ஹைதராபாத்: திருட்டு டிவிடியை ஒழிப்பதற்கான முயற்சியாகத்தான் விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிடுகிறேன் என்றார் கமல்ஹாஸன்.
விஸ்வரூபம் படத்தின் தெலுங்கு பதிப்புக்கான பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. தயாரிப்பாளர் தாசரி நாராயணராவ் விழாவில் பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட தயாரிப்பாளர் ராமாநாயுடு பெற்றுக் கொண்டார்.
உலக நாயகன் பட்டத்துக்கு தகுதியானவர்...
தாசரி நாராயணாராவ் பேசும்போது, "விஸ்வரூபம்' படத்தை டி.டி.எச்.களில் ஒளிபரப்புவதன் மூலம் கமலஹாசன் ஒரு புரட்சிக்கு வித்திட்டுள்ளார். இதை வரவேற்கிறேன். இந்த முறையை எதிர்ப்பவர்கள் பிறகு உண்மையை உணர்ந்து வரவேற்பார்கள். உலக நாயகன் என்பதற்கு தகுதியானவர் கமல்," என்றார்.
3 சதவீதம் பேர்தான்...
பின்னர் கமலஹாசன் நிருபர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், "‘விஸ்வரூபம்' படம் தியேட்டருக்கு வருவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்னதாக டி.டி.எச்.களில் ஒளிபரப்பப்படும். டிஷ் மூலம் டி.வி. பார்ப்பவர்கள் 3 சதவீதம்பேர்தான். மற்றவர்கள் தியேட்டரில் வந்துதான் பார்க்க வேண்டும். தியேட்டருக்கு வராதவர்களும் வர முடியாதவர்களும் பார்ப்பதற்காகவே டி.டி.எச்.களில் ஒளிபரப்பப்படுகிறது.
திருட்டு டிவிடியை ஒழிக்க...
திருட்டு வி.சி.டி. மூலம் பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. டி.டி.எச்.சில் விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்புவதன் மூலம் திருட்டு வி.சி.டி.யில் அப்படம் வருவது தடுக்கப்படும்.
படம் நன்றாக இல்லாவிட்டால்...
படம் நன்றாக இல்லாவிட்டால் டி.டி.எச்.களில் பார்ப்பவர்கள் சொல்லி விடுவார்கள். தியேட்டருக்கு கூட்டம் வராது. ஆனால் படத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இருப்பதால் தைரியமாக டி.டி.எச்.சில் வெளியிடுகிறேன்," என்றார்.
லாபம் வருமா...
இதன் மூலம் லாபம் வரும் என்று நம்புகிறீர்களா என்று கேட்டபோது, "லாபம் வரும் என்பது தெரிந்ததால்தான் இந்த ரூட்டைப் பிடித்தேன். என் படம் மட்டுமல்ல.. இன்னும் எத்தனைப் படங்களை இந்த முறையில் வெளியிட்டாலும் நல்ல லாபம் கிடைக்கும். பெரிய ரிஸ்க்கை தவிர்க்க இந்த டிடிஎச் முறை உதவுகிறது," என்றார்.