உங்க எம்.பி எப்படி? சத்தியம் டிவியில் மக்கள் தராசு!

சத்தியம் தொலைக்காட்சியின் ‘மக்கள் தராசு' நிகழ்ச்சியில் ‘உங்கள் எம்.பி. எப்படி?' கேள்விக்கான பிரத்தியேக விஷூவல் சர்வே முடிவுகள் வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

தாங்கள்தேர்ந்தெடுத்த எம்.பி.க்களின் செயல்பாட்டை அந்தந்த தொகுதி மக்களே இந்த நிகழ்ச்சியில் எடை போடுகிறார்கள். அதோடு வாக்காளர்களின் கேள்விகளுக்கு எம்.பிக்களும் பதில் அளிக்கிறார்கள்.

உங்க எம்.பி எப்படி? சத்தியம் டிவியில் மக்கள் தராசு!

கடந்த சில வாரங்களுக்கு முன் ராமநாதபுரம் தொகுதி எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் பங்கேற்றார். அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த தேர்தலில் இதே தொகுதியில் நிப்பீங்களா? என்று ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு பதில் சொன்ன ரித்தீஷ், தலைவர் சொன்ன நிப்பேன் என்று சிம்பிளாக சொன்னார்.

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் இந்தவாரம் கன்னியாகுமரி லோக்சபா தொகுதி எம்.பி ஹெலன் டேவிட்சன், நாகர்கோவில் லோக்சபா தொகுதி எம்.பி லிங்கம் ஆகியோர் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

 

படைப்பு ரீதியாக என் வீர்யம் இன்னும் விரைப்பாகவே உள்ளது! - பாலு மகேந்திரா

சென்னை: படைப்பு ரீதியாக என் வீர்யம் இன்னும் விறைப்பாகவே உள்ளது என்றார் இயக்குநர் பாலு மகேந்திரா.

பாலு மகேந்திராவின் அடுத்த உதவி இயக்குநரும் படம் இயக்க வந்துவிட்டார்.

இவர் விக்ரம் சுகுமாறன். வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தின் வசனகர்த்தா.

படைப்பு ரீதியாக என் வீர்யம் இன்னும் விரைப்பாகவே உள்ளது! - பாலு மகேந்திரா

விக்ரம் சுகுமாறன் இயக்கியுள்ள மதயானைக் கூட்டம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாலா, வெற்றிமாறன் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்துகொண்டு பேசினர்.

பாலு மகேந்திரா பேசுகையில், "என்னுடைய குடும்பத்திலிருந்து இன்னும் ஒரு இளைஞன் இயக்குனராக வந்திருக்கிறார். இயக்குனர் விக்ரம் சுகுமாறன் என்னுடைய பிள்ளைகளில் ஒருவன் என்பதில் எனக்கு கர்வம் இருக்கிறது.

1999-2000 வருடங்கள் தான் என் படைப்பு வாழ்வில் மிக மிக சந்தோஷமான, நிறைவான, திருப்தியான காலகட்டங்கள் என நான் நினைக்கிறேன். அந்த சமயத்தில் விக்ரம் சுகுமாறன், சுரேஷ், கௌரி உள்ளிட்ட என் பிள்ளைகள் இல்லையென்றால் நான் அந்த சமயத்தில் சிறந்த குறும் படங்களைச் செய்திருக்க முடியாது.

என் கிராமத்தில் ஒரு பழக்கம் இருக்கிறது. திருமணம் செய்து கொடுத்த பிள்ளைகள் குழந்தை பெற ஆரம்பித்துவிட்டால், பெற்றோர்கள் குழந்தை பெறுவதை நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் என் பிள்ளைகளும் குழந்தை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனக்கும் இன்னும் படைப்பு ரீதியான வீரியம் விறைப்பாக இருப்பதால் நானும் குழந்தை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.

நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று சில சமயங்களில் தோன்றும். ஆனால் சினிமாவை நிறுத்திக்கொண்டால் என் மூச்சு நின்றுவிடும் என்று தெரிந்ததால் நிறுத்திக் கொள்ளவில்லை. என் பிள்ளைகளுடன் நானும் போய்க் கொண்டே இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனக்கு கீழே இருந்தவர்களை இப்போது நான் நிமிர்ந்து பார்க்கிறேன். இதைவிட ஒரு தகப்பனுக்கு ஒரு சந்தோஷம் என்ன இருக்க முடியும். பாலா, வெற்றிமாறன், விக்ரம், சுரேஷ், சீனுராமசாமி எல்லோரும் என்னுடன் இருக்கிறார்கள். எனது தோட்டத்தில் விளைந்த விதைகள் நல்ல விதைகளாக இருந்தன. நான் சிறிது நீர் ஊற்றியதும் அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். நான் அவர்களை உருவாக்கவில்லை. அவர்களே தங்களை உருவாக்கிக்கொண்டனர்," என்றார்.

 

தலைவன் பட தயாரிப்பாளர் சித்திரைச் செல்வன் மீது ரூ 50 லட்சம் மோசடி வழக்கு!

தலைவன் பட தயாரிப்பாளர் சித்திரைச் செல்வன் மீது ரூ 50 லட்சம் மோசடி வழக்கு!

சென்னை: ஜெஜெ டிவி பாஸ்கரன் நடித்த தலைவன் படத்தைத் தயாரித்த சித்திரைச் செல்வன் மீது ரூ 50 லட்சம் மோசடி செய்ததாக புதிய புகார் பதிவாகியுள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த வங்கி அதிகாரி ராஜசேகரன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில், "நடிகர் பாஸ் என்ற பாஸ்கரனை வைத்து தலைவன் படத்தை எடுத்த தயாரிப்பாளர் சித்திரைச் செல்வன் சினிமா படம் எடுப்பதாக கூறி என்னிடம் ரூ. 50 லட்சம் கடன் வாங்கினார்.

இந்த பணத்தை திருப்பி கேட்டபோது விரைவில் கொடுத்து விடுவதாக கூறினார்.

ஆனால், பணத்தை கொடுக்காமல் தற்போது கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன், " என்று குறிப்பிட்டுள்ளார்.

சித்திரை செல்வன் ஏற்கனவே ஒரு மோசடி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவன் படம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து சிக்கலுக்குள்ளானது. படத்தின் ஹீரோவான சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரன் திடீரென கைது செய்யப்பட்டார். தயாரிப்பாளர் மீது அடுத்தடுத்து மோசடி வழக்குகள் பாய்ந்தன.

படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வன் படத்திலிருந்தே விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார்!

 

டிவி நடிகையிடமிருந்து கணவனை மீட்டுத் தரக்கோரி கர்ப்பிணிப் பெண் புகார்!

சென்னை: டிவி நடிகையிடமிருந்து தனது கணவனை மீட்டுத் தருமாறு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கர்ப்பிணிப் பெண் புகார் கொடுத்தது பரபரப்பைக் கிளப்பியது.

சென்னை புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அந்தமானில் இருந்து வந்த செல்வராணி என்ற கர்ப்பிணி பெண், அழுது கொண்டே மனு ஒன்றை கொடுத்தார்.

தனது கணவர் பூமிநாதனை, சென்னையைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஒருவர் தனது கட்டுப்பாட்டில் வைத்து, ஆட்டிப் படைப்பதாகவும், அவரை தொலைக்காட்சி நடிகையிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

தொலைக்காட்சி நடிகை தன்னை செல்போனில் மிரட்டுவதாகவும், அந்த பெண் மனுவில் தெரிவித்து இருந்தார்.

சில மாதங்களுக்கு முன் முடிந்த தங்கம் சீரியலில் இந்த பூமிநாதன் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. ரம்யா கிருஷ்ணன், காவேரி உள்பட நிறைய நடிகைகள் இந்த சீரியலில் இருந்தனர். ஆனால் நடிகையின் பெயரை போலீசார் தெரிவிக்கவில்லை.

 

பிரமாண்டங்களுக்கு ஓய்வு... அடுத்து சிறு பட்ஜெட் படங்கள்தான் - செல்வராகவன் முடிவு

சென்னை: இயக்குநர் செல்வராகவன், அடுத்தடுத்து இரு சிறிய பட்ஜெட் படங்களை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

செல்வராகவன் மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு பெரும் செலவு வைக்கிறார், அதை விட அதிக காலத்தைக் கடத்துகிறார் என்பது.

ஆனால் ஒரு படைப்பாளியாக சுதந்திரமாக இயங்க இவை தேவை என்பது செல்வா வாதம்.

பிரமாண்டங்களுக்கு ஓய்வு... அடுத்து சிறு பட்ஜெட் படங்கள்தான் - செல்வராகவன் முடிவு

இந்த வாதங்கள் 7 ஜி ரெயின்போ காலனியிலிருந்து தொடர்கிறது. அந்தப் படத்தின் பட்ஜெட்டை மீறி படமெடுத்ததால், படம் வெற்றிகரமாக ஓடியும் தனக்கு லாபமில்லை என ஏஎம் ரத்னம் புலம்பியது நினைவிருக்கலாம்.

ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற படங்கள் கோடிகளை விழுங்கியதுடன், அதிக நாட்களும் எடுத்துக் கொண்டன. இந்த மாதிரி படங்களை எடுக்க இன்னும் கால அவகாசம் தேவை என்பது படைப்பாளியின் பார்வையில் சரியாக இருந்தாலும், தயாரிப்பாளர்களை பயமுறுத்தும் வட்டிதான் இங்கு நடைமுறைப் பிரச்சினையாக உள்ளது. ஆயிரத்தில் ஒருவன் தயாரிப்பாளரால் மீண்டும் படமெடுக்க முடியவில்லை.

பிவிபி காரர்களுக்கு பிரச்சினையில்லை. அவர்களின் பணக்காரப் பின்னணி உலகறிந்தது.

இந்த நிலையில் இரண்டாம் உலகத்துக்குப் பிறகு, அநேகமாக சொந்தப் படம் எடுப்பார் செல்வராகவன் என்று கூறப்படுகிறது.

அதை உறுதிப்படுத்துவது போல, அவரே ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

'குறைந்த பட்ஜெட்டில் சில படங்களைச் செய்ய விரும்புகிறேன். அதில் முதலாவதாக ஒரு ஆக்ஷன் படம் எடுக்கப் போகிறேன். மற்ற விவரங்களை விரைவில் சொல்கிறேன்' என்று கூறியுள்ளார் செல்வா.

 

என்னை தாக்கிய நபர் ஒன்றும் வேலை கேட்டு வரவில்லை: ஸ்ருதி ஹாஸன்

மும்பை: தன்னை தாக்கிய நபர் வேலை கேட்டு வந்ததாக கூறுவதில் உண்மை இல்லை என்று நடிகை ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.

மும்பை பந்த்ரா பகுதியில் வீடு எடுத்து தங்கியிருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாஸன். இந்நிலையில் கடந்த 19ம் தேதி காலை அவரது வீட்டுக் கதவை ஒருவர் தட்டினார். கதவை திறந்த ஸ்ருதியை அவர் கழுத்தை நெறித்து தாக்கினார். இது குறித்து ஸ்ருதி அளித்த புகாரின்பேரில் போலீசார் அந்த நபர் அசோக் த்ரிமுகே என்பதை அடையாளம் கண்டு அவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

என்னை தாக்கிய நபர் ஒன்றும் வேலை கேட்டு வரவில்லை: ஸ்ருதி ஹாஸன்

பிலிம் சிட்டியில் ஸ்பாட் பாயாக இருந்த அந்த நபர் போலீஸ் விசாரணையில், தான் தனது சகோதரருக்கு வேலை கேட்டு ஸ்ருதியை பார்க்கச் சென்றதாகவும், அவரை தாக்க வேண்டும் என்று செல்லவில்லை என்றும் கூறினார்.

இந்நிலையில் ஸ்ருதி இது குறித்து கூறுகையில்,

செட்டில் இருந்தபோதெல்லாம் அவர் என்னையோ எனது ஊழியர்களையோ வேலை கேட்டு அணுகவில்லை. அவர் அப்படியே வேலை கேட்டு வந்திருந்தால் நாங்கள் அது குறித்து பரிசீலித்திருப்போம். ஆனால் மும்பையில் தனியாக வசிக்கும் என் வீட்டுக்குள் புகுந்ததால் தான் சீரியஸாக எடுத்துக் கொண்டேன். எனக்கு மும்பை போலீசார் மீது நம்பிக்கை உள்ளது. அவர்களுக்கு இது குறித்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்றார்.

 

இரண்டாம் உலகம் மாதிரி படங்களை எடுத்து சினிமாவை சீரழிக்க வேண்டாம்! - கேயார் அதிரடி

சென்னை: செல்வராகவனின் பிரமாண்ட படமான இரண்டாம் உலகம் தந்த அதிர்ச்சியே ரசிகர்களை விட்டு விலகாத நிலையில், செல்வராகவனுக்கு ஒரு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார்.

சினிமா நிகழ்ச்சி மேடைகளில் பரபரப்பான, ஆனால் மனதில் படும் கருத்துக்களைப் பேசி வரும் அவர், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், இனி இரண்டாம் உலகம் மாதிரி படங்களை எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வரக் கூடாது என அதிரடியாகப் பேசியுள்ளார்.

ஜிவி பிரகாஷ் தயாரிக்கும் மதயானைக் கூட்டம் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கேயார் பேசுகையில், "சமீபத்தில் பல படங்கள் நல்ல படங்களாக வெளிவருகின்றன. சந்தோஷமாக இருக்கிறது.

இரண்டாம் உலகம் மாதிரி படங்களை எடுத்து சினிமாவை சீரழிக்க வேண்டாம்! - கேயார் அதிரடி

சவாலாக எடுத்துக்கொண்டு புதுமுகங்களை அறிமுகப்படுத்திய பெருமை பாரதிராஜாவுக்கு உண்டு. இப்போதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் புதிய படங்களை எடுக்கிறார்கள்

ஆனால் அவ்வப்போது வேதனை தரக்கூடிய படங்களும் வருகின்றன.

சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தை , கிட்டத்தட்ட 66 கோடி போட்டு கார்பரேட் நிறுவனம் எடுத்திருக்கிறது. பிரமாண்டம் என்ற பெயரில் இந்த மாதிரி படங்களை எடுக்க கார்ப்பரேட்டுகள் முன் வரக்கூடாது. இப்படி படமெடுத்து சினிமாவை சீரழிக்க வேண்டாம். தொடர்ந்து கார்பரேட் கம்பெனிகள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் சங்கங்களை ஆலோசித்து நடவடிக்கை எடுக்க நேரிடும்.

வெளியே திறமையோடு பல உதவி இயக்குநர்கள் இருக்கிறார்கள். இந்தப் பணத்தில் அவர்களில் பலருக்கு நல்ல வாய்ப்பை கொடுக்கலாம். சினிமா நன்றாக இருக்க இதைத்தான் செய்ய வேண்டும்," என்றார் அதிரடியாக.

திரையுலகில் முக்கியப் பொறுப்பிலிருக்கும் கேயாரின் இந்தப் பேச்சு செல்வராகவன், பிவிபி சினிமாஸ் உள்ளிட்ட பலருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

ஒரு படத்துக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பகிரங்கமாக குற்றம்சாட்டிப் பேசியிருப்பதும் இதுவே முதல்முறை!

 

சின்ன கலைவாணர் பட்டத்தை விவேக் பயன்படுத்தக் கூடாது: நடிகர் சங்கத்தில் புகார்

சின்ன கலைவாணர் பட்டத்தை விவேக் பயன்படுத்தக் கூடாது: நடிகர் சங்கத்தில் புகார்

சென்னை: நகைச்சுவை நடிகர் விவேக் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பயன்படுத்துவதை எதிர்த்து அவர் மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகர் விவேக் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பயன்படுத்தி வருகிறார். விவேக் அந்த பட்டத்தை பயன்படுத்துவற்கு மறைந்த நகைச்சுவை நடிகர் குல தெய்வம் ராஜ கோபாலின் மகன் சௌந்திர பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

நடிகர்களுக்கு அவர்களின் நடிப்பு திறமையை மையமாக வைத்து ரசிகர்கள் சார்பில் பட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1962-ல் மதுரையில் நடந்த விழாவில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மனைவி மதுரம் மற்றும் எழுத்தாளர் தமிழ்வாணன் ஆகியோரால் என் தந்தை குல தெய்வம் ராஜகோபாலுக்கு சின்ன கலைவாணர் பட்டம் அளிக்கப்பட்டது. எங்கள் குடும்பத்தின் மரியாதைக்குரிய பொக்கிஷமாக அந்த பட்டத்தை போற்றி வருகிறோம்.

ஆனால் நடிகர் விவேக்கும் இந்த பட்டத்தை பயன்படுத்தி வருகிறார். இதனால் எங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எங்கள் தந்தை வாங்கிய பட்டத்தை காப்பாற்றுவதற்காக போராட வேண்டிய சூழ்நிலைக்கு எங்களை தள்ள வேண்டாம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.