திருவனந்தபுரம்: மலையாள நடிகர் கலாபவன் மணி, கேரள மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்குப் போனபோது தனது காரை சோதனையிட முயன்ற வனத்துறை அதிகாரிகளை தனது நண்பருடன் சேர்ந்து தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அவர் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீ்ழ் வழக்குப் போடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மணி தலைமறைவாகி விட்டார்.
மனைவி- நண்பருடன்
மலையாளத்தில் நிறையப் படங்களில் நடித்துள்ளார் மணி. தமிழிலும் ஜெமினி, வாஞ்சிநாதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்குக் காரில் போனார் மணி.
அவருடன் அவரது மனைவி மற்றும் நண்பர் ஒருவரும் போனார்கள். காட்டுப் பகுதி வழியாகத்தான் அதிரப்பள்ளிக்குப் போக முடியும். அதிரப்பள்ளி பகுதியில், மாவோயிஸ்டுகள் நடமாடுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு வனத்துறையினர் ரோந்து சுற்றி வருகின்றனர். மேலும் வாகன சோதனையும் நடந்து வருகிறது.
இந்தநிலையில் கலாபவன் மணி காரைப் பார்த்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்றனர். இதற்கு மணி எதிர்ப்பு தெரிவித்து வேகமாக காரை ஓட்டிச் சென்றுவிட்டார்.
நீர்வீழ்ச்சிக்குப் போய் விட்டுத் திரும்பிய அவரை அதிகாரிள் மடக்கி நிறுத்தினர். இதனால் கோபமடைந்த மணி வனத்துறையினரிடம் தகராறில்இறங்கினர். மேலும் மணியும், அவரது நண்பரும் சேர்ந்து வனத்துறை அதிகாரிகள் ரமேசன் மற்றும் ரவீந்திரன் ஆகிய இருவரையும் சரமாரியாக அடித்துள்ளனர். இதில் இருவரும் காயமடைந்தனராம்.
உடனடியாக சாலக்குடி போலீஸாருக்குத் தகவல் பரவியது. சாலக்குடி போலீஸார் விரைந்து வந்தனர். மணியையும், அவரது நண்பரையும் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.பின்னர் தான் வனத்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக கூறி சாலக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் போய்ச் சேர்ந்து கொண்டார் மணி.
இந்த நிலையில் மணி, அவரது நண்பர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் வழக்குப் போட்டதால் அதிர்ச்சி அடைந்த மணி தலைமறைவாகி விட்டார்.