பி.வி.பி பிக்சர் ஹவுஸ் சார்பில் பிரசாத் வி. பொட்லூரி தயாரிக்கும் படம், 'நான் ஈ'. தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்குகிறார். நானி, சமந்தா, கன்னட நடிகர் சுதீப், சந்தானம் நடிக்கிறார்கள். மரகதமணி இசை அமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு. படம் பற்றி இயக்குனர் ராஜமவுலி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழில் எனக்கு இது முதல் படம். பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை விரும்பி பார்க்கும் அனிமேஷன் கலந்த ஆக்ஷன் படம். காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். வில்லனால் கொல்லப்படும் ஹீரோ மறுபிறவியில் ஈயாக பிறந்து காதலி உதவியுடன் எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் கதை. சுமார் 40 கோடி செலவில் உருவாகிறது. இதில் 50 சதவிகிதம் விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுக்காகச் செலவிடப்படுகிறது. மிகச்சிறிய உயிரினமான ஈ, அதன் இயல்பும், உருவ அளவும் மாறாமல் எப்படி செயல்பட்டு பழிவாங்குகிறது என்பதை காட்டுகிறோம். அமெரிக்கா, ரஷ்யா, மற்றும் போலந்து நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் அனிமேஷன் பணிகளை செய்து வருகிறார்கள்.
டைரக்டருடன் மோதல் இல்லை
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் படத்தில், ஆர்யா ஹீரோவாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்தப் படத்தை 'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்குவதாக இருந்தது. இப்போது ஆர்யாவுக்குப் பதில் தெலுங்கு ஹீரோ ராம் நடிக்கிறார். சரவணனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகத்தான் ஆர்யா விலகியதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி ஆர்யாவிடம் கேட்டபோது, 'லிங்குசாமியுடனும், சரவணனுடனும் நட்பு தொடர்கிறது. கதைக்கும், கேரக்டருக்கும் பொருத்தமாக இருக்க மாட்டேன் என்று சரவணன் நினைத்து இருக்கலாம். அதனால், அதில் நடிக்கவில்லை. இப்போது செல்வராகவன் இயக்கத்தில், 'இரண்டாம் உலகம்' படத்தில் நடித்து வருகிறேன்' என்றார்.
டாப்ஸி ஷூட்டிங்கில் ரகளை படப்பிடிப்பு ரத்து
டாப்ஸி நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் ரகளை ஏற்பட்டதால் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. ரவிதேஜா, டாப்ஸி நடிக்கும் தெலுங்கு படம், 'தருவு'. சிவகுமார் இயக்குகிறார். இதன் ஷுட்டிங் கடந்த சில நாட்களாக ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகம் அருகே நடந்தது. வழக்கம் போல் இன்றும் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் செட் போட்டு ஷூட்டிங் நடந்து கொண்டிருந் தது. அப்போது அங்கு வந்த தனித்தெலுங்கானா ஆதரவாளர்கள் கோஷம் போட்டப்படி, செட்டுக்குள் புகுந்தனர். கற்களால் அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தினர். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
ஹோம்லி, கிளாமர் சஞ்சனா சிங் ஆசை
ஹோம்லி, கிளாமர் இரண்டிலும் சிறப்பாக நடிக்க ஆசைப்படுவதாக சஞ்சனா சிங் கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: 'ரேணிகுண்டா' படத்தில் அழுத்தமான கேரக்டர் கிடைத்தது. அதற்கு பிறகு அப்படிப்பட்ட கேரக்டர்கள் கிடைக்கவில்லை. நண்பர்களுக்காக, 'மறுபடியும் ஒரு காதல்', 'மயங்கினேன் தயங்கினேன்', 'வெயிலோடு விளையாடு' படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளேன். கணேசன் காமராஜ் இயக்கும் 'யாருக்குத் தெரியும்' படத்தில் ஹீரோயினாக, அதிர்ந்து பயந்து பயப்படவைக்கிற நடிப்பைக் கொட்டியிருக்கேன். அடுத்து அதியமான் இயக்கும் 'தப்புத் தாளங்கள்' படத்தில் கிளாமர் ஹீரோயின். சி.எஸ். அமுதன் இயக்கும் 'இரண்டாவது படம்' படத்திலும் நடிக்கிறேன். ஹோம்லி, கிளாமர் இரண்டிலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஷோ கேஸ் மாதிரி இருப்பதில் உடன்பாடு இல்லை.
சிவாஜி, எம்.ஜி.ஆர் தலைப்புகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்
சிவாஜி கணேசன் நடிப்பில் 1964-ல் ரிலீசான படம், 'கர்ணன்'. மறைந்த பி.ஆர்.பந்துலு இயக்கியிருந்தார். இந்தப்படத்தை நவீன தொழில்நுட்பங்களுடன் புதுப்பித்து, திவ்யா பிலிம்ஸ் சாந்தி சொக்கலிங்கம் வெளியிடுகிறார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. சிவாஜி மகன் ராம்குமார் வெளியிட, எல்.சுரேஷ் பெற்றார். நிகழ்ச்சியை ஒய்.ஜி.மகேந்திரனுடன் தொகுத்து வழங்கிய சேரன் பேசியதாவது: நடிகர் திலகத்தின் சாயல் இல்லாமல் இங்கே யாரும் நடிக்க முடியாது. 48 வருடங்களுக்கு முன் வந்த 'கர்ணன்', பிரமாண்டங்களின் உச்சம். அன்றைக்கு சினிமாவை மட்டுமே நேசித்தவர்கள் சேர்ந்து உருவாக்கிய படம் என்பதால்தான், இன்றும் காலத்தைக் கடந்து நிற்கிறது. இந்த வரிசையில் 'புதிய பறவை', 'தெய்வ மகன்', 'உத்தம புத்திரன்', 'தில்லானா மோகனாம்பாள்' படங்களையும் புதுப்பித்து, வருங்கால சந்ததியினருக்கு சிவாஜியின் சாதனைகளை சொல்ல வேண்டும். சிவாஜி மகன் ராம்குமாரிடம் கோரிக்கை வைக்கிறேன். இனி சிவாஜி படங்களின் தலைப்புகளை, வேறு யாரும் வைக்க அனுமதிக்கக் கூடாது. அதுபோல், எம்.ஜி.ஆர் பட தலைப்புகளை மீண்டும் வைக்கவும் அனுமதிக்கக் கூடாது என்பதை, சினிமா துறையினருக்கு வேண்டுகோளாக வைக்கிறேன்.
இவ்வாறு சேரன் பேசினார். விழாவில், கமலா தியேட்டர் வி.என்.சிதம்பரம், விநியோகஸ்தர் சங்க தலைவர் டி.ஏ.அருள்பதி, கலைப்புலி ஜி.சேகரன், வி.சி.குகநாதன், துஷ்யந்த் உட்பட பலர் பங்கேற்றனர். மதுவந்தி அருண் நன்றி கூறினார்.
இவ்வாறு சேரன் பேசினார். விழாவில், கமலா தியேட்டர் வி.என்.சிதம்பரம், விநியோகஸ்தர் சங்க தலைவர் டி.ஏ.அருள்பதி, கலைப்புலி ஜி.சேகரன், வி.சி.குகநாதன், துஷ்யந்த் உட்பட பலர் பங்கேற்றனர். மதுவந்தி அருண் நன்றி கூறினார்.
இனி நடிக்க மாட்டார் உதயதாரா
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்தவர், உதயதாரா. இவருக்கும், சார்ஜாவில் வசிக்கும் பைலட் ஜூபின் ஜோசப் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களின் நிச்சயதார்த்தம் மார்ச் 7ம் தேதி கோட்டயத்தில் நடைபெறுகிறது. 16-ம் தேதி கோட்டயம் அருகிலுள்ள கடுத்துருத்தி என்ற இடத்தில் திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா என்று உதயதாராவிடம் கேட்டபோது, "இனி நான் நடிக்க மாட்டேன். திருமணம் முடிந்ததும் கணவருடன் சார்ஜாவில் குடியேறுகிறேன். நடித்த படங்களின் ஷூட்டிங்கை முடித்து விட்டேன்" என்றார்.
நடிகர் முத்துராஜா திடீர் மரணம்
'மன்மதன்', 'கிழக்கு கடற்கரை சாலை', 'மருதவேலு', 'வேங்கை' உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் முத்துராஜா (34) . 'சித்திரம் பேசுதடி'யில் கானா உலகநாதனின் 'வாளமீன்' பாடல் காட்சியில், மைக் பிடிக்கும் இளைஞனாக இவர் நடித்தது பேசப்பட்டது. தன் சொந்த ஊர் கம்பத்துக்கு சென்றிருந்த முத்துராஜா, முதல் மாடியிலிருந்து சில நாட்களுக்கு முன் தவறி விழுந்தாராம். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இறந்தார். கம்பம் அருகிலுள்ள கே.கே பட்டியில், முத்துராஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த முத்துராஜாவுக்கு கடந்த 30ம் தேதிதான் காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
சண்முகராஜன் இயக்கும் போங்கோவின் தேசம்
'போங்கோவின் தேசம்' என்ற நாடகத்தை தமிழகம் முழுவதும் நடத்த இருப்பதாக சண்முகராஜன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது; பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் சில கேரக்டர்களில் நடிக்கும்போது நம்மையறியாமலேயே அதிக ஈடுபாடு வந்துவிடுவது உண்டு. 'கிருஷ்ணவேணி பஞ்சாலை' படத்தில் அப்படியொரு கேரக்டரில் நடித்துள்ளேன். இதே போல விக்ரம் நடிக்கும், 'கரிகாலன்' படத்தில் சோழமன்னனின் சித்தப்பாவாக நடிக்கிறேன். சினிமாவில் வில்லன் நடிகர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகச் சொல்கிறார்கள். வில்லனாக நடித்தாலும் குணசித்திர வேடத்தைதான் எல்லாரும் விரும்புவதால் வில்லனுக்கு பஞ்சம் என்றும் சொல்லலாம். வில்லன் வேடத்தில் ஒரே பார்மெட்டுக்குள்தான் நடிக்க வேண்டியிருக்கிறது. அதை தாண்டி நடிக்க, சிறந்த கதைகள் வேண்டும். குணசித்திர வேடங்களில் நடிக்கும்போது திறமைகளை காண்பிக்க வாய்ப்பிருக்கிறது. சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தாலும் நாடகம்தான் எனது உயிர். நாடகங்கள் இயக்கி நடித்து வருகிறேன். இப்போது 'போங்கோவின் தேசம்' என்ற நாடகத்தை டெல்லியில் நடத்தினோம். சமகால அரசியலை பேசும் இந்நாடகத்தை விரைவில் தமிழகம் முழுவதும் நடத்த இருக்கிறோம். இவ்வாறு சண்முகராஜன் கூறினார்.
ரீமா சென்னுக்கு சொகுசு கார் : வருங்கால கணவர் பரிசளித்தார்
ரீமா சென்னுக்கு அவரது வருங்கால கணவர் விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ காரை பரிசளித்தார். அதில் சென்று நடிகர், நடிகைகளுக்கு கல்யாண பத்திரிகை வைக்கிறார் ரீமா. மின்னலே, ஆயிரத்தில் ஒருவன், வல்லவன் உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ரீமா சென். இவருக்கும் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் சிவ் கரண் சிங்குக்கும் வரும் மார்ச் 11ம் தேதி திருமணம் நடக்கிறது. தன்னுடன் படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்களுக்கு ரீமா சென் தனது திருமண பத்திரிகையை கொடுத்து வருகிறார். திருமண நிகழ்ச்சி மெஹந்தி விழா, சங்கீத் நிகழ்ச்சி, திருமணம் மற்றும் வரவேற்பு என 4 நாள் கொண்டாட்டமாக நடக்கிறது. காதலர் தினத்தன்று ரீமாவை டெல்லிக்கு வரும்படி அழைத்திருந்தார் சிவ் கரண். விமான நிலையத்தில் ரீமா சென்று இறங்கியதும் அவரை வரவேற்க புத்தம் புதிய பி.எம்.டபிள்யூ கார் காத்திருந்தது. பிங்க் நிறத்திலான பலூன்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த காரை காதலர் தின பரிசாக ரீமாவுக்கு அளித்தார்
சிவ்.
சிவ்.
உயிருக்கு போராடிய ஹீரோ
'மறுமுகம்' படத்தில் ஹீரோவாக நடித்து வரும் அனூப் குமார் கூறியதாவது: 'வட்டாரம்', 'சிக்கு புக்கு' படங்களில் ஆர்யாவுடனும், 'கத்திக்கப்பல்' படத்தில் ஹீரோவாகவும் நடித்தேன். இப்போது 'மறுமுகம்' படத்தில், மென்மையான ஹீரோவாக நடிக்கிறேன். ரன்யா ஜோடி. டேனியல் பாலாஜியும் இருக்கிறார். கொடைக்கானல் மலையில் உயரமான குன்றில் நின்று, பாடல் காட்சியில் நடித்தேன். பலத்த காற்றால் தடுமாறினேன். கீழே பார்த்தபோது, மரண பள்ளம் பயமுறுத்தியது. அந்த இடத்தில் நடிக்க மாட்டேன் என்றேன். இயக்குனர் கமல் உள்ளிட்ட படக்குழுவினர் கொடுத்த தைரியத்தில், நடித்தேன். இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது.
சரண்யா நாக் நிர்வாண போஸ்?
'மழைக்காலம்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சரண்யா நாக் நிர்வாணமாக நடித்திருப்பதாக தகவல் வெளியானது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது: இந்தப் படத்தின் கதைப்படி ஓவியக்கல்லூரியில் மாடலாக போஸ் கொடுக்கும் கேரக்டர். இக்காட்சியை சென்னையில் செட் போட்டு படமாக்கினார்கள். நான் நிர்வாணமாக போஸ் கொடுக்கவில்லை. ஸ்கின் டிரெஸ் அணிந்து, முதுகு காட்டியபடி நடித்தேன். இது சில விநாடிகள் மட்டும் இடம்பெறும். இதை பெரிது படுத்திவிட்டார்கள். இதில் ஆபாசம் துளியும் இருக்காது.
மீண்டும் மந்த்ரா
தமிழில் 'ப்ரியம்' படத்தில் அறிமுகமானவர் மந்த்ரா. பிறகு 'கங்கா கவுரி', 'தேடினேன் வந்தது', 'ரெட்டை ஜடை வயசு' உட்பட பல படங்களில் நடித்தார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர், மீண்டும் நடிக்க வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: இந்தி உட்பட பல மொழிகளிலும் 75 படங்களில் நடித்துள்ளேன். தமிழில் கடைசியாக நடித்த படம் 'சுயேட்சை எம்.எல்.ஏ.'. இப்போது மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளேன். தமிழில் ஹீரோயினை தாண்டிய பெண்கள் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருப்பதால் இங்கு நடிக்க முடிவு செய்துள்ளேன். நிறைய இயக்குனர்கள் கதை சொல்லியிருக்கிறார்கள். பெரிய படத்துக்காக காத்திருக்கிறேன்.
தமிழில் நடிப்பதற்காக கன்னட படத்தில் இருந்து வெளியேறிய ஹீரோயின்
தமிழ் படத்தில் நடிப்பதற்காக கன்னட படத்தில் இருந்து வெளியேறினார் ஹீரோயின். பெங்களூரை சேர்ந்த மாடல் அழகி சுபா புட்லா. தென்னிந்திய அழகி போட்டியில் வென்றவர். கன்னட பட இயக்குனர் ரவிவர்மா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். பின்னர் திடீரென்று அப்படத்தில் இருந்து விலகி தமிழ் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தார். இதுபற்றி ரவிவர்மா கூறுகையில், ''என் படத்தில் சுபா நடிக்க இருந்தது. சில நாட்களுக்கு முன்பே இது முடிவானது. ஆனால், அவர் நடிப்பதில் அவரது அப்பாவுக்கு விருப்பம் இல்லையாம். நடிக்க கூடாது என்று அவர் சொல்லிவிட்டதால் சுபா அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். அம்மாவிடம் பேசியும் அனுமதி கிடைக்கவில்லை. யாரையும் கட்டாயப்படுத்தி நடிக்க வைக்க எனக்கு விருப்பம் இல்லை'' என்றார். கன்னடத்தில் நடிக்காமல் விலகிய சுபா தமிழில் 'மாலை பொழுதின் மயக்கத்திலே' என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் படத்தில் நடிப்பதால்தான் கன்னட படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன் என்று அவர் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, 'ஏற்கனவே தமிழ் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்ததால் கன்னட படத்தில் நடிக்க முடியவில்லை. புதுமுகமாக நடிக்கலாம் என்று இருந்தேன். கால்ஷீட் பிரச்னையால்தான் நடிக்க முடியவில்லை. பட குழுவுடன் பேசிதான் இந்த முடிவை எடுத்தேன். தமிழ் பட ஷூட்டிங் விரைவில் முடிகிறது. நல்ல வாய்ப்பு வந்தால் கன்னட படங்களில் நடிப்பேன்' என்றார்.
சூர்யா ஜோடியாக மீண்டும் ஸ்ருதியா
சூர்யா ஜோடியாக மீண்டும் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறாரா என்றதற்கு பதில் அளித்தார் வெங்கட்பிரபு. இதுபற்றி அவர் அளித்த பேட்டி: மங்காத்தா வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜீத் படம் இயக்குகிறீர்களா என்கிறார்கள். மீண்டும் இயக்குவேன். ஆனால் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. தற்போது சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறேன். ரவி தேஜாவும் நடிக்கிறார். இருவரும் வெவ்வேறு படங்களில் நடித்து வருகின்றனர். அப்படங்களை முடித்தவுடன் என் படத்தில் நடிப்பார்கள். சமீபத்தில் அஜீத்தை சந்தித்தேன். சினிமா தவிர பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம். மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசையாக இருக்கிறேன். சூர்யா நடிக்கும் படத்தின் ஸ்கிரிப்ட் முடிந்துவிட்டது. இது ஆக்ஷன் - த்ரில்லர் படம். அதே நேரம், ஹீரோக்கள் காமெடி காட்சிகளிலும் நடிக்க உள்ளனர். இப்படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடிக்க உள்ளார். 7ம் அறிவு படத்துக்கு பிறகு இப்படத்திலும் சூர்யா ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறாரா என்கிறார்கள். அது வதந்திதான். இவ்வாறு வெங்கட்பிரபு கூறினார்.
சினிமாவுக்கு வந்ததால் மாப்பிள்ளை கிடைக்கல
சினிமாவுக்கு வந்ததால் மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று பத்மப்ரியா கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: என் அப்பா ராணுவ அதிகாரி. அடிக்கடி இடம் மாற வேண்டி இருக்கும். இதனால் எனக்கு நண்பர்கள் குறைவு. புத்தகங்கள்தான் எனக்கு நண்பர்கள். சினிமாவுக்கு வரும் முன்பு மல்ட்டி நேஷனல் கம்பெனியில் வேலை பார்த்தேன். கை நிறைய சம்பளம். அங்கேயே வேலை பார்த்திருந்தால், இத்தனை நேரம் நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைத்து திருமணமாகி செட்டில் ஆகியிருப்பேன். சினிமாவுக்கு வந்த பிறகு, வெளியுலக தொடர்பு குறைந்துவிட்டது. பெரும்பாலான நேரம் ஷூட்டிங் லொக்கேஷன்களிலும் மற்ற நேரம் ஓட்டல் அறைகளிலுமே கழிகிறது. சினிமாவை பொருத்தவரை மம்மூட்டி, மோகன்லால், திலிப், பிருத்விராஜ், ஜெயராம் போன்றவர்களுடன் நடிக்கிறேன். எல்லோருமே திருமணம் ஆனவர்கள். சினிமாவில் எனக்கு பொருத்தமான மாப்பிள்ளை யாரும் இல்லை. பொருளாதார சுதந்திரம் மட்டுமே எல்லா சுதந்திரத்தையும், முழு மகிழ்ச்சியையும் கொடுத்துவிடாது. வேலைக்கு போகும் பெண்கள் வீட்டுக்கு வந்ததும் தினசரி வேலைகளை கவனிக்க வேண்டி உள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் அந்த பெண்ணுக்கு இரவில்தான் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கும். எந்த ஆணும் குண்டான மனைவியை பார்ட்டிகளுக்கு அழைத்து செல்ல விரும்பவதில்லை. அதேநேரம் வீட்டு வேலையை பகிர்ந்துகொள்ளவும் பல ஆண்கள் முன்வருவதில்லை.