சசிகபூருக்கு தாதாசாஹேப் விருது.... அருண் ஜேட்லி மும்பை சென்று வழங்கினார்!

மும்பை: மும்பையில் நடைபெற்ற விழாவில் பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூருக்கு தாதாசாஹேப் பால்கே விருதை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று வழங்கினார்.

Dadasaheb Phalke award conferred on actor Shashi Kapoor

நடிகரும், தயாரிப்பாளருமான சசி கபூருக்கு இன்று தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. மே 3ம் தேதி இதுதொடர்பான விழா டெல்லியில் நடந்தது. அப்போது பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால் சசி கபூருக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவரால் வர முடியவில்லை. இதனால் அவருக்கு பால்கே விருதை தர முடியாத நிலை ஏற்பட்டது.

Dadasaheb Phalke award conferred on actor Shashi Kapoor

இதையடுத்து மும்பைக்கு சென்று இவ்விருதை வழங்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி இன்று மும்பையில் உள்ள பிரித்வி திரையரங்கில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. சசி கபூரின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் உள்பட பலர் கலந்து கொண்ட இவ்விழாவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சசி கபூரிடம் தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி கவுரவித்தார்.

 

‘மதிப்பெண்கள் உங்கள் வெற்றியை ஒருபோதும் தீர்மானிக்காது’... மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை

சென்னை: மதிப்பெண்கள் உங்கள் வெற்றியை ஒருபோதும் தீர்மானிக்காது என்பதை மனதில் கொள்ள வேண்டும் என பிளஸ் 2 மாணவர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை கூறியுள்ளார்.

கடந்த வாரம் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல், தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் 6 பேர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டனர்.

பள்ளித் தேர்வுகள் மட்டுமே வாழ்க்கையின் வெற்றித் தோல்வியை நிர்ணயிப்பதாக கருதி இவ்வாறு மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வது தவறான அணுகுமுறை ஆகும்.

இந்நிலையில், நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் மதிப்பெண் என்பது உங்களின் வெற்றியை ஒரு போதும் தீர்மானிக்காது என்பதையும் மனதில் வைத்து கொள்ள வேண்டும். உங்கள் அனைவரது எதிர்காலமும் சிறப்பாக அமைய வேண்டும்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா, ‘அகரம் பவுண்டேஷன்' என்ற அமைப்பை துவங்கி வருடம் தோறும் ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கி வருகிறார். மேலும், ஏராளமானவர்களை தத்தெடுத்து படிக்க வைக்கிறார். இந்த வருடமும் பல மாணவ - மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

'களவாணி' விமலுடன் கைகோர்க்கும் சத்யராஜ்

சென்னை: தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி நாயகனாக விளங்கும் நடிகர் விமல் அடுத்து இயக்குனர் பூபதி பாண்டியனின் புதிய படத்தில் நடிகர் சத்யராஜுடன் இணைந்து நடிக்க உள்ளார் .

களவாணி படத்தில் நாயகனாக அறிமுகமான விமல் கிராமத்து இளைஞன் , காமெடி கலந்த கதைகள் ,இரு ஹீரோக்கள் படம் என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்து இருப்பவர் .

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் சரியாக ஓடவில்லை இதனால் மீண்டும் காமெடி பாதைக்கே திரும்பி இருக்கிறார்.

Actor Vimal and Sathya Raj campaign one new movie

வருத்தப் படாத வாலிபர் சங்கம் படம் பெரிய அளவில் பேசப் பட்டதற்கு சத்யராஜின் நடிப்பும் ஒரு காரணம் நகைச்சுவை கலந்த இவரின்அலப்பரைகளை ரசிக்க ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. நண்பன், ராஜா ராணி என் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி வரும் இவர் இப்படத்தில் விமலின் அப்பாவாக நடிக்க உள்ளார் என்று கூறுகின்றனர்.

இயக்குநர் பூபதி பாண்டியனுக்கு திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை, பட்டத்து யானை வரிசையில் தற்போது விமலை வைத்து எடுக்கப் போகும் படமும் காமெடி கலந்த கமெர்சியல் படமாகவே இருக்கும்.

விமலுக்கும் பூபதி பாண்டியனுக்கும் படம் வெற்றியைத் தருமா பார்க்கலாம்

 

டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உண்ணாவிரதம்

சென்னை: டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தினர் மற்றும் நடிகர் சங்கத்தினர் இன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

க்யூப், யு.எப்.ஓ. மற்றும் பி.எக்ஸ்.டி. ஆகிய டிஜிட்டல் நிறுவனங்கள் தமிழ் சினிமாவின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு செலவை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளன. தமிழ் சினிமா இந்த மூன்று நிறுவனங்களின் பிடியில் உள்ளது என்று சொல்லலாம். இந்நிறுவனங்களுக்கு எதிராக தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தினர் சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

Tamil film producers association doing hunger strike today

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நாளை காலை எட்டு மணிமுதல் மாலை 5 மணிவரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இதில் அனைத்துத் திரையுலகினரும் கலந்து கொள்ளும்படி தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. அதன்படி, இந்த போராட்டத்தில் திரையுலகினர் கலந்து கொண்டுள்ளனர்.

 

வயிற்று வலியால் அவதி... நடிகர் கலாபவன் மணி மருத்துவமனையில் அனுமதி

திருவனந்தபுரம் : உடல்நலக் குறைபாடு காரணமாக நடிகர் கலாபவன் மணி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி. இவர் தமிழில் ஜெமினி, அந்நியன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது கமலுடன் இணைந்து பாபநாசம் படத்தில் நடித்துள்ளார்.

கடந்த 6ம் தேதி கலாபவன் மணிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக அவர் எர்ணாகுளத்தில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.

kalabhavan mani hospitalized

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டும் என அறிவுறுத்தினர். இதையடுத்து கடந்த 4 நாட்களாக கலாபவன் மணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

தற்போது அவரது உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.