எனக்கு உடல் நலம் சரியில்லை, தனுஷ் படம் தீபாவளிக்கு வராது-செல்வராகவன்


தனக்கு டைபாய்டு காய்ச்சல் வந்துள்ளதால் தனது இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ள மயக்கம் என்ன படம் தீபாவளியன்று திரைக்கு வராது என்று இயக்குநர் செல்வராகவன் அறிவித்துள்ளார்.

தீபாவளி வந்து விட்டது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தீபாவளி ரிலீஸ் திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. இருப்பினும் எத்தனை படம் வரும், எது வராது, ஏன் வராது என்பது குறித்து எந்த விளக்கமும் இதுவரை இல்லை.

இருப்பினும் தீபாவளிக்கு வருவதாக கூறப்பட்ட செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மயக்கம் என்ன படம் வராது என்பது உறுதியாகி விட்டது. அதை செல்வராகவனே அறிவித்துள்ளார். இதுகுறித்து ராகவன் கூறுகையில், கடந்த சில மாதங்களாக பட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தேன். இதனால் எனக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டது. தற்போது குணமாகி விட்டேன் ஆனாலும் டாக்டர்கள் ஓய்வு எடுக்கும் படி அறிவுறுத்தி உள்ளனர். எனவேதான் படத்தை தீபாவளிக்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்காக வருத்தப்படுகிறேன் என்றார்.

தங்களது 'தலைவர்' படம் தீபாவளிக்கு வராது என்று வெளியாகியுள்ள தகவலால் தனுஷின் 'ரசிகர்கள்' பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்!
 

பிறந்த நாள்... மாற்றுத் திறனாளிகளுக்கு தன் கையால் பரிமாறிய சினேகா!


தனது பிறந்த நாளான இன்று, சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தன் கையால் உணவு பரிமாறி மகிழ்ந்தார் நடிகை சினேகா.

தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக புன்னகை இளவரசி என அழைக்கப்படுபவர் சினேகா. இன்று வரை தனக்கான தனித்தன்மையை இழக்காமல் நடித்து வருபவர்.

அவருக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி, காலையில் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தனது பெற்றோருடன் சென்று வழிபட்டார் சினேகா. அவருக்காக சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கிருந்த கொடிமரம் அருகில் தரையில் விழுந்து கும்பிட்டார். பின்னர் நேராக பார்வையற்றோர் மற்றும் திறன் குன்றியோர் காப்பகத்துக்கு சென்று அவர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். அவர்களின் விருப்பத்திற்கிணங்க ஆட்டோகிராப் படத்திலிருந்து ஒவ்வொரு பூக்களுமே பாட்டையும் பாடினார்.

பார்வையற்றவர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து கைத்தட்டி பாடினர். பின்னர் எல்லோரும் ஒருமித்தக் குரலில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அவர்களுக்கான மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவருக்கும் தன் கையாலேயே உணவு பரிமாறினார் சினேகா.

தனது பிறந்த நாள் குறித்து தட்ஸ்தமிழுக்கு அவர் கூறுகையில், "ஒவ்வொரு பிறந்த நாளிலும் நான் வேண்டுவது ஒன்றுதான். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். அன்பும் அமைதியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். நன்றாக உழைக்க வேண்டும், நேர்மையோடு வாழ வேண்டும்.

கடந்த பல ஆண்டுகளாகவே என் பிறந்த நாள் பிறருக்கும் உபயோகமாக இருக்கும்படி கொண்டாடி வருகிறேன். மாற்றுத் திறனாளிகளுடன் இந்த நாளைக் கொண்டாடுவது மனசுக்கு நிறைவாக உள்ளது. அவர்கள் சந்தோஷத்தில் தனி திருப்தி கிடைக்கிறது," என்றார்.
 

11-11-11... அரிதான நாளில் மோதும் சிம்பு - தனுஷ்!


100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அமையும் அரிதான தேதி 11-11-11 இந்த ஆண்டு வாய்த்திருக்கிறது.

இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாளில் படங்களை வெளியிடுவதை பெருமையாக நினைத்து ஹாலிவுட்டில் படங்கள் தயாராகி வருகின்றன. அதுவும் சினிமா ரிலீசுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமை இந்த தேதி வருவது இன்னும் விசேஷமாகிவிட்டது.

நம்மவர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா... தியேட்டர் கிடைக்காததால் தீபாவளியன்று வெளியிட முடியாத சோகத்தை இந்த சிறப்பு நாளில் வெளியிட்டு தீர்த்துக் கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி, தீபாவளிக்கு வெளியாகவிருந்து சிம்புவின் ஒஸ்தியும், தனுஷின் மயக்கம் என்ன படமும் இந்த 11-11-11 தினத்தில் வெளியாகின்றன. இரு நாயகர்களுமே இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

11-11-11 குறித்து தெரிந்து கொண்ட பிறகு வேறு சிலரும்கூட தங்கள் படங்களை அந்த நாளில் வெளியிடலாமா என யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.

படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் ரிலீசான நாளை மறக்க முடியாது பாருங்கள்!
 

கார்த்தி நடிக்கும் சகுனியில் 'நீரா ராடியா'!


திருமணத்துக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படம் சகுனி. வழக்கம்போல காமெடி அல்லது ஆக்ஷன் படமாக மட்டும் இல்லாமல், இதில் அரசியல் விவகாரங்களையும் சேர்த்துள்ளார்களாம்.

2 ஜி வழக்கில் பரபரப்பாகப் பேசப்பட்ட நீரா ராடியாவின் கதை இந்தப் படத்தில் இடம்பெறுகிறது. திரைக்கதையே நீரா ராடியாவை மையப்படுத்தித்தான் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீரா ராடியாவின் கதையை முழுமையாக எடுத்துக் கொள்ளாமல், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் நீரா ராடியா சம்பந்தமான பகுதியை மட்டும் இப்படத்தில் சேர்த்துள்ளனராம்.

கிட்டத்தட்ட படத்தின் வில்லியாக நீரா ராடியா பாத்திரம் வருகிறதாம். கேரக்டருக்கும் நாயகன் கார்த்திக்கும் இடையிலான மோதல், அரசியல் தொடர்புகள் ஆட்சி மாற்றம் போன்றவற்றை விறுவிறுப்பாக படமாக்கியுள்ளார்களாம். சங்கர் தயாள் இப்படத்தை இயக்குகிறார். இதில் கார்த்திக்கின் ஜோடியாக பிரணிதா நடித்துள்ளார்.

கார்த்தி நடிக்கும் முதல் சீரியஸ் - அரசியல் படம் சகுனி!
 

தேர்தல் முடிவு குறித்து கருத்துக் கூறிய குஷ்பு மீது சேலத்தில் வழக்கு-நவம்பரில் விசாரணை


சேலம்: சட்டசபைத் தேர்தல் முடிவு குறித்துக் கருத்துக் கூறிய நடிகை குஷ்பு மீது சேலம் கோர்ட்டில் வக்கீல் அறிவழகன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நவம்பர் 1ம் தேதியன்று விசாரணைக்கு வருகிறது.

சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அறிவழகன் தாக்கல் செய்துள்ள வழக்கில்,

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. சட்டசபை தேர்தல் முடிவுகள் மே மாதம் 13-ந் தேதி அறிவிக்கப்பட்டு, அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

இந்த வெற்றி குறித்து நடிகை குஷ்பு பத்திரிகையில் அளித்த பேட்டியில், இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு தோல்வி இல்லை என்றும், மக்களுக்கு தான் தோல்வி என்றும் இதனால் தமிழக மக்கள் 5 ஆண்டுகள் கஷ்டப்படப்போகிறார்கள் என்றும் கூறி உள்ளார்.

இதை படித்த நான், மிகுந்த வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானேன். இந்த வாசகம் என்னை மிகவும் புண்படுத்தி விட்டது. சட்டமன்ற தேர்தலில் ஓட்டளித்த மக்களை அவர் இழிவு படுத்தி விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

நேற்று இந்த மனு மாஜிஸ்திரேட் ஸ்ரீவள்ளி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆனால் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பால் வக்கீல்கள் யாரும் வரவில்லை. இதையடுத்து வழக்கை நவம்பர் 1ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் தள்ளி
வைத்தார்.
 

ஜெனிலியாவின் கடைசி படம் வேலாயுதம்?


விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதால் ஜெனிலியாவின் கடைசி படம் வேலாயுதம்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

ஜெனிலியாவுக்கும் இந்தி நடிகரும் மத்திய அமைச்சர் மகனுமான ரிதேஷ் தேஷ்முக்கிற்கும் சில தினங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது. இது காதல் திருமணமாகும்.

திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என ஜெனிலியா முடிவு செய்துள்ளார். இப்போது தமிழில் அவர் நடிக்கும் படம் வேலாயுதம். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார்.

இதுவே அவரது கடைசி தமிழ்ப் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அவரை இன்னும் ஒரு படத்தில் நடிக்குமாறு இயக்குநர் சிம்புதேவன் கேட்டுக் கொண்டுள்ளார். அது தனுஷ் நடிக்கும் மாரீசன். ஆனால் இன்னும் தன்முடிவை ஜெனிலியா சொல்லவில்லையாம்.

இந்தியில் கைவசம் உள்ள 3 படங்களையும் முடித்துவிட்டு, வரும் பிப்ரவரியில் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளார்களாம் ஜெனிலியாவும் ரிதேஷும்.
 

ரஜினியின் கல்வி அறக்கட்டளை நிர்வாகியை மிரட்டிய மும்பை சினிமா பைனான்சியர் கைது!


சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா கல்வி அறக்கட்டளை நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த மும்பை சினிமா பைனான்ஸியர் கைது செய்யப்பட்டார்..

ராகவேந்திரா கல்வி அறக்கட்டளை நிறுவனம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாகியை ரூ. 2.5 கோடி கடன் பிரச்சினை தொடர்பாக, மிரட்டியதாக பிரபல மும்பை சினிமா பைனான்சியர் சுசில்குப்தா (வயது 62) மீது தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் அசோக்குமார், உதவி கமிஷனர் ராஜராஜன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

கொலை மிரட்டல் வழக்கில் பைனான்சியர் சுசில்குப்தா நேற்று மாலை கைது செய்யப்பட்டார். உடனடியாக அவர் நீதிமன்ற காவலில் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.