டிவி நடிகை ஹேமாஸ்ரீ கொலையில் ஆந்திர அமைச்சருக்கு தொடர்பு?
பெங்களூர் : கன்னட டிவி நடிகை ஹேமஸ்ரீ கொலையில் ஆந்திர அமைச்சருக்கு தொடர்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகவைச் சேர்ந்த கோடீஸ்வரர் சுரேந்திர பாபுவை நடிகை ஹேமஸ்ரீ சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின் சுரேந்திரபாபு ஏற்கனவே திருமணமானவர் என்றும், குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் ஹேமாஸ்ரீக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சுரேந்திரபாபுவுடன் வாழ விருப்பம் இல்லை என்று போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக இருவரும் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூருக்கு சென்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் அங்குள்ள பண்ணை வீட்டில் தங்கினார்கள். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திடீரென்று ஹேமாஸ்ரீ மர்மமாக இறந்தார்.
உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஹேமாஸ்ரீ மரணம் அடைந்ததாக சுரேந்திரபாபு போலீசில் கூறினார். ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஹேமஸ்ரீயின் பெற்றோர்கள் சந்தேகம் எழுப்பினர். பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஹேமாஸ்ரீயின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் அவர் இயற்கையாக மரணம் அடையவில்லை என்றும் தெரிவித்தனர். ஹேமாஸ்ரீக்கு அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுத்து இருந்ததாகவும் கூறினர்.
அரசியல் பிரமுகருக்கு தொடர்பு
இதையடுத்து நடிகை ஹேமாஸ்ரீயை கொலை செய்ததாக சுரேந்திரபாபுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து பரிசோனை செய்தனர். அதில் ஹேமாஸ்ரீ கொலை செய்யப்பட்ட பின் ஆந்திர அமைச்சர் ஒருவருடன் சுரேந்திரபாபு பலதடவை பேசி இருப்பது தெரியவந்தது. அத்துடன் ஹேமாஸ்ரீ இருந்த காரில் காங்கிரஸ் பிரமுகர் ரவி என்பவரும் இருந்துள்ளார்.
தடயங்கள் அழிப்பு
இதையடுத்து ஆந்திர அமைச்சரிடம் விசாரணை மேற்கொள்ளவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆனால் அமைச்சர் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை அனந்தபூர் பண்ணை ஊழியர்கள் அழித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. அமைச்சரின் தூண்டுதலில் போலீஸ் விசாரணைக்கும் அவர்கள் ஒத்துழைக்க மறுப்பதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது.
ஹேமஸ்ரீயின் கொலை வழக்கு விசாரணை போலீசார் தீவிரபடுத்தியுள்ள நிலையில் கொலையாளிகளுக்கும் கொலையில் தொடர்புடையவர்களும் விரைவில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வசூலில் புதுப்படங்களை மிஞ்சும் எம்ஜிஆர், ரஜினி படங்கள்!
சென்னை மீரான்சாகிப் தெருப் பக்கம் போனால் அடிக்கடி கோல்ட் என்ற வார்த்தையைக் கேட்க முடியும்.
இந்த கோல்டுக்கு அர்த்தம் தங்கம் அல்ல... மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள்!
எத்தனை ஆண்டுகள் கழித்து, எந்த சென்டரில் போட்டாலும் லாபம் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தரும் படங்கள் இந்த இருவரும் நடித்தவரை என்பதால் அப்படி ஒரு பெயர்.
இதோ... அந்த நம்பிக்கையை இந்த 2012-லும் காப்பாற்றித் தந்திருக்கின்றன எம்ஜிஆர் படங்கள்.
சென்னையில் இப்போது பரவலாக எம்ஜிஆர் மற்றும் ரஜினியின் பழைய படங்களைத் திரையிட்டு, காத்துவாங்கிக் கொண்டிருந்த தியேட்டர்களில் கூட்டத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.
எம்ஜிஆர் நடித்த நாடோடி மன்னன், எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப் பெண், வேட்டைக்காரன் போன்ற படங்களை ஒற்றைக் திரை அரங்குகளில் வெளியிட்டு லாபம் பார்த்தனர். இப்போது அந்த வரிசையில் ஒளிவிளக்கு படத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்தப் படம் கடந்த ஒரு வாரகாலமாக மகாலட்சுமி அரங்கில் நல்ல கூட்டத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இரண்டாவது வாரமாக இந்தப் படம் தொடர்கிறது.
புறநகர்ப் பகுதிகளில் எம்ஜிஆரின் அடிமைப் பெண்ணை மீண்டும் வெளியிட்டுள்ளனர்.
ரஜினி படங்களில் எவர்கிரீன் ஹிட் படமான பாட்ஷாவை சென்னை மற்றும் புறநகர்களில் மீண்டும் மீண்டும் திரையிட்டு வருகின்றனர். அடுத்து படையப்பாவை வெளியிடும் முயற்சியில் உள்ளனர்.
பேப்பர் விளம்பரம் எதுவும் இல்லாமலேயே இந்தப் படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் திலகம் சிவாஜி நடித்த பெரும் வெற்றிப் படமான திருவிளையாடலும் இப்போது மீண்டும் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியான பெரிய படங்கள் படுத்துவிட்ட சூழல், தீபாவளி வரையிலான இடைவெளியில் படங்கள் இல்லாத போன்றவற்றைச் சமாளிக்க இந்த இரு சாதனையாளர்களின் படங்கள்தான் இப்போது உதவி வருகின்றன!
புது அவதாரம் எடுக்கும் 'சொல்வதெல்லாம் உண்மை'.. அறிமுகமாகும் 'மக்கள் ரிப்போர்டர்'!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில் பார்வையாளர்களையும் பங்கேற்கவைக்கும் வகையில் மக்கள் ரிப்போர்ட்டர் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளனர்.
கணவனை சந்தேகப்படும் மனைவி. மனைவி இருக்கும்போதே அடுத்த பெண்ணோடு தொடர்பு உள்ள கணவன். மாமியார் மருமகள் பிரச்சனை என குடும்ப சண்டையை ஊர் அறியச் செய்வதில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு பெரும் பங்குண்டு. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிர்மலா பெரியசாமி இதற்காக கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்.
இந்த நிகழ்ச்சி இப்போது அடுத்த கட்டத்திற்கு தயாராகிறது. பார்வையாளர்களும் பங்கேற்கும் வகையில் `மக்கள் ரிப்போர்ட்டர்` என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, விழுப்புரம், மதுரை, கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பார்வையாளர்களை மக்கள் ரிப்போர்ட்டர்களாக ஆக்குவதே இதன் திட்டம்.
இதில் இணைய விரும்புகிறவர்கள் அடுத்து வரும் ஒரு மாத நிகழ்ச்சியை ஊன்றிக் கவனித்து அதற்கான விமர்சனங்களை குறித்து வைத்துக் கொள்ள வேண்டுமாம். ஒவ்வொரு சனிக் கிழமையன்றும் `சொல்வதெல்லாம் உண்மை குழுவினர்' குறிப்பிட்ட நகரத்திற்கு நேரடியாகச் சென்று நிகழ்ச்சிகள் கேள்விகளைக் கேட்பார்கள். அப்போது சரியான பதில்களை கூறுவோர், இந்த மக்கள் ரிப்போர்ட்டர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
டிஆர்பியை அதிகமாக்க எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா?
அப்பா சயீப் அலிகான் - கரீனா 'சங்கீத் சடங்கு': முதல் மனைவி அம்ரிதா, மகன், மகள் பங்கேற்பு!!
மும்பை: படோடி அரண்மனையில் வெகு விமரிசையாக ஆரம்பித்துள்ள சயீப் அலிகான் - கரீனா கபூர் திருமண நிகழ்ச்சிகளில், சயீப்பின் மகனும் மகளும் பங்கேற்றனர். சயீப்பின் முதல் மனைவி அம்ரிதா சிங்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
நடிகை கரீனாகபூரும், நடிகர் சயீப் அலிகானும் கடந்த பல வருடங்களாக காதலித்து, இப்போது திருமணம் செய்துகொள்கின்றனர். நாளை படோடி அரண்மனையில் திருமணம் நடக்கிறது.
சயீப் அலிகான் ஏற்கெனவே நடிகை அம்ரிதா சிங்கை காதலித்து திருமணம் செய்தார். அவர்களுக்கு சாரா என்ற மகளும், இப்ராகிம் என்ற மகனும் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக சயீப் அலிகான் - அம்ரிதாசிங் விவகாரத்து பெற்று பிரிந்தனர்.
அம்ரிதாசிங் தனது 2 குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார். முதல் மனைவியை விவாகரத்து செய்தாலும் சயீப் அலிகான் அடிக்கடி லண்டன் சென்று குழந்தைகளைப் பார்த்து வருகிறார். இருவரும் நட்புடனே இருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது தனது திருமணத்தை மகள், மகன் நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று சயீப்அலிகான் விருப்பம் தெரிவித்தார்.
இதை அவர் கரீனா கபூர் குடும்பத்தினரிடம் தெரிவித்த போது, அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து நேற்று இரவு நடந்த திருமண சடங்கான சங்கீத் நிகழ்ச்சியில் சாராவும் இப்ராகிமும் கலந்து கொண்டனர். முதல் மனைவி அம்ரிதாவும் நிகழ்ச்சிக்கு வந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை நடக்கும் தந்தை திருமணத்தில் மகளும், மகனும் கலந்து கொள்கிறார்கள். அம்ரிதாவும் வருவார் என்று கூறப்படுகிறது.
ஏம்ப்பா, இந்த சீரியலை நைட்ல போடக்கூடாதாப்பா?
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பார்க்கும் படியாக இல்லை என்ற புகார் ஒருபக்கம் இருந்தாலும் இரவு நேரத்தில் ஒளிபரப்ப வேண்டிய சீரியல்களை பகல் நேரத்தில் ஒளிபரப்பி நெளிய வைக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இல்லத்தரசிகளிடையே எழுந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் காலை 11 மணிக்கு ‘பொம்மலாட்டம்' என்ற புதிய தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. உறவுகள் முடிந்த உடன் அதற்குப் பதிலாக ஒளிபரப்பாகிவரும் இந்த தொடரை சான் மீடியா தயாரித்துள்ளது. டெல்லிகுமார், கிரிஜா, அப்சர், ஸ்ரீ குமார், கணேஷ்கர்,காத்தாடி ராமமூர்த்தி ப்ரீத்தி சஞ்சீவ், வித்யா, கௌரி லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். ஷிவா இயக்கியுள்ள இந்த தொடருக்கு வைரமுத்து பாடல் எழுதியிருக்கிறார், தினா இசையமைத்திருக்கிறார்.
அப்சர் கதாநாயகனாக நடித்துள்ள இந்த தொடரில் ஸ்ரீ குமார் வில்லனாக, அதுவும் பெண் பித்தராக நடித்திருக்கிறார். கிரிஜா கதாநாயகியாக நடித்துள்ள இந்த தொடரில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் ப்ரீத்தி சஞ்சீவ் நடித்திருக்கிறார். இவரும் வில்லத்தனம்தான் செய்யப் போகிறார் என்று ஊகிக்க முடிகிறது.
குடும்ப கதையாக தொடங்கிய சீரியலில் முதல்நாளே அதிர்ச்சியளிக்கும் வகையில் நெளியக்கூடிய சீன்களை வைத்திருக்கின்றனர்.அதிலும் ஸ்ரீகுமாரின் செயல்பாடுகள், செய்யப்பாடுகள், வசனங்கள், முக பாவனைகள் குடும்பத்தினரை ஓவராக நெளிய வைப்பதாக உள்ளன.
கதைக்கும் காட்சி அமைப்பிற்கும் தேவையான சீன்களைத்தான் வைத்திருக்கிறோம் என்று இயக்குநர் தயாரிப்பில் கூறினாலும் இந்த சீரியலை மிட்நைட்டில்தான் போட்டாக வேண்டும் என்று காளியாத்தா சாமி முன்பு அடித்துக் கூறும் லெவலுக்கு இது உள்ளது.
மெகா தொடர்களை பெரும்பாலும் பெண்கள்தான், குறிப்பாக குடும்பத் தலைவிகள்தான் ரசித்துப் பார்க்கின்றனர். அவர்களை கெடுத்து விடாதீங்கப்பா...
லண்டன் பட விழாவுக்கு ஷிரியாவைக் கூட்டிச் சென்ற சல்மான் ருஷ்டி
லண்டன்: லண்டனில் நடந்த பட விழாவுக்கு நடிகை ஷிரியாவுடன் போய் நின்று அனைவரது பார்வையையும் ஷிரியா மீது விழ வைத்துள்ளார் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி.
இந்தியாவில் பிறந்தவர் சல்மான் ருஷ்டி. தான் எழுதிய சாத்தானிக் வெர்சஸ் நூல் மூலம் ஈரான் மதத் தலைவர் கொமேனியின் கடும் கோபத்துக்கு உள்ளாகி, மரண தண்டனை விதிக்கப்பட்டவர். எப்போதோ இங்கிலாந்தில் செட்டிலாகி விட்ட சல்மான் ருஷ்டி தொடர்ந்து பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் வாழ்ந்து வருகிறார்.
தற்போது இவர் 1981ம் ஆண்டு எழுதிய இந்திய, பாகிஸ்தான் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட மிட்நைட்ஸ் சில்ட்ரன் நாவல் திரைப்படமாகிறது. இந்தப் படம் லண்டனில் தொடங்கியுள்ள 56வது பிஎப்ஐ பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.
இந்தப் பட விழாவுக்கு தன்னுடன் படத்தின் நாயகியான ஷிரியாவையும் உடன் அழைத்து வந்திருந்தார் ருஷ்டி. இதனால் பட விழாவுக்கு வந்த அத்தனை பேரின் கண்களும் ஷிரியா மீதுதான் விழுந்து எழுந்தன. இந்தியப் பாரம்பரிய முறையிலான சேலையை படு ஸ்டைலாக அணிந்து வந்து அத்தனை பேரையும் ஈர்த்து விட்டார் ஷிரியா.
அவர் கட்டியிருந்த பிங்க் மற்றும் தங்க நிற பார்டருடன் கூடிய பச்சை நிற சேலையில் அப்படியே அப்சரஸ் மாதிரி காட்சியளித்தார் ஷிரியா. இந்தப் படத்தை தீபா மேத்தா இயக்கியுள்ளார். அவரும் விழாவுக்கு வந்திருந்தார்.
இந்தப் படம் பெரும் சர்ச்சைக்குரிய விஷயங்களைத் தொட்டிருப்பதால் இப்படத்தை இந்தியாவில் திரையிட யாருமே முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஸ்வரூபம் இசை... 'ச்சும்மா பறந்து பறந்து' வெளியிடும் கமல்!
சென்னை: விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டுக்காக வாடகைக்கு ஒரு விமானத்தை எடுத்துள்ளார் கமல் ஹாஸன்.
நவம்பர் 7-ந்தேதி சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் நடத்துகிறார்.
இன்றைக்கு பெரிய பட்ஜெட் படங்களின் இசை வெளியீடு வெளிநாடுகளில்தான் அதிகம் நடக்கிறது. கோச்சடையான் கூட ஜப்பானில்தான் நடக்கிவிருக்கிறது.
ஆனால் ‘விஸ்வரூபம்' படத்தின் பாடல்களை வெளிநாட்டில் வெளியிடாமல் தமிழகத்திலேயே முக்கிய நகரங்களில் விழா நடத்தி கமல் வெளியிடுகிறார்.
3 நகரங்களிலும் ஒரே நாளில் இசை வெளியீட்டு விழாக்களில் பங்கேற்பதற்காக ஒரு குட்டி விமானத்தையே வாடகைக்கு எடுத்துள்ளார் கமல்.
முதலில் மதுரையில்தான்...
சென்னையில் இருந்து புறப்பட்டு முதலில் மதுரை செல்கிறார். இங்குதான் விஸ்வரூபத்தின் முதல் இசை சிடி வெளியிடப்படுகிறது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோவையில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார்.
இறுதியாக சென்னை விழாவில் பங்கேற்று இசையை வெளியிடுகிறார். இந்த விழாவில் முன்னணி நடிகர்-நடிகைகள் பங்கேற்க உள்ளனர்.
உங்களையே அழவைச்சிட்டாங்களே கோபிநாத்?
அறிவானவன் செய்யும் ஒவ்வொரு செயலும் ஸ்மார்ட்டாக இருக்கும். அவனை காதலிப்பது எனக்கு போதைதான் என்கின்றனர் அறிவை விரும்புபவர்கள். பெரும்பாலான பெண்கள் அவர்களின் ஆசிரியர்கள் பற்றியும் அவர்களின் அறிவைப் பத்தியும் இதன் காரணமாகவே அவர் என்னை ஈர்க்கிறார் என்கின்றனர் இளம் யுவதிகள்.
இது ஞாயிறன்று விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘நீயா நானா' விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியவர்கள் கூறிய வார்த்தைகள். விவாதத்திற்கு எத்தனையோ விசயங்கள் இருக்கையில் இந்த வாரம் காதலில் ஈர்ப்பது அறிவா? அழகா என்ற கருத்தினைப்பற்றி பேசினார்கள்.
அறிவார்ந்தவர்களை ஏன் பிடிக்கிறது என்பது பேசியவர்களுக்கு, சரியாக தங்களின் கருத்துக்களை முன்வைக்கத் தெரியவில்லை. அறிவார்ந்தவர்களுக்கு இதனால் கடுப்பாகிப்போன கோபிநாத் தான் போட்டிருந்த கோட்டை கழட்டிவிட்டு போங்கப்பா போய் லவ் பண்ணிட்டு வந்து பேசுங்க என்று கூறிவிட்டு போய்விட்டார்.
எந்த மாதிரியான ஆண் உங்களுக்குப்பிடிக்கும் என்று கல்லூரி மாணவிகளிடையே கருத்துக்கணிப்பை நடத்தியது. பெண்கள் கூறியது எல்லாம் சினிமா நடிகர்கள். எனக்கு ரன்பீர் பிடிக்கும், விராட்கோஹ்லி பிடிக்கும், என இஷ்டத்திற்கு அள்ளிவிட்டனர் அழகுதான் அவர்களை ஈர்த்திருக்கிறது. அறிவானவர்களைப் பற்றி யாருமே கூறவில்லை.
அதேபோல் சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரிகளில் எந்த கல்லூரி பெண்களை உங்களைப் பிடிக்கும் என்று இளைஞர்களிடையே அறிவார்ந்த(!) கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. எத்திராஜ் கல்லூரி, குவின்மேரிஸ் கல்லூரி, என தங்களுக்கு பிடித்த கல்லூரி மாணவிகளைப் பற்றி கூறினார்கள். எதனால் கல்லூரி மாணவிகளைப் பிடிக்கிறது என்றும் கூறினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக குமுதம் சிநேகிதி எடிட்டரும், நடிகை லட்சுமி நாயரும் பங்கேற்றனர். காதலுக்கு ஏன் அழகும், அறிவும் பிடிக்கிறது என்பதைப்பற்றி தெரிவித்தனர்.
அழகானவர்களை பிடிப்பவர்களுக்கு அறிவானவர்களை பிடிப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் தலைக்கணம் பிடித்தவர்கள் என்ற எண்ணம் அழகானவர்களை காதலிப்பவர்கள் கூறுகின்றனர். அதேபோல் அறிவானவர்களுக்கு அழகானவர்களை பிடிப்பதில்லை அதற்கும் பல காரணங்கள் முன்வைக்கப்பட்டன.
காதலுக்கு அழகையும், அறிவையும் மட்டுமே ஏன் கேட்கின்றனர். அதையும் தாண்டி ஒரு மனிதாபிமானம் என்ற ஒன்று இருக்கிறது. இந்த செயல்தான் மனதளவில் இணையக்காரணமாக இருக்கும் அதைப்பற்றி யாருமே பேசவில்லை.
அழகு என்பது முதலில் கண்ணுக்குள் நுழைந்தாலும் அறிவு இதயத்தை ஈர்த்தாலும் மனிதாபிமான செயல், காதலிக்கு ஒன்று என்றால் துடித்துப்போகும் குணம், காதலனுக்கு ஒன்று என்றால் உறங்காமல் விடிய விடிய பிரார்தனை செய்வது என்ற மனிதநேயச் செயல் இருக்கிறது. இதைப்பற்றி ஒருவரும் பேசவில்லை. கோபிநாத் கூட சொல்லவில்லை.
அடுத்தவாரமாவது விவாதத்திற்கு நல்ல தலைப்பை தேர்ந்தெடுங்க கோபிநாத்.
விவேகானந்தரை அவமதிப்பதா... சூர்யாவின் மாற்றான் படத்துக்கு எதிர்ப்பு
சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ள படம் மாற்றான். இப்படம் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
படம் திரையிடப்பட்ட நாளிலேயே சேலத்தில் தியேட்டர் மேற்கூரை இடிந்து விழுந்து பலர் காயமடைந்தனர். இந்த நிலையில், திருச்சியில் மாற்றான் படத்துக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.
மாற்றான் படத்தில் சுவாமி விவேகானந்தரை அவமதிக்கும் வகையில் காட்சி அமைந்துள்ளதாக கூறி இந்திய இளைஞர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாற்றான் படம் திரையிடப்பட்ட தியேட்டர் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தி பின்னர் விடுவித்தனர்.