திரை உலகில் பல தோல்வியை தாங்கிக்கொள்ளும் மனிதர்கள் ஒரே வெற்றியை பெற்றுவிட்டால் அவர்களின் சுபாவமே மாறிவிடும் என்று நீயா? நானா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் தம்பி ராமையா தெரிவித்தார்.
மனிதர்களின் சுபாவம் என்பது சிறுவயதில் இருந்தே தொடர்ந்து வருவது. இந்த சுபாவம் ஒருவருக்கு சாதாரணமாக இருக்கும். அதுவே சிலருக்கு விரும்பத்தாக சுபாவமாக இருக்கும். சிலர் தங்களின் சுபாவத்தை மாற்றிக்கொள்ள முயற்சி செய்வார்கள். சிலர் தான் அப்படித்தான் அதை தன்னால் மாற்ற முடியாது என்று கூறுவார்கள். இந்த சுபாவம் பற்றிதான் இந்தவாரம் நீயா நானாவில் விவாதிக்கப்பட்டது.
சுபாவத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை என்று ஒரு சிலரும், ஒருவருடைய சுபாவம் தங்களை பாதிக்கிறது என்றும் சிலர் விவாதித்தனர். தங்களின் சுபாவம் பற்றியும், பிறருடைய சுபாவம் எவ்வாறு தங்களை பாதிக்கிறது என்பது பற்றியும் கூறினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தம்பி ராமையா தன்னுடைய சுபாவம் பற்றி தெரிவித்தார். அதேபோல் திரைத்துறையில் உள்ளவர்களின் சுபாவமான வெற்றி பெற்ற உடன் வரக்கூடிய கர்வம் பற்றியும் தெரிவித்தார்.
"சீசர் கட்டி வாழ்ந்த மாளிகையை விட மாபெரும் மாளிகையை கட்டி வாழ்ந்து கொண்டிரு...
ஆனால் நீ குடிக்கக் கூடிய ஒவ்வொரு குவளை தண்ணீரிலும் பூமியின் வாசம்தான் இருக்கும்" என்ற உமர்கய்யாம் வரிகளை எடுத்துக்காட்டாக கூறினார்.
கர்வம் தோன்றும் பொழுது நமக்கு முன்னாள் வாழ்ந்து போன மனிதர்களைப் பார்த்தால் அந்த கர்வம் வராது என்றும் கூறினார்.
மரணத்திற்காக காத்திருக்கும் குழந்தைகள்தான் முதியவர்கள். அவர்களை பார்த்து பேசுவது என் சுபாவம் என்றார். வயதானவர்களை அரவணைப்பது என் சுபாவம் என்றும் கூறினார் தம்பி ராமையா.
சிக்கனமான கணவரின் சுபாவத்தை மாற்ற வேண்டும் என்று நிகழ்ச்சியில் கோரிக்கை வைத்தார் ஒரு மனைவி. தங்களிடம் வசதி இருக்கிறது அப்படி இருந்தும் ஏன் சிக்கனமாக இருக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பினார் அவர். ஆனால் சிக்கனமாக இருப்பது தவறொன்றும் இல்லை. அது என் குடும்பத்திற்கு அவசியமானது. இன்றைக்கு பணம் வந்துவிட்டது என்பதற்காக என்னுடைய சுபாவத்தை மாற்றிக்கொள்ள முடியாது என்று கூறினார் அந்த கணவர்.
சுபாவத்தை மாற்றிக்கொள்ள முடியுமா? என்று நிகழ்ச்சி நடத்துனர் கோபிநாத் ஒரு கேள்வியை முன் வைத்தார். அதற்கு பல்வேறு விதமான பதில்கள் கிடைத்தன.
மனிதன் தன் இயல்பை மாற்றிக்கொள்ள முடியாது. சிறுத்தையின் உடம்பில் உள்ள புள்ளிகளைப் போல, வரிக்குதிரைகளின் உடம்பில் உள்ள வரிகளைப் போல அது மரபணுவோட தொடர்புடையது என்றார் ஒருவர். சுபாவத்தை மாற்றிக்கொள்ள நினைத்தால் அது நடிப்பாக மாறிவிடும் என்று கூறினர் மற்றொருவர்.
அதேசமயம் சுபாவத்தை மாற்றிகொள்ள முடியும் என்று சிலர் கூறினர். தங்களின் வாழ்க்கையின் தேவைகளைப் பொருத்து சுபாவத்தை மாற்றிகொள்ளலாம் என்றும் திருமணத்திற்குப் பின்னர் பெண்கள் புகுந்த வீட்டிற்காக தங்களின் சுபாவத்தை மாற்றிகொள்கின்றனர் என்று கூறினர்.
சுபாவத்தை மாற்றிக்கொள்ளமுடியும் என்று சம்பந்தப்பட்டவர்கள் நினைக்கவேண்டும் என்று கூறினார் சிறப்பு அழைப்பாளரான மவுனகுரு திரைப்பட இயக்குநர் சாந்தகுமார். எல்லோருக்கும் மாறிக்கொள்ள தன்மை இருக்கிறது. சிலர் மாற்றிக்கொள்வார்கள் என்று கூறிய சாந்த குமார். குழந்தை பருவத்தில் இருந்து பெற்றோர்கள் ஆன பின்னர் சுபாவத்தை மாற்ற முடியும். தன் தாயிடம் இருந்து தான் கற்றுக்கொண்ட கோபம் தன் குழந்தைகளின் மீது பாதித்தது என்று கூறினார். அதை தான் படிப்படியாக மாற்றிக்கொண்டதாக கூறினார். இன்றைக்கு எல்லாமே அவசரம் என்கிற சுபாவத்திற்குள் சிக்கியிருக்கிறது என்று கூறினார்.
சுபாவம் என்பது மாறக்கூடியது என்று கூறினார் ராஜேந்திரன் ஐஏஎஸ். தவறுகள் எல்லாமே உணர்ச்சிப்பூர்வமாக நடைபெறக்கூடியதுதான் எனவேதான் மக்களை பாதுகாக்க குறைந்த அளவிலான மக்களே இருக்கின்றனர் என்கிறார். கொஞ்சம் முயற்சி செய்தால் நம்முடைய சுபாவத்தை மாற்றிகொள்ள முடியும் என்றனர்.
சுபாவத்தை கண்டிப்பாக மாற்றிகொள்ள முடியும் என்று கூறினார் உளவியல் நிபுணர் ஷாலினி. ஒருவருடைய மரபணுக்கள்தான் ரசாயன மாற்றங்களின் மூலம் சுபாவம் ஏற்படுகிறது.
நவீன உலகத்தில் தயக்கம், கூச்ச சுபாவம் இன்றைக்கு அதிகம் பேரிடம் இருக்கிறது. ஆபத்து என்று தெரிந்தும் அதிலிருந்து வெளியே வராதவர்களும் இருக்கின்றனர் என்று ஷாலினி கூறினார். சிலருக்கு இயல்பிலேயே மாற்றிக்கொள்ளக்கூடிய தன்மை இருக்கும். அவர்கள் மாற்றிகொள்வார்கள். ஒரு சிலர் அறியாமையினால்தான் தங்களின் சுபாவத்தை மாற்றிக்கொள்வதில்லை என்கின்றனர்.
தன்னைப்பற்றி எதிர்மறையாக நினைப்பதினால்தான் அவர்களால் தங்களின் சுபாவத்தை மாற்றிக்கொள்ள முடிவதில்லை. எனவே தங்களால் சாதிக்க முடியும் என்று நேர்மறையாக நினைத்தால் சுபாவத்தை கண்டிப்பாக மாற்றிக்கொள்ளலாம் என்று கூறினார் உளவியல் நிபுணர் ஷாலினி.
நம்முடைய சுபாவத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் நமக்கும், சமூகத்திற்கும் நன்மை கிடைக்கிறது எனில் அதை மாற்றிக்கொள்வதில் தவறேதும் இல்லை என்று கூறினர் சிறப்பு அழைப்பாளர்கள்.