சென்சாருக்கு போய் ரத்தம் சிந்தாமல் பத்திரமாக வந்த 'சிவப்பு'

சென்னை: சத்யசிவா இயக்கியுள்ள சிவப்பு படம் சென்சாரில் கத்தரிபடாமல் வெளியே வந்துள்ளது.

கழுகு படம் மூலம் இயக்குனரான சத்யசிவா இலங்கை தமிழரின் வாழ்கையை அடிப்படையாக வைத்து எடுத்துள்ள படம் சிவப்பு. அகராதி, பிரம்மன் ஆகிய படங்களில் நடித்துள்ள நவீன் சந்திரா இந்த படத்தில் ஹீரோவாகவும், ரூபா மஞ்சரி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.

ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை முக்தா ஆர்.கோவிந்தின் முக்தா என்டர்டைன்மென்ட்(பி) லிட், புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ் (பி) லிட் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.

Sivappu comes uncut from censor

சிவப்பு படத்தில் ரூபா மஞ்சரி மேக்கப் போடாமல் நடித்துள்ளார். இருப்பினும் அழகாகவே தெரிகிறார். படத்தை அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்நிலையில் படம் சான்றிதழ் பெற சென்சார் போர்டுக்கு சென்றது.

சென்சார் போர்டு படத்தில் வரும் எந்த காட்சிக்கும் கத்தரி போடாமல் யு சான்றிதழ் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

உள்ளம் உள்ளவரை... கோடம்பாக்கத்தில் தொடரும் பேயாட்சி!

கோடம்பாக்கத்தில் தொடர்ந்து பேய்ப் படங்கள் தயாரிப்பதில் தீவிரம் காட்டுகின்றனர் தயாரிப்பாளர்கள். காஞ்சனா 2-ன் வெற்றி அவர்களுக்கு பேய் மீது தனி காதலையே உண்டாக்கிவிட்டிருக்கிறது.

அந்த பேய்ப்பட வரிசையில் விரைவில் வரவிருக்கும் படம் உள்ளம் உள்ளவரை.

Ullam Ullavarai is another horror movie in Kollywood

இந்தப் படத்தை இந்துஜா பிலிம்ஸ் சார்பில் நாமக்கல் கே.சண்முகம் தயாரிக்கிறார்.

இப்படத்தை விஷ்ணு ஹாசன் இயக்குகிறார். இவர், ஜெயராம் நடித்த ‘புது நிலவு' படத்தை இயக்கியவர். ஹீரோவாக தெலுங்குப் பட நாயகன் சங்கர் நடிக்கிறார். மீனு கார்த்திகா, ப்ரீத்தி, அங்கனா ராய் மற்றும் காம்னா சிங் என நான்கு பேர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் கஞ்சா கருப்பு, மதன் பாப், மீரா கிருஷ்ணன், சித்ரா லெட்சுமணன், பரவை முனியம்மா, நந்தகுமார் ஆகியோர் நடிக்க, கராத்தே சிவவாஞ்சி, நியாமத்கான் மற்றும் தயாரிப்பாளர் நாமக்கல் கே.சண்முகம், அஸ்வின்குமார் ஆகிய நான்கு பேரும் வில்லன்களாக நடிக்கிறார்கள்.

Ullam Ullavarai is another horror movie in Kollywood

பி.கே.எச்.தாஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, சதிஷ் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார். அநியாயமாக கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் ஆவி, இன்னொரு பெண்ணின் உடம்புக்குள் புகுந்து கொண்டு தன்னை கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த 3 பேர்களை பழிவாங்கும் கதையம்சம் கொண்ட படம், 'உள்ளம் உள்ளவரை'.

சென்னை, பொள்ளாச்சி, ராசிபுரம், பெங்களூர் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.

 

இஸ்லாமிய மதத்துக்கு மாறுகிறாரா நடிகை விஜயலட்சுமி?

நடிகை விஜயலட்சுமி இஸ்லாமிய மதத்துக்கு மாறப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமான நடிகை விஜயலட்சுமி, உதவி இயக்குநராக உள்ள பெரோஸ் முகமதுவை நீண்ட காலமாக காதலித்து வந்தார். இப்போது பெற்றொர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது.

Vijayalakshmi denies conversion reports

சமீபத்தில், இனிமேல் நடிப்பதில்லை என்கிற முடிவை எடுத்திருந்தார் விஜயலட்சுமி. 'நடித்தது போதும், விரைவில் தயாரிப்பாளர் ஆகிறேன். படம் பற்றிய விவரத்தை விரைவில் அறிவிக்கிறேன். அனைவருடைய ஆதரவும் எனக்குத் தேவை' என்று அவர் பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டார். இதையடுத்து விஜயலட்சுமியின் திருமணம் பற்றிய அறிவிப்பு வெளியானது.

விஜயலட்சுமி - பெரோஸ் முகமதுவின் திருமணம் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.

விஜயலட்சுமி, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொள்வதால் விரைவில் மதம் மாறிவிடுவார் என்று கூறப்பட்டது.

இதுகுறித்து விஜயலட்சுமி ஒரு பேட்டியில், "பெரோஸூம் நானும் பள்ளிப் பருவத்தில் இருந்து நண்பர்களாக உள்ளோம். எங்களின் காதலை இரு குடும்பத்தாரும் ஏற்றுக்கொண்டார்கள்.

பெரோஸ், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நான் மதம் மாறவில்லை. இந்த விஷயத்தில் இருவரும் தெளிவாக இருக்கிறோம். நான் நானாக இருப்பேன். அவர் அவராக இருப்பார்" என்றார். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்பதிலும் உறுதியாக உள்ளார்.

 

உத்தம வில்லன்... அமோகமான முன்பதிவு!

கமல் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘உத்தமவில்லன்' படம் வரும் வெள்ளியன்று வெளியாகிறது.

இந்தப் படத்துக்கான ரிசர்வேஷன் இன்று தொடங்கியது. டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முதல் மூன்று தினங்களுக்கான படத்தின் மொத்த டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது தயாரிப்பாளர்களுக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.

Uthama Villain gets big response

இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ளன.

கமலுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா, மாளவிகா மேனன், நாசர், ஊர்வசி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மறைந்த இயக்குனர் சிகரம் பாலச்சந்தரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

 

ரஜினி - ஷங்கர் படம்... ஏ ஆர் ரஹ்மான் இசை!

ரஜினியின் புதிய படம் குறித்து பல்வேறு செய்திகள், யூகங்கள், வதந்திகள் உலா வரும் நிலையில், ஷங்கருடன்தான் அடுத்து படம் செய்கிறார் ரஜினி, அதற்கு இசை ஏ ஆர் ரஹ்மான்தான் என்று அடித்துச் சொல்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

ரஜினியின் புதுப் படத்தை இயக்குகிறார்கள் என்று பலரது பெயர்களும் அடிபடுகின்றன.

இப்போதைக்கு ஷங்கர் - ரஜினி கூட்டணி குறித்துதான் அதிகம் பேசப்படுகிறது.

AR Rahman to compose for Rajini - Shankar movie

இந்தப் படத்துக்கு இசை யார் என்பது வரை தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முதல் அனிருத் இசையமைப்பார் என்றார்கள். அடுத்து ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசை என்றார்கள். காரணம், ரஹ்மான் ரொம்பவும் பிஸியாக இருப்பதாலும், லிங்காவில் கொஞ்சம் அவர் இசை எடுபடாமல் போனதாலும், ஹாரிஸ் இசையமைப்பார் என்றார்கள்.

ஆனால் இப்போது, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்றும், அவரிடம் சமீபத்தில் ஷங்கரும் ரஜினியும் பேசி முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 

ரஜினியை இயக்க ராகவா லாரன்ஸுக்கும் ஆசையிருக்கு!

ரஜினியை இயக்க வேண்டும் என்ற ஆசை எந்த இயக்குநருக்குத்தான் இருக்காது. காஞ்சனா புகழ் ராகவா லாரன்ஸுக்கும் அப்படி ஒரு ஆசை ரொம்ப நாளாக.

அதை சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியிடமே தெரிவித்துமிருக்கிறார்.

சமீபத்தில் காஞ்சனா 2 படத்தை பார்த்த ரஜினி லாரன்ஸை பாராடியுள்ளார்.

Now Raghava Lawrence wants to direct Rajini

அப்போதுதான் தனது ஆசையை ரஜினியிடம் கூறியுள்ளார். ரஜினிக்கும் சந்திரமுகி மாதிரி ஒரு காமெடி த்ரில்லர் செய்யும் ஆசை இருப்பதால், மாஸ்டரின் அப்ளிகேஷனை மனதில் வாங்கிக் கொண்டாராம்.

இப்போதைக்கு அவர் கவனம் முழுவதும் ஷங்கர் இயக்கத்தில் உருவாகப் போகும் படத்தில்தான் என்கிறார்கள்.

இந்தப் படத்துக்குப் பிறகு ரஜினியை இயக்கும் அதிர்ஷ்டம் லாரன்சுக்கு கிடைக்கக் கூடும் என்கிறார்கள்.

 

அவுகளுக்கு கல்யாணமாமே..!?

டிவி செய்திவாசிப்பாளருக்கு கல்யாணம்... வில்லியின் சின்னத்திரை ரிட்டர்ன்... இசை தொகுப்பாளினியின் ஆசை என இன்றைய சின்னத்திரை திரை மறைவில் சுவாரஸ்யமான செய்திகள் இடம் பெற்றுள்ளன.

சின்னத்திரை சீரியலை பார்ப்பதை விட இதுபோன்ற கிசுகிசு படிப்பதில்தான் வாசகர்களுக்கு சுவாரஸ்யம் அதிகம். எனவே சத்தம் போடாம கம்முன்னு படிங்க...

அவகளுக்கு கல்யாணமாமே...

அந்த தலைமுறை டிவியில் துறு துறு செய்திவாசிப்பாளராக இருந்த ப்ரியமானவர் நட்சத்திர தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கல்யாண சீரியலில் நடித்து வருகிறார். செய்திவாசிப்பதை விட சீரியல் நடிப்பு சூப்பர் என்று பாராட்டுக்கள் குவியவே நகைக்கடை விளம்பரம் ஒன்றிலும் தலைகாட்டி வருகிறார். விரைவில் அவருக்கு டும் டும் டும் கொட்டப்போகிறார்களாம். பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்த மாப்பிள்ளை என்பது கூடுதல் தகவல்.

அண்ணாச்சி நீங்களுமா?

சூரிய தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சிகளை நடத்திவரும் அண்ணாச்சிக்கு குழந்தைகள் மத்தியில் தனி பிரியம். குழந்தைகளின் பேச்சுதான் நிகழ்ச்சியின் ஹைலைட்டே. இதுநாள்வரை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இருந்து புதிய மாற்றம் செய்துள்ளது நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவு. சிறப்பு விருந்தினராக நடிகரை வரவழைத்து அவர்களுடன் குழந்தைகளை பேச வைக்கின்றனர். குழந்தைகளின் பேச்சுக்கு சிறப்பு விருந்தினரும் கமெண்ட் கொடுக்கிறார். கடந்த வாரம் பெரிய நாட்டாமையின் மகன் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இது நட்சத்திர டிவி நிகழ்ச்சிக்கு போட்டியாக இந்த குழந்தைகள் நிகழ்ச்சியை உயர்த்த வேண்டும் என்பது தலைமையின் உத்தரவாம்.

புவன நடிகையின் வில்லி ஆதிக்கம்

சின்னத்திரையில் அறிமுகமாகி சீரியலில் வில்லியான புவன நடிகை சினிமாவில் காலூன்றினார். வழக்கு வம்பு என்று சிக்க அரசியல் பக்கம் எட்டிப்பார்த்தார். கொஞ்சகாலம் மீடியா கண்களில் படாமல் இருந்த புவன நடிகை சூரிய தொலைக்காட்சி சீரியல்களில் மீண்டும் வில்லியாக தலைகாட்டத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் மறுபடியும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கைதானாம்.

சங்கீத தொகுப்பாளினியின் ஆசை

அந்த இசைச்சேனலின் சங்கீதமான தொகுப்பாளினிக்கு மதுரை பூர்வீகமாம். படித்த உடன் சென்னைக்கு பேக் அப் ஆனவருக்கு ஐடி வேலையோடு அம்மணிக்கு காம்பயர் வேலையும் கிடைத்துள்ளது. சூர்ய தொலைக்காட்சியின் இசைச்சேனலில் தற்போது காம்பயர் வேலை செய்யும் சங்கீத தொகுப்பாளினிக்கு ரியாலிட்டிஷோ, விருது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் ஆசையாம்...

நெகிழ வைத்த தளபதி

நகைக்கடை விளம்பரத்தில் தளபதி நடிகர் தன் கார் டிரைவரின் மகள் ஐ.ஏ.எஸ் பாஸ் செய்ததற்காக நகை வாங்கி கொடுக்கிறார். முதலாளி - தொழிலாளி உறவை பலப்படுத்துவதாக அமைந்திருந்த இந்த விளம்பரம் எடுக்கப்பட்ட விதம், நேர்த்தி ஆகியவை மனதுக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது என்று பாராட்டுகின்றனராம் ரசிகர்கள்.

 

தூக்கு மர பூக்கள்... ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்கள் கதை படமாகிறது!

ஆந்திராவில் செம்மரக்கட்டை வெட்டினார்கள் என்று சொல்லி 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஒரு படம் உருவாகிறது.

இந்தப் படத்துக்கு தூக்கு மர பூக்கள் என்று தலைப்பிட்டுள்ளனர்.

இந்தப் படத்தை ஜெய விஜய சாமுண்டீஸ்வரி புரொடக்ஷன் - ஸ்காட் மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

A movie on 20 Tamils Killing in Andhra

முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கவிருக்கின்றனர். திரைக்கதை, வசனத்தை கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் எழுத, கதை எழுதி இயக்குகிறார்கள் இரட்டையர்களான வி.ஆர்.காளிதாஸ், வி.அகஸ்டின்.

செம்மரக்கட்டை வெட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் மானிதாபமின்றி, துன்புறுத்தி, உடல் உறுப்புகளை சிதைத்து அப்பாவிகளைக் கொன்ற கொடூரத்தின் பின்னணி என்ன? என்ற உண்மை சம்பவத்தை வெளிப்படுத்தவே இப்படம் என்றார்கள் இயக்குனர்கள்.

சுனில் சேவியர் இசையமைக்க, பாபு ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்ற பகுதிகளிலேயே இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பை வெளியிடப் போவதாக இயக்குநர்கள் தெரிவித்தனர்.

 

'தப்பா செய்தி பரப்பாதீங்க.. அந்தக் காரை நான் வாங்கல!' - அஜீத்

நடிகர் அஜித், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் நேற்று ஒரு செய்தி பரவியது.

அந்த காரை வடபழனி ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக கொண்டுவந்தபோது எடுத்த படங்கள் என வெள்ளை நிற பிஎம்டபிள்யூ ஐ-8 காரின் படங்களும் இணையம் முழுக்க வலம் வந்தன.

'Ajith not purchased BMW I 8 car'

கார் ரேஸில் பிரியம் கொண்டவர் என்பதால், அஜித் இதை வாங்கியிருக்கக் கூடும் என்ற நம்பிக்கையில், 'பாத்தீங்களா.. நம்ம தல காரை' என அஜித் ரசிகர்கள் பரவசப்பட்டார்கள்.

ஆனால், "அஜித், பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளார் என்கிற செய்தி தவறு. தேவையில்லாத செய்திகளைப் பரப்பவேண்டாம்," என்று அஜித் தரப்பிலிருந்தே விளக்கம் வெளிவந்துள்ளது.

 

வரும் ஞாயிறு காலை எட்டரை மணிக்கு நிழல்கள் ரவியைப் பார்க்க மறந்துடாதீங்க!

ஞாயிறன்று வீட்டுக்கு விருந்தினர் வந்தாலே மகிழ்ச்சிதான்.

வேந்தர் டிவியில் திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 7.00 மணிமுதல் 9.00மணிவரை ஒளிபரப்பாகும் பல்சுவை நிகழ்ச்சி 'புத்தம் புது காலை' இந்த நிகழ்ச்சியில் ஆன்மீகம், பொதுஅறிவு, ராசிபலன் என பல்வேறு நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்பட்டு நேயர்களுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

Nizhalgal Ravi on Vendhar TV

இந்த நிகழ்ச்சியின் தனித்தன்மையாக, ஞாயிற்றுக்கிழமை தோறும் பிரபல திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு தங்கள் திரைப்பட அனுபவங்களையும் முக்கிய நிகழ்வுகளைவும் நேயர்களோடு பகிர்ந்து கொள்ளும் சிறப்பு புத்தும் புது காலையாக ஒளிபரப்பாகிறது.

Nizhalgal Ravi on Vendhar TV

அந்த வகையில் வரும் ஞாயிறன்று பிரபல நடிகர் நிழல்கள் ரவி, தன்னுடைய திரை அனுபவங்களை நேயர்களோடு பகிர்ந்துகொள்கிறார். இந்த சிறப்பு புத்தும் புது காலை வரும் ஞாயிறு அன்று காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.