ஆணுக்குள் இருக்கும் பெண்மையும், பெண்ணுக்குள் இருக்கும் ஆண்களையும் கண்டறிவது அத்தனை எளிதானதல்ல. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு குறிப்பிட்ட சதவிகித பெண்மை இருக்கிறது. அதேபோல் எல்லா பெண்ணுக்குள்ளும் ஆணுக்கே உரிய கோபம், தைரியம் இருக்கத்தான் செய்கிறது என்பதை தெரியப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சி
பொதுவாகவே ஆண்கள் என்றாலே ஒருவித பிம்பம் இருக்கிறது கம்பீரமானவர்கள், வீரமானவர்கள், தைரியசாலிகள், என்று ஆனால் நீயா நானா நிகழ்ச்சியில் பேசிய ஆண்கள் தங்களுக்குள் ஒளிந்திருந்த பெண்மையை வெளிப்படுத்தினார்கள்.
தங்களுக்கும் வெட்கம் வரும், அழுகை வரும், நாங்களும் பயப்படுவோம் என்று வெளிப்படையாக பேசினார்கள்.
ஆண்கள் சீக்கிரம் உணர்ச்சி வசப்படமாட்டார்கள், ஈகோ, அவசரம், பழிவாங்கும் குணம், இருக்கும் என்று கூறிய ஆண்கள் தங்களுக்கு எப்பொழுதெல்லாம் வெட்கம் வரும் என்று தெரிவித்தனர்.
பெண்களின் அருகில் அமர்ந்து பேச வெட்கப்படுவதாக கூறினார்கள். ஒரு பெண்ணால் புகழ்ச்சிக்கு ஆளாகும் போது வெட்கப்படுவோம் என்பதை அழகாக வெளிப்படுத்தினார் ஒரு இளைஞர்.
‘அட ஏங்க நீங்க என்னைப் போய் இப்படி புகழுறீங்களே'... என்று வெட்கத்தை வெளிப்படுத்தும் ஆண்களைக் கண்டால் பெண்களுக்கு பிடிக்கத்தான் செய்கிறது.
அதேபோல் பெண்களுக்கு உள்ள கோபம் எத்தனை உக்கிரமாக வெளிப்படும் என்று இந்த நிகழ்ச்சியில் தெரியவந்தது. கோபப்பட்டால் என்னவெல்லாம் செய்வோம். எப்படி ஆசுவாசப்படுத்திக்கொள்வோம் என்று கூறினார்கள் பெண்கள்.
பெண்மைக்கே உரிய நளினம், வெட்கம், கருணை இதெல்லாம் இருந்தால் கூட அந்த ஆத்திரம், கோபம் வெளிப்படும் போது பெண்கள் காளியின் அவதாரமாகத்தான் இருக்கிறார்கள் என்றார் நிகழ்ச்சி நடத்துனர் கோபிநாத்.
இன்றைக்கு சண்டை என்றால் முதலில் கிளம்புவது ஆண்கள்தான் என்று சினிமாக்களிலும், கதைகளிலும், புராணங்களிலும் ஒரு பிம்பத்தை ஒருவாக்கியிருக்கின்றனர்.
ஆனால் நீயா நானாவில் பேசிய ஆண்கள் சண்டையை எப்படி தவிர்ப்போம் என்று பேசினார். பேசிப் பேசியே எதிராளியை சமாதானம் செய்துவிடுவோம் என்று கூறினார் ஒருவர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த சமூக ஆர்வலர் சுதா, ஒரு திருநங்கையாக தன்னுடைய அனுபவங்களை தெரிவித்தார். ஆணுக்குள் இருக்கும் பெண்மை அதீதமாக வெளிப்படும் போதுதான் திருநங்கையாக மாறவேண்டிய சூழல் ஏற்படுவதாக கூறிய சுதா, அதன்பின்னர் சமூகத்தில் எத்தனை இடர்பாடுகளை சந்திக்க வேண்டியுள்ளது என்றார்.
ஒரு திருநங்கையாக தனக்கு நேர்ந்த அனுபவங்களையும், வலிகளையும் கூட எப்படி சமாளித்தோம் என்பதை உற்சாகமாக நகைச்சுவையாக குறிப்பிட்டார். திருநங்கைகளை பெண்கள் புரிந்து கொள்வதில்லை, ஆனால் ஆண்கள்தான் உதவுகின்றனர் என்று வேதனையோடு பதிவு செய்தார் சுதா.
ஆண்கள் மட்டுமே பங்கெடுத்து வரும் மோட்டர் பைக் ரேஸ் போட்டியில் ஆண்களுக்கு சரிசமமாக பங்கேற்று வெற்றி பெற்று வரும் அலீசா அப்துல்லா, தனக்குள்ளும் பெண்ணுக்குரிய நளினம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சக ஆண்கள் தன்னை போட்டியாளராக பார்க்காமல் பெண்ணாக மட்டுமே பார்த்து பேசும் போதுதான் சிரமப்படுவதாக தெரிவித்தார்.
ஆணுக்குள் பெண்மைக்குரிய அச்சம் இருப்பது இயல்புதான் அதை நானே உணர்ந்திருக்கிறேன் என்றார் வசனகர்த்தா பாஸ்கர் சக்தி. அதுதான் முழுமையான மனித சக்தியின் அடையாளம் என்றார்.
இந்த நிகழ்ச்சி பெண்கள் மீது ஆண்களும், ஆண்கள் மீது பெண்களும் வைத்திருந்த மிக நீண்டகால நம்பிக்கைகளை உடைக்கும் வகையில் அமைந்திருந்தது.
இன்றைய கால கட்டத்தில் ஆணோ, பெண்ணோ, திருநங்கையோ அனைவரும் ஒன்றுதான். அனைத்து பாலினத்திற்குள்ளும் எல்லாவித இயல்பான குணங்களும் இருக்கின்றன. அதை வெளிப்படுத்தும் சமயங்களில் வெளிப்படுத்திவிட்டால் எந்த வித சிக்கல்களும் இல்லை என்றார் கோபிநாத்.