ஹைதராபாத்: தெலுங்கானா பிரச்சினை காரணமாக சென்னையில் நடக்கும் சினிமா நூற்றாண்டு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக தெலுங்கு நடிகர்கள் அறிவித்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அம்மாநில விநியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னையில் வருகிற 21-ந்தேதி முதல் 24-ந்தேதிவரை நடிக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட நடிகர், நடிகைகள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தெலுங்கானா பிரச்சினையில் ஆந்திராவில் போராட்டங்கள் நடந்து வருவதால் தெலுங்கு நடிகர், நடிகைகள் சிலர் சினிமா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க கூடாது என்றும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் தெலுங்கு திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் என்.வி.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், "இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும் என்று ஆறு மாதத்துக்கு முன்பு முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் முழுமையடைந்துவிட்டன.
இந்த நிலையில் தெலுங்கானா பிரச்சினையை காரணம் காட்டி நூற்றாண்டு விழாவை தெலுங்கு நடிகர்கள் புறக்கணிப்பது சரியல்ல.
நூற்றாண்டு விழா மூலம் சினிமா பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடியும். மூத்த நடிகர், நடிகைகளுக்கு மரியாதை செய்யும் விழாவாகவும் இது இருக்கும்.
மேடையில் அவர்கள் கவுரவிக்கப்படுவார்கள். எனவே தெலுங்கு நடிகர், நடிகைகள் இந்த விழாவை புறக்ககணிக்கக் கூடாது. எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும்.
ஆந்திராவில் தெலுங்கானா பிரச்சினையை மையப்படுத்தி நடக்கும் போராட்டங்களால் தெலுங்கு பட உலகம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. பிற மாநிலங்களில் தெலுங்கு படங்கள் ஓடுகின்றன. ஆந்திராவில் திரையிட முடியவில்லை. சினிமாவை நம்பி ஆயிரக் கணக்கான குடும்பங்கள் உள்ளன. படங்களை தடுப்ப தால் அவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படும்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.