உலக பயணம் போகும் ஹாரிஸ்... 3டி இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்!


இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் உலக நாடுகளில் இசைப்பயணம் மேற்கொண்டு மேடை இசை கச்சேரிகள் நடத்துகிறார். 3 டி முறையில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதாக அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து ஹாரீஸ் ஜெயராஜ் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:

நான் இசை அமைப்பாளராகி 10 வருடங்கள் ஆகி விட்டன. கவுதம்மேனன் என்னை அறிமுகப்படுத்தினார். மேடை இசை நிகழ்ச்சிகள் நடத்தும்படி ரசிகர்களிடம் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்தன. அதை ஏற்று உலக இசைப்பயணம் செல்கிறேன்.

முதல் இசை நிகழ்ச்சி சென்னை மாயாஜாலில் அக்டோபர் 2-ந்தேதி நடைபெறும். கோவையில் அக்டோபர் 16-ந்தேதியும் ஹைதராபாத்தில் 22-ந்தேதியும், துபாயில் நவம்பர் 18-ந்தேதியும், மலேசியாவில் டிசம்பர் 3-ந்தேதியும் நடைபெறும்.

3 டி இசை நிகழ்ச்சிகள்

3டி தொழில் நுட்பத்தில் ரசிகர்களை கவரும் வண்ணம் இசை நிகழ்ச்சி இருக்கும். வெளிநாட்டு கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும் இசை கச்சேரியில் இடம் பெறும். பிரபல பாடகர்கள் ஹரிகரன், கார்த்திக், திப்பு, கிரிஷ், ஹரிணி, ஆண்ட்ரியா, சின்மயி, பென்னிதயாள், நரேஷ் அய்யர், ஹரீஷ் ராக வேந்திரா உள்பட 17 பேர் மேடையில் தோன்றிப் பாடுவார்கள்.

உலகத் தரத்தில், மைக்கேல் ஜாக்ஸன் போன்றோரின் இசை நிகழ்ச்சி மாதிரி தரமானதாக இந்த கச்சேரிகள் அமைய வேண்டும். சாதாரண மக்களும் உயர்ந்த தரத்திலான துல்லிய சவுண்டில் இந்த நிகழ்ச்சிகளைக் கேட்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

டெக்பிரண்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலக தரத்தில் புது அனுபவமாக இது இருக்கும்.

இயக்குனர் விஜய் மேற்பார்வையில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்காக 4 மாதங்கள் படங்களுக்கு இசை அமைப்பதை நிறுத்தி வைத்துள்ளேன்," என்றார்.
 

சினிமா திரையரங்குகளில் கட்டணம் குறையுமா?


திரையரங்குகளில் கட்டணங்களை ஒழுங்குபடுத்துமாறு திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதால், விரைவில் கட்டணங்கள் ஓரளவு குறைக்கப்படும் எனத் தெரிகிறது.

தற்போது மல்டி பிளக்ஸ் அரங்குகளில் அதிகபட்சமாக ரூ.120 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சென்னை நகரம் தவிர்த்த பிற நகரங்களில் இந்த அளவு கட்டணம் வசூலிக்கக் கூடாது. அனைத்து வசதிகளும் நிறைந்த நவீன பல்திரை அரங்குகளுக்கு மட்டுமே இந்த அதிகபட்ச கட்டணம் பொருந்தும்.

ஆனால் சென்னைக்கு வெளியில் உள்ள பல திரையரங்குகளும் தாறுமாறாக கட்டணங்களை உயர்த்தி வசூலிக்கின்றன.

எனவே டிக்கெட் கட்டணத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். குளிர்சாதன தியேட்டர்களுக்கும் குளிர் சாதன வசதியில்லாத தியேட்டர்களுக்கும் தனித்தனி கட்டணங்கள் நிர்ணயிக்க வேண்டும் என்றும், தியேட்டர்களில் குறிப்பிட்ட காட்சிகள்தான் திரையிட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.

"இப்போது தியேட்டர்களில் 4 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் 5 காட்சிகளுக்கு அனுமதிக்கப்படுகிறது. இதைத் தவிர்த்து, எத்தனை காட்சிகள் வேண்டுமானாலும் வசதிப்படி திரையிட்டுக் கொள்ள அரசு உத்தரவிட வேண்டும். தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றுதான் கேட்கிறோம்," என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பேரவை தலைவர், அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.

இந்த கோரிக்கையை அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டணம் முறைப்படுத்தப்பட்டால், ஒற்றைத் திரை கொண்ட அரங்குகளின் கட்டணங்கள் குறையும் எனத் தெரிகிறது. அதேபோல மல்டிப்ளெக்ஸ் என்ற பெயரில், டப்பா திரையரங்குகளில் தாறுமாறாக வசூலிக்கப்படும் கட்டணத்திலும் மாறுதல் வரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
 

திப்பு சுல்தான் வேடத்தில் கமல் ஹாஸன்!


இந்திய சரித்திரத்தில் முக்கிய இடம் பெற்ற வரலாற்று நாயகனான திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார் கமல் ஹாஸன்.

18-ம் நூற்றாண்டில் இந்தியாவின் முக்கிய சமஸ்தானமாகத் திகழ்ந்த மைசூரின் மன்னராகத் திகழ்ந்தவர் திப்பு சுல்தான். போர்க் கலை, ஆட்சித் திறன், பொருளியல் நிர்வாகம் என பலவற்றில் மிகச் சிறந்தவராகத் திகழ்ந்தவர் திப்பு.

பிரெஞ்சுப் பேரரசன் நெப்போலியனின் இந்திய பிரதிநிதியாகக் கருதப்பட்டவர்.

திப்பு சுல்தானின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு புதிய படம் ஒன்று தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகிறது.

இந்தப் படத்தில் திப்பு சுல்தானாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் கமல் ஹாஸன். ஜான் பால் இந்தப் படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதுகிறார். வயலார் மாதவன் இயக்குகிறார்.

'திப்புவும் உன்னியர்ச்சயும்' என இந்தப் படத்துக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. தமிழ் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை.

பழஸ்ஸி ராஜா படத்தைத் தயாரித்த கோகுலம் கோபாலன், இந்தப் படத்தை பிரமாண்ட செலவில் தயாரிக்கிறார். உன்னியர்ச்சா என்பது ராணியின் பெயர். வடக்கு மலபார் பகுதியை ஆட்சி செலுத்திய உன்னியர்ச்சா பெரிய வீராங்கனையாவார். திப்பு மற்றும் உன்னியர்ச்சா சம்பந்தப்பட்ட பகுதியை மட்டும் படமாக்குகிறார்கள்.

இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, கோகுலம் கோபாலன் நேற்று திருவனந்தபுரத்தில் அறிவித்தார்.
 

என்ன நடந்தாலும் நீங்கதான் பொறுப்பு! - தயாரிப்பாளர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை


சென்னை: "திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் அசம்பாவிதங்கள் நடந்தால், நீங்களே பொறுப்பு'' என்று பட அதிபர்கள் சங்க தலைவருக்கும், செயலாளருக்கும் சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை பிலிம்சேம்பர் தியேட்டரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தியேட்டரில் 200 பேர் மட்டுமே அமரக்கூடிய வசதி இருப்பதாகவும், ஆனால் 1900 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே அந்த தியேட்டரில் பொதுக்குழு கூட்டம் நடத்த முடியாது என்றும், மீறி நடத்தினால், அதனால் ஏற்படும் விபரீதங்களுக்கு நீங்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர், செயலாளர் ஆகிய இருவருக்கும் ஆயிரம் விளக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பிரச்சினை எழுப்பும் நோக்கத்தில் இரு குழுக்கள் முயன்று வருவதாக போலீசாருக்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சிலர் தகவல் அளித்திருப்பதால், இந்த எச்சரிக்கையை போலீசார் விடுத்துள்ளனர்.

இதனால் நாளைய கூட்டத்தில் ரசாபாசமான நிகழ்வுகள் அரங்கேறக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்ட தடை விதிக்க வேண்டும் - கமிஷனரிடம் பாபுகணேஷ் புகார்


சென்னை: தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுவை கூட்ட தடைவிதிக்க வேண்டும் என்று நடிகர் பாபுகணேஷ், போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான பாபுகணேஷ் நேற்று காலையில் போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "நான், 'பாலவிக்னேஷ் கிரியேஷன்ஸ்' என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறேன். 10 படங்களை தயாரித்துள்ளேன். 10 படங்களை டைரக்டு செய்துள்ளேன். 25 படங்களுக்கும் மேல் நடித்துள்ளேன்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 4-ந் தேதி அன்று (நாளை) நடைபெறும் என்று அதன் தலைவராக தன்னை பிரகடனம் செய்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிவித்துள்ளார். இது சம்பந்தமாக சென்னை 5-வது சிட்டிசிவில் கோர்ட்டில் வழக்கு உள்ளது. 5-ந் தேதி அன்று அந்த வழக்கில் விசாரணை நடைபெற உள்ளது.

அதற்குள்ளாக எஸ்.ஏ.சந்திரசேகரன் 4-ந் தேதி அன்று பொதுக்குழுவை கூட்டியிருக்கிறார். பொதுக்குழு கூட்டம் ஆயிரம் விளக்கில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அரங்கத்தில் 200 பேர்தான் உட்கார முடியும். ஆனால் பொதுக்குழு உறுப்பினர்கள் 1900 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

கண்டிப்பாக அந்த கூட்டத்தில் தகராறு நடைபெற வாய்ப்புள்ளது. எனவே அதை தடை செய்யவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். ஒருவேளை தடை செய்யமுடியாவிட்டால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவேண்டும் என்று கேட்டுள்ளேன்.

இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் உதவி கமிஷனரை விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். கண்டிப்பாக நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்," என்றார்.
 

சென்னையில் மட்டும் ரூ 3.75 கோடி வசூலித்த தெய்வத் திருமகள்!


முன்பெல்லாம் சுமாரான படம் கூட நூறு நாட்களைக் கடந்து ஓடியது. நல்ல படங்கள் வெள்ளி விழா கண்டன.

ஆனால் இன்று மக்கள் மனம் மாற்றுப் பொழுதுபோக்குகளில் லயித்துவிட்டதால், அனைத்து வகையிலும் சிறந்த படமாக இருந்தால் மட்டுமே இப்போது 50 நாட்களையாவது ஒரு படம் தொடும் நிலை உள்ளது.

அந்த வகையில், சமீபத்தில் வெளியாகி, பெண்கள் உள்ளிட்ட குடும்ப ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற படம் தெய்வத் திருமகள். விக்ரம், அனுஷ்கா, சந்தானம், அமலாபால் நடித்துள்ள இந்தப் படத்தை மோகன் நடராஜன் தயாரித்துள்ளார்.

காட்சிக்குக் காட்சி இந்தப் படம் ஒரு ஆங்கிலப் படத்தின் உல்டா என்றாலும் கூட, தமிழில் அதை இயக்குநர் விஜய் கொடுத்திருந்த விதம் இதயத்தைத் தொட்டது.

இதனால் படம் அனைத்து சென்டர்களிலும் சிறப்பாக ஓடி 50 நாட்களைக் கடந்துள்ளது.

சென்னை நகரில் மட்டும் ரூ 3.75 கோடி வசூலைப் பெற்றுள்ளது இந்தப் படம். விக்ரம் நடித்த படங்களில் சென்னையில் அதிக வசூலைக் குவித்த படம் என்றால் அது தெய்வத் திருமகள்தான் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில்!