விஷாலுக்கு வந்த பக்குவம்!


தோல்விகள்தான் மனிதனை நிதானத்துக்கு கொண்டு வருகின்றன என்பது எத்தனை உண்மையாது, என்கிறார்கள் விஷாலின் இப்போதைய முடிவைக் கேட்ட சிலர்.

அவன் இவன் படத்தில் விஷாலுக்கு கிடைத்த நல்ல பெயரை மொத்தமாக துடைத்துவிட்டதாம் பிரபு தேவா இயக்கத்தில் உருவான வெடி. இந்தப் படத்துக்கு நல்ல பப்ளிசிட்டி,ஏக எதிர்ப்பார்ப்பு இருந்தும், படம் அதற்கேற்ப இல்லாததால் தோல்வியைத் தழுவிவிட்டது.

இதனால் தனது மார்க்கெட் நிலையை நன்கு உணர்ந்த விஷால், தனது அடுத்த படத்துக்கு சம்பளத்தை கணிசமாகக் குறைத்துக் கொண்டார் என கோலிவுட்டில் பரபரக்கிறார்கள்.

இத்தனைக்கும் வெடி அவர்களது சொந்தத் தயாரிப்புதான். இந்தப் படத்தின் லாப நஷ்டம் விஷால் குடும்பத்தினருக்குதான். என்றாலும் நடைமுறை யதார்த்தத்தை புரிந்து நடந்து கொண்ட விஷாலைப் பாராட்டுகிறார்கள்.

இந்தப் பக்குவம் மற்றவர்களுக்கும் வராதா என ஏக்கத்தோடு கேட்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

அப்படின்னா... எல்லார் படமும் தோல்வியைத் தழுவ வேண்டி வருமே பரவால்லயா என எதிர்க்கேள்வி கேட்கிறார்கள் சில வாய்த் துடுக்கு நாயகர்கள்!
 

ராணுவ உடையை அவமதித்ததாக புகார்: நடிகர் மோகன்லால் மறுப்பு


டெல்லி:  கேரள அரசின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் விளம்பரப் படத்தில் ராணுவ உடையை அணிந்து நடித்து அந்த உடையை அவமதித்துவிட்டதாக நடிகர் மோகன்லால் மீது புகார் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை மோகன்லால் மறுத்துள்ளார்.

நடிகர் மோகன்லாலுக்கு கடந்த 2009ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு ராணு சீருடையும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், மோகன்லால் கேரள சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் விளம்பரப் படத்தில் ராணுவ சீருடையில் நடித்துள்ளார். இதன் மூலம் அவர் ராணுவ சீருடையை அவமதித்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ராணுவ தலைமையக அதிகாரிகள் கூறியதாவது,

மலையாள திரையுலகின் ஜாம்பவானான நடிகர் மோகன்லால் கேரள அரசின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு எடுக்கப்பட்ட விளம்பர படத்தில் ராணுவ சீருடையை அணிந்து நடித்துள்ளார். அந்த விளம்பரம் கடந்த ஆண்டு டிசம்பரிலும், இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பானது.

இதன் மூலம் அவர் ராணுவ விதிகளை மீறியுள்ளார். ராணுவ நிகழ்சிசகளின்போது மட்டும் தான் அவர் அந்த சீருடையை அணிய வேண்டும். முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி, 2008ம் ஆண்டு பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா ஆகியோருக்கும் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கியுள்ளோம் என்றார்.

அந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக ஆஷிர்வாத் பிலிம்ஸ் நிறுவனம் மோகன்லாலுக்கு ரூ. 50 லட்சம் கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் தான் நடித்த கந்தஹார் படத்தில் அணிந்திருந்த சீருடையைத் தான் விளம்பரப் படத்தில் அணிந்திருந்தததாக மோகன்லால் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

நீங்கள் அந்த விளம்பரத்தைப் பார்த்தால் அதிலேயே கந்தஹார் படத்தில் எனது கதாபாத்திரத்தைப் பற்றிக் கூறுவது தெரியும். நான் இந்த விளம்பரத்தை கேரள அரசுக்காக நடித்துக் கொடுத்தேன். அதற்காக நான் சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்று அவர் பேட்டியளித்துள்ளார்.

 

ஐம்பது வயது உபேந்திராவுக்கு அம்மாவான சிம்ரன்!


தெலுங்குப் படம் ஒன்றில் அம்மா வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நடிகை சிம்ரன்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் கனவு தேவதையாகத் திகழ்ந்த சிம்ரன், திருமணத்துக்கு பின் பட வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் கதாநாயகி வேடம் வந்தால் நடிப்பேன் என்று அடம் பிடித்துவந்தார்.

ஆனால் அக்கா, அண்ணி வாய்ப்புகளே வந்தன. அந்த வேடங்களிலும் சில படங்களில் நடித்தார். அப்போது அம்மா வேடத்தில் நடிக்க பலர் அழைத்தனர். அம்மாவாக நடிக்கும் அளவுக்கு எனக்கு வயதாகி விடவில்லை. அம்மா வேடத்தில் நடிக்கவே மாட்டேன் என்று மறுத்து வந்தார்.

தொடர்ந்து வாய்ப்புகளே இல்லாமல் போனதால் தற்போது அவர் பிடிவாதம் தளர்ந்துள்ளது.

தெலுங்கு படமொன்றில்அம்மா வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம். இவருக்கு மகனாக நடிப்பவர் உபேந்திரா. இருவரும் ஏற்கனவே சத்யம் படத்தில் நடித்துள்ளனர். உபேந்திராவுக்கு ஐம்பது வயதுக்கு மேல்! அவருக்கு அம்மாவாக நடிக்க சிம்ரன் ஒப்புக்கொண்டது திரையுலகில் ஒரு சின்ன ஆச்சர்யம்தான். ஆனால் பெரிய தொகையை இதற்கு சம்பளமாகப் பேசியுள்ளார் சிம்ரன் என்ற தகவல் தெரியவந்ததும் அந்த ஆச்சர்யமும் காணாமல் போய்விட்டது.

சினிமா உலகில் பணத்துக்குதானே முதலிடம்!

 

ஷாரூக்கானை இயக்குகிறார் ஏ ஆர் முருகதாஸ்!


பாலிவுட் பாட்ஷா எனப்படும் ஷாரூக்கானை அடுத்து இயக்கப் போகிறார் தமிழகத்தின் புகழ்பெற்ற இயக்குநரான ஏ ஆர் முருகதாஸ்.

கஜினி படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இந்தியில் ஏ ஆர் முருகதாஸுக்கு மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது.

அவர் அடுத்து யாரை வைத்து இயக்கப்போகிறார் என ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கின்றனர் வடஇந்திய ரசிகர்கள்.

ஆனால் இப்போது ஏழாம் அறிவு பட வேலைகளில் தீவிரமாக இருக்கும் முருகதாஸ், அடுத்து விஜய்யை வைத்து தமிழில் புதுப் படத்தைத் தொடங்கிவிட்டார். இதன் பிறகுதான் இந்திப் படத்தை இயக்குகிறார்.

அவர் இயக்கும் புதிய இந்திப் படத்தில் ஷாரூக்கான் நாயகனாக நடிக்கிறார். இத்தகவலை ஷாரூக்கானே நேற்று தெரிவித்தார். அவரிடம் முருகதாஸ் படத்தில் நடிப்பது உண்மையா என்று கேட்டதற்கு, 'ஏ ஆர் முருகதாஸ் எனக்கு இரு கதைகள் சொல்லியுள்ளார். இரண்டிலுமே நடிக்க ஆர்வமாக உள்ளேன். இந்த இரண்டில் எந்த ஸ்கிரிப்ட் முதலில் தயாராகிறதோ அதில் நடிப்பேன்,' என்றார்.
 

குறைந்தது ஹீமோகுளோபின்-3 நாள் மருத்துவமனையில் இருந்த 'சில்க்' வித்யா!


தி டர்ட்டி பிக்சர் படத்திற்காக ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் நடிகை வித்யா பாலன் உடல் நலக்குறைவால் 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார்.

மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படம் தான் தி டர்ட்டி பிக்சர். இதில் சில்க்காக நடிப்பவர் இல்லை வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை வித்யா பாலன். கவர்ச்சியான கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடிக்கும் வித்யாவைப் பார்ப்பவர்கள் தில்லான பொண்ணு தான் என்று வியக்கிறார்கள்.

இந்த படத்திற்காக வித்யா ஓடி, ஓடி நடித்துக் கொண்டிருக்கிறார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தபோது வித்யாவுக்கு சரியான காய்ச்சல். ஆனால் அதை பொருட்படுத்தாது நடித்துக் கொடுத்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக தசரா பண்டிகையன்று வித்யா மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு பல சோதனைகள் செய்யப்பட்டது. அதில் அவரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். சோர்வாக இருந்த வித்யாவுக்கு குளுகோஸ் ஏற்றப்பட்டது. 3 நாட்களுக்குப் பிறகே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று கூறப்படுகின்றது.
 

ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு 1 ஆண்டு சிறை, 90 கசையடி!


இஸ்லாமிய சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி ஆபாசமாக நடித்ததாக கூறி ஈரான் நடிகை மர்ஜியா வபாமெஹருக்கு 90 கசையடியும், 1 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கபப்ட்டுள்ளது என்று அந்நாட்டு இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

கலாமே.காம் என்ற இணையதளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

'மை டெஹ்ரான் பார் சேல்' என்ற படத்தில் ஆபாசமாக நடித்ததற்காக நடிகை மர்ஜியா வபாஹெர் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இந்த படம் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது.

இந்த படம் ஆஸ்திரேலியாவுடன் கூட்டாக சேர்ந்து எடுக்கப்பட்டது. டெஹ்ரானில் உள்ள ஒரு நாடக நடிகையை அதிகாரிகள் நடிக்கவிடாமல் தடை செய்கிறார்கள். இதையடுத்து அந்த நடிகை தலைமறைவாக வாழ்கிறார். பின்னர் நாடு கடத்தப்பட்ட ஒருவரின் உதவியோடு ஈரானை விட்டு வெளியேறுகிறார் என்பது தான் கதை.

இதில் மர்ஜியா இஸ்லாமிய சட்டத்தை மீறி ஆபாசமாக நடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜூலை மாத இறுதியில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தான் அவருக்கு 90 சவுக்கடியும், 1 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

'மை டெஹ்ரான் பார் சேல்' படத்தை ஈரானில் திரையிட அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் சட்டவிரோதமாக அந்த படம் வினியோகிக்கப்பட்டுள்ளது என்று பார்ஸ் நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

பிபிசியுடன் சேர்ந்து பணியாற்றியதற்காக ஈரானில் கடந்த மாதம் மட்டும் 6 இயக்குனர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

விஸ்வரூபத்தில் தந்தையுடன் இணைந்து துணை இயக்குநராக பணியாற்றும் அகஷரா ஹாசன்


கமல் ஹாசன் குடும்பத்திலிருந்து இன்னொரு கலை வாரிசு வெளி வந்துள்ளது. மூத்த மகள் ஸ்ருதி, பாடகியாக, இசையமைப்பாளராக, நடிகையாக கலக்க ஆரம்பித்துள்ள நிலையில், இளைய மகள் அக்ஷரா தனது தந்தை இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் படத்தில் துணை இயக்குனராகியுள்ளார்.

கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷராவுக்கு நடிப்பை விட இயக்கத்தில் தான் ஆர்வம் அதிகம். நான் திரைக்குப் பின்னால் இருக்கவே விரும்புகிறேன் என்று அவரே ஒருமுறை தெரிவித்துள்ளார். ஆனால் அண்மையில் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க அக்ஷரா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகின. இலங்கைத் தமிழர் ஒருவரை காதலிப்பதாகவும் கிசுகிசு வந்தது. தாயார் சரிகாவுடன் தங்கியுள்ள அக்ஷரா, பாலிவுட் இயக்குனர் ராகுல் தோலாகியாவின் சொசைட்டி என்ற படத்தில் இயக்கத்தில் உதவியாக இருந்தார்.

நடனம், இயக்கத்தில் ஆர்வம் காட்டும் அக்ஷரா தற்போது தந்தை நடித்து வரும் விஸ்வரூபம் படத்தில் துணை இயக்குநராக இணைந்துள்ளார். தனது தந்தையை வைத்து முழுப் படத்தை இயக்கும் ஐடியாவில் உள்ள அக்ஷரா அதற்கு முன்பாக இயக்கத்தில் நல்ல பயிற்சி பெறுவதற்காகவே இப்போது கமல் படத்தில் துணை இயக்குநராகியுள்ளார்.

விஸ்வரூபம் படத்தை கமல்ஹாசனே இயக்கி நடிக்கிறார் என்பது நினைவிருக்கலாம். இந்த படத்தை முதலில் செல்வராகவன் தான் இயக்குவதாக இருந்தது. அதன் பிறகு தானே இயக்கப்போவதாக கமல் அறிவித்தார்.

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா...!
 

அமிதாப்புக்கு வயது 69!


மும்பை: பாலிவுட்டின் சாதனை நடிகர் அமிதாப் பச்சனுக்கு இன்று 69 வயது பிறக்கிறது.

'பாலிவுட்டின் பேரரசன்' என்று வர்ணிக்கப்படுபவர் அமிதாப் பச்சன். ஏராளமான சாதனைகளுக்குச் சொந்தக்காரர். 40 ஆண்டுகளாக சினிமாவில் கோலோச்சி வருபவர். இன்றும் பாக்ஸ் ஆபீஸில் தன் ஆதிக்கத்தை செலுத்தி வரும் அமிதாப்புக்கு இன்று 69 வயது பிறக்கிறது.

ஆனால் இந்தப் பிறந்த நாளை அவர் ஆடம்பரமாகக் கொண்டாடவில்லை. "பிறந்த நாளைக் கொண்டாட சிறந்த வழி, செய்யும் வேலையை ஒழுங்காக நிறுத்தாமல் செய்வதுதான்," என்கிறார் அமிதாப்.

இப்போது ராம்கோபால் வர்மாவின் டிபார்ட்மெண்ட் மற்றும் சோனி டிவியில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி நடத்துதல் என மிக பரபரப்பாக உள்ளார்.

பிறந்த நாளுக்காக கேக் வெட்டினாரா அமிதாப்?

ஆம்... நேற்று நள்ளிரவு ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பிய அமிதாப், சரியாக 12 மணிக்கு கேக் வெட்டி குடும்பத்துடன் எளிமையாக தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

பின்னர் உலகம் முழுவதிலுமிருந்து வந்த அவரது ரசிகர்களின் வாழ்த்துக்களைப் பெறுவதிலும் பதிலுக்கு நன்றி சொல்வதிலும் அவரது நேரம் கழிந்ததாம்.

"மற்றவர்களின் எளிய வாழ்த்துக்களைப் பெறுவதிலும், அவர்களுக்கு பதில் சொல்வதிலும் தனி ஆனந்தம் உள்ளது. இந்தப் பிறந்த நாளுக்கு என்ன செய்தி சொல்கிறீர்கள் என எல்லோரும் கேட்கிறார்கள். ஏன் பிறந்த நாளன்று மட்டும்தான் சொல்ல வேண்டுமா என்ன... எல்லா நாளும் நான் விரும்புவது அன்பும் அமைதியும்தான். அது எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்," என்கிறார் அமிதாப்.

அரசியல், சினிமா, சமூக நல அமைப்புகளைச் சார்ந்த பலரும் அமிதாப்புக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
 

ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கையை சினிமாவாக தயாரிக்கும் சோனி நிறுவனம்!


தொழில்நுட்பத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய, ஆப்பிள் நிறுவனர் மறைந்த ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இதற்கான உரிமையை சோனி நிறுவனம் பெறுகிறது.

தனது வாழ்க்கை வரலாற்றை வால்டர் ஐசக்சன் உதவியுடன் எழுதியிருந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். இந்த சுயசரிதைக்கு முதலில் ஐ ஸ்டீவ் என்று பெயர் வைத்தவர்கள், இப்போது ஸ்டீவ் ஜாப்ஸ் என்று மாற்றியுள்ளனர்.

சைமன் அன்ட் ஸ்குஸ்டர் நிறுவனம் நவம்பர் 21-ம்தேதி இந்த புத்தகத்தை வெளியிடுகிறது. புத்தகத்தின் விலை 17.99 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின் புத்தகத்துக்கு 16.99 டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஜாப்ஸ் சுயசரிதையை திரைப்படமாக வெளியிட சோனி பிக்சர்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கான உரிமம் பெறுவது தொடர்பாக இந்நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது. உரிமத் தொகையாக 1 மில்லியன் டாலர் தர இந்நிறுவனம் முன்வந்துள்ளது.
 

ரஜினியைச் சந்தித்தேன்... நலமாக, உற்சாக இருக்கிறார்! - ஷாரூக்கான் பேட்டி


சென்னை: ரஜினி மிகவும் நலமாகவும் உற்சாகத்துடனும் உள்ளதாக, அவரைச் சந்தித்த பிறகு நடிகர் ஷாரூக்கான் தெரிவித்தார்.

திங்கள்கிழமை சென்னையில் ரா ஒன் படத்தின் தமிழ் பதிப்புக்கான இசைத் தட்டு வெளியீட்டு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார் ஷாரூக்கான். இந்த சந்திப்பு 30 - 35 நிமிடங்கள் நீடித்தது.

இந்த சந்திப்பு குறித்து ஷாரூக்கான் அளித்த பேட்டி:

ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து நன்றி கூறினேன். இருவரும் அரைமணி நேரத்துக்கு மேல் பேசிக் கொண்டிருந்தோம். முதலில் சுவையான இளநீர் தந்தார்கள். பின்னர் ரஜினியுடன் காபி சாப்பிட்டேன்.

அவருடன் இருந்த நேரத்தில் ரஜினிசார் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் காணப்பட்டார். 'ரா ஒன்' பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்தினார்.

சிலர் என்னை அவருடன் ஒப்பிட்டு எழுதுகிறார்கள். தயவு செய்து என்னை 'கிரேட் ரஜினி சாரு'டன் ஒப்பிட வேண்டாம். இந்தப் படத்தில் அவரும் நடிப்பதன் மூலம் அவரது ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும் என விரும்பினேன். இங்கு சென்னை வந்தபிறகு, அவரும் அவரது மனைவி திருமதி லதாவும் எனக்கு டின்னர் அனுப்பி வைத்தனர். அந்த அளவு அன்பான அக்கறையான மனிதர்கள் அவர்கள். அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்கவே நேரில் போய் சந்தித்தேன்.

அவரை இத்தனை வலிமையாகவும் உற்சாகமாகவும் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. ராணா விரைவில் தொடங்கிவிடும் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். இந்த அருமையான சந்தர்ப்பத்தையும், அவரது ஆசியையும் ரா ஒன் டீமுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். விரைவில் ரா ஒன்னில் ரஜினி நடித்துள்ள காட்சி அடங்கிய புதிய ட்ரெயிலர் வெளியாகும்," என்றார்.

பிரபல கஜல் பாடகர் ஜக்ஜித் சிங் மறைவுக்கு ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததாகவும் ஷாரூக்கான் தெரிவித்தார்.
 

'அழகி'க்காக பட்ட அவமானங்கள்! - தங்கர் பச்சான்


அழகி படத்தை எடுத்தபோது என்னை இந்த சினிமா உலகம் அவமானப்படுத்தியது. ஊருக்கு ஓடிவிடச் சொன்னார்கள் பலர். ஆனால் அந்த அவமானங்களே பின்னர் வெற்றியாக மாறின, என்றார் இயக்குநர் தங்கர் பச்சான்.

செவன்த்சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பில், பார்த்திபன் கதாநாயகனாக நடித்து இயக்கிய படம், 'வித்தகன்'. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் வெளியிட்டார்.

இந்த விழாவில், தங்கர்பச்சான் கலந்துகொண்டு பேசும்போது, அழகி படத்தை எடுத்துவிட்டு தான் பட்ட அவமானங்களை வெளிப்படையாகக் கூறி அதிரவைத்தார்.

அவர் கூறுகையில், "நான் இயக்கிய 'அழகி' படம், ஒரு கோடியே எழுபது லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டது. தயாரிப்பாளர் பாதி விலைக்கு விற்க முன்வந்து, அந்த படத்தை 120 முறை திரையிட்டு காண்பித்தும் யாரும் வாங்க முன்வரவில்லை.

அது கூட பரவாயில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு போகட்டும். என்னை அவர்கள் அவமானப்படுத்தியது போல், அவர்களின் பெயர்களை சொல்லி நானும் அவமானப்படுத்த விரும்பவில்லை.

தயாரிப்பாளராகவும், மிகப்பெரிய இயக்குனராகவும் இருக்கக்கூடிய ஒருவர் படம் பார்த்துவிட்டு, ஒரு வார்த்தை கூட பேச விரும்பாமல், முகத்தை திருப்பிக் கொண்டு போய்விட்டார்.

இதுவும் கூட பரவாயில்லை. இன்று கூட மிகப்பெரும் தயாரிப்பாளராக இருக்கக்கூடிய மற்றொருவருக்கு முதல் ஆளாக 'அழகி' படத்தை திரையிட்டு காண்பித்தேன். அவர் என்னிடம் எந்த கருத்தும் சொல்லாமல், தயாரிப்பாளரை அழைத்தார். "தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். செலவு செய்த பணம் இதோடு போகட்டும். இந்த படத்தை ரிலீஸ் செய்தால், மேலும் ரூ.50 லட்சம் தேவைப்படும். உங்களுக்கு போஸ்டர் காசு கூட திரும்பி வராது. இதை இப்படியே விட்டுவிட்டு ஊருக்கு ஓடிவிடுங்கள்,'' என்று கூறிவிட்டு சென்றார்.

இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த துறையில் இருக்கிறார்கள். ஆனால் என்னை அவமானப்படுத்தியவர்களின் கணிப்பை எல்லாம் மீறி, 'அழகி' படம் எவ்வளவு பெரிய வெற்றியையும், வரவேற்பையும் பெற்றது என்று உங்களுக்கே தெரியும்.

தோல்வியை அனுபவித்தவனுக்குத்தான் வெற்றிகளை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது புரியும். வித்தகன் திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்,'' என்றார்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசுகையில், "இதே மாணிக்கம் நாராயணனுக்காக கவுதம் மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு பெரிய வெற்றி பெற்றது. அதே போன்ற வெற்றியை வித்தகனும் பெறும்," என்றார்.

விழாவில் வழக்கறிஞர் பிரேமா சதாசிவம், பேராசிரியர் ஞானசம்பந்தம், நடிகர்கள் சத்யராஜ், விவேக், நடிகைகள் சினேகா, எமிஜாக்சன், மதுமிதா, இனியா, இயக்குநர்கள் அமீர், கவுதம் மேனன், சேரன், லிங்குசாமி, வசந்தபாலன், ஏ.எல்.விஜய், வெற்றிமாறன், சுசீந்திரன், பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார், பட அதிபர் தனஞ்செயன், கமலா திரையரங்க உரிமையாளர் வி.என்.சிதம்பரம் ஆகியோரும் பேசினார்கள்.

தயாரிப்பாளர்கள் ராம.நாராயணன், ஏ.எல்.அழகப்பன், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணா மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.

படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் வரவேற்றுப் பேசினார். பார்த்திபன் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை இயக்குநர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கினார்.