காதலனுடன் தங்கிய ஜப்பான் பாப் பாடகி... மொட்டை போட்டு மன்னிப்பு கேட்ட பரிதாபம்

Japan Akb48 Pop Idol Minami Minegishi

டோக்கியோ: ஜப்பானில் பாப் பாடகி ஒருவர் காதலனுடன் தங்கியதாக எழுந்த சர்ச்சையை தனது கூந்தலை மொட்டையடித்துக் கொண்டு பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜப்பானில் முற்றிலும் பெண்களே பங்கேற்கும் ஏ.கே.பி.48 என்ற பாப் இசைக்குழு கடந்த 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 16 முதல் 20 வயதுக்குட்பட்ட சுமார் 90 பெண்கள் இந்த இசைக்குழுவில் பாடகிகளாக உள்ளனர்.

ஜப்பானையும் தாண்டி ஆசியா கண்டம் முழுவதும் ஏ.கே.பி.48 இசைக்குழு பிரபலமடைந்துள்ளது.

இந்த இசைக்குழுவில் இடம் பெற்றுள்ள பாடகிகளுக்கு நிர்வாகத்தின் சார்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில், ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக பழகக்கூடாது என்பது முக்கிய கட்டுப்பாடு ஆகும்.

இந்த கட்டுப்பாட்டை மீறி, வேறொரு இசைக்குழுவில் பணியாற்றும் அலன் ஷிராஹாமா என்ற வாலிபரின் வீட்டிலிருந்து ஏ.கே.பி.48 பாடகி மினாமி மினேகிஷி வெளியே வரும் புகைப்படத்துடன் கூடிய செய்தி நேற்று ஜப்பான் பத்திரிகைகளில் வெளியாகின.

இந்த செய்தி வெளியான சில மணி நேரத்திற்குள் தனது தலைமுடியை மொட்டை அடித்துக்கொண்ட மினாமி மினேகிஷி வீடியோ மூலம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

இப்படி மன்னிப்பு கேட்பதால் மட்டும் எனது தவறு நியாயமாகிவிடும் என்று நான் கருதவில்லை. இந்த இசைக்குழுவில் இருந்து வெளியேற்றப்பபடுவதை நான் விரும்பவில்லை.

நான் செய்த தவறுக்காக வருத்தப்படுகிறேன். எனது ரசிகர்களும், இசைக்குழுவின் நிர்வாகிகளும் என் தவறை மன்னித்து என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கண்ணீர் மல்க அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.

ஆண் நண்பருடன் பழகியதற்காக பாப் பாடகி ஒருவர் கூந்தலை மொட்டையடித்துக்கொண்டு அழுத சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

 

சர்ச்சைக் காட்சிகள் நீக்கம்.. பிப். 15-ல் வனயுத்தம்... எதிர்ப்புக்கு தயாராகும் வீரப்பன் ஆதரவாளர்கள்!

Vanayudham From Feb 15 Veerappan Supporters

சென்னை: வீரப்பன் - முத்துலட்சுமி தொடர்பான காட்சிகளை நீக்க இயக்குநர் -- தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டதால் வரும் பிப்ரவரி 15-ம் தேதி வனயுத்தம் படம் வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்தில் வீரப்பனை கேவலமாக சித்தரித்திருந்தால் போராடத் தயாராகி வருகிறார்கள் வீரப்பன் ஆதரவாளர்கள்.

ந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை தமிழில் வனயுத்தம் என்ற பெயரிலும் கன்னடத்தில் அட்டகாசம் என்ற பெயரிலும் படமாகியுள்ளது. வீரப்பன் வேடத்தில் கிஷோர், போலீஸ் அதிகாரி வேடத்தில் அர்ஜுன் நடித்துள்ளனர்.

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கேரக்டரில் விஜயலட்சுமி நடித்துள்ளார்.

தனது தனிப்பட்ட வாழ்க்கை இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த படத்தை வெளியிட தடை கோரி முத்துலட்சுமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு தடை விதிக்கப்பட்டது.

இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் வழக்கை விசாரித்து முத்துலட்சுமியின் திருமண காட்சியையும் அவர் போலீசிடம் இருந்து தப்பி செல்வது போன்ற காட்சியையும் நீக்கி விட்டு படத்தை ரிலீஸ் செய்ய உத்தரவிட்டார்.

சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குநர் நீக்கிவிட்டார். கன்னட பதிப்பிலும் அக்காட்சிகள் நீக்கப்படுகின்றன. வருகிற 15-ந்தேதி தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இப் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதே நேரம் வீரப்பனை இழிவுபடுத்துவது போன்ற காட்சிகள் ஏதேனும் இருந்தால் படத்துக்கு எதிராக பெரும் போராட்டத்தில் இறங்க வீரப்பன் ஆதரவாளர்கள் தயாராகிவருகின்றனர்.

காரணம், வீரப்பனை சுட்டுக் கொன்றதாகக் கூறும் போலீஸ் அதிகாரி விஜயகுமார் உள்ளிட்டோரிடம் படத்தின் ஸ்கிரிப்டைக் காட்டி அனுமதி பெற்றே படமெடுத்துள்ளார் இயக்குநர். எனவே நிச்சயம் வீரப்பனை இந்தப் படம் நல்லவராகக் காட்டப்போவதில்லை. ஆகவே போராட்டத்துக்குத் தயாராக இருங்கள் என்று கூறியுள்ளனராம்.

 

சென்னை திரும்பினார் கமல்... 'விஸ்வரூபத்துக்கு நல்ல வரவேற்பு!'

Kamal Returns Chennai

சென்னை: விஸ்வரூபம் படத்தின் இந்திப் பதிப்பை வெளியிட்டுவிட்டு இன்று சென்னை திரும்பினார் நடிகர் கமல்.

வட இந்தியாவில் தனது படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வடக்கில் மட்டும் 1000 அரங்குகளுக்கு மேல் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளதாக கமல் தெரிவித்தார் (ஆனால் 700 அரங்குகள் என பாக்ஸ் ஆபீஸ்காரர்கள் தெரிவித்துள்ளனர்).

முதல்நாளான நேற்று சராசரியாக 50 முதல் 60 சதவீத பார்வையாளர்களே இந்தப் படத்துக்கு திரண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இன்று சென்னை திரும்பிய கமல், படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும், இது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் கூறினார்.

விஸ்வரூபம் படம் இந்தியாவில் தமிழகம் - புதுவையில் மட்டும் இதுவரை வெளியாகவில்லை. இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தடை செய்து வைத்துள்ளது.

இந்த தடைக்கெதிரான வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. நீதிமன்றத்துக்கு வெளியே வழக்கை முடித்துக் கொள்ளும் விதமாக, அரசு அதிகாரிகள் - கமல் - இஸ்லாமிய அமைப்புகள் அமர்ந்து பேசி, ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்கினால் படத்தை வெளியிட தடையை விலக்கிக் கொள்வதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார்.

நேற்று இந்தப் பேச்சு வார்த்தை தொடங்கியது. ஆனால் எந்தக் காட்சியையும் என் அனுமதியின்றி, அல்லது கவனத்துக்குக் கொண்டுவராமல் வெட்ட அனுமதிக்க மாட்டேன் என்றார் கமல்.

எனவே அவர் இல்லாமல் பேச்சு நடத்துவது வீண் வேலை என்பதால், கமல் வரட்டும் என்று கூறி நேற்று கலைந்தனர்.

இன்று கமல் வந்திருக்கிறார். இஸ்லாமிய அமைப்புகள் குறிப்பிடும் காட்சிகள் முழுவதையும் வெட்ட அவர் சம்மதிப்பாரா... பிரச்சினையை முடித்துக் கொள்வாரா.. அல்லது மேலும் பரபரப்பாக்குவாரா என்பது இன்னும் சில நிமிடங்களில் தெரிந்துவிடும்!

 

புதுமுகங்களை வைத்து பாலிவுட் டைரக்டர் இயக்கும் 'கண்டனம்'!

Bollywood Director S Debut Tamil Movie Kandanam

புதுமுகங்களை வைத்து கண்டனம் என்ற தமிழ்ப் படத்தை முதல் முறையாக இயக்குகிறார் பாலிவுட் இயக்குநர் சுப்ரமணிய ஜனார்தன்.

அக்‌ஷய் குமார் நடித்த ஜக்மி தில், ரிஷி கபூர் - மனீஷா கொய்ராலா நடித்த கன்யாதன் உட்பட நான்கு இந்திப் படங்களை இயக்கியவர் சுப்ரமணிய ஜனார்தன்.

தமிழில் சிக்கி முக்கி, மனிதாக இரு ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறார். இப்போது முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் 'கண்டனம்' திரைப்படத்தைத் தமிழில் தனது முதலாவது படமாக இயக்குகிறார்.

ஹிந்தியில் ராஜு சுப்ரமணியன் என்கிற பெயரில் படங்களை இயக்கியவர் தமிழுக்காக சுப்ரமணியன் ஜனார்தன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

ராதா ராம்தாரி புரொடக்‌ஷன் - அசோக் கோஸுவாமி & ராம்தாரி தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் தொடக்க விழா நேற்று ஜே ஸ்டுடியோவில் பாடல் பதிவுடன் நடந்தது. படப்பிடிப்பினைப் பிரபல இசையமைப்பாளர் (சங்கர் ) கணேஷ் கிளாப் அடித்து தொடங்கிவைத்தார்.

நிழல்கள் ரவி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகன் - நாயகியாக புதுமுகங்கள் விஷால், கார்த்திக் கட்டாக், சாய் ராகேஷ், கமலி மற்றும் ஜிடா மரியா ஆகியோர் நடிக்கும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது.

இளமையும் புதுமையுமாக உருவாகவிருக்கும் 'கண்டனம்' படத்திற்கு பி.ஆர்.ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார், ஜெய் பிரகாஷ் இசையமைக்கிறார்.

 

வட இந்தியாவில் அமைதியாக ரிலீசானது விஸ்வரூபம்... ஆனால் கூட்டம் சுமார்தான்!

Viswaroop Not Pulled Crowd On The First Day

மும்பை: விஸ்வரூபம் தமிழ் மற்றும் விஸ்வரூப் இந்தி படங்கள் வட இந்தியாவில் வெளியாகின. 600 முதல் 700 தியேட்டர்களில் இந்தப் படம் வெளியானதாக மும்பை பாக்ஸ் ஆபீஸ் தெரிவித்திருந்தது.

ஆனால் கமல் 1025 தியேட்டர்களில் வெளியாகியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

விஸ்வரூப சர்ச்சைகள் தென் மாநிலங்களில் பப்ளிசிட்டிக்கும் மக்களை இழுக்கவும் உதவினாலும், வட இந்தியாவில் சுத்தமாக கை கொடுக்கவில்லை. முதல் நாளான நேற்று மும்பை மல்டிப்ளெக்ஸ்களில் 50 சதவீத கூட்டமே வந்திருந்தது.

மத்தியபிரதேஷ், பஞ்சாப், ஹரியாணா, டெல்லி, உபியில் 40 சதவீதத்துக்கும் குறைவாகவே இந்தப் படத்துக்கு மக்கள் வந்திருந்தனர். இங்கெல்லாம் முதல் மூன்று நாட்களுக்கு மட்டுமே இந்தப் படத்துக்கு அதிக காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் டி.ட்டி சினிமாவில் மட்டும் 60 சதவீத பார்வையாளர்கள் இருந்ததாக அந்த மாலின் உரிமையாளர் ஆனந்த் வர்மா தெரிவித்தார்.

உபியின் லக்னோ, கான்பூரில் 40 முதல் 50 சதவீதம் மட்டுமே அரங்குகள் நிறைந்துள்ளன.

காலை வாரிய விமர்சனங்கள்...

இந்தப் படத்துக்கு நேற்று வட இந்தியாவில் வெளியான விமர்சனங்கள், இனி வரும் நாட்களின் வசூலை கேள்விக் குறியாக்கிவிட்டன.

"On the whole, VISHWAROOP is a Kamal Haasan show all the way. It has an interesting premise, superb combat scenes and Kamal Haasan's bravura act as its three aces. But a stretched second hour and far from dramatic finale dilute the impact." - இது பிரபல விமர்சகர் தரன் ஆதர்ஷின் விமர்சனத்தின் ஒரு பகுதி. மூன்று ஸ்டார்கள் கொடுத்திருக்கிறார்.

"There is a technical finesse to the action scenes and to the way in which the attacks in Afghanistan are filmed, but the same can't be said of the confused screenplay that lingers on a bunch of needless characters who converse exclusively in Arabic. These bits, along with the plot's return to New York in the final act turn a tired story into an even more trite one." - ராஜிவ் மஸந்த் எழுதியுள்ள விமர்சனம். அவர் இரண்டரை ஸ்டார்கள் மட்டுமே கொடுத்துள்ளார்.

இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கிலப் பத்திரிகை இந்தப் படத்துக்கு மூன்று ஸ்டார்கள் கொடுத்துள்ளது. கமல் நடிப்பைப் புகழ்ந்துள்ள இந்த விமர்சனம், படம் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதியில் டல்லடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

மூன்றரை ஸ்டார்கள் கொடுத்துள்ள ஜீ நியூஸ், படத்தில் குறைகள் இருந்தாலும் ரசிக்கும்படி உள்ளதாக பரிந்துரைத்துள்ளது.

இந்தப் படம் கமலின் பல திறமைகளை வெளிச்சம் போட்டிருந்தாலும், பார்வையாளரின் பொறுமையைச் சோதிக்கும் அளவு காட்சிகள் இழுக்கப்பட்டுள்ளன, என்று குறிப்பிட்டுள்ளது லைவ் மின்ட்!