சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வரும் காமெடியன் ஆதவன்

ஆதித்யா சேனலில் கொஞ்சம் நடிங்க பாஸ் என்று ரோட்டில் போகிற வருகிறவர்களையெல்லாம் அழைத்து கிண்டலடிக்கும் தொகுப்பாளர் ஆதவன் தற்போது சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகிறார்.

நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜேஷ்குமார். தான் குறும்படமாக டைரக்ட் செய்த ‘சிக்கிக்கு சிக்கிக்குச்சு' படத்தை சினிமாவாக எடுத்து வருகிறார். அதில்தான் ஆதவன் முழுநீள காமெடியனாக நடிக்கிறார். சினிமா ஷுட்டிங் முடிந்து மற்ற வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

சினிமாவில் பிரபல நடிகர்கள் பேசிய வசனத்தை பொதுமக்களை பேச வைத்து நடிக்கச் சொல்வதுதான் ‘ கொஞ்சம் நடிங்க பாஸ்' நிகழ்ச்சியின் கரு. இதுவரை எல்லோரும் நடிக்கச் சொன்ன ஆதவன் காமெடியனாக நடிக்கிறார்.

சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வரும் காமெடியன் ஆதவன்

இந்த படத்தில் தனது காமெடி ரசிக்கப்பட்டால்தான் ஆதவன் தொடர்ந்து நடிப்பாராம். இல்லாவிட்டால் மீண்டும் மற்றவர்களை நடிக்க சொல்லி கலாய்த்துக் கொண்டிருப்பாராம் இதையும் அவரே கூறியுள்ளார்.

சின்னத்திரை நடிகர்கள் சந்தானம், சிவகார்த்திகேயன், இமான் அண்ணாச்சி , சேட்டை செந்தில் வரிசையில் ஆதித்யா சேனல் ஆதவனும் சின்னத்திரையிலிருந்து சினிமாவிற்கு நடிக்க வந்துள்ளார்.

 

தங்கைக்கு ரூ.1.25 கோடி வைர பிரேஸ்லெட் பரிசளித்த சல்மான் கான்

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது தங்கை அல்விரா அக்னிஹோத்ரிக்கு ரூ.1.25 கோடி மதிப்புள்ள வைர பிரேஸ்லெட்டை பரிசாக அளித்துள்ளார்.

தனக்கு நெருக்கமானவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகள் அளிப்பதற்கு பெயர் போனவர் பாலிவுட் நடிகர் சல்மான் கான். இந்நிலையில் சல்மான் தனது தங்கை அல்விரா அக்னிஹோத்ரிக்கு ரூ.1.25 கோடி மதிப்புள்ள வைர பிரேஸ்லெட்டை பரிசாக வழங்கியுள்ளார்.

தங்கைக்கு ரூ.1.25 கோடி வைர பிரேஸ்லெட் பரிசளித்த சல்மான் கான்

இந்த பிரேஸ்லெட்டை சல்மானின் மேனேஜரான ரேஷ்மா ஷெட்டியின் நகை வியாபாரி நண்பர் ஸ்பெஷலாக வடிவமைத்தாராம்.

முன்னதாக சல்மான் கத்ரீனா கைஃப் தனது காதலியாக இருந்தபோது அவரின் பிறந்தநாள் அன்று எஸ்யுவி காரை பரிசாக அளித்தார். ஆனால் அவர்கள் பிரிந்த பிறகு கத்ரீனா அந்த காரை விற்றுவிட்டார்.

தற்போது கத்ரீனா கைஃப் ரன்பீர் கபூரை காதலிப்பதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது.

 

சாமுராய் நாயகி அனிதாவுக்கு திருமணம்... வங்கி அதிகாரியை மணந்தார்!

தமிழில் சாமுராய் படத்தில் விக்ரம் ஜோடியாக அறிமுகமான நடிகை அனிதா, வங்கி அதிகாரியை காதலித்து மணந்தார்.

2002-ல் பாலாஜி சக்திவேல் இயக்கிய முதல் படமான ‘சாமுராய்' படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்தவர் அனிதா.

தொடர்ந்து ‘வருஷமெல்லாம் வசந்தம்', ‘சுக்ரன்' ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார்.

சாமுராய் நாயகி அனிதாவுக்கு திருமணம்... வங்கி அதிகாரியை மணந்தார்!

பின்னர் ஜேகே ரித்திஷ் நடித்த ‘நாயகன்' படத்திலும், மகராஜா என்ற படத்திலும் நடித்தார். பின்னர் சினிமாவை விட்டு விலகி இந்தி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

கோவாவைச் சேர்ந்த வங்கி அதிகாரி ரோஹித் ரெட்டியை தீவிரமாகக் காதலித்து வந்தார் அனிதா. இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததால், சில தினங்களுக்கு முன் கோவாவில் சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இந்தத் திருமணம் நான்கு தினங்கள் வட இந்திய வழக்கப்படி நடந்தது.

 

ரஜினியுடன் தனித் தீவில்... !- இது மல்லிகா ஷெராவத்தின் ஆசை

இப்போதெல்லாம் பாலிவுட்டில் புதிய ட்ரெண்ட்.. தங்கள் படங்கள் அல்லது ஆல்பங்களைப் பிரபலப்படுத்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரைப் பயன்படுத்துவது.

ஷாரூக்கான், ஹிருத்திக் ரோஷன், அமீர் கான், சல்மான் கான் என ஒருவரும் இதற்கு விலக்கல்ல. ரஜினி மீதான இவர்களின் காதல், அவர்களின் படங்கள் வெளியாகும்போது மட்டும்தான் என்பது அத்தனைப் பேருக்கும் புரிந்த ரகசியம்.

இப்போது இந்தப் பட்டியலில் மல்லிகா ஷெராவத்தும் சேர்ந்திருக்கிறார்.

ரஜினியுடன் தனித் தீவில்... !- இது மல்லிகா ஷெராவத்தின் ஆசை

இவரது ரியாலிட்டி ஷோவான தி பேச்சலரேட் இந்தியா - மேரே கயலோன் கி மல்லிகா இப்போது ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளது.

இதற்கான விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த மல்லிகா ஷெராவத், "சூப்பர் ஸ்டார் ரஜினியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எந்த அளவுக்கென்றால்... நானும் அவரும் மட்டும் ஒரு தனித் தீவில் இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் எனக்கு கொஞ்சம்கூட போரடிக்காது. ரஜினி என்னை அந்த அளவு மகிழ்விப்பார். அந்தத் தீவில் எப்போது எங்கே போக வேண்டுமென்றாலும் ரஜினி என்னை அழைத்துச் செல்வார்... அப்படி ஒரு அனுபவம் எனக்கு வேண்டும்," என்று கூறியுள்ளார்.

அமிதாப் பச்சனை தான் மிகவும் விரும்புவதாகவும் அவர் தன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

அபார்ட்மென்ட்டில் மோதல்: கமிஷனர் அலுவலகத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், ரமேஷ்கண்ணா குடும்பத்தினர் புகார்

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாப்பு கோரி இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ரமேஷ்கண்ணா, பேரரசு ஆகியோரின் குடும்பத்தினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

சென்னை விரும்பாக்கம் போலீஸ் நிலையம் அருகில் சியாமளா கார்டன் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு சினிமா இயக்குநர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சுமார் 350 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

கடந்த செப்டம்பர் மாதம் 24-ந்தேதி நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்பில் 4 கார்களில் வந்த கும்பல் அங்கிருந்த காவலாளியை தாக்கிவிட்டு வன்முறையில் ஈடுபட்டது. அது தொடர்பாக குடியிருப்பு வாசிகள் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.

அபார்ட்மென்ட்டில் மோதல்: கமிஷனர் அலுவலகத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், ரமேஷ்கண்ணா குடும்பத்தினர் புகார்

அதில் எங்களது குடியிருப்பில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனம் சரியாக செயல்படாததால் அவர்களை மாற்றிவிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைத்தோம். இதனால் ஆத்திரம் அடைந்த பழைய பாதுகாப்பு நிறுவனத்தின் உரிமையாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரையும் அவரது மகனையும் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இயக்குனர்கள் ஏ.ஆர். முருகதாசின் மனைவி ரம்யா, ரமேஷ் கண்ணாவின் மனைவி ஷோபா, பேரரசுவின் மனைவி கிருஷ்ணவேணி மற்றும் அந்த குடியிருப்பில் வசித்து வரும் பா.ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் டால்பின் ஸ்ரீதர் உள்ளிட்ட 50 பேர் இன்று மதியம் வேப்பேரியில் உள்ள புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திரண்டனர். தங்களுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் எனவே உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அவர்கள் புகார் மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கடந்த மாதம் 24-ந்தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக எங்களது குடியிருப்பில் வசிக்கும் மாறன் என்பவரது வீட்டுக்கு சிலர் சமாதானம் பேச சென்றுள்ளனர். அப்போது சமாதானமாக செல்லலாம் என்று கூறி இருக்கிறார்கள்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற அவர்கள் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் குடியிருப்பு வாசிகள் தாக்கிவிட்டதாக பொய் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

என்ன நடந்தது என்பதை விசாரிக்காமலேயே போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். மேலும் எங்கள் குடியிருப்பு முன்பு வந்து சிலர் கோஷம் எழுப்பி சென்றுள்ளனர். எனவே எந்த நேரத்தில் எது நடக்குமோ என்று எங்களுக்கு பயமாக உள்ளது.

மேலும் எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் வசித்து வருகிறார்கள். அப்படி இருந்தும் அங்கு தகுந்த பாதுகாப்பு இல்லை. எனவே குடியிருப்புக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பதுடன் நிர்வாகிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கையும் போலீசார் ரத்து செய்ய வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

எனக்கு சம்பளம் முக்கியமே இல்லை, கதை தான் முக்கியம்: சிவகார்த்திகேயன்

சென்னை: தனக்கு சம்பளம் முக்கியம் இல்லை என்றும் கதை தான் முக்கியம் என்றும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு வந்து வெற்றி நாயகனாக இருப்பவர் சிவகார்த்திகேயன். அவரது படங்கள் ஓடிவிட்டதால் அவர் தனது சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்திவிட்டதாக பல நாட்களாக கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.

எனக்கு சம்பளம் முக்கியமே இல்லை, கதை தான் முக்கியம்: சிவகார்த்திகேயன்

ஆனால் அவரோ இதை மறுத்து வருகிறார். இந்நிலையில் பெரிய நிறுவனம் ஒன்று அவரிடம் தங்கள் படத்தில் நடிக்க கேட்டதாகவும் அவர் சம்பள விஷயத்தில் கறாராக இருந்து வாய்ப்பை ஏற்க மறுத்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில்,

குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து யாருமே என்னை அணுகவில்லை. அதற்குள் தவறான தகவல் பரப்பியுள்ளனர். சம்பளத்திற்காக நல்ல வாய்ப்புகளை இழக்க நான் தயாராக இல்லை. எனக்கு சம்பளம் முக்கியம் கிடையாது. கதை தான் மிகவும் முக்கியும் என்றார்.

 

லஞ்சத்தை எதிர்க்கும் படத்துக்கே லஞ்சம் கேட்கும் தமிழக அமைச்சர்! - இயக்குநர் கிளப்பும் பரபரப்பு

லஞ்சத்தை எதிர்க்கும் படத்துக்கே லஞ்சம் கேட்கும் தமிழக அமைச்சர்! - இயக்குநர் கிளப்பும் பரபரப்பு

சென்னை: லஞ்ச ஊழலை அம்பலப்படுத்தும் வகையிலும், தகவலறியும் உரிமைச் சட்டத்தை பிரபலப்படுத்தும் நோக்கிலும் எடுக்கப்பட்ட அங்குசம் என்ற படத்துக்கு வரி விலக்கு தர தமிழக அரசு லஞ்சம் கேட்பதாக புதிய இயக்குநர் ஒருவர் பரபரப்பாக குற்றம் சாட்டியுள்ளார்.

வேலூரைச் சேர்ந்த மனுக்கண்ணன் இயக்கும் முதல் படம் அங்குசம். இவர் திருச்சி அருகே நடந்த ஒரு நிஜக் கதையை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் தகவலறியும் உரிமைச் சட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளாராம்.

அங்குசம் படம் தணிக்கை செய்யப்பட்டு யு சான்றிதழ் பெற்றது. இந்தப் படத்துக்கு வரிவிலக்கு கேட்டு தமிழக வணிக வரித்துறை அமைச்சர் ரமணாவை அணுகியபோது, அவரது அதிகாரப்பூர்வ பிஏ சரத்பாபு என்பவர் ரூ 5 லட்சம் லஞ்சம் கேட்டதாகப் புகார் கூறியுள்ளார்.

மேலும் பெரிய படத்துக்கு ரூ 50 லட்சமும், சின்னப் படமென்றால் ரூ 5 லட்சமும் கட்டாயமாகக் கொடுத்தால்தான் வரிவிலக்குக் கிடைக்கும் என சரத்பாபு கறாராகக் கூறியதாக நக்கீரன் புலனாய்வு இதழில் விரிவாக பேட்டியளித்துள்ளார் மனுக்கண்ணன்.

மேலும் இப்படி வாங்கும் பணத்தில் ஒரு பங்கு முதல்வருக்கும் தரப்படுவதாக அந்தப் பிஏ குறிப்பிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அமைச்சரின் பெயர், பிஏவின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டு, இருவரும் வரிவிலக்கு தர லஞ்சம் கேட்டதாக அனைத்து பத்திரிகைகளுக்கும் தன் பேட்டியையே செய்தியாகவும் அனுப்பி வருகிறார்.

 

உதயநிதியின் 'இது கதிர்வேலன் காதல்'- கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்

கிறிஸ்துமஸ் தின ஸ்பெஷலாக வருகிறது உதயநிதி - நயன்தாரா - சந்தானத்தின் காதல் காமெடிப் படமான இது கதிர்வேலன் காதல்!

'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற ஒரே படத்தில் பிரபல ஹீரோவாகிவிட்ட உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள அடுத்த படம் ‘இது கதிர்வேலன் காதல்‘.

உதயநிதியின் 'இது கதிர்வேலன் காதல்'- கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்

இப்படத்தை உதயநிதியின் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்' தயாரிக்கிறது. சுந்தரபாண்டியன் என்ற சூப்பர் ஹிட் படம் தந்த எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

‘ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தைப் போலவே இப்படத்திலும் உதயநிதிக்கு சமமான கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டன.

உதயநிதியின் 'இது கதிர்வேலன் காதல்'- கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்

படத்தை வருகிற டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட உதயநிதி திட்டமிட்டுள்ளார்.

 

'ஜில்லா'வுக்காக ஸ்ரேயா கோஷலுடன் டூயட் பாட்டு பாடிய விஜய்

'ஜில்லா'வுக்காக ஸ்ரேயா கோஷலுடன் டூயட் பாட்டு பாடிய விஜய்  

சென்னை: ஜில்லா படத்திற்காக இளைய தளபதி விஜய், பிரபல பாடகி ஸ்ரேயோ கோஷலுடன் சேர்ந்து பாடியுள்ளார்.

பல படங்களில் பாடிய விஜய் வெகுகாலம் கழித்து துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பாடலை பாடினார். இதையடுத்து தலைவா படத்தில் அவர் பாடிய வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடல் ஹிட்டானது.

இந்நிலையில் அவர் நடித்து வரும் ஜில்லா படத்தில் ஒரு பாட்டாவது பாடுவாரா என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

இது குறித்து ஜில்லா படத்தின் இசையமைப்பாளர் டி. இமான் இன்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஜில்லா. இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு. விஜய், ஸ்ரேயா கோஷலுடன் பாடிய மெலடி பாடலை பதிவு செய்தேன். பாடல் வரிகளை வைரமுத்து சார் எழுதியிருக்கிறார். இறைவனுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

 

லண்டன் திரைப்பட விழா: பாலாவின் பரதேசிக்கு இரு விருதுகள்

சென்னை: பாலா இயக்கிய பரதேசி படத்துக்கு இரு சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து பாலா தயாரித்து இயக்கிய படம் பரதேசி. அதர்வா, வேதிகா, தன்ஷிகா நடித்திருந்தனர்.

லண்டன் திரைப்பட விழா: பாலாவின் பரதேசிக்கு இரு விருதுகள்

இந்தப் படத்தை லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் 9 பிரிவுகளில் விருதுக்காக பரிந்துரைத்தனர்.

அவற்றில் இரு பிரிவுகளில் இப்போது விருது கிடைத்துள்ளது.

சிறந்த ஒளிப்பதிவாளர் பிரிவில் செழியனுக்கும், சிறந்த உடை வடிவமைப்பாளர் பிரிவில் பூர்ணிமா ராமசாமிக்கும் விருதுகள் கிடைத்தன.

லண்டன் திரைப்பட விழா: பாலாவின் பரதேசிக்கு இரு விருதுகள்

(பரதேசி படங்கள்)

இந்தத் தகவலை லண்டன் திரைப்பட விழாவின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட படம் பரதேசி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டன் திரைப்பட விழா: பாலாவின் பரதேசிக்கு இரு விருதுகள்

ஏற்கெனவே இந்தப் படம் ஒரு தேசிய விருதை வென்றது. அதுவும் உடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமிக்குதான் கிடைத்தது.

Bala's Paradesi won 2 awards in London International Film Festival.

 

தெலுங்கு சினிமா ஜாம்பவான் நாகேஸ்வரராவுக்கு புற்று நோய்!

ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவின் ஜாம்பவானாகப் போற்றப்படும் ஏ நாகேஸ்வரராவ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அவரே சனிக்கிழமை வெளியிட்டார்.

அக்கினேனி நாகேஸ்வரராவ் தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர். நடிகர் நாகார்ஜூனாவின் தந்தை இவர். சமீபத்தில்தான் தனது 90-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த அவர், மருத்துவமனையில் சோதனைக்காக சென்றபோதுதான் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தெலுங்கு சினிமா ஜாம்பவான் நாகேஸ்வரராவுக்கு புற்று நோய்!

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அவசரமாக செய்தியாளர்களை சந்தித்த நாகேஸ்வரராவ், தனக்கு புற்றுநோய் இருக்கும் தகவலை தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "நான் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதற்காக நான் வருந்தவில்லை. இப்போது நான் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்ந்து வருகிறேன். எனவே இந்த புற்று நோய் எனக்கு எந்த தீங்கையும் செய்யாது.

ரசிகர்கள் மற்றும் எனது நலம் விரும்பிகளாகிய உங்கள் ஆசீர்வாதத்தால், நான் நூறு வயதையும் கடந்து வாழ்வேன். நான் டாக்டரின் தீவிர கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலில் சிகிச்சை பெற்று வருகிறேன். ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் யாரும் என்னை சந்திக்கவோ, தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவோ வேண்டாம்," என்றார்.

தெலுங்கு சினிமா ஜாம்பவான் நாகேஸ்வரராவுக்கு புற்று நோய்!

71 ஆண்டுகள்

நாகேஸ்வர ராவ் முதல் முதலாக நடித்த படம் தர்மபத்தினி. அதைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்தார். 71 ஆண்டுகளாக நடிகராக, தயாரிப்பாளராக இருந்து வருகிறார்.

‘இட்டாரு மித்ருடு' என்ற படத்தில் நாட்டிலேயே முதன் முதலாக இரட்டை வேடங்களில் நடித்தவர் இவர். தமிழில் சிவாஜி நடித்த நவராத்ரி படத்தை, தெலுங்கில் ‘நவராரி' என்ற பெயரில் எடுத்தபோது அதில் 9 வேடங்களில் நடித்து அசத்தினார்.

நாகேஸ்வரராவ் தனது மகன் நாகார்ஜூனா, பேரன் நாக சைதன்யா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள ‘மனம்' என்ற திரைப்படம் விரைவில் வெளியாகிறது.

இந்தியாவில் திரைப்படத்துறையில் சாதனை படைப்பவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே' விருது பெற்றுள்ள நாகேஸ்வர ராவ், தனது சிறந்த நடிப்புக்காக ‘பத்ம விபூஷண்' உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

மேலும் தேசிய அளவில் திரைப்படத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு கடந்த 2005-ம் ஆண்டு முதல் இவரது பெயரில் ‘ஏ.என்.ஆர். தேசிய விருது' வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

ரஜினிதான் நிஜ சூப்பர் ஸ்டார்.. ஷாரூக்கானுக்கும் அவர் ஆதரவு தேவைப்படுகிறது! - பரேஷ் ராவல்

ரஜினிதான் நிஜ சூப்பர் ஸ்டார்.. ஷாரூக்கானுக்கும் அவர் ஆதரவு தேவைப்படுகிறது! - பரேஷ் ராவல்

சென்னை: இந்தியாவின் நிஜமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். ஷாரூக்கான் படம் வெற்றி பெறவும் அவர் ஆதரவு தேவைப்படுகிறது, என்றார் பிரபல இந்தி நடிகரும் தயாரிப்பாளருமான பரேஷ் ராவல்.

சென்னையில் தனது நாடகம் ஒன்றை நடத்த வந்திருந்த பரேஷ் ராவல் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மற்ற மொழிகளை விட தமிழ் சினிமா பல விஷயங்களில் முன்னோடியாக உள்ளது. இங்கிருப்பவர்கள் பரீட்சார்த்த முயற்சிகளுக்குத் தயங்குவதில்லை.

சிவாஜிகணேசன், கமல் ஹாஸன் போன்றோர் எவ்வளவோ செய்திருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை இந்திய சினிமாவின் நிஜ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். இந்திய சினிமா வர்த்தகத்தை உலகளவில் உயர்த்தியவர் ரஜினிதான்.

ஹாலிவுட்டை மிஞ்சும் வகையில் எடுக்கப்பட்ட எந்திரனின் ஹீரோ அவர். பல வகையிலும் சினிமாவில் முன்னுதசாரணமாகத் திகழ்கிறார். இந்திய சினிமாவின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக கோச்சடையானை எடுப்பதும் அவர்தான்.

பாலிவுட்டில் எத்தனை பெரிய ஹீரோவாக இருந்தாலும், தன் படங்களை வெற்றி பெற வைக்க ஷாரூக்கானுக்கே கூட ரஜினியின் ஆதரவுதான் தேவைப்படுகிறது. இது ஒன்றே சொல்லும், ரஜினி எப்படிப்பட்ட செல்வாக்கு மிக்கவர் என்று," என்றார்.

 

ஏழை லைட்மேனின் மகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொண்ட ஷாருக்கான்

மும்பை: ஏழ்மை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திய லைட்மேனின் 5 வயது மகளின் கல்விச் செலவை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஏற்றுள்ளார்.

லைட்மேனாக உள்ளவர் முகமது அஜாஸ் ஷேக்(38). கடந்த 12 ஆண்டுகளாக அவர் லைட்மேனாக உள்ளார். அவரது மனைவி ஜரினா. அவர் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அதற்கான பரிசு வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை மும்பையில் நடந்தது. விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்து கொண்டு ஜரினாவுக்கு பரிசை வழங்கினார்.

அப்போது ஜரினா தனது குடும்பத்தின் ஏழ்மை நிலையை தெரிவித்தார். நிகழ்ச்சி முடிந்த பிறகு மேடைக்கு பின்னால் வந்து தன்னை சந்திக்குமாறு ஷாருக்கான் ஜரினாவிடம் ஆள் அனுப்பி தகவல் தெரிவித்தார்.

ஏழை லைட்மேனின் மகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொண்ட ஷாருக்கான்

அதே போன்று ஜரினா ஷாருக்கானை சந்தித்து தங்கள் குடும்பத்தின் ஏழ்மை நிலையால் தங்களின் 5 வயது மகள் நிஷாவின் பள்ளிப் படிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுத்த வேண்டியதாகிவிட்டது என்று கூறினார். இதை கேட்ட ஷாருக் சிறுமியை பள்ளிக்கு அனுப்பி வையுங்கள். அவளின் கல்விச் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இது குறித்து முகமது கூறுகையில்,

நான் இந்த ஆண்டின் துவக்கம் வரை பாலாஜி டெலிபிலிம்ஸுக்கு அவ்வப்போது லைட்மேனாக இருந்து வந்தேன். அதன் பிறகு பணக் கஷ்டம் அதிகரித்துவிட்டது. அதனால் பல வேலைகளை செய்ய வேண்டியதாகிவிட்டது. ஏழ்மையின் காரணமாக எனது மகளின் படிப்பை நிறுத்திவிட்டேன். ஆனால் தற்போது ஷாருக்கானால் என் மகள் நிஷா விரைவில் மீண்டும் பள்ளிக்கு செல்லவிருக்கிறாள். ஷாருக்கானுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

 

நடிப்புக்கு குட்பை... அமெரிக்காவில் படிக்கப் போறேன்! - ரிச்சா கங்கோபாத்யாய்

தமிழில் திடீர் கவர்ச்சிப் புயலாய் வந்து கிறங்கடித்து, அதே வேகத்தில் காணாமல் போன நடிப்புக்கு குட்பை... அமெரிக்காவில் படிக்கப் போறேன்! - ரிச்சா கங்கோபாத்யாய்

ஆனால் அத்தனையையும் கெடுத்தது ஒஸ்தி படமும், ரிச்சாவைச் சுற்றியிருந்த நண்பர்களும்தான்.

இந்த இரு படங்களுக்குப் பிறகு அவர் வேறு தமிழ்ப் படங்களில் நடிக்கவே இல்லை. தெலுங்கில் மூன்றும், வங்காள மொழியில் ஒரு படமும் நடித்தார்.

தெலுங்கில் அவர் இப்போது பாய் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில், இனி கொஞ்ச நாளைக்கு நடிப்பு வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ள ரிச்சா, "நடிப்புக்காக படிப்பை விட முடியாது. எனவே அமெரிக்காவில் ஏற்கெனவே படித்துக் கொண்டிருந்த கல்லூரிப் படிப்பை தொடரப் போகிறேன். இது நிரந்தர குட்பை என்று சொல்ல முடியாது. படிப்பு முடிந்த பிறகு பார்க்கலாம்," என்று தெரிவித்துள்ளார்.

ரிச்சாவுக்கு இப்போது 27 வயதாகிறது. பிறந்தது டெல்லியில் என்றாலும், தனது ஆரம்ப காலத்தில் கொஞ்ச நாள் கோவையில் வசித்தார் ரிச்சா. அதன் பின்னர் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டனர். இப்போது பெற்றோர் வழியில் அமெரிக்காவிலேயே செட்டிலாகப் போகிறார் ரிச்சா.

 

ஆல் இன் ஆல் அழகுராஜாவில் சர்ச்சைக்குரிய சந்தானம் காட்சி நீக்கம்!

சென்னை: ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் புகையிலை விளம்பரத்தைக் கிண்டலடிக்கும் சந்தானம் தொடர்பான காட்சியை நீக்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்.

கார்த்தி - காஜல் நடிக்க, ராஜேஷ் இயக்கியுள்ள படம் ஆல் இன் ஆல் அழகுராஜா. இந்தப் படத்தில் சந்தானம் ஒரு காட்சியில், புகையிலை மற்றும் குட்கா எதிர்ப்பு விளம்பரத்தை கிண்டலடிப்பது போல காட்சி உள்ளது. இது ட்ரைலரில் இடம் பெற்றதால் கடும் எதிர்ப்புக்குள்ளானது.

தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டு மக்கள் மன்றம் இதுகுறித்து தமிழக அரசிடம் புகார் தெரிவித்தது. குட்கா சாப்பிட்டு புற்றுநோயால் இறந்த முகேஷ் என்ற மனிதன் தன் குரலால் நாட்டு மக்களை எச்சரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த விளம்பரத்தைக் கிண்டலடிப்பதா என கண்டனம் தெரிவித்திருந்தது அந்த அமைப்பு.

ஆல் இன் ஆல் அழகுராஜாவில் சர்ச்சைக்குரிய சந்தானம் காட்சி நீக்கம்!

சர்ச்சைக்குரிய அந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டு மக்கள் மன்றம்.

இந்த நிலையில் அந்தக் காட்சியே புகையிலைக்கு எதிரான பிரச்சாரம் என்று விளக்கமளித்திருந்தார் இயக்குநர் ராஜேஷ். ஆனால் எதிர்ப்பு தொடர்ந்ததால் இப்போது அந்தக் காட்சியை நீக்குமாறு சென்சார் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளார் ராஜேஷ்.