கோச்சடையானை வாங்க ஆர்வம் காட்டும் டிடிஎச்காரர்கள்.. அமைதி காக்கும் ரஜினி!

Dth Companies Keen On Rajini S Kochadaiyaan

கமலின் விஸ்வரூபம் படம் தியேட்டரில் வெளியாகும் முன்பே டிடிஎச்சில் ஒளிபரப்பாவது உறுதியாகிவிட்டதால், அதே வழியில் மற்ற பெரிய படங்களையும் வெளியிடும் முயற்சி நடக்கிறது.

முதல்கட்டமாக, பொங்கலுக்கு வரவிருக்கும் கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியனை டிடிஎச்சில் வெளியிடத் தயாராகி வருகின்றனர்.

அமீர் இயக்கத்தில் வெளியாகும் ஆதி பகவனையும் டிடிஎச்காரர்கள் கேட்டு வருகின்றனர்.

இதையெல்லாம் விட முக்கியமானது, கோச்சடையான் படத்தை எப்படி வெளியிடுவார்கள் என்ற கேள்வி. இந்தப் படம் முழுக்க முழுக்க 3 டியில் தியேட்டர்களில் மட்டுமே பார்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டும் பெரியது. போட்ட பணத்தை உடனே டிடிஎச் சிறந்த வழி என்பதால் நாட்டின் அனைத்து டிடிஎச் நிறுவனங்கள் மூலமும் கோச்சடையானை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.

ரஜினி படம் என்று வரும்போது, அனைத்து குடும்பங்களுமே முதல் நாள் முதல் காட்சி பார்க்க விரும்புவார்கள் என்பதால், கூடுதல் கட்டணத்துடன் இந்தப் படத்தை டிடிஎச்சில் ஒளிபரப்ப பேசி வருகின்றனர். ஆனால் ரஜினி கொஞ்சம் அமைதியாக இருங்கள், பிறகு பேசுவோம் என்று கூறியுள்ளாராம்.

திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு பாதகம் இல்லாத முடிவாக இருந்தால் மட்டுமே எதையும் பரிசீலிக்க முடியும் என்று ரஜினி திட்டவட்டமாகக் கூறியுள்ளாராம்.

ஜனவரி 3-ம் தேதிக்குப் பிறகு இந்த விஷயத்தில் ஒரு தெளிவு பிறக்கும் என்று தெரிகிறது.

பொங்கலுக்குள் 4 படங்கள் டிடிஎச்சில் வெளியாகப் போவதை நினைத்து தியேட்டர்காரர்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர்.

 

2013-ல் சைந்தவியை திருமணம் செய்கிறேன் - ஜிவி பிரகாஷ் குமார்

Gv Prakash Confirms His Marriage The Year 2013

பாடகி சைந்தவியை 2013-ம் ஆண்டுதான் கரம்பிடிக்கப் போவதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.

வெயில் படத்தில் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். இவரும் பின்னணிப் பாடகி சைந்தவியும் நீணட நாட்களாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக கடந்த ஆண்டே அறிவித்தனர்.

ஆனால் 2012-ல் இருவரின் திருமணமும் நடக்கவில்லை.

இந்த நிலையில், 2013-ம் வருடத்தில் சைந்தியை திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார். சைந்தவியும் பிரகாஷும் இணைந்து பல பாடல்களைப் பாடியுள்ளனர்.

இவரது இசையில் பாரதிராஜாவின் ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்', விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படம், ஜெய், ஆர்யா, நயன்தாரா நடிக்கும் ‘ராஜா ராணி', பாலாவின் பரதேசி ஆகிய படங்கள் வரும் 2013-ம் ஆண்டு வெளியாக உள்ளன.

 

கமல் படத்துக்கு தியேட்டர் தருவோர் மீது கடும் நடவடிக்கை- திரையரங்க உரிமையாளர்கள்

Theater Owners Take Severe Actions Against Viswaroopam

சென்னை: கமலின் விஸ்வரூபம் உள்ளிட்ட எந்தப் படங்களுக்கும் தமிழகத்தில் தியேட்டர் தரக்கூடாது. மீறி யாராவது கொடுத்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ள திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து விவாதித்து இறுதி முடிவு எடுக்க வரும் ஜனவரி 3-ம் தேதி அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்.

கமல் நடித்து இயக்கியுள்ள ‘விஸ்வரூபம்' படம் வருகிற 11-ந்தேதி ரிலீசாகிறது. ஒரு நாள் முன்னதாக 10-ந்தேதி இரவு 9.30 மணிக்கு டி.டி.எச்.கள் மூலமாக டெலிவிஷன் களிலும் இப்படம் ஒளிபரப்பாகிறது. ரூ 1000 முன்பணமாகக் கட்டி இந்தப் படத்தை டிடிஎச் வைத்திருப்போர் பார்க்கலாம்.

ஆனால் டி.டி.எச்.சில் படத்தை வெளியிட தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். டி.டி.எச்.களில் ஒளிபரப்பினால் தியேட்டர்களில் விஸ்வரூபம் படத்தை திரையிட மாட்டோம் என்று அறிவித்து உள்ளனர். இனி கமலின் பழைய, புதிய படங்களைக் கூட திரையிட விட மாட்டோம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஆனால் கமல் டி.டி.எச்.களில் படத்தை ஒளிபரப்புவதில் தீவிரமாக உள்ளார். இன்று இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமாகக் கேட்கவும் திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையே தமிழ்நாடு முழுவதும் விஸ்வரூபம் படத்தை திரையிட 390 தியேட்டர்கள் முன்வந்துள்ளன. படம் குறிப்பிட்ட தேதியில் திரைக்கு வரும் என்று கமல் கூறியிருந்தார்.

இதனால் திரையரங்க உரிமையாளர்கள் அமைப்பு மிகவும் கோபத்துக்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து தியேட்டர் அதிபர்கள் மீண்டும் அவசர கூட்டத்தை கூட்டுகிறார்கள். வருகிற 3-ந்தேதி காலை 11 மணிக்கு திருச்சியில் இக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

390 தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் திரையிடப்படும் என்று கமல் அறிவித்துள்ளதால் அப்படிப்பட்ட தியேட்டர்கள் எவை எனக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

விஸ்வரூபம் படத்தை திரையிடும் தியேட்டர்களில் வெளியாகும் இதர படங்களை மற்ற தியேட்டர்களில் திரையிடுவதில்லை என்றும் இந்தக் கூட்டத்தில் அதிரடி முடிவு மேற்கொள்ளப்பட உள்ளது.

 

கற்பழிப்புக் குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வேண்டும் - வெண்ணிற ஆடை நிர்மலா

Law Must Be Tighten Against Rapists Vennira Aadai Nilam

ஈரோடு: கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பழம்பெரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்த பழம்பெரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.

எம்.ஜி.ஆர்., என்.டி.ராமாராவ், ஜெயலலிதா...

பேட்டியின்போது அவர் அளித்த பதில்களின் தொகுப்பு:

நான் நடனத்தில் சிறந்து விளங்கியதால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எம்.ஜி.ஆர்., என்.டி.ராமாராவ், ஜெயலலிதா ஆகிய 3 முதல்வர்களுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாதது. சுமார் 300 படங்களில் நடித்துள்ளேன்.

இன்றைய நடிகைகள்...

அன்று நடிகைகளுக்குள் போட்டி இருந்தது. ஆனால் சகஜமாக பழக மாட்டார்கள். இன்று நடிகைகளிடம் போட்டி இருந்தாலும் அவர்கள் விழாக்களுக்கு ஒன்றாக செல்கிறார்கள். நட்பை வளர்த்துக் கொள்கிறார்கள்.

ஆட்டோகிராப், ஆடுகளம், மைனா..

நான் சமீபத்தில் பார்த்து ரசித்த ஆட்டோகிராப், ஆடுகளம், மைனா.. ஆகியவை சிறந்த படங்களாகும். நயன்தாரா, ஸ்ரேயா ஆகியோர் சிறப்பாக நடித்து வருகிறார்கள்.

இப்போது நடிகைகள் சினிமாவை தொழிலாக நினைத்து நடிக்கிறார்கள். ஒரு கட்டத்துக்குப் பின்னர் பிடித்த தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுகிறார்கள்.

புதிய இயக்குநர்கள்

அன்று சினிமாவில் சென்டிமென்ட், நடனம், கவர்ச்சி, சண்டை காட்சி இருந்தது. இப்போது அதையெல்லாம் ட்ராமா என்கிறார்கள். ஏதோ ஜாலியாக படம் சென்று கொண்டு இருக்கிறது. அதனால்தான் திருமணம் ஆன நடிகைகள் நடிக்க முடியவில்லை.

புதிய இயக்குனர்கள் புதிய புதிய விஷயத்தை சொல்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது.

கடுமையான தண்டனை...

டெல்லி மாணவியை கற்பழித்து கொன்ற சம்பவம் கொடூரமானது. அவர்கள் மனித மிருகங்கள். அவர்கள் தாயின் வயிற்றில்தான் பிறந்தார்களா? என்று எனக்கு தோன்றுகிறது. நாடு முழுவதும் இதுபோன்ற குற்றங்கள் நடந்து வருகின்றன. எனவே கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

விஸ்வரூபம்...

விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.சில் ஒளிபரப்புவது என்பது கமல் எடுத்த முடிவு. நல்லெண்ணத்தில்தான் அவர் இந்த முடிவை எடுத்திருப்பார். இதுபற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது.

சாவித்ரியுடன்...

சாவித்திரி அம்மாவோடு நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. ‘‘எங்கள் தாய்‘‘ என்ற படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படமும் பாதியில் நின்று போனது.

இவ்வாறு நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா கூறினார்.

 

மத்திய அரசின் சேவை வரிக்கு எதிர்ப்பு- 7-ந் தேதி திரைஉலகம் உண்ணாவிரதம்!

Film Industry Fast Against Jan 07

சென்னை: திரை உலகினருக்கான மத்திய அரசின் சேவை வரி விதிப்பைக் கண்டித்து வரும் 7-ந் தேதி ஒட்டுமொத்த திரை உலகமும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கிறது.

மத்திய அரசு விதித்துள்ள சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் திரையுலகின் அனைத்து பிரிவுகளை சேர்ந்தவர்களின் அவசர கூட்டம் சென்னையில் உள்ள தென் இந்திய திரைப்பட வர்த்தக சபையில் நேற்று மாலை நடைபெற்றது. இக் கூட்டத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பொருளாளர் எஸ்.தாணு, தென் இந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, தென் இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன செயலாளர் ஜி.சிவா, டைரக்டர்கள் சங்க பொருளாளர் ஜனநாதன், சின்னத்திரை சார்பில் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி நடிகர் சங்க தலைவர் சரத்குமார் கூறுகையில், 2010- ம் ஆண்டிலேயே திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு நேர்முகமாகவும், வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு மறைமுகமாகவும் சுற்றறிக்கை மூலம் சேவை வரி விதிக்க முயற்சி எடுக்கப்பட்டது. ஒட்டுமொத்த திரையுலகின் கோரிக்கைகளை ஏற்று அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி திரையுலகிற்கு சேவை வரி இருக்காது என்று அறிவித்தார். ஆனால், 2012-ல் மத்திய நிதிநிலை அறிக்கையில் திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் தவிர ஏனைய திரைப்பட தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து பிரிவினருக்கும், தொலைக்காட்சி தொழிலாளர்களுக்கும் 1.7.2012 முதல் 12.3% சேவை வரி அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனால் சாதாரண மக்களின் பொழுது போக்காக கருதப்படும் திரைப்படம், தொலைக்காட்சி தொழிலில் ஈடுபட்டுள்ள நடிகர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த வரி விதிப்பால் மிகுந்த பாதிப்பை அடைந்து உள்ளனர். எனவே, சேவை வரி விதிப்பை கண்டித்து ஒட்டுமொத்த திரையுலகமும் ஜனவரி 7- ந் தேதி அன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறார்கள். அன்றைய தினம் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் திரைப்பட காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றார்.

 

தமிழகத்தின் பொக்கிஷம் கமல், அவரை சீண்டாதீர்கள்.. பாரதிராஜா எச்சரிக்கை

Bharathiraja Warns Theatre Owners

சென்னை: சிவாஜி கணேசன், கமல்ஹாசன், இளையராஜா போன்றோர் தமிழகத்தின் பொக்கிஷங்கள். கமல்ஹாசன் அவரை வாழ விடுங்கள், சீண்டிப் பார்க்காதீர்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கடுமையாக கூறியுள்ளார். கமல்ஹாசனை எதிர்க்கும் திரையரங்க உரிமையாளர்களையும் அவர் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு விஷப் பரீட்சை உண்டு. கமல் இப்போது அந்த பரீட்சையில் இறங்குகிறார்.

விஸ்வரூபம் படம் டி.டி.எச்.யில் வரக்கூடாது என்கின்றனர். இந்த படத்தை கமல் செலவு செய்து எடுத்துள்ளார். அதை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பது அவருக்கு உள்ள உரிமை. அதில் யாரும் தலையிடக்கூடாது.

சிவாஜி, கமல், இளையராஜா போன்றோர் தமிழகத்தின் பொக்கிஷங்கள். கமலை கோவணம் கட்டி நடிக்க வைத்தேன். அப்போது பெரிய நடிகராக இருந்தார். ஆனாலும் கேரக்டருக்காக சொன்ன உடனேயே கோவனத்துக்கு மாறினார். அவருக்கு வேறு தொழில் தெரியாது. சினிமாவிலேயே வாழ்கிறார்.

கமல் நடிப்பதோடு மட்டுமல்ல சினிமாவில் சிறந்த டெக்னீஷியனாகவும் மாறி உள்ளார். விஸ்வரூபம் படத்தை எனக்கு திரையிட்டு காட்டினார். பிரமிப்பாக இருந்தது. புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி இருந்தார். ஒரு தமிழன் உலக அளவிலான தொழில் நுட்ப விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது பெருமையாக இருந்தது. அவரை சீண்டி பார்க்காதீர்கள். வாழ விடுங்கள் என்றார் பாரதிராஜா.

இதேபோல தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறுகையில், கமல் ரிஸ்க் எடுப்பார். அதில் ஜெயிக்கவும் செய்வார். டிடிஎச்சில் விஸ்வரூபம் வருவதை எல்லோரும் விரும்புகிறார்கள். திரையுலகம் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறது என்று கூறினார் எஸ்.ஏ.சந்திரசேகர்.