5 மீனவர்களுக்கு தூக்கு... இலங்கைக்கு கமல் ஹாஸன் கடும் கண்டனம்

தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை அரசு தூக்கு தண்டனை விதித்திருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகர் கமல் ஹாஸன்.

2011-ம் ஆண்டு கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் சிலரை சிங்கள கடற்படை கைது செய்தது. இவர்களில் 5 பேருக்கு கொழும்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அவர்கள் மீது பொய்யான வழக்குகளைச் சுமத்தில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

5 மீனவர்களுக்கு தூக்கு... இலங்கைக்கு கமல் ஹாஸன் கடும் கண்டனம்

இந்த தூக்கு குறித்து நடிகர் கமல்ஹாஸனிடம் தொலைக்காட்சி நிருபர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கமல் ஹாஸன் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டார். இதைவிடக் கேவலம், மனித உரிமை மீறல் எதுவும் இருக்காது என்ற கமல்ஹாஸன், இலங்கையின் இந்த நடவடிக்கை மனிதாபிமானத்துக்கும் மனித குலத்துக்கும் விடுக்கப்பட்ட சவால் என்றார்.

இந்திய அரசு உடனடியாக இதனைத் தடுத்து நிறுத்தி 5 உயிர்களையும் காக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்தார். இல்லையென்றால், இங்கு அரசு என்ற ஒன்று இருப்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்றார் கமல்.

 

இன்று மாலை லிங்கா டீசர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் லிங்கா படத்தின் முதல் டீசர் எனப்படும் முன்னோட்ட வீடியோ இன்று மாலை வெளியாகிறது.

இதனை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இன்று மாலை லிங்கா டீசர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்க, அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் நடித்துள்ள படம் லிங்கா. கே எஸ் ரவிக்குமார் இயக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை எகிற வைத்துள்ளன. படு இளமைத் துள்ளலுடன் ஸ்டைலாக இந்த போஸ்டர்களில் காட்சி தருகிறார் ரஜினி.

மூன்று முகத்தில் வந்த அலெக்ஸ் பாண்டியன் மாதிரியே இருக்கிறாரே என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் இந்த போஸ்டரை.

இந்த நிலையில் படத்தின் முதல் டீசர் இன்று மாலை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சிவகார்த்திகேயனுக்காக பட தலைப்பை விட்டுக் கொடுத்த கமல்ஹாசன்

சென்னை: சிவகார்த்திகேயனுக்காக தனது படத்தின் தலைப்பை விட்டுகொடுத்துள்ளார் கமல் ஹாசன்.

சத்யா மூவீஸ் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்து ஹிட்டான படம் காக்கிச்சட்டை. இதில் கமல்ஹாசன் போலீஸ் வேடத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ஒரு படத்திற்கு இந்த தலைப்பு வைத்தால் நல்லா இருக்கும் என படக்குழுவினர் எண்ணினர். இதுகுறித்து சத்யா மூவீசை அணுகி கேட்டபோது அவர்கள் அதற்கு ஒப்புக் கொண்டனர்.

சிவகார்த்திகேயனுக்காக பட தலைப்பை விட்டுக் கொடுத்த கமல்ஹாசன்

இதேபோல கமல்ஹாசனிடம் காக்கிச்சட்டை படத் தலைப்பை எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டபோது அவரும் பெருந்தன்மையாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.

இதை சிவகார்த்திகேயனும் உறுதி செய்துள்ளார். "காக்கி சட்டைதான் எனது அடுத்த படத்தின் பெயர். இதற்காக கமல்சார் மற்றும் சத்யா மூவீசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முதல் லுக் மற்றும் ஆடியோ நவம்பரில் ரிலீசாகும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக சிவகார்த்திகேயன் படத்துக்கு தானா என்று பெயரிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

அஜீத் படத்தில் நான் இல்லை! - ஹன்சிகா

அஜீத்தை வைத்து சிவா இயக்கும் புதிய படத்தில் தான் நாயகியாக நடிப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை என்று அஜீத் படத்தில் நான் இல்லை! - ஹன்சிகா  

ஆனால் இதனை மறுத்துள்ளார் ஹன்சிகா.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "அஜீத்துடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் சிவா இயக்கும் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்குமாறு யாரும் என்னைக் கேட்கவில்லை. சமூக வலைத்தளங்களில்தான் இப்படியெல்லாம் எழுதிக் கொண்டுள்ளனர்," என்றார்.

ஹன்சிகா இப்போதைக்கு விஜய்க்கு ஜோடியாக சிம்புதேவன் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜூலியட், ஆர்யாவுடன் மீகாமன், விஷாலுடன் ஆம்பள போன்ற படங்களில் படுபிஸியாக நடித்து வருகிறார்.

 

கோவா சர்வதேச பட விழாவில் 12 சீனப் படங்கள்!

பனாஜி: கோவா தலைநகர் பனாஜியில் நடக்கும் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 12 சீனத் திரைப்படங்கள் பங்கேற்கின்றன.

பனாஜியில் வரும் நவம்பர் 20 முதல் 30-ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகின்றது.

கோவா சர்வதேச பட விழாவில் 12 சீனப் படங்கள்!

இந்த விழாவில் இந்திய மொழியின் சிறந்த படங்களுடன் சர்வதேச அளவில் வெற்றிகரமாக ஓடிய மற்றும் வெகுவாக விமர்சிக்கப்பட்ட விருதுப் படங்களும் திரையிடப்படுகின்றன.

இந்தியாவில் நடைபெறும் சர்வதேசப் பட விழாக்களில் ஜப்பானிய மொழி திரைப்படங்கள் அதிகம் இடம்பெறுவது வழக்கம்.

சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்றுவந்த பிறகு, இந்தியாவும் சீனாவும் கூட்டாக திரைப்படங்கள் தயாரிப்பது உள்பட பல்வேறு கலை மற்றும் கலாச்சாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

அதன் விளைவாக கோவாவில் இவ்வாண்டு நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் சீனாவின் சார்பில் 12 திரைப்படங்கள் இடம் பெறுகின்றன.

 

கத்தி கதைத் திருட்டு... ஏஆர் முருகதாஸுக்கு எதிராக கோலிவுட்டில் ஓங்கிக் கிளம்பும் குரல்!

"கத்தி படத்தின் கதை, அதில் வரும் காட்சிகள், சண்டைக் காட்சி, பாடல் மற்றும் பின்னணி இசை போன்றவை ஒரிஜினல் கிடையாது. பல படங்களிலிருந்து காப்பியடிக்கப்பட்டவை" என்று சமூக வலைத் தளங்கள் மற்றும் இணைய தளங்களில் ஏகப்பட்ட ஆதாரங்களுடன் செய்திகள் பரவி வருகின்றன.

'நான் எவனுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை' என வீடியோ பேட்டியொன்றில் கூறிய இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இப்போது பதில் சொல்லும் கட்டாயத்துக்கு வந்திருக்கிறார். காரணம், அணி வகுக்கின்றன அவருக்கு எதிரான ஆதாரங்கள்.

கத்தி கதைத் திருட்டு... ஏஆர் முருகதாஸுக்கு எதிராக கோலிவுட்டில் ஓங்கிக் கிளம்பும் குரல்!

இந்தப் படத்தின் கதை மீஞ்சூர் கோபி என்ற எழுத்தாளர் மற்றும் இயக்குநருக்குச் சொந்தமானதுதான் என்பதற்கு, சினிமா பிரபலம் ஒருவரே சாட்சியாக நிற்கிறார். அவர் புகைப்படம், மாத்தியோசி, கருப்பர் நகரம் போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்.

கத்தி கதைத் திருட்டு குறித்து விஜய் ஆம்ஸ்ட்ராங் தன் வலையில் எழுதியுள்ள கட்டுரை:

கத்தி கதைத் திருட்டு... ஏஆர் முருகதாஸுக்கு எதிராக கோலிவுட்டில் ஓங்கிக் கிளம்பும் குரல்!

கத்தி' திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்' என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்' என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.

பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்தில் அப்படியான இழப்பீடோ, அங்கீகாரமோ புகார் தெரிவித்தவருக்கு தரப்பட்டதில்லை என்பதுதான் உண்மை. ஆக, தொடர்ந்து இப்படியான புகார்கள் தெரிவிப்பவர்கள் பலனுக்காத்தான் இதை செய்கிறார்கள் என்றவாதம் அடிபட்டுப்போகிறது. எனில் தொடர்ந்து இப்படியான புகார்கள் ஏன் வந்துகொண்டே இருக்கிறது? என்று கேட்டால் என்னிடம் பதிலில்லை. ஆனால் புகார்களில் உண்மையும் கூட இருக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இதுவும் ஒருபுறமிருக்கட்டும்.

தற்போது, கத்தி சிக்கலில், புகார்தாரரான இயக்குனர் கோபியை, நான் நன்கு அறிவேன். காரணம் நான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய 'கருப்பர் நகரம்' திரைப்படத்தின் இயக்குனர் அவர். அப்படத்தையும், மெட்ராஸ் படத்தையும் இணைத்து கடந்தமாதம் இதே இணையத்தில் பல விவாதங்கள் நடந்தது நினைவிருக்கலாம். அதன் உண்மை நிலை என்ன என்பதைப்பற்றி பல நண்பர்கள் கேட்டார்கள், பொதுவெளியில் இல்லாமல், தனிப்பட்ட உரையாடலில் என் கருத்தை பகிர்ந்துக்கொண்டேன். பொதுவெளியில் இல்லாமல், தனிப்பட்ட முறையில் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு காரணம், அப்படத்தைப்பற்றி கோபி அவர்களே பொதுவெளியில் கருத்து சொல்லவில்லை என்பதும், மேலும் அதில் அத்தகைய அவசியம் ஏற்படவில்லை என்பதும்தான். நமக்குத் தெரிந்ததை எல்லாம் பொதுவெளியில் சொல்லியே ஆக வேண்டுமா என்ன? ஆனால் இப்போது கத்தி கதையில், எனக்குத் தெரிந்த சில உண்மைகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

அந்த வீடியோவில் இயக்குனர் கோபி சொல்லும் செய்திகள் பெரும்பாலானவை நான் முன்பே அறிந்ததுதான். இவற்றைப்பற்றிய தகவல்களை கருப்பர் நகரம் திரைப்பட வேலைகள் நடந்துகொண்டிருக்கும் போது அவர் என்னிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அதில் அவருக்கு எந்த உள்நோக்கமும் இருந்திருக்கவில்லை, வெறும் தகவல்களாக மட்டுமே அவை பகிர்ந்துக்கொள்ளப்பட்டது. காரணம், அப்போது அவர் ஒருபடத்தை இயக்கிக்கொண்டிருந்த இயக்குனர். அதைத்தவிர்த்து வேறதுவும் முக்கியமானதில்லை. அப்போது ஏழாம் அறிவு பட வேலைகள் நிகழ்ந்து கொண்டிருந்ததாக நினைவு. (அதன் தலைப்பு பற்றியும் அப்போது என்னிடம் குறிப்பிட்டார் கோபி. "ஏழாம் அறிவு என்பது போரை குறிக்கிறது" என்றார்) தான் இயக்குனர் முருகதாஸ் அவர்களிடம் ஒரு கதை சொல்லியிருப்பதாகவும், பின்பு அது தள்ளிபோய் விட்டதாகவும் சொன்னார். திரைத்திறையில் இது மிகவும் சகஜம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தான் தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தரை சந்தித்தது, அதன் தொடர்ச்சியாக முருகதாஸை சந்தித்தது பற்றி ஓய்வு நேர உரையாடல்களில் அவர் பகிர்ந்துக்கொண்டார். மேலும் அது விவசாயிகளின் பிரச்சனைப்பற்றியது என்பதும் நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களிடம் பறிகொடுப்பதைப் பற்றியது என்பதைக்கூட சொன்னார். மேலும் சில தகவல்களை அவர் அப்போது பகிர்ந்துக்கொண்ட போதும், அவை எனக்கு இப்போது நினைவிலில்லை. பின்பு அவற்றைப்பற்றி நான் மறந்து கூட போனேன். காரணம், கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு கோபிக்கும் தொடர்பில்லை என்பதுதான். சில காரணங்களால் கருப்பர் நகரம் படம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. நான் மற்ற படங்கள் செய்ய வந்துவிட்டேன். இப்போது, கோபியின் பேட்டியை பார்த்தபோதுதான், இவற்றைப்பற்றி அவர் அன்றே பகிர்ந்துகொண்டது நினைவிற்கு வருகிறது.

கத்தி கதைத் திருட்டு... ஏஆர் முருகதாஸுக்கு எதிராக கோலிவுட்டில் ஓங்கிக் கிளம்பும் குரல்!

அப்பேட்டியில் கோபி பொய் பேசவில்லை என்பது என் எண்ணம். காரணம், அவர் சொல்லும் பல விஷயங்கள் எனக்கு முன்பே சொல்லப்பட்டவை. கத்தி படமொன்று உருவாகும், அதில் விஜய் நடிப்பார் போன்ற தகவல்கள் தெரிவதற்கு முன்பே சொல்லப்பட்டவை. அப்போது அந்த தகவலுக்கு எந்த மதிப்புமில்லை. வெறும் தகவல்களாக, பொழுதைக்கடத்தும் வேளைகளில் சொல்லப்பட்டவை அவ்வளவுதான். அக்கதை படமாகும் என்ற நம்பிக்கை கூட கோபியிடமில்லை அப்போது. இப்படியான பல நிகழ்வுகள் திரைத்துறையில் உண்டு.. ஒரு கதையை சொல்லி, அது தேர்வு செய்யப்பட்டு, படமாக்கும் முயற்சிகள் நடந்து, பின்பு அது அப்படியே கிடப்பில் போடப்படுவது திரைத்துறையின் மிகச்சாதாரண நிகழ்வுகளில் ஒன்றுதான்.

மேலும், கத்தி திரைப்படம் பேசும் உட்பொருளை கோபி உருவாக்கியிருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காரணம், கோபி ஒரு சிறந்த படிப்பாளி, சமூக ஆர்வலர், மக்களின் நலன் பேணும் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர். பொதுவுடமை பேசும் தோழர், நல்ல படைப்புகளை உருவாக்கும் பேரவா கொண்டவர், மாற்று சினிமா மீதான ஆர்வம் கொண்டவர். குறிப்பாக கடைநிலை மனிதர்களின் வாழ்வும், நிலையும் படைப்புகளாக மாற்றப்பட வேண்டுமென்ற விருப்பம் கொண்டவர், சமநிலை சமூகமொன்று உருவாகவும் அதற்கு கலை உதவ வேண்டுமென்ற எண்ணமும் கொண்டவர். இவைதான் அவரோடு நான் பழகிய நாட்களில் அவரைப்பற்றிய என் மதிப்பீடுகள். எனக்கு அவர் முன்பே பழக்கமில்லை. கறுப்பர் நகரம் திரைப்படத்திற்காக சந்தித்ததுதான் எனக்கும் அவருக்குமான பழக்கம். இன்று வரையும் அவ்வளவுதான். கருப்பர் நகரம் படம் நிறுத்தப்பட்டபின்பு எங்களுக்குள் தொடர்பற்றுப் போயிற்று. சில காலம் கழித்து, அட்டக்கத்தியும், மெட்ராஸ் படத்தின் முன்னோட்டமும் வந்தபோதெல்லாம் அவரை நினைத்துக்கொண்டேன். காரணம் அதில், கருப்பர் நகரத்தின் சாயல்கள் இருந்தன. அதைப்பற்றிக்கூட அவரிடம் நான் விவாதித்ததில்லை. பின்பு ஒருநாள் உணவுக்கூடமொன்றில் அவரைப்பார்த்தேன், ுதல் கணத்தில் அடையாளம் கண்டுக்கொள்ள முடியாத அளவு மாறிப்போயிருந்தார். நாற்பதை ஒட்டிய வயதுக்காரர், உடல் நலமின்மை, வறுமை, போராட்டம், தளர்ச்சி என உருவம் குலைந்து காணப்பட்டார். பின்பு அடையாளம் தெளிந்து பேசிக்கொண்டோம். கருப்பர் நகரத்தைப்பற்றி குறிப்பிடும் படியாக செய்தியில்லை என்றும், தான் திரைத்துறையிலிருந்தே விலக விரும்புவதையும், தன் மனம் உகந்த 'ஆவணப்படங்களை' மட்டுமே இனி இயக்கப் போவதாகவும் சொன்னார். மேலும் சிறிது நேரம் உரையாடிவிட்டு பிரிந்தோம். எனக்கு, உண்மையிலேயே பெரும் துயரமாக இருந்தது. அவரைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். சிறந்த படைப்பாளியாக பரிமாணிக்கும் தகுதி உடைய ஒருவர், தமிழ்த் திரைத்துறையின் போராட்டக்களத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் விலகிப்போவதை நினைத்து மனம் வேதனைக்கொண்டது.

இவ்வளவு அறிவு கொண்ட கோபி ஏன் தன் கதையை 'காப்புரிமை' பெற்று வைத்திருக்கவில்லை என்ற வாதமெல்லாம் வைக்கப்படுகிறது. ஏராளமான துறைகளில் உலகளாவிய அளவில் காப்புரிமை வழக்குகளின் நிலை (Apple vs Samsung) எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் நன்கறிவோம். இங்கே கலைத்துறையில் அது உதவாது என்பது மட்டுமல்ல, நடைமுறைச் சாத்தியமுமற்றது என்பதை நாம் உணர வேண்டும். காரணம், ஒரு திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் என்பவை, அத்திரைப்படம் திரைக்கு வரும்வரை திருத்தம் செய்ய சாத்தியம் கொண்டவை. மாற்றம் அடைந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாகவே பெரும்பாலானோர் தன் கதை இதுதான் என்று அறுதியிட்டு காப்பீடு செய்ய முயலுவதில்லை. மேலும் தமிழ்த்திரையுலம், அப்படி ஒன்றும் முறையாக வழிமுறைகளை பின்பற்றி நடக்கும் துறையல்ல. தனக்கு எப்படியாவது வாய்ப்பு கிடைத்துவிடாதா என்ற தவிப்புக்கு, அத்துணை கலைஞர்களையும் உள்ளாக்கும் துறை இது. ஆகையால், தன் கதையை ஏன் கோபி முன்பே காப்புரிமை செய்து வைத்திருக்கவில்லை என்ற வாதம், வீண் என்பதை உணர்க.

கத்தி கதைத் திருட்டு... ஏஆர் முருகதாஸுக்கு எதிராக கோலிவுட்டில் ஓங்கிக் கிளம்பும் குரல்!

முடிவாக, கத்தி சிக்கலை ஒட்டிய அவரின் பேட்டியைப்பார்க்கும் போது, அதை வழக்கமான பணம் பிடுங்க நடத்தப்படும் தகிடுத்தத்தமாக கருதி ஒதுக்கிச்சென்று விட என்னால் முடியவில்லை. அப்பேட்டியின் முடிவில், "நான் பொய் சொல்லுகிறேன் என்பதை கண்டுபிடிக்கவாவது விசாரணை நடத்துங்கள்" என்ற அவரின் வாதம் ஞாயமானதாக எனக்குப்படுகிறது. மேலும் தான் போராடுவது, பணத்திற்காக மட்டுமில்லை, அது என் கதை என்ற அங்கீகாரத்திற்காகவும்தான் என்று அவர் சொல்வதை நாம் ஏற்கத்தான் வேண்டும். அங்கீகாரத்திற்காக போராடும் சமூகத்திலிருந்தும், அதன் போராட்ட அரசியலிலிருந்தும் வந்த மனிதர் அவர். நீதி மன்றம் எப்போதும் நீதியை நிலை நாட்டிவிடும் என்ற நம்பிக்கையை கொடுக்கவியலா தன்மைக்கொண்டது, என்ற முன்னனுபவம் கொண்ட சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம் என்பதனால், சமூகத்தின் மீதும், திரைத்துறையின் மீதும் ஆர்வம் கொண்டவர்கள் இப்பிரச்சினையில் தலையிட்டு உண்மையை சமூகத்திற்கு உணர்த்த வேண்டுமென்ற விருப்பம் எனக்கு இருக்கிறது. மற்றவர்கள் எப்படியோ, கோபியைப் பொருத்தவரை, அவர் தகுதியானவர் என்பதை அறிந்தவன் என்பதனாலேயே இக்கட்டுரையை நான் எழுத வேண்டியதாகிற்று.

சமூக அக்கறை, மக்கள் நலம், கலையின் மேன்மை, அழகியலோடு கூடிய உண்மை பேசும் படைப்புகளை உருவாக்கும் தகுதி, படிப்பு, பயிற்சி கொண்ட கலைஞர்களை தமிழ்த்திரையுலகம் இன்னும் கொஞ்சம் நன்றாக நடத்தலாம் என்பது என் ஏக்கம். அவர்களை துரத்தி துரத்தி.. வாழ்வின் எல்லைக்கே விரட்டும் பழக்கத்தை அது கைவிட்டு திருந்தினால்.. நன்றாக இருக்கும்.

இதுகுறித்த மீஞ்சூர் கோபி அளித்துள்ள வீடியோ:

இந்த விவகாரம் குறித்து நாம் ஏற்கெனவே வெளியிட்ட செய்தி:

 

ஹிருத்திக் ரோஷன் – சூசன்னே விவாகரத்து: நிரந்தரமாக பிரிந்தனர்

மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் மற்றும் அவரது மனைவி சூசன்னேவிற்கு விவாகரத்து கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர்கள் நிரந்தரமாக பிரிந்துள்ளனர்.

மும்பையில் உள்ள பந்த்ரா குடும்பநல நீதிமன்றம் இவர்களின் விவாகரத்தினை உறுதி செய்தது. அதேசமயம் அவர்களின் இரண்டு குழந்தைகள் யாருடைய பராமரிப்பின் கீழ் வளர்வார்கள் என்று நீதிமன்றம் உத்தரவிடவில்லை.

ஹிருத்திக் ரோஷன் – சூசன்னே விவாகரத்து: நிரந்தரமாக பிரிந்தனர்

ஹிருத்திக் ரோசன் தான் சிறுவயதில் இருந்தே காதலித்த சூசன்னேவை 2000மாவது ஆண்டு கைபிடித்தார் 13 ஆண்டுகால திருமண வாழ்வின் சாட்சியாக இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த ஆண்டு இந்த தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த வாழ்ந்தனர். பின்னர் மும்பை பாந்தரா பகுதியில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் இருவரும் தனித்தனியாக விவாகரத்து மனு தாக்கல் செய்தனர். இருவரும் மனமொத்து பிரிவதாக அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டனர்.

இந்த விவாகரத்துக்கு சம்மதிக்க தனக்கு ஹிருத்திக் ரோஷன் ரூ.400 கோடி ஜீவனாம்சம் தர வேண்டும் என்று சூசன்னே கேட்டார். அந்த தொகையை ஹிருத்திக் ரோஷனும் கொடுக்க சம்மதித்தாக கூறப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஜீவனாம்சம் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தின. பின்னர், இந்த செய்திகள் வெறும் வதந்தி என்றும், தனது மனைவியை எப்போதும் நேசிப்பதாகவும், பணம் தொடர்பாக கருத்து வேறுபாடு இல்லை என்று அவர் விளக்கம் அளித்திருந்தார்.

சூசன்னே தரப்பிலும், அவர் தனது துறையில் பணிபுரிந்து, தனி மனிதராக தனது நிதி தேவைகளை தானே பூர்த்தி செய்யும் அளவில் தான் இருக்கிறார். இருவருக்கும் நிதி தொடர்பான பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று கூறப்பட்டது.

ஹிருத்திக் ரோஷனுக்கு மொத்தம் ரூ.1500 கோடி சொத்துக்கள் உள்ளன. ஜுகு கடற்கரையில் ஹிருத்திக் பெயரில் பிரம்மாண்ட பங்களா வீடு உள்ளது. பெங்களூரில் 100 ஏக்கர் நிலம் உள்ளது. ஆந்தேரியில் நான்கு மாடி கட்டிடம் உள்ளது. சிங்கப்பூரில் ஒரு வீடு இருக்கிறது. இந்த வீடு சூசன்னே பெயரில் இருக்கிறது.

பல வாரகாலமாக நடைபெற்ற இவர்களின் விவாகரத்து வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஹிருத்திக் ரோஷன் - சூசன்னே தம்பதிக்கு பந்த்ரா குடும்ப நல நிதிமன்றம். நேற்றைய தினம் விவகாரத்து வழங்கியது அதேசமயம் இரண்டு குழந்தைகளையும் யார் வளர்ப்பது என்பது பற்றி இன்னும் சில தினங்களில் தீர்ப்பு அளிக்கப்படும்

பாலிவுட் உலகின் மிகவும் பிரபலமான ரொமான்ஸ் ஜோடியான ஹிருத்திக் - சூசன்னே பிரிவு அவர்களின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இந்திப்பாடகியை இரண்டாவது திருமணம் செய்கிறார் டிரம்ஸ் சிவமணி

சென்னை: சென்னையை சேர்ந்தவர் டிரம்ஸ் சிவமணி. டி.ராஜேந்தர் குழுவில் பணியாற்றிய சிவமணி தனது டிரம்ஸ் இசை கலை மூலம் புகழ்பெற்றார். இன்றைய தேதியில் உலகிலேயே நம்பர் ஒண் டிரம்ஸ் கலைஞர் சிவமணி தான். ஏ.ஆர்.ரகுமானுடனும், தனியாகவும் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்.

இந்திப்பாடகியை இரண்டாவது திருமணம் செய்கிறார் டிரம்ஸ் சிவமணி

சமீபத்தில் வெளிவந்த அரிமா நம்பி படத்தின் மூலம் இசை அமைப்பாளராகவும் ஆனார் சிவமணி. இவருக்கு கிருஷாணி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிவமணிக்கும் கஜோல் பாடகர்களான ராஜ்குமார், இந்திராணி ரிஜ்வி மகளான ருனா ரிஷ்வி என்பவருக்கு காதல் ஏற்பட்டது.

இவர்கள் இருவரும் இணைந்து சர்வதேச அளவில் பல்வேறு கச்சேரிகளை நடத்தியுள்ளனர். ருனா ரிஷ்வி இந்திப் படங்களில் பாடி வருகிறார். தமிழில் அரிமா நம்பி படத்தில் அவரை பாடவைத்தார் சிவமணி.

இப்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்கள் திருமணம் வருகிற 10ந் தேதி மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வெளியானது ரஜினியின் லிங்கா முதல் டீசர்.. ரசிகர்கள் உற்சாகம்!

ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்கா படத்தின் டீசர் எனப்படும் முதல் சிறு முன்னோட்டப் படம் இன்று பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையில் வெளியானது.

அதில் ரஜினியின் தோற்றம், ஸ்டைல் மற்றும் கம்பீரம் அவரது ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. டீசர் வெளியான சில நிமிடங்களில் சமூக வலைத் தளங்கள் பரபரக்க ஆரம்பித்துவிட்டன.

வெளியானது ரஜினியின்  லிங்கா முதல் டீசர்.. ரசிகர்கள் உற்சாகம்!

ட்விட்டரில் ரஜினி, லிங்கா, டீசர் என்ற வார்த்தைகளே முன்னணியில் உள்ளன.

41 நொடிகள் மட்டுமே வரும் இந்த டீசர், பார்க்கும் ரஜினி ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு செல்லும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

வெளியானது ரஜினியின்  லிங்கா முதல் டீசர்.. ரசிகர்கள் உற்சாகம்!

பிரிட்டிஷ் ஆட்சிக் கால ரஜினி, இன்றைய நவீன கால ரஜினி என இரு தோற்றங்களில் ரஜினி அசத்துகிறார். இவருக்கு 64 வயது என கோயிலில் கற்பூரம் அடித்துச் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அப்படி ஒரு வேகம், துடிப்பு. இந்த 41 செகன்டுகளில் எவ்வளவு பெஸ்டாக ஒரு டீசரை உருவாக்க முடியுமோ அந்த அளவுக்கு உருவாக்கி பிரமிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

படத்தில் இடம்பெறும் ஒரு அணியில் His Highness Raja Lingeswara என கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. படத்தில் வரும் ஒரு ரஜினியை இது குறிப்பதாகத் தெரிகிறது.

வெளியானது ரஜினியின்  லிங்கா முதல் டீசர்.. ரசிகர்கள் உற்சாகம்!

சில காட்சிகளில் சிவாஜி தி பாஸ் படத்தில் வருவாரே அதுபோலத் தெரிகிறார் ரஜினி.

ரஜினி ரசிகர்களைப் பொறுத்தவரை இன்றிலிருந்து டிசம்பர் 12 வரை திருவிழா உற்சாகம்தான்!

லிங்கா டீசர்... அசத்தும் ரஜினி... வீடியோ

 

சில நொடிகளில் பேஸ்புக், ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டான ரஜினி, லிங்கா!!

ரஜினியைத் தவிர இந்தியாவைச் சேர்ந்த வேறு எந்த பிரபலத்துக்கும் உலக அளவில் இத்தனை பெரிய புகழும், வரவேற்பும் கிடைத்திருக்குமா தெரியவில்லை.

லிங்கா டீசர் வெளியான சில நொடிகளில் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் சர்வதேச அளவில் ட்ரெண்டாக மாறிவிட்டது லிங்கா.

சில நொடிகளில் பேஸ்புக், ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டான ரஜினி, லிங்கா!!

லட்சக்கணக்கான அவரது ரசிகர்கள், சினிமா ஆர்வலர்கள் அவரது லிங்கா டீசரை சமூக வலைத் தளங்களில் ஷேர் செய்ய, அது உலக ட்ரெண்டாகிவிட்டது.

படத்தின் முதல் டீசர் (நவம்பர் 1) இன்று மாலை 4 மணிக்கு சரியாக வெளியானது. இதற்காக காலையிலிருந்தே பல லட்சம் ரசிகர்கள் தவம் கிடந்தனர். டீசர் வெளியானதும் அனைத்து ரசிகர்களும் ஷேர் செய்ய துவங்கிவிட்டனர்.

சில நொடிகளில் பேஸ்புக், ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டான ரஜினி, லிங்கா!!

இந்தப் படத்தில் ரஜினியின் ஸ்டைலும் அழகும் கம்பீரமும் ரசிகர்களே எதிர்ப்பாராத

ஒன்று. பிரம்மாண்ட அரங்க காட்சிகள், அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹாவின் ஷாட்கள் என டீஸர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வெளியான சில மணித் துளிகளில் ட்விட்டர், கூகுள். பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் டிரெண்டாகியுள்ளது. இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் தற்போது #lingaa, #Rajini என்ற வார்த்தைகள் ஹாட் டிரெண்டாகி விட்டது.

சில நொடிகளில் பேஸ்புக், ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டான ரஜினி, லிங்கா!!

இந்த டீசருக்குக் கிடைத்துள்ள வரவேற்பும் வெற்றியும், லிங்காவுக்கு சர்வதேச அளவில் இதுவரை எந்த இந்தியப் படத்துக்கும் கிடைக்காத வரவேற்பை உறுதி செய்வதாக உள்ளது.

லிங்கா டீசர்... அசத்தும் ரஜினி... வீடியோ