha Celebrates Her B Day At Thailand   
தனது பிறந்த நாளை இந்த முறை சென்னையி்ல் கொண்டாடவில்லை நடிகை த்ரிஷா. தாய்லாந்து தீவு ஒன்றில் தோழிகளுடன் ஆட்டம் பாட்டம் என அமர்க்களமாகக் கொண்டாடினார்.

த்ரிஷாவுக்கு நேற்று 29வது பிறந்த நாள். வழக்கமாக பிறந்த நாளன்று சென்னையில் ஏதாவது ஒரு அனாதை இல்லத்தில் இருப்பார். மாலையில் உற்சாகமாக பார்ட்டி கொண்டாடுவார்.

இந்த முறை மாறுதலாக, தாய்லாந்து போய்விட்டார். அங்குள்ள தீவு ஒன்றின் கடற்கரையில் மிக ஆடம்பரமாக கேக் வெட்டினார் த்ரிஷா.

இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், "சினிமா துறையில் இது எனக்கு பத்தாவது வருடம். ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் எனது கவர்ச்சி பேசப்படுகிறது.

சினிமாவை விட்டு எங்கேயும் போக மாட்டேன். என்னைப்பற்றி கிசு கிசுக்கள் வருகின்றன. அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

சொந்த வாழ்க்கையை சினிமாவில் போட்டு குழப்பிக் கொள்ளமாட்டேன். வீட்டுக்கு போனால் சினிமா தொடர்புடைய பலருடன் பேசுகிறேன். ஆனால் என் தோழிகள் சினிமாவை தவிர்த்து திரிஷாவாகவே என்னை பார்க்கின்றனர்.

எனது இந்தப் பிறந்தநாளுக்கான பரிசு மெர்சி டெஸ்பென்ஸ் கார். செம க்யூட்!," என்றார்.
 

துப்பாக்கியில் தம்மடிக்கும் விஜய் மீது நடவடிக்கை - பாமகவின் பசுமைத் தாயகம் வலியுறுத்தல்!

Pmk S Pasumai Thayagam Raises Arm Against Vijay
சென்னை: மத்திய அரசின் சட்ட விதிகளை மீறி துப்பாக்கி திரைப்படத்தில் நடிகர் விஜய் புகைபிடிக்கும் காட்சி சுவரொட்டிகள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பசுமைத்தாயகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பசுமைத்தாயகத்தின் மாநில தலைவர் சவுமியா அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

'வீ கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் `துப்பாக்கி' எனும் திரைப்படத்தின் விளம்பரம் சுவரொட்டிகள் மூலம் கடந்த 1-ந் தேதி சென்னை நகரில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

`துப்பாக்கி' திரைப்படத்தின் இந்த விளம்பரத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு புகைப்பிடிக்கும் காட்சி விளம்பரங்களில் இடம்பெற்றுள்ளது இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

நடவடிக்கை எடுக்கவேண்டும்

மத்திய அரசு, தமிழக அரசு, மத்திய திரைப்பட தணிக்கைத்துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்புகளும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசாணையை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், விளம்பரங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது சட்டப்படி குற்றம் என்கிற உண்மையை அறிந்த பின்னரும், `துப்பாக்கி' திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும், இயக்குனரும், நடிகரும், `துப்பாக்கி' திரைப்படத்தின் விளம்பரத்தில் புகைப்பிடிக்கும் காட்சியினை இடம் பெறச்செய்து சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளனர்.

எனவே இந்திய அரசின் புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தினை மீறி, குற்றமிழைத்துள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசை பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சவுமியா அன்புமணி கூறியுள்ளார்.