மும்பையில் 2-வது மனைவியின் நடனப்பள்ளியைத் திறந்தார் பிரகாஷ்ராஜ்


நடிகர் பிரகாஷ் ராஜும், அவரது 2-வது மனைவியும் சேர்ந்து மும்பையில் நடனப் பள்ளி ஒன்றை துவங்கியுள்ளார். அதை அவரே திறந்தும் வைத்தார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் தனது காதல் மனைவி லலிதாகுமாரியை விவாகரத்து செய்துவிட்டு பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு மும்பையில் செட்டிலாகிவிட்டார்.

தற்போது பிரகாஷ் ராஜும், அவரது 2-வது மனைவியான போனி வர்மாவும் சேர்ந்து மும்பையில் நடனப் பள்ளி ஒன்றை துவக்கியுள்ளனர். அந்த பள்ளியை பிரகாஷ்ராஜ் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் பாலிவுட் நடிகர்கள் கோவிந்தா, விவேக் ஓபராய், நடிகை நீது சந்திரா, முக்தா கோட்சே ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நடனப்பள்ளியின் கிளைகளை விரைவில் சென்னை, ஹைதராபாத் நகரங்களில் திறக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு வெளியேறிய பிராகாஷ் ராஜின் முதல் மனைவி லலிதாகுமாரி தற்போது விவகாரத்திற்குப் பிறகு நடிக்கத் துவங்கியுள்ளார்.

 

ஸ்ரீதேவி மகள் தமிழில் ஹீரோயினாகிறார்!


முன்னால் கனவுக் கன்னி ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இப்போது கதாநாயகியாகிறார்.

1970 மற்றும் 80-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. இந்திப் படங்களிலும் நடித்தார். 1996-ல் இந்தி தயாரிப்பாளர் போனிகபூரை மணந்து மும்பையில் குடியேறினார். இவருக்கு ஜான்வி, குஷி என இருமகள்கள் உள்ளனர்.

ஜான்வி வளர்ந்து விட்டபடியால் கதாநாயகியாக்க முடிவு செய்துள்ளார். தெலுங்கு அல்லது தமிழ் படத்தில் அறிமுகம் செய்கிறார். இதற்காக இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.

ஆரம்பத்தில் தெலுங்கில்தான் தன் மகளை அறிமுகப்படுத்துவேன் என்று கூறிவந்தவர் ஸ்ரீதேவி.

ஏற்கெனவே இப்படிக் கூறி தெலுங்கில் தன் மகள் கார்த்திகாவை அறிமுகப்படுத்தி படுதோல்வி கண்டவர் ராதா. பின்னர் கார்த்திகாவை ‘கோ’ தமிழ் படத்தில் அறிமுகம் செய்தார். அப்படம் வெற்றிகரமாக ஓடுகிறது.

இதைப் பார்த்தபிறகு, தனது முடிவை மாற்றிக் கொண்ட ஸ்ரீதேவி, ஜான்வியை தமிழில் முதலில் நடிக்க வைக்க விரும்புகிறார்.

 

'எதுக்கு இந்த விளம்பரம்!' - அசினை ஒதுக்கும் பாலிவுட்


விளம்பரத்துக்காகவும், புதிய வாய்ப்புகளைத் தேடவும், தன்னைப் பற்றி தானே வதந்திகளைப் பரப்பி வருகிறார் நடிகை அசின் என பாலிவுட் இயக்குநர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பெரிய வாய்ப்புகளை எதிர்ப்பார்த்து பாலிவுட் போனார் அசின். முதல் படம் மட்டுமே வெற்றிகரமாக அமைந்தது. அடுத்த படம் படுதோல்வி அடைந்தது. மூன்றாவது படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது.

பாலிவுட்டில் இரண்டே படங்களில் நடித்துள்ள அசின், பழம் தின்று கொட்டை போட்ட சீனியர் நடிகைகளையெல்லாம் மிஞ்சிவிட்டார், நடிப்பில் அல்ல, வதந்திகளில் இடம்பெறுவதில்.

ஆனால் இப்போதுதான் தெரிகிறது, அந்த வதந்திகள் எல்லாம் அசினாலேயே கிளப்பிவிடப்பட்டவை என்று.

ஷாருக்கானுடன் நடிக்கிறேன், நீல் நிதின் முகேஷுடன் ஜோடி என்றெல்லாம் இவராகவே கிளப்பி விட்ட செய்திகளாம். உண்மையில் இவர் கைவசம் ஒரே ஒரு இந்திப்படம்தான் உள்ளது என்கிறார்கள்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு பேட்டியளித்துள்ளார் பாலிவுட் இயக்குநர் ஒருவர். அவர் பெயர் ரிதே ஷெட்டி. நஸ்ருதீன் ஷா நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் இவர்.

இவரது இயக்கத்தில் அசினும் நீல் நிதின் முகேஷும் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது நினைவிருக்கலாம். ஆனால் உண்மையில் தனக்கு இப்படியொரு படம் செய்யும் ஐடியாவே இல்லை என்றும், இதனை அசின்தான் கிளப்பிவிட்டிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிக சம்பளம் கேட்கிறார், அவரது பெற்றோர்களின் தலையீடு போன்றவை குறித்தும் பாலிவுட்டில் புகார்கள் குவிய ஆரம்பித்துள்ளன.

 

'டேட்ஸ்' வீணாகுதே... கவலையில் சோனாக்ஷி!


கமலுக்கு ஜோடி என்ற அறிவிப்பு வந்த கையோடு சோனாக்ஷி சின்ஹாவிடம் கால்ஷீட் வாங்கிவிட்டார்கள் போலிருக்கிறது விஸ்வரூபம் குழுவினர்.

ஆனால் அதன்பிறகு கிட்டத்தட்ட அந்தப் படக்குழு மறந்தேபோய்விட்டது சோனாக்ஷியை.

மே மாதத்திலிருந்தே அவர் தனது தேதிகளை கமல் படத்துக்கு ஒதுக்கிக் கொடுத்துவிட்டார். ஆனால், இங்கோ, கமல் – செல்வராகவன் லடாய் முற்றி, இயக்குநரே மாறிப் போக, படப்பிடிப்புத் தேதி தள்ளிப் போய்விட்டது.

ஜூன் 5-ம் தேதி லண்டன் போகிறோம் என அவருக்கு தகவல் அனுப்புள்ளனர் கமல் தரப்பிலிருந்து. ஆனால் இன்று வரை பயணம் பற்றி நேரடியாக ஒருவரும் சொல்லவில்லையாம்.

இதில் ரொம்பவே நொந்துபோன சோனாக்ஷி, “ஒரு இந்திப்படத்துக்காக தரவிருந்த கால்ஷீட்டை அப்படியே தூக்கி கமலுக்கு கொடுத்தேன். குறைந்த பட்சம் எனக்கு எல்லா விஷயத்தையும் ஒரு தகவலாகவாவது சொல்லியிருக்கலாம். நான் கொடுத்த தேதிகளில் கிட்டத்தட்ட 1 மாதத்தை வீணடித்துவிட்டார்கள். என்ன செய்வதென்றே புரியவில்லையே..”, என்று புலம்ப ஆரம்பித்துவிட்டாராம்.

கமல் படமாச்சே… பொறுமை பெருமை தரும் என்று தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்!

 

சிங்களப் படத்தில் நடிக்க பூஜாவுக்கு எதிர்ப்பு!


இலங்கை நடிகையான பூஜா சிங்களப் படத்தில் நடிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் அமைப்புகள் சில ஏற்கெனவே இதுகுறித்து கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இப்போது இந்து மக்கள் கட்சியும் இதுகுறித்த தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஜே.ஜே. படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா. நான் கடவுள் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். அட்டகாசம், தம்பி, பொறி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக புதுப்படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை. சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டதாகவும் பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்டு, அங்கேயே பணியாற்றுவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த கிசுகிசுக்களை பூஜை மறுத்து வருகிறார்.

தற்போது சிங்கள மொழியில் தயாராகும் குசபாபா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்த மாகியுள்ளார். படப்பிடிப்புக்காக இலங்கை செல்கிறார்.

இநத தகவல் வெளியானதால், பூஜாவுக்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்தக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

“இலங்கையில் ஈழத் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கானோர் கொன்று அழிக்கப்பட்டு உள்ளனர். அந்த நாட்டுக்கு நடிகர் நடிகைகள் போவதையே தவிர்க்கின்றனர்.

இந்த நிலையில் அங்கு தயாராகும் சிங்கள மொழி படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்து இருப்பது தமிழர்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. சிங்கள மொழி படத்தில் பூஜா நடிக்க கூடாது மீறி நடித்தால் தமிழ் படங்களில் அவரை ஒப்பந்தம் செய்வதை எதிர்ப்போம். பூஜா படங்களையும் புறக்கணிப்போம்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

காங்கிரஸில் 'கரைந்த' சிரஞ்சீவி கட்சி!


ஹைதராபாத்: இதோ அதோ என இழுத்துக் கொண்டிருந்த பிரஜா ராஜ்யம் – காங்கிரஸ் இணைப்பு நேற்று முறைப்படி முடிந்தது.

நடிகர் சிரஞ்சீவி, 3 ஆண்டுகளுக்கு முன் பிரஜா ராஜ்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். உடனடியாக தேர்தலில் போட்டியிட்டார். ஆட்சியைப் பிடிப்பார் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால் அந்த கட்சிக்கு 17 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கடந்த பிப்ரவரி மாதம் சிரஞ்சீவி சந்தித்து பேசினார். பின்னர் அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைப்பதாக அறிவித்தார்.

இந்த நிலையில் காங்கிரசுடன், பிரஜா ராஜ்யம் கட்சியை இணைக்கும் விழா ஹைதராபாத்தில் நேற்று முறைப்படி நடந்தது. இந்த விழாவில் சிரஞ்சீவி தனது கட்சியை அதிகாரபூர்வமாக காங்கிரசுடன் இணைத்துக்கொண்டார்.

நிகழ்ச்சியில் சிரஞ்சீவி பேசுகையில், “காங்கிரசுடன் கட்சியை இணைத்துக்கொண்டாலும், நான் மக்களுக்கு ஆற்றவேண்டிய பணியை தொடர்ந்து மேற்கொள்வேன். ஆந்திராவை மகிழ்ச்சிகரமான மாநிலமாக ஆக்க முயற்சிகளை மேற்கொள்வேன்” என்றார்.

இணைப்பு விழா நடந்துவிட்டதால், ஆந்திர அமைச்சரவையிலும் மாநில காங்கிரஸ் கமிட்டியிலும் சிரஞ்சீவிக்கு பதவிகள் கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

 

சில்க் வேடத்தில் குளியல்... வித்யா பாலனுக்கு வந்த 'சோதனை'!


சில்க் ஸ்மிதா வேடத்தில் ஒரு குளியல் காட்சியில் நடித்த வித்யா பாலனுக்கு ஒரு எதிர்பாராத சோதனை… இது சென்சார் அதிகாரிகளால் வந்ததல்ல… அவர் குளித்த தண்ணீரால் வந்தது!

சில்க் ஸ்மிதா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஏக்தா கபூர் தயாரிக்கும் தி டர்ட்டி பிக்சர் படத்தில், சில்க்காக நடித்து வருகிறார் வித்யா பாலன்.

சில்க் என்றால் குளியல் காட்சி இல்லாமலா…. இந்தப் படத்துக்காக ஒரு ஹாட் குளியல் காட்சியை மும்பை அருகே உள்ள குரேகான் பிலிம் சிட்டியில் படமாக்கினர்.

குளித்து முடித்து விட்டு வந்த வித்யாவுக்கு, அடுத்த சில நொடிகளில் உடம்பெல்லாம் ஒரே நமநம..!

ஆரம்பத்தில் அசட்டையாக இருந்த வித்யா, சில நிமிடங்கள் உடம்பு முழுக்க தோல் தடித்த மாதிரி உணர்வு ஏற்பட்டதால் பதறிப் போனார். தண்ணீர் சரியில்லாததால் அவருக்கு தோலில் இன்பெக்ஷன் வந்துவிட்டது தெரிந்து, உடனடியாக பக்கத்திலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவரது உடம்புக்கு ஒப்புக்கொள்ளாத சோப் மற்றும் அதிக கெமிகல் கலந்த தண்ணீர்தான் இதற்குக் காரணம் என்று மருத்துவர்கள் கண்டுபிடித்து சிகிச்சையளித்துள்ளனர்.

இப்போது ரெஸ்டில் உள்ள வித்யா, அடுத்த சில தினங்களில் ஹைதராபாதில் நடக்கும் இதே பட ஷூட்டிங்கில், இதே போன்ற இன்னொரு குளியல் காட்சியில் பிகினியுடன் நடிக்கிறார்.

எதற்கு வம்பு என்று லாரி லாரியாக மினரல் வாட்டருக்கு ஆர்டர் கொடுத்துள்ளது படக்குழு!!

 

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: முற்றுகிறது மோதல்!


சினிமா தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்துவதில் தாமதம் தொடர்வதால், தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாக எதிர் கோஷ்டியினர் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு குழு திஹ்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

“தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் முறையற்ற நடவடிக்கைகளால் தயாரிப்பாளர்களின் நலன் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் தலைவர் ராம.நாராயணன், செயலாளர் சிவசக்தி பாண்டியன் மற்றும் சில செயற்குழு உறுப்பினர்கள் தாங்களாகவே ராஜினாமா செய்தார்கள். ஒரு சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் ராஜினாமா செய்துவிட்ட பிறகு அந்த அமைப்பு அதிகாரம் இழந்த அமைப்பாகி விடுகிறது.

உடனடி தேர்தல்

எனவே உடனடியாக சங்கத்துக்கு தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என்று 300-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி தீர்மானம் நிறைவேற்றினோம்.

அதைத்தொடர்ந்து ஜுலை 3-ந் தேதி பொதுக்குழுவை கூட்டுவது என்றும், அதில் தேர்தல் நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிவித்தார். ஆனால், இன்றுவரை பொதுக்குழு நடத்துவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில், தொழிலாளர்கள் ஒப்பந்தத்தை புதுப்பிக்க காலதாமதமானதால் ‘பெப்சி’ அமைப்பினர் பொதுக் குழுவை கூட்டி, புதிய ஊதியத்தை அவர்களாகவே நிர்ணயித்துக்கொண்டார்கள். இதைக்கேள்விப்பட்டு ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் உடனடியாக தயாரிப்பாளர்கள் பாதுகாப்புக் குழுவினருடன் கலந்து பேசி, எங்களையும் இணைத்துக்கொண்டு பெப்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து குழப்பமே நிலவியது.

பெப்சியின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கானது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தை அவசர கோலத்தில் முடிவு செய்ய முடியாது என்று தெரிந்தும், உள்நோக்கத்துடன் பேச்சுவார்த்தையை தொடர்வது நாடகம்தான்.

எனவே தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை உடனடியாக நடத்தி, புதிய நிர்வாகத்தை உருவாக்குவதன் மூலமே எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். ஆகவே கண்துடைப்புக்காக நடத்தப்படும் இந்த பேச்சுவார்த்தையில், இனி நாங்கள் பங்கேற்கப்போவதில்லை.

தொடர் போராட்டம் நடத்துவோம்

ஏற்கனவே செயற்குழுவில் அறிவித்தபடி, ஜுலை 3-ந் தேதி பொதுக்குழுவை கூட்டி, தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு குழு சார்பில் ஜுலை 4-ந் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரஸ் மீட்…

இந்த அறிக்கையை பத்திரிகையாளர்களுக்கு விளக்கி எதிர் கோஷ்டியினர் நேற்று பேட்டியளித்தனர்.

இதில் பட அதிபர்கள் கேயார், கே.ராஜன், ராதாகிருஷ்ணன், பி.எல்.தேனப்பன், ஞானவேல், பட்டியல் சேகர், சோழா பொன்னுரங்கம், பாஸ்கர், ரகு, ஹென்றி, பாபுகணேஷ், நடிகர் கருணாஸ் ஆகியோர் பேசினார்கள்.

 

வாடகைக் கட்டட பிரச்சினை: கமிஷனரிடம், நடிகை சோனா புகார்


சென்னை: வாடகை கட்டடத்துக்கு கொடுத்த அட்வான்ஸை திருப்பித்தர உரிமையாளர் மறுத்ததால், அவர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் நடிகை சோனா நேரில் புகார் கொடுத்தார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு, நடிகை சோனா நேற்று வந்தார். போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை அவர் கொடுத்தார்.

பின்னர் நிருபர்களிடம், அவர் கூறுகையில், "நான், 'எத்ரியல் இண்டீரியர்ஸ்' என்ற மரச்சாமான்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறேன். இது போரூர் ஆலப்பாக்கம் கணேஷ் நகரில் உள்ளது. இந்த தொழிற்சாலை நடக்கும் இடத்தின் உரிமையாளர்கள் ராமலிங்கம், உஷா, ராணி, சாந்தி ஆகியோராகும்.

இவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, தொழிற்சாலையை நடத்தி வந்தேன். போரூரில் இருந்து படப்பைக்கு எனது தொழிற்சாலையை மாற்றுவதற்கு விரும்பியதால், மே மாதம் இடத்தை காலி செய்யப்போகிறேன் என்று கடந்த மார்ச் மாதம் ராமலிங்கத்துக்கு நோட்டீஸ் கொடுத்தேன்.

எனவே அட்வான்சாக கொடுத்த பணம் ரூ.7 லட்சத்தில், 3 மாத வாடகையை பிடித்தம் செய்துவிட்டு மீதியை தர வேண்டுமென்று கேட்டேன். ஆனால் பெயிண்டிங், பாத்ரூம் சுத்தம் செய்யும் பணி போன்றவற்றுக்காக பணம் சரியாக போய்விட்டது என்று பணத்தை திருப்பித்தர மறுத்துவிட்டார்.

இதனால் நாங்கள் அந்த கட்டிடத்துக்கு வேறு பூட்டுபோட்டோம். ஆனால் அதை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டனர். அங்கு எங்களுக்குச் சொந்தமான ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் உள்ளன.

இதுபற்றி மதுரவாயல் போலீசிடம் புகார் கொடுத்தேன். சிவில் வழக்கு என்பதால் வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர். எனவே இதுகுறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். இந்த வழக்குக்கான அதிகார வரம்பு, புறநகர் போலீஸ் கமிஷனர் வசத்தில் வருவதால் அங்கு சென்று புகார் கொடுக்கும்படி கமிஷனர் அறிவுறுத்தினார்," என்றார்.