"தம்பிக்கு" மட்டும் குவியும் பாராட்டு.. செம சோகத்தில் "ரூட்டு"!

சென்னை: சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நம்பர் படத்தின் நாயகர்களில் ஒருவர் இவர்.

தனது முதல் படத்திலேயே முத்திரை நடிப்பால் ஜொலித்தவர். அதற்கடுத்து வந்த படங்களிலும் தொடர்ந்து திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், நம்பர் படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்திருந்தார் இந்த ரூட்டு நடிகர். படத்தில் காதல் மன்னனாக மட்டுமே நடித்துள்ள இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக எடுபடவில்லை.

மாறாக படத்தின் மற்றொரு நாயகனான, நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கும் நடிகையின் தம்பி நடிகருக்கும் பாராட்டுக்கள் குவிகிறதாம். இதனால் ரூட்டு நடிகர் அப்செட்டில் இருக்கிறாராம்.

படத்தில் தன்னை விட தம்பி நடிகருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாகக் கூறி, பட புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளவில்லையாம் ரூட்டு.

 

பாலிவுட் போகிறது அஜீத்தின் மங்காத்தா!

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த மெகா ஹிட் படமான மங்காத்தாவை இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார்கள்.

சொல்லப் போனால், பாலிவுட்டுக்கு ஏற்ற டான் கதை என்றால் அது மங்காத்தாதான். இந்தப் படம் தமிழில் ஹிட்டடித்தபோதே, விரைவில் இந்திக்கும் போகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. நான்காண்டுகள் தாமதமாக இப்போது போகிறது.

பாலிவுட் போகிறது அஜீத்தின் மங்காத்தா!

படத்தை இந்தியில் தயாரிப்பது பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் அல்ல.. நம்ம ஊர் ஸ்டுடியோ கிரீன்தான். அவர்களின் முதல் பாலிவுட் தயாரிப்பு மங்காத்தாதான்.

ஹீரோவாக நடிக்கப் போவது யார், நாயகி, வில்லன், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார்? என்ற விவரமெல்லாம் இன்னும் வெளியாகவில்லை.

படத்தை வெங்கட் பிரபுவே இயக்குவார் என்கிறார்கள்.

 

இளையராஜாவின் இசையை இனி எந்த வடிவிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட 5 நிறுவனங்கள்!

இளையராஜாவின் இசை மற்றும் பாடல்களை எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என அகி மியூசிக் மற்றும் எக்கோ நிறுனங்களுக்கு உயர்நீதிமன்றம் நிரந்தரத் தடை விதித்ததல்லவா...

இந்த வழக்கில் இளையராஜா தாக்கல் செய்த மனு மற்றும் தீர்ப்பின் முழு விவரம் இதோ..

இளையராஜா தாக்கல் செய்த மனு:

தென்னிந்திய திரைப்படங்களில் கடந்த 1970-ம் ஆண்டு முதல் இசையமைத்து வருகின்றேன். இந்தியாவில் தலை சிறந்த இசையமைப்பாளர்களில் நானும் ஒருவனாக திகழ்ந்து வருகின்றேன். 1993-ம் ஆண்டு லண்டனில் சிம்பொனி இசையமைத்தேன். முழுமையான சிம்பொனி இசையமைத்த முதல் இந்தியன் நான்தான். இசைக்காக 4 தேசிய விருதுகள் பெற்றுள்ளேன். ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளேன்.

இளையராஜாவின் இசையை இனி எந்த வடிவிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட 5 நிறுவனங்கள்!

திரைப்பாடல், பக்தி பாடல் என்று 6,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு ‘மெட்டு' போட்டுள்ளேன். இந்த பாடல்களை எல்லாம் ஒலிப்பரப்ப, விற்க யாருக்கும் நான் அனுமதி வழங்கவில்லை. காப்புரிமை என்னிடமே உள்ளது.

ஆனால், என்னுடைய அறியாமையை பயன்படுத்தி, அகி மியூசிக், எக்கோ ரிக்கார்டிங் கம்பெனி, யுனிசிஸ் இன்போ சொல்யூசன் நிறுவனம், மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனம், மும்பையை சேர்ந்த கிரி டிரேடிங் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் எந்த ஒரு அனுமதியையும் பெறாமல் என்னுடைய பாடல்களை விற்பனை செய்து வருகின்றன.

இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் சிலர், 3-வது நபருக்கு என்னுடைய பாடல்கள் மீதான காப்புரிமையை சட்டவிரோதமாக வழங்கியுள்ளனர். இதுசம்பந்தமாக கடந்த ஆண்டு என்னுடைய ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் போலீசில் புகாரும் செய்துள்ளனர்.

எனவே, எந்த ஒரு அனுமதியும் பெறாமல், சட்ட விரோதமாக இந்த நிறுவனங்கள் என் பாடல்களை சிடி, கேசட்டில் விற்பனை செய்து, ஒலிப்பரப்புகின்றன. இணையதளங்கள் மூலமும் விற்கின்றனர். இதற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜாவின் பாடல்களை ஒலிப்பரப்ப, கேசட், சிடி, இணையத்தில் விற்பனை செய்ய அகி உட்பட 5 நிறுவனங்களுக்கு இடைக் கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜாவின் பாடல்களை ஒலிப்பரப்பவும், விற்பனை செய்யவும், வேறு எந்த வகையில் பயன்படுத்தவும் அகி உட்பட 5 நிறுவனங்களுக்கு நிரந்தரமாக தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிறுவனங்கள் இதுவரை தராமல் இருக்கும் ராயல்டி தொகையைப் பெற தனி வழக்கு தொடர முடிவு செய்துள்ளார் இளையராஜா.

 

சொத்து வரி பாக்கி: நயன்தாரா, ஜெயராம் வீடுகளுக்கு ஜப்தி நோட்டீஸ்

ஊட்டி: சொத்து வரி பாக்கி காரணமாக நடிகை நயன்தாரா, நடிகர் ஜெயராம் ஆகியோர் வீடுகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஊட்டி, லவ்டேல் சாலையில், 'ராயல் காஸ்டில்' என்ற பெயரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 142 வீடுகள் உள்ளன. இதில், சில குடியிருப்புகளின் உரிமையாளர்கள், நகராட்சிக்கு சொத்துவரி பாக்கி வைத்துள்ளதால் நேற்று நகராட்சி வருவாய் அலுவலர் ஷாஜகான், உதவி வருவாய் அலுவலர் நந்தகுமார் மற்றும் அலுவலர்கள் சொத்துவரி செலுத்தாதவர்களின் வீடுகளில், 'ஜப்தி நோட்டீஸ்' ஒட்டினர்.

சொத்து வரி பாக்கி: நயன்தாரா, ஜெயராம் வீடுகளுக்கு ஜப்தி நோட்டீஸ்

நகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'ஊட்டியில் வீடுகளை வாங்கியுள்ள சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், பெரிய செல்வந்தர்கள் பலர், சொத்து வரி பாக்கி வைத்துள்ளனர். இதனால், நகராட்சி 100-சதவீத வரி வசூலை எட்ட முடியாத நிலை ஏற்படுகிறது' என்றனர்.

மேலும், நகராட்சி கமிஷனர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'ராயல் காஸ்டில்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில், நடிகர் ஜெயராம், பிரபல நடிகை நயன்தாரா மற்றும் பல தொழிலதிபர்களின் பெயரில் உள்ள வீடுகளுக்கு சொத்து வரி நிலுவையில் உள்ளன.

ஏற்கனவே, சொத்து வரியை செலுத்த வலியுறுத்தி, நாங்கள் ஒட்டிய நோட்டீசை, குடியிருப்பு பராமரிப்பாளர்கள் கிழித்துவிட்டதால், தற்போது, 'ஸ்டென்சில்' கட்டிங் மூலம், 'ஜப்தி நோட்டீஸ்' ஒட்டியுள்ளோம். குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள், அவர்கள், வரி செலுத்தாவிட்டால், அந்த வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும், மேலும் 'ஜப்தி' நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

 

வடிவேலு கூட நான் காமெடி பண்ணனும்...! - விரும்பிக் கேட்ட விஜய்

வடிவேலுவுடன் சேர்ந்து காமெடி பண்ண விரும்புகிறேன். என் அடுத்த படத்தில் அவர் இருக்க வேண்டும் என்று விரும்பிக் கேட்டு அவரை ஒப்பந்தம் செய்தாராம் நடிகர் விஜய்.

வடிவேலு - விஜய் கூட்டணியில் வந்த அத்தனைப் படங்களிலும், நகைச் சுவைக் காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவுக்கு அமைந்தன. விஜய்யின் தோல்விப் படம் எனப்பட்ட சுறாவில் கூட, வடிவேலுவின் நகைச்சுவை சிறப்பாக அமைந்தது.

வடிவேலு கூட நான் காமெடி பண்ணனும்...! -  விரும்பிக் கேட்ட விஜய்

காவலன் படத்தில் விஜய் - வடிவேலு காமெடி பிரமாதமாக அமைந்தது. ப்ரண்ட்ஸ், வசீகரா, மதுர, பகவதி, சச்சின், போக்கிரி, வில்லு படங்களில் இவர்களின் நகைச்சுவை உச்சம் தொட்டது.

விஜய்யின் ஆரம்ப காலப் படமான சந்திரலேகாவிலேயே விஜய்யுடன் சேர்ந்து நடித்துள்ளார் வடிவேலு.

இப்படி தனது ஆரம்ப நாட்களிலிருந்து உடன் பயணித்த வடிவேலு, இன்று கிட்டத்தட்ட தனித்து விடப்பட்ட நிலையில் உள்ளார். மற்ற பெரிய நடிகர்கள் படங்கள் எதிலும் அவருக்கு வாய்ப்பில்லாத நிலை.

இந்த சூழலில், தனது அடுத்த படத்தில் மீண்டும் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவைக் காட்சிகளில் நடிக்க ஆசைப்படுவதாகக் கூறினாராம் விஜய். அட்லீ இயக்கும் இந்தப் படத்துக்காக வடிவேலுவுடன் பேசி, விஜய்யின் விருப்பத்தைச் சொன்னாராம் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. வடிவேலுவும் சம்மதித்துவிட்டதாகத் தகவல்.

 

அஜித்தின் பணிவை அனைத்து நடிகர்களும் கற்றுக் கொள்ள வேண்டும் – டுவிட்டிய வித்யூ ராமன்

சென்னை: அனைத்து நடிகர்களும் அஜித்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் நடிகை வித்யூ ராமன்.

கோலிவுட் பிரபலங்கள் பலரும் எப்போதும் அஜித் புராணம் தான் பாடுவார்கள். அந்த வகையில் நீ தானே என் பொன்வசந்தம், வீரம், ஜில்லா ஆகிய படங்களில் நகைச்சுவை நடிகையாக கலக்கியவர் வித்யூ ராமன்.

அஜித்தின் பணிவை அனைத்து நடிகர்களும் கற்றுக் கொள்ள வேண்டும் – டுவிட்டிய வித்யூ ராமன்

இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் "என்னை அறிந்தால் படத்திற்கு நான் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தேன், அவர் இன்று எனக்கு "வேலைப்பளு காரணமாக என்னை பார்க்க முடியவில்லை, தகவலை தாமதமாக உங்களுக்கு அனுப்பியதற்கு மன்னியுங்கள்"' என்று அஜித் கூறியதாக டுவிட் செய்திருந்தார்.

இது மட்டுமில்லாமல் மேலும் "அவரிடம் இருந்து அனைத்து நடிகர்களும் இந்த பணிவை கற்றுக்கொள்ள வேண்டும், இதனால், தான் இவர் இந்த உயரத்தில் இருக்கிறார்" என டுவிட் செய்துள்ளார்.

 

ஓ காதல் கண்மணியை வாங்கியது ஸ்டுடியோ கிரீன்!

மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளிவரவுள்ள ‘ஓ காதல் கண்மணி' படத்தின் தமிழக விநியோக உரிமையைப் பெற்றது ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன்.

துல்கர் சல்மான் - நித்யா மேனன் நடித்துள்ள ஓ காதல் கண்மணி-க்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் பி.சி.ஸ்ரீராம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மணிரத்னம் தனது ‘மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனம் மூலம் படத்தை தயாரித்துள்ளார்.

ஓ காதல் கண்மணியை வாங்கியது ஸ்டுடியோ கிரீன்!

இப்படம் லிவிங் டுகெதர் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதையாக இருக்கும் என்பார்கள். அலைபாயுதே படத்தின் தொடர்ச்சி என்று கூறப்படுகிறது.

இதனிடையே படத்தின் முதல் டீசர் இணையதளத்தில் வெளிவந்து, ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியாகிய 2 நாட்களுக்குள் டிரைலரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் ஓ காதல் கண்மணி படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் வாங்கியுள்ளது.

சமீபத்தில் இதே நிறுவனம் தான் ‘ரஜினி முருகன்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் வாங்கியது. இந்நிலையில் ஓ காதல் கண்மணி படத்தை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘ஓ காதல் கண்மணி' ஏப்ரல் மாதத்திலும், ‘ரஜினி முருகன்' மே மாதத்திலும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.