தெலுங்கில் ஒரு நேரடிப் படம் இயக்குவேன்- இயக்குநர் ஷங்கர்

தெலுங்கில் ஒரு படத்தை இயக்க நீண்ட நாளாக ஆசை உள்ளது. அதனை விரைவில் நிறைவேற்றுவேன் என்று இயக்குநர் ஷங்கர் கூறினார்.

ஷங்கர் இயக்கியுள்ள ஐ படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாதில் நடந்தது. இதில் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தெலுங்கில் ஒரு நேரடிப் படம் இயக்குவேன்- இயக்குநர் ஷங்கர்

இந்த நிகழ்ச்சியில் ஷங்கர் பேசும்போது, "தெலுங்கு மக்கள் என் மீது வைத்துள்ள அன்பு திகைக்க வைக்கிறது. இந்த அன்புக்கு என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.

எனக்கு தெலுங்கில் நேரடிப் படம் இயக்க விருப்பம். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படம் இயக்க முயன்று, பின்னர் கைவிட்டுவிட்டேன்.

அதன் பிறகு வாய்ப்பு அமையவில்லை. வரும் நாட்களில் நிச்சயம் ஒரு தெலுங்குப் படத்தை நேரடியாக இயக்கப் போகிறேன்," என்றார்.

 

புதிய தொழில் நுட்பத்தில் உருவாகும் உத்தம வில்லன் ட்ரைலர்

உத்தமவில்லன் படத்துக்காக அதி நவீன ட்ரைலரை உருவாக்கியுள்ளார் நடிகர் கமல் ஹாஸன். இந்த ட்ரைலர் விரைவில் வெளியாகும் என்று அவர் அறிவித்துள்ளார்.

கமல்ஹாஸன், பூஜா குமார், ஆன்ட்ரியா, பார்வதி, கே பாலச்சந்தர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் உத்தம வில்லன்.

புதிய தொழில் நுட்பத்தில் உருவாகும் உத்தம வில்லன் ட்ரைலர்

இந்தப் படத்தின் தொழில் நுட்ப பணிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. இதற்காக கமல் அங்கு கடந்த சில வாரங்கள் முகாமிட்டிருந்தார்.

விரைவில் படத்தின் ட்ரைலர் வெளியாகவிருக்கிறது. இதுகுறித்து கமல் ஹாஸன் கூறுகையில், "உத்தம வில்லன் படத்தின் இசை சம்பந்தப்பட்ட பணிகள் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பாரமவுண்ட் ஸ்டுடியோவில் நடந்து முடிந்துள்ளது. படத்தின் டிரெய்லரும் தயாராகி விட்டது. விரைவில் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறும்," என்றார்.

 

புத்தாண்டின் முதல் நொடியில் வெளியானது என்னை அறிந்தால் பாடல்கள்

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படத்தின் பாடல்கள் புத்தாண்டின் முதல் நொடியில் வெளியானது.

இந்தப் பாடல்களை சமூக வலைத்தளமான யு ட்யூபில் வெளியிட்டுள்ளது சோனி மியூசிக் நிறுவனம். ஆடியோ சிடிக்கள் இன்று முதல் கடைகளில் கிடைக்கும்.

புத்தாண்டின் முதல் நொடியில் வெளியானது என்னை அறிந்தால் பாடல்கள்

பொங்கல் ஸ்பெஷலாக வருகிறது என்னை அறிந்தால். இந்தப் படத்தை அடுத்த வாரம், அதாவது 8-ம் தேதியே திரைக்குக் கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன.

படத்தின் இசை வெளியீட்டுக்காக பிரமாண்ட விழா எதுவும் நடத்தவில்லை. மொத்தம் ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளன இந்தப் படத்தில்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பாடல்களை தாமரை எழுதியுள்ளார்.

தயாரிப்பாளர் சார்பில் இசை வெளியீட்டு விழா நடக்காவிட்டாலும், அஜீத்தின் தீவிர ரசிகர்கள் சிலர் இன்று சென்னை ரிச்சி தெருவில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தி அதில் பாடல் சிடியை வெளியிடப் போகிறார்கள்.

 

போதைப் பொருள் கடத்தலை மையமாக வைத்து உருவாகும் தௌலத்

போதைப் பொருள் கடத்தலை மையமாக வைத்து இன்னும் ஒரு புதிய படம் உருவாகிறது. இந்தப் படத்துக்கு தௌலத் என்று தலைப்பிட்டுள்ளனர்.

ரைட் ஆர்ட்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக முகம்மதுஅலி, சசிகலா இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார் சஞ்சய்சிவன்.

போதைப் பொருள் கடத்தலை மையமாக வைத்து உருவாகும் தௌலத்

இவர் ஏற்கனவே கோட்டி, ஆண்டவப்பெருமாள் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர். அத்துடன் "பணவாசி"என்ற கன்னட படம் ஒன்றிலும் நாயகனாக நடித்திருக்கிறார்.

நாயகியாக ரேஷ்மி கெளதம் நடிக்கிறார். மற்றும் ஆடுகளம் ஜெயபாலன், ஐசக், யோகிபாபு, வைரவன், அஜெய்பிரபு, ஏ.கே.எஸ், சலா , விஜய் மணி ஆகியோரும் நடிக்கிறார்கள். ஏ பி இமாலயன் இமாலயன் இசையமைக்கிறார்.

படம் குறித்து சஞ்சய் சிவன் கூறுகையில், "எதிர் கால உலகையே பயமுறுத்தும் அதிநவீன ஆயுதமான போதை கடத்தலை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது.

தௌலத், அலெக்ஸ் என்ற இரண்டு தாதாக்களின் சாம்ராஜ்ய பின்னணிதான் கதை! தங்கத்தை விட உயர்ந்த விலை கொண்ட போதை பொருள் பெங்களூர் வழியாக சென்னைக்கும் மற்ற மாநிலங்களுக்கும் எப்படி கடத்தப் படுகிறது என்பதை ஆக்ஷன் படமாக உருவாக்கி உள்ளோம்.

படப்பிடிப்பு பெங்களூர், சென்னை, ஊட்டி மற்றும் கர்நாடக மாநிலம் உத்தர கர்நாடகாவின் சிரிசி என்ற இடத்திலும் நடிபெற்றுள்ளது," என்றார்.

 

பொங்கல் ரேசிலிருந்து விலகுகிறது என்னை அறிந்தால்?

அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை.

தியேட்டர்கள் பற்றாக்குறை, பட வேலைகளில் இன்னும் கொஞ்சம் முடியாமலிருப்பது போன்ற காரணங்களால் இந்தப் படம் இரண்டு வாரங்களுக்கு தள்ளிப் போகிறது.

என்னை அறிந்தால் ஜனவரி 29-ல் வெளியாகும்- தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் அறிவிப்பு!

அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடித்துள்ள என்னை அறிந்தால் பொங்கலுக்கு வெளியாகும் என கடந்த இரு மாதங்களாக அறிவித்தனர். தினசரிகளிலும் விளம்பரங்கள் செய்து வந்தனர்.

பொங்கலுக்கு ஷங்கர் இயக்கிய ஐ மற்றும் விஷாலின் ஆம்பள படங்கள் அதிக அரங்குகளில் வெளியாக உள்ளன.

இன்றைய தேதி வரை பொங்கல் வெளியீடு என்று கூறப்பட்ட என்னை அறிந்தால், திடீரென போட்டியிலிருந்து இன்று விலகிக் கொண்டது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் கூறுகையில், "பொங்கலுக்கு படத்தை வெளியிடாத நிலை ஏற்பட்டுவிட்டது. காரணம் படத்தின் வேலைகள் இன்னும் முற்றுப் பெறவில்லை. எனவே இரு வாரங்கள் கழித்து ஜனவரி 29-ம் தேதி வெளியிடுகிறோம்," என்றார்.

அஜீத் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இரண்டு வாரங்கள்தானே... பொறுத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் நல்ல அரங்குகள் கிடைக்கும்!

 

புத்தாண்டு தினத்தில் ரசிகர்களை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொன்ன ரஜினி!

புத்தாண்டு தினமான இன்று தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறினார் ரஜினிகாந்த்.

ரஜினியின் பிறந்த நாள் அன்று மட்டுமல்ல, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களிலும் ரஜினி வீட்டு முன் ரசிகர்கள் திரண்டு போய் வாழ்த்துச் சொல்வது வழக்கம்.

புத்தாண்டு தினத்தில் ரசிகர்களை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொன்ன ரஜினி!

இது போன்ற விசேஷ நாட்களில் ரஜினி வீட்டிலிருந்தால், ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறி அனுப்புவது வழக்கம். அவர் வீட்டில் இல்லாத நேரங்களில் அவர் சார்பில் லதா ரஜினி வாழ்த்துகள் சொல்லி, இனிப்புக் கொடுத்து அனுப்புவார்.

புத்தாண்டு தினமான இன்று ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்துகள் பெற ஏராளமான ரசிகர்கள் போயஸ் கார்டன் இல்லத்தின் முன் திரண்டனர்.

ரசிகர்கள் வந்திருக்கும் செய்தியை அறிந்ததும், அவர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூற விரும்பிய ரஜினி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் வீட்டு முன் சிறு மேடை அமைக்கப்பட்டது. ரஜினி வெளியில் வந்து அந்த மேடை மீது ஏறி நின்று ரசிகர்களைப் பார்த்து கும்பிட்டார். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் கூறினார். ரசிகர்கள் சொன்ன வாழ்த்துகளையும் ஏற்றுக் கொண்டார்.

வந்திருந்த ரசிகர்களுக்கு ரஜினி வீட்டில் இனிப்பு வழங்கப்பட்டது.

 

தல ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு... வெளியானது ‘என்னை அறிந்தால்’ டிரைலர்!

சென்னை: என்னை அறிந்தால் படப் பாடல்கள் மற்றும் டிரைலர் ரிலீசாகியுள்ளதால், அஜீத் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் புத்தாண்டைத் தொடங்கியுள்ளனர்.

கௌதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள திரைப்படம் என்னை அறிந்தால். இப்படத்தில் திரிஷா மற்றும் அனுஷ்கா நாயகிகளாக நடித்துள்ளனர்.

தல ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு... வெளியானது ‘என்னை அறிந்தால்’ டிரைலர்!

பொங்கலுக்கு ரிலீசாகவுள்ள இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் புத்தாண்டை ஒட்டி நள்ளிரவு 12 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட்டது.

தலப் பொங்கல் கொண்டாடப் போவதாகக் கூறி வரும் அஜீத் ரசிகர்கள், புத்தாண்டையும் அவரது பட பாடல்கள் மற்றும் டிரைலருடன் தொடங்கியுள்ளதால் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.