தாத்தா போல் ஸ்டைல் பண்ணும் ரஜினி பேரன்கள்: பெருமிதத்தில் ரஜினி


தங்கள் தாத்தா ரஜினிகாந்த் போல் அவரிடமே ஸ்டைலாக நடித்து அசத்துகிறார்களாம் ஐஸ்வர்யா, தனுஷின் மகன்கள் யாத்ராவும், லிங்காவும்.

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா, லிங்கா என்று 2 மகன்கள் உள்ளனர். அந்த இரண்டு குட்டீஸ்களுக்கும் டிவிடியில் தாத்தா ரஜினிகாந்த் படங்களைப் பார்ப்பது என்றால் அலாதிப் பிரியமாம். ரஜினியின் ஸ்டைலை உன்னிப்பாக கவனித்துப் பார்க்கிறார்களாம். தாத்தாவிடம் சென்று அவர் ஸ்டைலை அவருக்கே செய்து காட்டி அசத்துகிறார்களாம்.

பிஞ்சுப் பிள்ளைகள் தன்னைப் போன்று ஸ்டைல் செய்வதைப் பார்த்து ரஜினி பூரித்துப் போகிறாராம். தனக்கு நெருக்கமானவர்களிடம் என் பேரன்மார்கள் என்னைப் போன்று ஸ்டைல் செய்து காட்டுகிறார்கள் என்று சொல்லி சொல்லி பெருமிதப்படுகிறாராம்.

தாத்தா ரஜினியும், அப்பா தனுஷும் நடிகர்கள். அம்மா இயக்குனர், சித்தி தயாரிப்பாளர், தந்தை வழி தாத்தா கஸ்தூரி ராஜா இயக்குனர், பெரியப்பா செல்வராகவன் இயக்குனர். இப்படி குடும்பமே கலைக்குடும்பமாக இருக்கையில் யாத்ராவுக்கும், லிங்காவுக்கும் நடிக்க சொல்லியா கொடுக்க வேண்டும்.

மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டுமா என்ன?
 

'குத்தாட்டம்' கிடையாது-திவ்யா மறுப்பு!


நான் கன்னடப் படத்தில் குத்தாட்டம் ஆடவில்லை. அப்படி தேவையில்லாமல் வதந்தி பரப்புகிறார்கள் என்று மூக்கைச் சிந்துகிறார் குத்து ரம்யா எனப்படும் திவ்யா ஸ்பந்தனாஸ்.

கன்னடத்து திவ்யா ஸ்பந்தனாஸ் தமிழில் குத்துப் படத்தில் நடித்தது முதல் அவரை குத்து ரம்யா என்றே அழைக்கின்றனர்.இதனால் அதிருப்தி அடைந்த திவ்யா, தனது பெயரை யாரும் இனிமேல் குத்து ரம்யா என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். தமிழிலும் தனது பெயரை திவ்யா என்றே மாற்றி வைத்தார்.

இந்த நிலையில் கன்னடப் படம் ஒன்றில் குத்துப் பாடலுக்கு அவர் கவர்ச்சிகரமாக ஆடப் போவதாக செய்திகள் பரவின. இதனால் அதிர்ச்சி அடைந்தார் ரம்யா. இதுகுறித்து அவர் கூறுகையில், கவிதா லங்கேஷ் இயக்கும் கிரேஸி லோகா படத்தில் நான் குத்துப் பாடலுக்கு ஆடுவதாக வெளியாகியுள்ளது வதந்தியாகும்.

அப்படியெல்லாம் நான் ஆடவில்லை. இப்படி வதந்தி கிளப்புவதே வேலையாகி விட்டது. இந்த வதந்தி குறித்து இயக்குநர் கவிதாவிடம் நான் கேட்டபோது, தயாரி்பபாளர்தான் இப்படி செய்தி பரப்பியுள்ளார். இது பப்ளிசிட்டிக்காக என்றார். எனக்கு இப்படியெல்லாம் பப்ளிசிட்டி தேவையில்லை என்று கோபத்துடன் கூறியுள்ளார் குத்து ரம்யா எனப்படும் திவ்யா.
 

ஐஸ்வர்யா ராயாக ஆசை: அசின்


நடிகை ஐஸ்வர்யா ராய் இத்தனை ஆண்டுகளாகியும் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் போல் ஆக ஆசையாக இருக்கிறது என்று நடிகை அசின் தெரிவித்துள்ளார்.

தமிழில் நம்பர் 1 இடத்தில் இருந்த அசினுக்கு பாலிவுட் மோகம் ஏற்பட்டதால் மும்பைக்கு போனார். அவரும் திக்கி, முக்கி முன்னேறத் தான் பார்க்கிறார் முடியவில்லை. இந்நிலையில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் இத்தனை ஆண்டுகளாகியும், வயதாகியும் இன்னும் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் மாதிரி ஆக ஆசையாக உள்ளது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அசின் கேட்டுள்ளார்.

அதேசமயம், பாலிவுட்டில் என்ன தான் முட்டி, மோதினாலும் ஒன்றும் நடக்கவில்லை என்பதால் மீண்டும் கோலிவுட் பக்கம் செல்லவும் அசின் முடிவு செய்துள்ளாராம். இதையடுத்து பெரிய நிறுவனம், பெரிய நடிகர் நடிக்கும் படங்கள் வந்தால் நடிக்கத் தயார் என்று சென்னைக்கு ஓலை அனுப்பியுள்ளாராம்.

ஆனால், அசின் மெசேஜ் அனுப்பியும் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க யாரும் பேரார்வம் காட்டியதாக தெரியவில்லை. ஒரு பக்கம் அசினின் கெரியர் மந்தமாக இருக்க மறுபக்கம் அவரைப் பற்றி சகட்டுமேனிக்கு வதந்திகள் வேறு வருவதால் அவர் அப்செட்டாகியுள்ளாராம்.

ஆனால் சேச்சிதான் இதில் பாதி வதந்திகளை கிளப்பி விடுவதாக இன்னொரு வதந்தியும் பின்னாலேயே வருகிறது.
 

'சோக்காலி'க்காக திரும்பி வந்தார் சோனா!


சோக்காலி என்ற படத்தில் நடிப்பதற்காக மீண்டும் சென்னை திரும்பியுள்ளார் கவர்ச்சி நடிகை சோனா.

நடிகை சோனாவுக்கும், பின்னணிப் பாடகர் எஸ்.பி.சரணுக்கும் இடையே சமீபத்தில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டது. போலீஸ் வரை போனார் சோனா. சரண் தரப்பில் சமரசம் பேசியதாக தெரிகிறது. பின்னர் சோனாவிடம் சரண் தரப்பு மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து புகாரை திரும்பப் பெறுவதாக கூறினார் சோனா. மேலும் தற்காலிகமாக நடிப்புக்கு முழுக்குப் போடுவதாகவும் கூறி வெளிநாட்டுக்குப் போய் விட்டார்.

கடைசி வரை சோனா -சரண் விஷயத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பது கடைசி வரை யாருக்குமே தெரியவில்லை. இந்த நிலையில் மறுபடியும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார் சோனா. சோக்காலி என்ற படத்தில் நடிக்கிறாராம். இதில் அவருக்கு முக்கிய வேடமாம்.

இதுகுறித்து சோனா கூறுகையில், இந்த மாதம் ஷூட்டிங்கைத் தொடங்குகிறார்கள். முக்கிய வேடத்தில் நான் நடிக்கிறேன். வில்லத்தனமாகவும், நல்லதனமாகவும் இதில் நான் வித்தியாசமாக நடிக்கிறேன். இது கிட்டத்தட்ட எனது நிஜ கேரக்டர் மாதிரியே இருப்பதால் ஈடுபாட்டுடன் நடிக்கிறேன் என்றார் சோனா.

அப்புறம், படத்தில் சோனாவின் நிஜ வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமும் இடம் பெறப் போகிறதாம். அது என்ன என்று கேட்டால் சஸ்பென்ஸ் என்கிறார் சோனா.

சரி,சமீபத்திய சர்ச்சைகள் குறித்து என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டால், அதுகுறித்து நான் பேசவே விரும்பவில்லை. அதை மறக்கவே விரும்புகிறேன். யார் வாழ்க்கையையும் நான் கெடுக்கவில்லை என்றார் பொத்தாம் பொதுவாக.

அப்படியானால் வெங்கட்பிரபுவின் படத்தில் நடிப்பீர்களா என்று கேட்டபோது, இல்லை இல்லை, எனது முழு கவனமும் இப்போதைக்கு எனது யூனிக் ஸ்டோர் மீது மட்டுமே உள்ளது என்றார் அவசரம் அவசரமாக.

ஆமாமா, கடையையும் பார்த்துக்கணுமே வியாபாரமும் முக்கியமில்லையா... !
 

கொச்சி வந்த விஜய்- பெருமளவில் திரண்டு வந்து வரவேற்ற ரசிகர்கள்


வேலாயுதம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுக்காக கொச்சி வந்த நடிகர் விஜய்யை பெரும் திரளான ரசிகர்கள் கூடி வரவேற்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கேரளாவில் விஜய்க்கும் அதிக ரசிகர்கள் உண்டு. தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் விஜய் படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இந்த நிலையில் தனது வேலாயுதம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுக்காக விஜய் கொச்சி போயிருந்தார். அங்கு அவருக்கு ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு கொடுத்து அசத்தினர்.

போக்குவரத்தையே பாதிக்கும் அளவுக்கு ரசிகர்கள் கூடி விட்டனர். பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய விஜய், ரசிகர்களின் அன்பு தன்னை நெகிழ வைப்பதாக கூறினார். மேலும் மலையாளப் படத்தில் நடிக்க தான் விரும்புவதாகவும் கூறினார்.

இதுகுறித்து விஜய் கூறுகையில், மலையாளப் படங்களை நான் விரும்புகிறேன். யதார்த்தமாக இங்கு படம் எடுக்கிறார்கள். அவர்கள் கதை சொல்லும் விதமே அலாதியாக இருக்கிறது. மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகிய இருவருக்குமே நான் ரசிககன். அவர்களுடன் சேர்ந்து நடிக்கவும் ஆசையாக இருக்கிறது. ஆனால் கூப்பிடுவார்களா என்பது தெரியவில்லை. ஆனால் வாய்ப்பு வந்தால் விட மாட்டேன் என்றார் விஜய்.

வேலாயுதம் எப்படி வந்திருக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்டபோது நானே எனது படத்தைப் பற்றி பெருமையாக சொல்ல விரும்பவில்லை. மக்கள்தான் படத்தைப் பார்த்துச் சொல்லனும் என்றார் விஜய்.
 

'லூஸ்' மோகனுடன் சமரசமானது மகன் குடும்பம்!


பழம் பெரும் காமெடி நடிகர் லூஸ் மோகனுடன், அவரது மகன் குடும்பம் சமரசமாக போயுள்ளது. இதையடுத்து மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று லூஸ் மோகன் காவல்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளார். புகாரையும் அவர் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தற்போது 84 வயதாகும் காமெடி நடிகர் லூஸ் மோகன் சமீபத்தில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். கூடுதல் ஆணையர் அபய் குமார் சிங்கை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், தனக்கு அத்தனை வசதிகளும் இருந்தும் தனது மகன் தனக்கு சாப்பாடு போடாமல் மனைவி பேச்சைக் கேட்டு புறக்கணிப்பதாக கூறியிருந்தார். ஒரு வேளை சாப்பிடக் கூட வழியில்லாத நிலையில் தான் இருப்பதாகவும், மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மருமகள் மீதும் அவர் சட்ட நடவடிக்கை கோரியிருந்தார்.

இதையடுத்து கமிஷனர் அலுவலகத்தில் அவருக்கு டீ, பிஸ்கட் உள்ளிட்டவற்றைக் கொடுத்து உபசரித்து ஆயாசப்படுத்தினர். அதன் பிறகுதான் லூஸ் மோகன் பசியமர்ந்தார். மேலும் அவர் கொடுத்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மயிலாப்பூர் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு பறந்தது.

இதையடுத்து மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் உடனடி விசாரணையில் இறங்கினார். லூஸ் மோகன், அவரது மகன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில், லூஸ் மோகன் ஒரு அறிக்கை விட்டுள்ளார். அதில், கடந்த 20ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் என் மகன் மீது புகார் கொடுத்திருந்தேன். இன்று நான் என் குடும்பத்தினருடன் சுமூகமாக சேர்ந்து விட்டேன். எனவே, அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று மயிலாப்பூர் இன்ஸ்பெக்டரிடம் புகாரை வாபஸ் பெற்றுள்ளேன் என்று கூறியுள்ளார்.

இத்தனை காலமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிறு வலிக்க சிரிக்க வைத்து ஆயுளின் நாளை கூட்ட உதவிய லூஸ் மோகனை இனிமேலாவது அவரது குடும்பத்தினர், ஒரு குழந்தையைப் போல கருதி பத்திரமாக பார்த்துக் கொள்ளட்டும்.
 

தீபாவளிக்கு 5 ஷோ- தியேட்டர்களுக்கு அனுமதி- கட்டணக் கொள்ளை தடுக்கப்படுமா?


தீபாவளிப் பண்டிகையின்போது தியேட்டர்களில் 5 காட்சிகள் வரை காட்ட தமிழக அரசு அனுமதித்துள்ளது. ஆனால் புதுப் படங்களைத் திரையிடும் தியேட்டர்களில் மிகப் பெரிய அளவில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எந்தப் புதிய படம் வந்தாலும் சரி, குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்கள் வந்தால் போதும், தியேட்டர்களில் கட்டணக் கொள்ளை கொடி கட்டிப் பறக்கும். சாதாரண நாட்களிலும் கூட தியேட்டர்களுக்கு சாமானிய மக்கள் குடும்பத்தோடு போய் பார்க்க முடியாத நிலை உள்ளது (படங்கள் மட்டுமல்ல, தியேட்டர் கட்டணமும் அவ்வளவு லட்சணத்தில் உள்ளது). இதனால்தான் திருட்டு டிவிடி உள்ளிட்டவை பெருத்துப் போயுள்ளன.

தியேட்டர்களில் மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதியையும் செய்து தராமல் கட்டணத்தை மட்டும் தாறுமாறாக உயர்த்திக் கொள்ளையடிக்கும் தியேட்டர்கள் நிறையவே உள்ளன. திண்பண்டம் எடுத்து வரக் கூடாது என்று மக்களிடம் கூறும் தியேட்டர்கள் உள்ளே விற்பதைத்தான் திண்ண வேண்டும் என்று மக்கள் கழுத்தில் கத்தியை வைக்காத குறையாக கூறுகின்றன. உள்ளே விற்கும் திண்பண்டங்களோ, ராக்கெட் விலையை தாங்கி மக்களை பதைபதைக்கவும், வயிறு எறியவும் செய்கின்றன.

இந்த நிலையில் தீபாவளி வந்து விட்டது. கட்டணக் கொள்ளையும் தொடங்கப் போகிறது. இந்தப் பின்னணியில் தீபாவளிக்கு ஐந்து காட்சிகள் வரை நடத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் பொதுமக்களுக்கு தொன்றுதொட்டு வரும் பல பழக்கவழக்கங்களில் ஒன்று, தீபாவளியன்று ஒரு சினிமாவை பார்த்து மகிழ வேண்டும் என்பது. அப்படி விரும்புபவர்கள் எளிதாக சினிமா பார்ப்பதற்காக கூடுதல் காலை காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்து இருந்தோம்.

அந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் ஜெயலலிதா, தீபாவளி பண்டிகை முதல் 7 நாட்களுக்கு (26-ந் தேதி முதல் 1-11-2011 வரை) அனைத்து திரையரங்குகளிலும் கூடுதல் காலை காட்சி நடத்த அனுமதி வழங்கியிருக்கிறார்கள். அதற்காக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

இதேபோல தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ராம.மு.அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் ஒரு அறிக்கை விடுத்துள்ளனர். அதில்,

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க, தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகள் 5 காட்சிகள் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதாவது வருகிற 27, 28, 31 மற்றும் 1-11-2011 ஆகிய தேதிகளில் அதிகப்படியாக ஒரு காட்சி நடத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

26, 29, 30 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறையானதால், அந்த நாட்களிலும் அதிகப்படியாக ஒரு காட்சி, அதாவது 5 காட்சிகள் நடத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.

அப்படியே மக்களைப் பாதிக்காத வகையில் கட்டணங்களை குறைவாக வசூலிக்கவும் அரசு கண்டிப்பான நடவடிக்கை எடுத்தால் மக்கள் முழு சந்தோஷத்தோடு தியேட்டர்களுக்குப் படையெடுத்து வருவார்கள்.