அறுவறுப்பாகவும், ஆபாசமாகவும் நடித்து சினிமாவை சீர்குலைக்கும் நடிகைகள்: சோனாலி பிந்த்ரே தாக்கு


தற்போதுள்ள நடிகைகள் சகட்டுமேனிக்கு ஆடைகளை குறைத்து அறுவறுப்பாகவும், ஆபாசமாகவும் நடிப்பதனால் சினிமாவின் தரம் சீர்குலைந்துவி்ட்டது என்று நடிகை சோனாலி பிந்த்ரே குற்றம்சாட்டியுள்ளார்.

காதலர் தினம் படம் மூலம் கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனாலி பிந்த்ரே. கண்ணோடு காண்பதெல்லாம் படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடித்திருந்தார். இந்திப் படங்களில் ஆர்வம் காட்டிய அவர் கடந்த 2002ம் ஆண்டு இந்தி திரைப்பட இயக்குனரும், நடிகருமான கோல்டிபெல்லை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கடந்த 2005ம் ஆண்டு ரன்வீர் என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அவருக்கு பட வாய்ப்புகள் வந்தபோதும் நடிக்க மறுத்துவருகிறார்.

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சோனாலியிடம் மீண்டும் நடிக்க வருவீ்ர்களா என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது,

மீண்டும் நடிக்கலாம் என்று தான் இருந்தேன். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையைப்பார்த்து தான் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.

முன்பு அழகை அழகாகக் காட்டினார்கள். நடிகைகளின் கவர்ச்சியும் ரசிக்கும் வகையில் இருந்தது. ஏன் நானும் கூட கவர்ச்சியாக நடித்துள்ளேன். ஆனால் அதில் ஆபாசம் இல்லை. தற்போதுள்ள நடிகைகள் சகட்டுமேனிக்கு ஆடைகளைக் குறைத்து பார்க்க அறுவறுப்பாகவும், ஆபாசமாகவும் நடித்து சினிமாவின் தரத்தையே சீர்குலைத்துவிட்டனர். சினிமா கீழ்த்தரமாகவும், அசிங்கமாகவும் ஆகிவிட்டது.

நாளுக்கு நாள் சினிமாவின் தரம் தாழ்ந்துகொண்டே தான் போகிறது. ஆகையால் நான் இனி சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்றார்.

இப்படிப் பேசும் சோனாலி ஒரு காலத்தில் கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட நடித்துக் களைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தீபாவளிப் படங்கள் - ஒரு பார்வை


இந்த தீபாவளிக்கு எத்தனை படங்கள் வெளியாகும்? இந்தக் கேள்வியை கடந்த ஒரு மாத காலமாக கேட்டு வருகிறார்கள் சினிமாக்கார்களும் பத்திரிகையாளர்களும். ஆனால் சரியான பதில் நஹி!

காரணம் தியேட்டர்கள் பற்றாக்குறை (விரிவான தகவல்கள் இன்னொரு கட்டுரையில்!)

இந்த தீபாவளிக்கு தமிழில் இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின்றன. அவை விஜய் நடித்துள்ள வேலாயுதம், சூர்யா நடித்துள்ள ஏழாம் அறிவு. இவற்றுடன் மோதப் போவதாக அறிவித்த தனுஷின் மயக்கம் என்ன மற்றும் சிம்புவின் ஒஸ்தி படங்கள் பல்வேறு காரணங்களைக் கூறி விலகிக் கொண்டன (எனக்கு உடம்பு சரியில்லை - மயக்கம் என்ன இயக்குநர் செல்வராகவன்!).

வேலாயுதம்

விஜய் நடித்துள்ள இந்தப் படம், தெலுங்கில் வெளியான நாகார்ஜுனா படமொன்றின் தழுவல். ரீமேக் புகழ் ஜெயம் ராஜா முதல் முறையாக தன் வீட்டு ஹீரோ ரவியை விடுத்து, வெளி ஹீரோ ஒருவரை வைத்து எடுத்துள்ள படம். விஜய்க்கு இந்தப் படம் ஓடியே தீர வேண்டிய கட்டாயம். எனவே எதிர்ப்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது.

ஜெனிலியா - ஹன்ஸிகா என இரு நாயகிகள், விஜய் ஆன்டனி இசை. பாடல்கள் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் ட்ரெயிலர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஏழாம் அறிவு

சூர்யா நடித்துள்ள ஏழாம் அறிவு, ஏ ஆர் முருகதாஸின் படைப்பு. சூர்யாவை விட முருகதாஸ் மீதுள்ள நம்பிக்கை இந்தப் படக்கும் அபார எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தின் இரண்டு பாடல்களும், ட்ரெயிலரும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது நிஜம். கமல் மகள் ஸ்ருதிக்கு தமிழில் இது முதல் படம்.

தமிழகத்தின் பெருமளவு நல்ல திரையரங்குகள் இந்தப் படத்துக்குக் கிடைத்திருப்பது இன்னொரு ப்ளஸ். அரசியலில் ஆயிரம் மாற்றங்கள் நடந்தாலும், எல்லாருக்கும் நல்ல பிள்ளையாக திகழ்வதால் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைத்துள்ளது. படம் குறித்து முதல்நாள் வரும் 'மவுத் டாக்'தான் ரொம்ப முக்கியம் என்று நம்புகிறார் முருகதாஸ்.

ரா ஒன்

வேலாயுதம், ஏழாம் அறிவை விட, பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படம் ரா ஒன். காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை... சூப்பர் ஸ்டார் ரஜினி இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். தன் கேரக்டருக்கு தானே டப்பிங் பேசியும் உள்ளார். எனவே தங்கள் தலைவரின் தரிசனம் காணவும் குரலைக் கேட்கவும் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் அவரது லட்சோப லட்சம் ரசிகர்கள். இவர்கள் அத்தனை பேரும் ஒரே ஒரு முறை இந்தப் படத்தைப் பார்த்தால் போதும், ரா ஒன் பாக்ஸ் ஆபீஸில் ஏ ஒன்னாகிவிடும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்!

சென்னையில் மட்டும் 30 அரங்குகளில் ரா ஒன் தமிழ் மற்றும் இந்தி வெளியாகிறது. எல்லாமே உயர்தரமான அரங்குகள். தவிர தமிழகத்தின் முக்கிய நகரங்களிலெல்லாம் இந்தப் படம் வெளியாகிறது. ஷாரூக்கான் போட்ட முதல் தமிழகத்தில் மட்டுமே வசூலாகிவிடும் வாய்ப்புள்ளது. இன்னும் ஆந்திராவில் கேட்கவே வேண்டாம். ஹைதராபாதில் மட்டும் 80 அரங்குகளில் இந்தப் படத்தை வெளியிடுகின்றனர்!

இந்த தீபாவளி ரேஸில் வழக்கம் போல ஓரிரு சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகும் வாயாப்புள்ளது. இவை வெற்றியை குறிவைத்து வெளியாவதில்லை. தீபாவளி வாரத்தின் கடைசி 5 நாள் வசூலை குறிவைத்து இறக்கப்படுபவை!
 

தைரியம் எனக்கு கொஞ்சம் ஜாஸ்தி! - சினேகா சிறப்புப் பேட்டி


நடிக்க வந்து முழுசாக பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன.... தமிழ் சினிமாவின் புன்னகை இளவரசியாக இன்னமும் வீற்றிருக்கிறார் சினேகா.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர்ந்து பிரபல நடிகை என்ற அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

தட்ஸ்தமிழின் தீபாவளி ஸ்பெஷலுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

இந்த பதினோரு ஆண்டு திரையுலக அனுபவங்கள் குறித்து....

கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். திரையுலகில் இன்றைக்கு இத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடிப்பதே கஷ்டம்தான். எனக்கு அந்த வாய்ப்ப்பு கிடைத்துள்ளது. இத்தனை ஆண்டுகளில் நான் எவ்வளவோ படங்கள் நடித்தாலும், என்னைத் திரையில் பார்த்து அல்லது என் நடிப்பைப் பார்த்து யாரும் முகம் சுளித்ததில்லை. இது எனக்கு பெரிய அந்தஸ்தைக் கொடுத்துள்ளது. நிறைய பாடங்களை இந்த பதினோரு ஆண்டுகளில் கற்றுக் கொண்டேன்.

எல்லோருக்கும் தங்கள் ஆதர்ஸ நடிகை என்று யாராவது இருப்பார்கள். இவர்களைப் பார்த்துதான் நான் நடிக்க வந்தேன் என்று சொல்வார்கள். உங்களுக்கு?

எனக்கு அப்படி யாரும் இல்லை. காரணம் நான் யாரைப் பார்த்தும் உந்தப்பட்டு இந்த துறைக்கு வரவில்லை. ஒரு விபத்து போலத்தான் என் திரைப்பிரவேசம் அமைந்தது.

ஆனால் நான் திரையுலகில் மிகவும் ஆச்சர்யத்துடன் பார்ப்பது, இவரைப் போல இருக்க வேண்டும் என நினைப்பது, ராதிகா மேடத்தை பார்த்துதான். எனக்கு தனிப்பட்ட முறையிலும் சரி, திரையிலும் சரி அவரை ரோல்மாடல் என்று சொல்லலாம். அவரது துணிச்சல், பிரச்சினைகளை அவர் எதிர்கொள்ளும் விதம், சவால்களை அவர் சந்திக்கும் பாங்கு... எல்லாமே எனக்குப் பிடிக்கும்.

சினிமாவில் போலீஸ் அதிகாரியாக நடித்தீர்கள். துணிச்சலாக சண்டையெல்லாம் போட்டிருந்தீர்கள். நிஜத்தில் உங்கள் துணிச்சலின் அளவு என்ன?

முன்பெல்லாம் நான் கொஞ்சம் பயந்த சுபாவமாகத்தான் இருந்தேன். ஆனால் இந்த சினிமாவில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் என்னை நிறைய மாற்றிவிட்டன. இன்றை பிரச்சினைகளைப் பார்த்து பயப்படுவதில்லை. வருவது வரட்டும் என துணிந்து நிற்கிறேன். யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்வதில்லை. என் சுபாவத்தை மாற்றுவதில்லை. இப்போது எனக்கு கொஞ்சம் தைரியம் ஜாஸ்திதான்!

ஒரு இடைவெளி விழுந்த மாதிரி இருக்கே... அடுத்தடுத்த படங்கள் என்ன?

பொன்னர் சங்கரில் ஒரு ரோல் பண்ணியிருந்தேன். இப்போது முரட்டுக்காளை, விடியல்னு ரெண்டு படம் வரவேண்டியிருக்கு.

தெலுங்கில் ராஜன்னா என்ற படமும், மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறேன். என்னைப் பொருத்தவரை எந்த மொழி என்று பார்க்காமல் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பதால் இடைவெளி ஏதும் தெரிவதில்லை.

நமக்கான பாத்திரம், திறமைக்கேற்ற வேடம் கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டிருக்கிறீர்களா?

இதில் வருத்தப்பட என்ன உள்ளது. சினிமா என்பது முழுக்க ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகம். இங்கு ஹீரோயின்கள் வேலை மிகவும் குறைவு. ஆரம்பத்தில் நான்கு சீன்கள் இருக்கும். இடையில் நான்கு பாடலுக்கு கூப்பிடுவார்கள். க்ளைமாக்ஸில் இருந்தால் இருப்போம். இல்லாவிட்டால் எல்லாம் முடிந்து கடைசி சீனில் மகிழ்ச்சியாக ஒரு போஸ்... இவ்வளவுதான் ஹீரோயின்கள் வேலை. எப்போதாவது பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள ரோல்கள் கிடைப்பதுண்டு. எனவே கிடைக்கிற வாய்ப்புகளில் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

வழக்கமான கேள்விதான்... ஆனால் கேட்க வேண்டியது அவசியமாக உள்ளது. திருமண திட்டம் என்ன?

சினிமா போதும், போரடித்துவிட்டது என எப்போது எனக்குள் குரல் கேட்கிறதோ அப்போது, வேறு தளத்துக்கு மாறிக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் இப்போதைக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. இன்னும் பல படங்கள் நடிக்க வேண்டியுள்ளது.

வதந்திகள், கிசுகிசுக்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

அது வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. அதுவும் என்னைப் போன்றவர்கள் இருப்பது ஷோ பிஸினஸ். இங்கு கிசுகிசுக்கள் வராமலிருந்தால்தான் ஆச்சர்யம். உண்மை தெரியாமல் எழுதுகிறார்களே என்று முதலில் வருத்தமாக இருந்தாலும், இப்போதெல்லாம் அதை சகஜமாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.

இந்த தீபாவளிக்கு உங்கள் படம் எதுவும் வரவில்லை என்ற வருத்தம் உள்ளதா?

நிச்சயமாக. எல்லா நடிகைகளுக்குமே தங்கள் படம் பண்டிகையின்போது வரவேண்டும் என்ற ஆசை இருக்கும். சரி, அதனால் என்ன... எப்படியும் சின்னத்திரையில் என்னைப் பார்ப்பார்கள் ரசிகர்கள். அடுத்த தீபாவளிக்கு என் படம் ரிலீசாகும் என நம்புகிறேன்.
 

தியேட்டர்களுக்கு வெளியே தீபாவளி!


முன்பெல்லாம் ஊர்களில் ஒரு தியேட்டரை சொந்தமாக வைத்திருந்தால் அவர்தான் பெரிய 'தலை'. ஊர் பஞ்சாயத்து தலைவர் பதவியையே அவருக்குதான் தருவார்கள்!

எண்பதுகளில் இப்படி பஞ்சாயத்து தலைவரான பலரை நான் பார்த்திருக்கிறேன்!

அதேபோல, தீபாவளிக்கு நிறைய படங்கள் வெளியாகும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை குறைந்தது 6 படங்களாவது வெளிவந்து கொண்டிருந்தன.

ஆனால் இன்றைக்கு அதெல்லாம் சாத்தியமில்லாத சமாச்சாரம். பிரதான காரணம், மக்களுக்கு மாற்றுப் பொழுதுபோக்குகள் நிறைய கிடைப்பதுதான்.

ராசிபுரம், கிருஷ்ணகிரி போன்ற சிறு நகரங்களுக்கு அருகிலும் பொழுதுபோக்குப் பூங்காக்கள் உள்ளிட்ட பல சமாச்சாரங்கள் கடைவிரித்துவிட்டன. சுற்றுலாத் தளங்கள் எல்லாவற்றிலும் பண்டிகைக் காலங்களில் கூட்டம் நெருக்கியடிக்கிறது. போதாக்குறைக்கு இரண்டு நாளைக்கு விடிய விடிய டிவிகளில் தீபாவளி நிகழ்ச்சிகள் வேறு!

எனவே விசேஷ நாளை சினிமா தியேட்டரில் கழிக்கும் நிலை அடியோடு மாறிவிட்டது.

இன்னொன்று தியேட்டர்கள் பற்றாக்குறை. தமிழகம் முழுவதும் ஒரு காலத்தில் 2500 அரங்குகள் இருந்தன. டூரிங் கொட்டகைகளையும் சேர்த்து. சினிமா கொட்டகை இல்லாத ஊரில் குடியிருப்பது வேஸ்ட் என்பார்கள் முன்பு தமாஷாக!

ஆனால் இன்று மிஞ்சிப் போனால் 1000 அரங்குகள் தேறுவதே கடினம் என்ற நிலை. சென்னையில் பழைய திரையரங்குகள் மூடப்பட்டாலும், அவற்றுக்கு பதில் நான்கைந்து திரைகள் கொண்ட மல்டிப்ளெக்கள் நிறைய வந்துவிட்டன.

ஆனால் மற்ற நகரங்களில் நிலைமை அப்படியில்லை. அங்கெல்லாம் திரையரங்குகள் கல்யாண மண்டபங்களாகி நீண்ட வருடங்களாகிவிட்டன. கிட்டத்தட்ட டூரிங் கொட்டகைகளே இல்லாத நிலை. பல ஊர்களில் டூரிங் கொட்டகைகள் இருந்த இடங்கள் களத்து மேடாகக் காட்சியளிக்கின்றன!

இருக்கிற திரையரங்குகளும் கூட நல்ல வசதியான, ஆரோக்கியமான சூழலில் இல்லை. நல்ல ஒலியமைப்பு, துல்லியமான காட்சி திரையிடல் போன்ற வசதிகளோடு உள்ள அரங்குகள் 600-700 தான் என்கிறார்கள் சினிமா வர்த்தக ஆய்வாளர்கள். மக்கள் தியேட்டர்களை விட்டு ஓட, தாறுமாறான டிக்கெட் கட்டணங்களையும் ஒரு முக்கிய காரணமாக சொல்கிறார்கள்.

திரையரங்குகள் எண்ணிக்கை மீண்டும் பெருகும் சூழல் உருவாகுமா? மீண்டும் இது ஒரு லாபகரமான வர்த்தகமாக மாறுமா?

"நிச்சயம் தியேட்டர் நடத்துவது லாபகரமான தொழில்தான். ஆனால் அதை நடத்தும் முறைதான் முக்கியம். இப்போது மக்கள் மனநிலை மாறியிருக்கிறது. நிறைய வசதிகள் வேண்டும் என்கிறார்கள். சுத்தமான அரங்கு, துல்லியமான ஒலியமைப்பு, தரமான உணவுப் பொருள்கள், இணக்கமான அணுகுமுறை என ஆரோக்கியமான மாறுதல்கள் இருந்தால் நிச்சயம் மக்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்.

அதேபோல, நான் நீண்ட நாள்களாக சொல்லிவரும் விஷயம், 150 பேர் அமரும் வகையில் மினி தியேட்டர்களை அமைக்க வேண்டும் என்பது. பராமரிப்பு செலவு குறைவாக இருக்கும். குறைந்த ஊழியர்கள் போதும். மக்களையும் தக்க வைத்துக் கொள்ளலாம். இத்தகைய திரையரங்குகள் ஊர்தோறும் அமைய அரசு உதவ வேண்டும். அப்போது இந்தத் தொழிலுக்கே புத்துயிர் கிடைக்கும்," என்கிறார் விநியோகஸ்தர் சங்கத் தலைவரான கலைப்புலி சேகரன்.

இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறார் அபிராமி மெகா மால் உரிமையாளரும், திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவருமான அபிராமி ராமநாதன்.

"வெறும் சினிமா ஹாலாக மட்டும் இருந்தால் இனி வேலைக்காகாது. அதனால்தான் அபிராமி காம்ப்ளெக்ஸ் மெகா மாலாக மாறியது. மாற்று பொழுதுபோக்கையும் முடிந்த வரை நாமே தரவேண்டும். தரமான அரங்குகளுக்கு மக்கள் ஆதரவு எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு அபிராமியே ஒரு சிறந்த உதாரணம்," என்கிறார்.

வரும் நாட்களில் தியேட்டர்களுக்கு உள்ளே தீபாவளி கொண்டாடும் நாள் வருமா?
 

'ஃபர்ஸ்ட் ஹீரோ' விஜய் மீது எப்பவும் தனி விருப்பம் உண்டு: பிரியங்கா சோப்ரா


நடிகர் விஜய் மீது எனக்கு எப்பொழுதுமே தனி விருப்பம் உண்டு. மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது என்று நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

உலக அழகியாக தேர்வான பிரியங்கா சோப்ராவுக்கு நடிகை என்ற அந்தஸ்தை கொடுத்தது தமிழ் சினிமா தான். அவர் முதன்முதலாக இளைய தளபதி விஜய்யுடன் சேர்ந்து தமிழன் படத்தில் நடித்தார். அது தான் அவர் நடித்த முதல் படம். அதன் பிறகு தான் பாலிவுட் கண்கள் பிரியங்கா மீது பட்டது. தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார்.

அவருடன் ஜோடி சேர பல ஹீரோக்கள் காத்திருக்கையில் பிரியங்கா விஜயுடன் ஜோடி சேர விரும்புகிறார்.

அண்மையில் சென்னையில் நடந்த சாம்பியன்ஸ் லீக் கிரிக்கட் இறுதிபோட்டியை காண வந்த பிரியங்கா நிருபர்களிடம் கூறியதாவது,

என்னை கோலிவுட் தான் அறிமுகப்படுத்தியது. எனது முதல் படத்தின் ஹீரோ விஜய். அவர் மீது எனக்கு எப்பொழுதுமே தனி விருப்பம் உண்டு. மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது. தமிழ் ஹீரோக்கள் பலரை எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் சினிமாவில் பலமடங்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் வெளியான தமிழ் படங்களைப் பார்த்து அசந்துவிட்டேன்.

எனக்கு தமிழ் படங்களில் நடிக்க மிகவும் ஆசையாக உள்ளது. அதிலும் குறிப்பாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கத் தான் ஆசை. அது நிறைவேறினால் நான் பெருமகிழ்ச்சி அடைவேன் என்றார்.
 

ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்கத்தில் சசிகுமார்!


நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி படங்களைத் தந்த ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் இயக்குநர் சசிகுமார்.

சுப்ரமணியபுரம், நாடோடிகள் என சசிகுமாரின் நடிப்பில் அனைவரையும் கவர்ந்தவர் சசிகுமார். இவர் கடைசியாக நடித்த படம் நாடோடிகள். இயக்கிய படம் ஈசன்.

இப்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் போராளி எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு புதிய படத்தை இயக்க உள்ளார்.

இதற்கிடையே, யுவன் யுவதி படத்துக்குப் பின் ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கும் படம் ஒன்றின் கதையைக் கேட்ட சசிகுமாருக்கு, அந்தக் கதை பிடித்துவிட்டதால் நடித்த ஒப்புக் கொண்டுள்ளாராம்.

தனது இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு முன்பே இதில் அவர் நடிக்கக் கூடும் என்கிறார்கள்.

இந்தப் படங்கள் தவிர, மலையாளத்தில் மாஸ்டர்ஸ் எனும் படத்திலும் நடித்து வருகிறார் சசிகுமார்.
 

பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக மாயவரம் படக் குழு மீது வழக்கு


பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவித்ததாக கூறி மாயவரம் என்ற படத்தின் தயாரிப்பு மேலாளர் மற்றும் இயக்குநர் மீது நந்தம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மாயவரம் என்ற பெயரில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ராஜேந்திரன் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் நேற்று இரவு நடந்தது. ஆனால் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடந்ததால் போலீஸார் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து படப்பிடிப்பு நடத்த போலீஸார் லஞ்சம் கேட்பதாக படத் தயாரிப்பாளர் பரபரபப்பு புகார் கூறினார்.

இந்த நிலையில், இயக்குநர் ராஜேந்திரன் மற்றும் தயாரிப்பு மேலாளர் மீது நந்தம்பாக்கம் போலீஸார் ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில், இரவு நேரத்தில் நடந்த படப்பிடிப்பால் தங்களது அமைதியும், நிம்மதியும் பாதிக்கப்பட்டதாக கூறி சுப்புலட்சுமி என்பவர் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் படக்குழுவினர் மீது பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

பாரதிராஜா பட நாயகியானார் இனியா!


பாரதிராஜா படத்தின் நாயகி என்ற பெருமையைப் பெற்றுள்ளார், வாகை சூடவா படத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திய இனியா.

பாரதி ராஜா அடுத்து இயக்கும் படம் அன்னக் கொடியும் கொடி வீரனும். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. பார்த்திபன் ஹீரோவாக நடிக்கிறார். மீனாள் முக்கிய வேடத்தில் வருகிறார்.

படத்தின் நாயகி யார் என்று பாரதிராஜா முடிவு செய்யாமல் இருந்தார். வாகை சூடவா படம் பார்த்த பிறகு, தனது படத்தின் நாயகி என்ற அந்தஸ்தை இனியாவுக்கு வழங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவின் தலையாய கலைஞர்களில் ஒருவரான பாரதிராஜாவின் படத்தில் நடிப்பது பல நடிகைகளுக்கும் ஒரு கனவு. ஆனால் அந்த வாய்ப்பு வலுவில் வந்திருக்கிறது இனியாவுக்கு.

இந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப் பெரிய இடத்தைப் பிடிக்கும் என பாரதிராஜா கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
 

நடிகை புவனேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மனு: போலீசுக்கு நோட்டீஸ்


சென்னை: கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரை மிரட்டிய நடிகை புவனேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து 1 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு கே. கே. நகர் போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் உள்ள கே. கே. நகரைச் சேர்நதவர் குருநாதன். அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

டி.வி. தொடர்களில் நடித்து வருவதாக நடிகை புவனேஸ்வரி என்னிடம் தெரிவித்தார். மேலும் டி.வி. தொடர்களை அவரே தயாரித்து வெளியிட இருப்பதாகவும், அதற்கு தேவையான பணம் தன்னிடம் இல்லை என்றும் கூறினார்.

இதற்காக ரூ.1.50 கோடி தொகையை கடனாக தரவேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். எனவே நான் அவர் கேட்ட தொகையை வழங்கினேன்.

ஆனால் அவர் டி.வி. தொடர் எதையும் தயாரிக்கவில்லை என்று தெரிந்து கொண்டேன். எனவே கடனாக கொடுத்த தொகையை திருப்பிக்கேட்டேன். இதனால் என்னை அவர் ஆள்விட்டு மிரட்டினார்.

இதுபற்றி கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தேன். எனது புகாரின் அடிப்படையில் புவனேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர். கடன் தராமல் மிரட்டல் விடுத்த அவர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஆறுமுகசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் இது குறித்து இன்னும் 1 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று கே. கே. நகர் போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார்.
 

அதிமுக-விற்கு எதிராக செயல்படும் விஜய் மக்கள் இயக்கத்தினர் டிஸ்மிஸ் செய்யப்படுவர்-எஸ்.ஏ.சந்திரசேகர்


திருச்செந்தூர்: உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக செயல்படும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நீக்கப்படுவார்கள் என இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், பிரபல இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியயாவது, தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதால் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அணியில் பல்வேறு கட்சிகள் இடம் பெற்றிருந்தது. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தனியாக போட்டியிடுகின்றது.

எனவே, விஜய் மக்கள் இயக்க தொண்டர்கள் தமிழக உள்ளாட்சி தேர்தலில் சுமார் 1,200 இடங்களுக்கு போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர். ஆனால் விஜய் மக்கள் இயக்கம் இந்த தேர்தலில் அ.தி.மு.க. அணிக்கு ஆதரவாக செயல்பட முடிவு செய்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக செயல்படும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உடனடியாக நீக்கப்படுபவர்கள். திருநெல்வேலி மேயர் பதவிக்கு மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் மாரியப்பன் பி.ஜே.பி. ஆதரவுடன் போட்டியிடுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிலிருந்து இயக்கத்தினர் அனைவரும் விலக வேண்டும். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். இயக்கத்தின் கட்டுபாட்டை மீறி யாராவது போட்டியிட்டால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், போட்டி வேட்பாளர்கள், இயக்கத்தின் பெயரையோ, படத்தையோ, கொடியையோ விஜய் பெயரையோ பயன்படுத்த கூடாது. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவது நல்லதல்ல. அப்படி செய்தால் அந்த இயக்கத்தால் வளர முடியாது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தனியாக போட்டியிடுவதால் அதற்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்து உள்ளோம், என்றார்.
 

இரண்டாவது கணவரிடம் விவாகரத்து கோரி வனிதா மனு!


தனது இரண்டாவது கணவர் ராஜனிடமிருந்து விவாகரத்து கோரி நடிகை வனிதா விஜயகுமார் நேற்று குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருடன் ராஜனும் பரஸ்பர விவாகரத்துக்கு ஒப்புதல் தெரிவித்து மனுதாக்கல் செய்தார்.

நடிகை வனிதா, சின்னத்திரை நடிகர் ஆகாஷை ஏற்கனவே திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு ஹரி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பின்னர் ராஜன் ஆனந்த் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

ஆகாஷூடன் வசிக்கும் மகன் ஹரியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வனிதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் ஹரி தாயுடன் செல்ல மறுத்து விட்டான். எனவே மகனுக்காக தனது இரண்டாவது கணவரைப் பிரிவது என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார். மகனுக்காக மீண்டும் முதல் கணவர் ஆகாஷுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக சமீபத்தில் வனிதா பேட்டி அளித்து இருந்தார்.

இந்த நிலையில் வனிதாவும், 2-வது கணவர் ராஜன்ஆனந்தும் நேற்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள குடும்பநல கோர்ட்டுக்கு வந்தனர். இருவரும் பரஸ்பர முறையில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தனர்.

2007ல் திருமணம் நடந்து. கடந்த ஆகஸ்டு முதல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறோம். பரஸ்பர முறையில் இருவரும் பிரிந்து செல்ல முடிவெடுத்திருப்பதால் எங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்னிலையில் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.