சிங்கப்பூர் இசை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்…

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் பங்கேற்க உள்ளார்.

சிங்கப்பூர் இசை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்…

ஏ.ஆர்.ரஹ்மானின் "இன்ஃபினிட் லவ்" என்னும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி ஏப்ரல் 30ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறுகிறது. அதற்கான நுழைவுச் சீட்டுகள் இப்போதே விற்கத் தொடங்கி விட்டன.

‘டிஎம்எல் லைப்' நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் ஆஸ்கர் நாயகனான இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இன்னிசை விருந்து வழங்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சி தொடர்பாக நேற்று சிங்கப்பூரில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து உரையாடிய ஏ.ஆர். ரஹ்மான் மலேசிய, சிங்கப்பூர் ரசிகர்களுக்காக இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க ஆவலுடனும் உற்சாகத்துடன் உள்ளதாகக் கூறினார்.

இந் நிகழ்ச்சி மலேசியாவில் ஏப்ரல் 26ம் தேதியும் சிங்கப்பூரில் ஏப்ரல் 30ம் தேதியும் நடைபெறவுள்ளது.

 

அப்ப, என் லவ் அவ்ளோ தானா: பாட்டிலும், கையுமாக திரியும் நடிகர்

சென்னை: இரண்டு எழுத்து வெற்றி நடிகர் டைம் நடிகைக்கு திருமணம் நிச்சயமானதில் இருந்து பாட்டிலும், கையுமாக உள்ளாராம்.

இரண்டு எழுத்து வெற்றி நடிகரும், டைம் நடிகையும் திருமணம் பெயர் கொண்ட படத்தில் ஜோடி சேர்ந்தனர். அப்போது அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி கண்டமேனிக்கு ஒர்க் அவுட்டாகி இருவருக்கும் பயங்கர காதல் என்று செய்திகள் வெளியாகின.

மேலும் அவர்கள் இருவரும் படப்பிடிப்பின்போது நெருக்கமாக இருப்பதாகவும் பேச்சு அடிபட்டது. இந்நிலையில் டைம் நடிகைக்கும், மலையாள நடிகர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இன்னும் 5 மாதங்களில் நடிகை திருமதி ஆகவிருக்கிறார்.

நடிகைக்கு திருமண தேதி குறித்த செய்தி அறிந்த வெற்றி நடிகர் அன்றைய நாளில் இருந்து எப்பொழுது பார்த்தாலும் பாட்டிலும், கையுமாக அலைகிறாராம். அப்போ என்னுடன் சிரித்து சிரித்து பேசிப் பழகியது எல்லாம் பொய்யா என்ன என்று கூறுகிறாராம்.

டைம் நடிகை திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடரும் முடிவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தயாரிப்பாளர்கள் இப்போதும் நம்பும் மம்பட்டியான் பாணி படங்கள்!

எண்பதுகளில் மலையூர் மம்பட்டியான் படம் வந்து சக்கைப் போடு போட்ட நேரம்... அடுத்தடுத்து அதே பாணியில் ஏகப்பட்ட படங்கள் வந்தன.

கொம்பேறி மூக்கன், தீச்சட்டி கோவிந்தன், கரிமேடு கருவாயன்.. என நிறைய படங்கள். தொன்னூறுகளிலும் இந்த மாதிரி படங்கள் தொடர்ந்தன. கும்பகரை தங்கய்யா, பெரிய மருது போன்ற படங்கள் இதே ரகம்தான்.

தயாரிப்பாளர்கள் இப்போதும் நம்பும் மம்பட்டியான் பாணி படங்கள்!

இரண்டாயிரம் ஆண்டு பிறந்த பிறகும் இத்தகைய படங்கள் வருவது நிற்கவில்லை. நிஜமாக நடந்த கதை என்பதில் கூடுதல் சுவாரஸ்யம் இருந்ததால், இம்மாதிரிப் படங்கள் இப்போதும் தொடர்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் வீரப்பனின் நிஜக் கதை வனயுத்தமாக வந்தது. அட மலையூர் மம்பட்டியானையே மீண்டும் ரீமேக் செய்து வெளியிட்டார் தியாகராஜன், தன் மகன் பிரசாந்தை வைத்து. சில வாரங்களுக்கு முன் அத்திமலை முத்துப்பாண்டி என்றொரு படம் வந்தது.

வீரன் முத்துராக்கு

இப்போது வீரன் முத்துராக்கு என்ற பெயரில் ஒரு மம்பட்டியான் ஸ்டைல் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

தயாரிப்பாளர்கள் இப்போதும் நம்பும் மம்பட்டியான் பாணி படங்கள்!

கிருப்பாத்தி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கே.சண்முகம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதிர் ஹீரோவாக நடிக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகரின் வெளுத்துக்கட்டு படத்தில் கதாநாயகனாக நடித்தவர் இந்த கதிர்.

கதாநாயகியாக லியாஸ்ரீ நடிக்கிறார். சண்முகராஜன், ஆடுகளம் நரேன், நமோ நாராயணன், சேரன்ராஜ், விகாஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. விரைவில் படம் வெளியாகவிருக்கிறது.

 

அக்ஷய்க்கு ஆரம்பம்.. சல்மானுக்கு வீரம்.. பாலிவுட்டில் ரீமேக்காகும் அஜீத் படங்கள்!

அஜீத் நடித்து சமீபத்தில் வெளிவந்த ஆரம்பம், வீரம் இரு படங்களுமே இந்தியில் ரீமேக் செய்யப்படுகின்றன.

இந்தப் படங்களில் முறையே அக்ஷய் குமாரும், சல்மான் கானும் நடிக்கின்றனர்.

முன்பெல்லாம் இந்திப் படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டன. ஆனால் இப்போது தமிழ்ப் படங்களின் முறை. தொடர்ச்சியாக பல தமிழ்ப் படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன.

இங்கு சுமாராகப் போன படம் கூட அங்கே சூப்பர் ஹிட்டாகிறது.

அக்ஷய்க்கு ஆரம்பம்.. சல்மானுக்கு வீரம்.. பாலிவுட்டில் ரீமேக்காகும் அஜீத் படங்கள்!

அலைபாயுதே, கஜினி, சிங்கம், பந்தா பரமசிவம், சிறுத்தை, போக்கிரி, சாமி என ஏகப்பட்ட படங்கள் இந்தி பேசிவிட்டன. இப்போது ரமணா, துப்பாக்கி போன்ற படங்கள் ரீமேக் ஆகி வருகின்றன.

அடுத்து அஜீத் நடித்த இரு படங்களை இரு பெரிய பாலிவுட் ஹீரோக்கள் ரீமேக் செய்கின்றனர்.

விஷ்ணுவர்தன் இயக்கிய ஆரம்பம் படத்தை அக்ஷய் குமார் தன் சொந்தப் பட நிறுவனம் மூலம் ரீமேக் செய்கிறார்.

அடுத்து அஜீத் நடித்து பொங்கலுக்கு வந்த வீரம் படத்தை சல்மான்கான் ரீமேக் செய்கிறார்.

 

இந்தி, தமிழ், மராத்தியில் படம் தயாரிக்கும் சுசிகணேசன்!

இந்தி, தமிழ், மராத்தியில் படம் தயாரிக்கும் சுசிகணேசன்!

கந்தசாமிக்குப் பின் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்ட சுசி கணேசன், தயாரிப்பாளராய் மீண்டும் வருகிறார்.

மூன்று படங்களைத் தயாரிக்கும் அவர், அதுகுறித்து இப்போது செய்தி வெளியிட்டுள்ளார்.

விரும்புகிறேன், திருட்டுப்பயலே, கந்தசாமி ஆகிய படங்களை இயக்கியவர் சுசி கணேசன். திருட்டுப்பயலே' படத்தை இந்தியில் தயாரித்து இயக்கினார். படுதோல்வியைத் தழுவியது அந்தப் படம். ஆனாலும் தொடர்ந்து இந்தியில் கிங் ஜோ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்போது மம்முட்டி மகன் துல்கர் சல்மான் நடித்த ஒரு மலையாளப் படத்தை தமிழில் தயாரிக்கிறார். இயக்கவில்லை. அதேபோல, களவாணி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்களை முறைய மராத்தி, இந்தியில் தயாரிக்கிறார்.

இதுகுறித்து சுசி கணேசன் கூறுகையில், "நான் தயாரிக்கும் மூன்று படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. மூன்றுமே வித்தியாசமான கதைக்களத்துடன் நகைச்சுவையை பக்கபலமாக கொண்ட படங்கள். மூன்று படங்களையுமே இந்த ஆண்டில் வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் சத்யராஜ் நடித்த கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறேன். இதுதவிர, ‘கிங் ஜோ' என்ற இந்தி படத்தை இயக்குகிறேன்," என்றார்.

 

அட்வான்ஸே ரூ 50 லட்சம்... நயன் மவுசு அப்படி!!

நயன்தாராவின் மார்க்கெட் செம ஸ்டெடியாக உள்ளது. அதனால்தான் அவருக்கு அட்வான்ஸாக மட்டுமே ரூ 50 லட்சம் தந்திருக்கிறார்கள் சமீபத்தில் ஒப்பந்தமான ஒரு படத்துக்கு.

ராஜா ராணி, ஆரம்பம், இது கதிர்வேலன் காதல் என்று தொடர்ச்சியாக மூன்று ஹிட் படங்களில் நடித்ததன் மூலம், நயன்தாரா எவ்வளவு கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் தமிழ் படத் தயாரிப்பாளர்கள்.

அட்வான்ஸே ரூ 50 லட்சம்... நயன் மவுசு அப்படி!!  

கஹானி இந்திப் பட ரீமேக்கான நீ எங்கே என் அன்பே மற்றும் தெலுங்கு அனாமிகாவில் நாயகிக்குதான் முக்கியத்துவம். இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து அவருக்கு 2.5 கோடிக்கு மேல் சம்பளம் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.

அடுத்து தமிழில், உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் நண்பேண்டா படத்திலும் நயன்தாராதான் நாயகி.

முதலில் நண்பேண்டா படத்தில் நடிக்க இருந்தவர் காஜல் அகர்வால்தான். இதற்காக அவருக்கு அட்வான்ஸ் பணம் எல்லாம் கொடுத்துவிட்டார்கள். ஆனால் இது கதிர்வேலன் காதல் படத்தில் நயனின் ஜோடிப் பொருத்தம் உதயநிதிக்கு பிடித்துப் போகவே, காஜலை நீக்கிவிட்டு நயனையே ஒப்பந்தம் செய்துவிட்டார்.

மேலும் படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். முன்னதாக அட்வான்ஸாகவே ரூ 50 லட்சத்தை தூக்கிக் கொடுத்தாராம் உதயநிதி.

அதேசமயம், காஜலுக்குக் கொடுத்த அட்வான்ஸ் தொகையை உதயநிதி இன்னும் திரும்பிப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது.. அட்வான்ஸ் புக்கிங்!

 

அம்மா திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் வரவேற்பு!

அம்மா திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் வரவேற்பு!

சென்னை: அம்மா திரையரங்குகள் அமைக்கப்படும் என்ற சென்னை மாநகராட்சியின் அறிவிப்புக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள இடங்களை தேர்வு செய்து, தேவைக்கேற்ற எண்ணிக்கையில் அம்மா திரையரங்கங்கள் அமைக்கப்படும் என்றும் அவற்றில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ் திரைப்பட உலகில் இன்று சிறு முதலீட்டு படங்களை வெளியிட முடியாமல் பல தயாரிப்பாளர்கள் அல்லல்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில், அம்மா திரையரங்குகள் அமைக்கப்படும் என அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அம்மா திரையரங்குகள் அறிவிப்பு வந்த நாளிலேயே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நல்லதோர் தீர்ப்பை வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று கூறி எஸ்.தாணு தொடர்ந்த வழக்கு அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் கே.ஆர். ஆகிய எனது தலைமையின் கீழ் அமர்ந்து உள்ள நிர்வாகிகள் செயல்பட தடைகள் நீங்கியுள்ளன.

எனவே, நாங்கள் முதல்கட்டமாக உறுப்பினர்கள் அனைவரின் குடும்ப அங்கத்தினருக்கும் மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மற்ற சங்க நிர்வாகிகளுடன் பேசி பட வெளியீட்டு தேதியை முறைபடுத்துதல், பட விளம்பரங்களை கட்டுப்படுத்துதல் போன்ற திட்டங்களும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்," என்றார்.

 

அம்மாவிடம் கேளுங்கள், தரப்படும்!- ஃபெப்சி தலைவர் அமீர்

அம்மாவிடம் கேளுங்கள், தரப்படும்!- ஃபெப்சி தலைவர் அமீர்

சென்னை: அம்மாவிடம் கேளுங்கள் அவர் இல்லையென்று சொல்லுவதில்லை, எனும் அளவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழர் நலனுக்காக பாடுபடுகிறார் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத் தலைவர் அமீர் கூறியுள்ளார்,

ராஜீவ் கொலை வழக்கில் நீண்ட காலமாக தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவு குறித்து ஃபெப்சி தலைவர் அமீர் மற்றும் செயலாளர் ஜி சிவா வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கைத் தமிழர்கள் துயர் துடைக்கும் போராட்டங்களில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனும் தன் பங்குக்கு பல்வேறு அறவழி போராட்டங்களை நடத்தியுள்ளது.

குறிப்பாக கடந்த 21.10.2008-ல் சென்னையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் மற்றும் 5.11.2008 அன்று சாலிகிராமத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்திக் காட்டியுள்ளோம்.

இந்த அறவழிப் போராட்டங்களில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கு தண்டனையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளோம்.

கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்பதற்கேற்பவும், அம்மாவிடம் கேளுங்கள், அவர் இல்லையென்று சொல்லுவதில்லை என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக, புரட்சித் தலைவி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உயர்ந்த எண்ணத்தோடு சட்டமன்ற வரலாறு போற்றும் தீர்மானத்தை இயற்றி தூக்கு தண்டனை கைதிகளை விடுவிக்க வழிவகை செய்து கொடுத்ததற்காக நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கிராமங்களிலும் வேண்டும் அம்மா திரையரங்குகள்- சேரன்

சென்னை: கிராமப்புறங்களிலும் அம்மா திரையரங்குகள் அமைக்கப்பட வேண்டும் என்று இயக்குநர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் ‘அம்மா திரையரங்குகள்' என்ற பெயரில் சிறு தியேட்டர்கள் கட்டப்படும் என்றும், அதில் படம் பார்க்க குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அரசின் இந்த அறிவிப்புக்கு இயக்குநர் சேரன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

பசித்த வயிற்றுக்கு குறைந்த விலையில் அம்மா உணவகம் ஆரம்பித்த போதே நீங்கள் ஏழைகளின் இதயங்கள் நிரந்தரமாக குடியேறி விட்டீர்கள்.

கிராமங்களிலும் வேண்டும் அம்மா திரையரங்குகள்- சேரன்

இப்போது ‘அம்மா திரையரங்கம்' திட்டம் கொண்டுவந்ததின் மூலமாக திரையுலகில் வாழ்க்கை இழந்து, எப்படி இனி திரைப்படம் எடுத்து வாழப்போகிறோம், என தவித்து நின்ற ஆயிரக்கணக்கான தயாரிப்பாளர்கள் இதயங்களிலும், கண்களில் ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு இயக்குனராகவே வாழ்ந்து மடிய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட என் போன்ற ஆயிரக்கணக்கான இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் இதயங்களில் என்றும் மறக்காத, மறக்க நினைக்காத வண்ணம் நீங்கள் குடிகொண்டு விட்டீர்கள்.

இந்த திட்டம் சென்னை நகரம் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் நிறுவப்பட வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.

இந்த திட்டத்தின் மூலமாக தமிழகத்திலிருந்து திருட்டு விசிடியை கட்டுப்படுத்தி, எல்லா தயாரிப்பாளர்கள் குடும்பங்களிலும் விளக்கேற்ற முடியும். குறைந்த கட்டணத்தில் ஏழை எளிய மக்கள் எல்லா திரைப்படங்களையும் பார்க்கவும், உழைத்து களைத்த மக்கள் பொழுதுபோக்கிற்காக குடும்பங்களுடன் திரையரங்கம் சென்று திரைப்படம் காணவும் நிச்சயம் வழி செய்யும்.

இந்த திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் பயன்பெறுவதோடு அல்லாமல் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவும் வழி செய்யும். இந்த திட்டம் நிறைவேற நீங்கள் இடும் கட்டளைகளை செவ்வனே நேர்மையான வழியில் செய்து முடிக்க நான் என்றும் உங்கள் பின்னால் பணிவோடு நிற்க தயார்.

இவ்வாறு சேரன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.