சென்னை: சமர் படத்தில் விஷாலுக்கு பைசா பாக்கியில்லாமல் சம்பளம் தரப்பட்டுவிட்டது. ஆனால் அந்தப் படத்தால் எனக்கு ஏகப்பட்ட நஷ்டமாகிவிட்டது என்று புலம்பியுள்ளார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்.
விஷால் திரிஷா ஜோடி யாக நடித்த ‘சமர்' படம் பொங்கலுக்கு ரிலீசானது. இப்படத்தை டி.ரமேஷ் தயாரித்து இருந்தார். திரு இயக்கினார். படம் வசூலில் சுமார் என்றாலும், பார்க்கும்படி இருப்பதாக பலரும் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் ‘சமர்' படத்தில் ரூ.75 லட்சம் சம்பள பாக்கி இருப்பதாகவும் அதனை வாங்கி தரும் படியும் நடிகர் சங்கத்தில் விஷால் புகார் அளித்தார். இதன் மீது நடிகர் சங்கம் விசாரணை நடத்தியது.
இரு தரப்பினரிடமும் பேச்சு நடத்தியது. அப்போது விஷாலுக்கு சம்பளம் முழுவதையும் கொடுத்து விட்டதாகவும் பாக்கி இல்லை என்றும் தயாரிப்பாளர் ரமேஷ் விளக்கினார். அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் ‘சமர்' பட பிரச்சினையில் தனக்கு உதவவில்லை என்று நடிகர் சங்கம் மீது விஷால் குற்றம் சாட்டினார். சமர் தயாரிப்பாளர் ரூ.75 லட்சம் சம்பள பாக்கி தரவேண்டி உள்ளது என்றும் கூறினார்.
லிங்குசாமிக்கு நான் பணம் தரவேண்டியிருந்தபோது, என்னிடம் கறாராகே கேட்டு வாங்கிக் கொடுத்த சங்கம், 'சமர்' தயாரிப்பாளரிடம் இருந்து சம்பள பாக்கியை வாங்கித் தரவில்லை என்று விஷால் குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ‘சமர்' பட தயாரிப்பாளர் டி.ரமேஷ் கூறுகையில், "விஷாலுக்கு சம்பள பாக்கி இல்லை. முழு தொகையையும் கொடுத்து விட்டேன். ‘சமர்' படத்தில் விஷாலுக்கு சம்பளமாக ரூ.3 கோடியே 75 லட்சம் கொடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த பணத்தை அவர் வாங்கி விட்டார். கூடுதலாக மேலும் ரூ.25 லட்சம் கொடுத்தேன். மொத்தம் ரூ.4 கோடி விஷாலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பேசிய சம்பளத்தை விட அதிகமாகவே வாங்கிவிட்டார்.
ஒரு பைசா கூட விஷாலுக்கு கொடுக்க வேண்டியது இல்லை. ஆனால் சமர் படத்தை வாங்கி வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்தப் படம் என்னை போண்டியாக்கிவிட்டது என்பதுதான் உண்மை," என்றார்.