டெல்லி: இந்திய துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் வாழ்க்கை வரலாறு ஹிந்தியில் திரைப்படமாக வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை எடுக்க தனக்கு எந்த விதமான ஆட்சேபனையும் கிடையாது என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுப்பதுதான் இப்போது பாலிவுட்டில் வழக்கமாக உள்ளது. தடகள வீரர் மில்காசிங் வாழ்க்கை வரலாறு ஏற்கனவே திரைப்படமாக வந்து சக்கைபோடு போட்டது. இதனால் குத்து சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கையை ஆதாரமாக கொண்டும் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிரடி கிரிக்கெட் ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு 'நவாப் ஆப் நவாப்ஜ்கர்' என்ற பாலிவுட் திரைப்படத்தை தயாரிக்க பணிகள் ஆரம்பித்துள்ளன.
டெல்லியில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நடத்திய நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த வீரேந்திரசேவாக் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் "நான் சிறுவயதில் நவாப்ஜ்கர் பகுதியில் அமைந்துள்ள, ரிசர்வ் போலீஸ் படையினருக்கான கிரவுண்டில் கிரிக்கெட், பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளை ஆடுவது வழக்கம். அங்கு வசித்த குடும்பத்தார் ஒருநாளும் இதற்கு தடை சொன்னது கிடையாது.
எனது வாழ்க்கையை படமாக எடுப்பது குறித்து சில தயாரிப்பாளர்கள் பேசினர். நான் அதற்கு ஆட்சேபனை எதுவும் கூறவில்லை. இவ்வாறு சேவாக் தெரிவித்தார். அதே நேரம் இந்திய கிரிக்கெட் அணி குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.