சூர்யா மாதிரி வருமா? அல்லு அர்ஜுன், ராம் சரண் தேஜா புகழாரம்


தெலுங்கு 7-ம் அறிவு ஆடியோ வெளியீட்டு விழாவில் டோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் அல்ல அர்ஜுன், சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜா ஆகியோர் சூர்யாவை புகழ்ந்து தள்ளிவிட்டனர்.

சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடிக்கும் 7-ம் அறிவு தெலுங்கில் செவன்த் சென்ஸ் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஆடியோ வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. அந்த விழாவில் சூர்யா, ஸ்ருதி ஹாசன், இயக்குனர் முருகதாஸ், கார்த்தி சிவகுமார், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களான அல்லு அர்ஜுன், ராம் சரண் தேஜா உள்ளிட்ட டோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அல்லு அர்ஜுன் கூறியதாவது,

சூர்யா ஒரு அருமையான நடிகர். அவரால் தென்னிந்திய திரையுலகிற்கே பெருமை. சூர்யா நடித்த கஜினி தமிழிலும், தெலுங்கிலும் சக்கைப்போடு போட்டதைப் பார்த்து தான் பாலிவுட் தெலுங்கு, தமிழ் படங்களைப் பார்க்க ஆரம்பித்தது. இந்தி கஜினியில் ஆமீர் கான் நடித்திருந்தார். அங்கும் சூப்பர்ஹிட் தான் என்றார்.

ராம் சரண் தேஜா கூறுகையில், சூர்யாவால் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும். எனக்கு மகதீரா மூலம் தான் அங்கீகாரம் கிடைத்தது. அந்த கதாபாத்திரத்தில் சூர்யா ஈஸியாக நடித்துவிடுவார். சொல்லப் போனால் இன்னும் சிறப்பாக நடிப்பார் என்றார்.

அவர்களைப் போன்று பிரபல இயக்குனர்கள் எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் வி.வி. விநாயக் ஆகியோரும் தங்கள் பங்கிற்கு சூர்யாவை ஆஹா, ஓஹோ என்று புகழந்து பேசினர்.

இப்படி ஆள் ஆளுக்கு புகழந்து தள்ளி சூர்யாவை வெட்கப்பட வைத்துவிட்டனர்.
 

தீபாவளிக்கு ஒரு நாள் முன் வெளியாகும் விஜய்யின் வேலாயுதம்!


விஜய் நடிப்பில், ஜெயம் ராஜா இயக்கியுள்ள வேலாயுதம் படம் வரும் அக்டோபர் 25-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, அய்ங்கரன் நிறுவனம் வெளிநாடுகளில் வெளியிடுகிறது. தமிழகத்தில் ஆஸ்கர் பிலிம்ஸ் வெளியிடுகிறது.

வெளிநாடுகளில் மட்டும் 400 திரையரங்குகள் வரை இந்தப் படத்துக்கு புக் செய்யப்பட்டுள்ளன. இந்த தியேட்டர்கள் விவரங்களையும் அய்ங்கரன் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி ஹீரோயின்களாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு விஜய் ஆன்டனி இசையமைத்துள்ளார்.

ரஜினியின் எந்திரனைப் போல பெரிய ஓபனிங் வேண்டும் என்பதற்காக தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாகவே இந்தப் படத்தை வெளியிடுகின்றனர். அதேபோல தமிழகத்தில் 1000 அரங்குகள் வரை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்களாம்.
 

டெலிகாம் விளம்பரத்திற்கு விஜய்க்கு ரூ. 5 கோடி?


நடிகர் விஜய் ஒரு பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்காக அவருக்கு ரூ. 5 கோடி சம்பளம் பேசியுள்ளார்களாம்.

கோலிவுட் நட்சத்திரங்கள் தற்போது அதிக அளவில் விளம்பரப் படங்களில் நடித்து வருகின்றனர். ஏர்செல் நிறுவனத்திற்கு சூர்யாவும், ஏர்டெல் நிறுவனத்திற்கு அவரது தம்பி கார்த்தியும் பிராண்டு அமாபசிடர்களாக உள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது விஜய் சேரவிருக்கிறார். அவர் ஒரு பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக அவருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூ. 5 கோடி.

தற்போது வேலாயுதம் பட வேலை முடிந்துவிட்டது. நண்பன் முடியும் தருவாயில் உள்ளது. இதையடுத்து விஜய் 3 நாட்கள் நடக்கும் இந்த புதிய விளம்பரப் படத்தில் நடிக்கவிருக்கிறார்.
 

நடிகை ஸ்ருதிக்கு சிறந்த இசை ஞானம் உள்ளது: ஹாரிஸ் ஜெயராஜ்-சூர்யாவும் புகழாரம்


சென்னை: நடிகர் கமல்ஹாசனின் இசை ஞானத்தை போல, அவரது மகள் ஸ்ருதிஹாசனுக்கும் உள்ளது என இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பாராட்டி உள்ளார்.

இதுகுறித்து இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் கூறியதாவது, ஏழாம் அறிவு படத்தில் 6ம் நூற்றாண்டில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்ட ஒரு பாடல் வருகிறது. இதற்காக பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக் கருவிகளை வாங்க பல இடங்களில் தேடினேன்.

கடைசியில் சீனாவில் நடந்த ஒரு ஏலத்தில் பல பணக்காரர்களுடன் போட்டி போட்டு அந்த இசைக் கருவிகளை வாங்கினேன். அவற்றை பயன்படுத்தி மிகவும் சிரமப்பட்டு இசை அமைத்துள்ளேன்.

இந்த படத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன் இசையமைத்த 'உன்னைப்போல் ஒருவன்' பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தது. அவருக்கு இசை ஞானம் மட்டுமின்றி, சிறந்த குரல்வளமும் உள்ளது. நடிகர் கமல்ஹாசன் இசை ஞானம் கொண்டவர்.

அவரது ஞானம், ஸ்ருதிக்கு இயற்கையாகவே வந்துள்ளது. அவர் படங்களில் நடிப்பதோடு நின்றுவிடாமல், இசையமைப்பது, பாடுவது ஆகிய பணிகளிலும் ஈடுபட வேண்டும், என்றார்.

தமிழ் சினிமாவில் ஸ்ருதிக்கு முக்கிய இடம்

இதேபோல நடிகர் சூர்யாவும் ஸ்ருதியின் நடிப்பைப் புகழ்ந்துள்ளார்.இதுகுறித்து சூர்யா கூறுகையில், ஸ்ருதியுடன் நடிக்க நான் பயந்தேன். கமல்ஹாசனின் மகளுடன் எப்படி நடிப்பது என்ற பயம்தான் அது. ஆனால் அவருடன் நடித்தபோதுதான் அவருக்கு தமிழ் சினிமாவில் முக்கிய இடம் உள்ளதைப் புரிந்து கொண்டேன் என்றார் சூர்யா.
 

250 இதய நோயாளிகளுக்கு உதவும் மம்மூட்டி!


மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு பெரிய மனசு. அவர் ஏற்கனவே 100 இதய நோயாளிகளின் சிகிச்சைக்கான செலவை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தற்போது மேலும் 250 பேருக்கு உதவ முன்வந்துள்ளார்.

மாலிவுட்டில் பல ஆண்டுகளாக கொடுகெட்டிப் பறக்கும் நடிகர் மம்மூட்டி (58). அவர் திருவனந்தபுரத்தில் உள்ள என்.ஐ.எம்.எஸ். மருத்துவமனையுடன் சேர்ந்து 100 இதய நோயாளிகளின் மருத்துவ செலவை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் மேலும் 250 இதய நோயாளிகளின் மருத்துவ செலவை ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள என்.ஐ.எம்.எஸ். மருத்துவமனையுடன் சேர்ந்து 100 இதய நோயாளிகளின் மருத்துவ செலவை ஏற்றுக் கொண்டேன். அவர்களுக்கு பைபாஸ் ஆபரேஷன் உள்பட அனைத்தும் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தேன். இந்நிலையில் மேலும் 250 இதய நோயாளிகளின் மருத்துவ செலவை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளேன் என்றார்.

சமூக சேவையில் அதிக ஆர்வம் காட்டும் மம்மூட்டி நாளை அந்த மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுடன் நேரத்தை செலவிடுகிறார்.

இதய அறுவை சிகிச்சை தவிர மம்மூட்டி தனது ரசிகர் மன்றத்தின் மூலம் ஏழை மக்களுக்கு இலவசமாக கண்புரை அகற்றும் சிகிச்சை செய்யவும் உதவி வருகிறார்.
 

புதுமுகங்களுக்கு வாய்ப்பு... உதயநிதியின் புது முடிவு!


கருணாநிதி குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களில், குறைந்த காலத்தில் நல்ல பெயரைச் சம்பாதித்தவர் உதயநிதி ஸ்டாலின்.

ஒரு பெரிய அரசியல் தலைவரின் வாரிசு என்ற நினைப்பை ஓரங்கட்டிவிட்டு, இவர் சினிமாவில் செய்துவரும் பணிகள் இவரை தனித்து அடையாளம் காட்டுகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் சகஜமாக பழக வைக்கிறது.

இப்போது ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார் உதயநிதி. இனி பெரிய நட்சத்திரங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி, சின்ன பட்ஜெட்டில் புதுமுகங்களை வைத்து தயாராகும் படங்களுக்கும் ஆதரவளிப்பது என முடிவு செய்துள்ளாராம் உதயநிதி.

சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவுக்குப் பிறகு இவரது அடுத்த தயாரிப்பு, 'தென்மேற்கு பருவக்காற்று' படம் தந்த சீனு ராமசாமியின் அடுத்த படம்தானாம்.

சீனு ராமசாமி கூறிய கதைகளில் ஒன்றை படமாக எடுக்க சம்மதித்துள்ள உதயநிதி, அதில் முற்றிலும் புதுமுகங்களை நடிக்க வைக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
 

சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா


தன்னிடம் கடிதம் மூலம் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்துவிட்டார் சரண் என்றும் இதனால் அவரை மன்னித்துவிட்டதாகவும் நடிகை சோனா தெரிவித்துள்ளார்.

மங்காத்தா மதுவிருந்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக எஸ்பிபி சரண் மீது புகார் தெரிவித்தார் சோனா. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதில் எஸ்பிபி சரணுக்கு இருவார கால முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களாக இந்த விவகாரம் பெரும் பரபரப்புடன் பேசப்பட்டு வந்தது. சோனாவை சமாதானப்படுத்த எஸ்பி பாலசுப்ரமணியம் உள்ளிட்டோரும் நேரில் போய் பேசினர்.

சரண் 10 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்டுவிட்டால் வழக்கை வாபஸ் பெறுவதாக முன்பு சோனா கூறினார். ஆனால் சோனாவிடம் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக, சோனாதான் பாலியல் உணர்வை தூண்டும் விதத்தில் நடந்து கொண்டார் என்று கூறினார்.

இந்த நிலையில் கடிதம் மூலம் சரண் மன்னிப்பு கேட்டுள்ளதால் அவரை மன்னித்துவிட்டேன் என்று தற்போது சோனா அறிவித்திருக்கிறார். ஆனால் இதுகுறித்து எஸ்பிபி சரண் தரப்பில் எதுவும் கூறப்படவில்லை.

இதன் மூலம் சோனா-சரண் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
 

விஜய்க்காக ஒரு கதை...! - 'வெடி' கொளுத்தும் விஷால்


ஒரு நடிகராகும் முனைப்பில் திரையுலகில் நுழைந்தவரல்ல விஷால். இயக்குநர் ராம் கோபால் வர்மா மற்றும் நடிகரும் இயக்குநருமான அர்ஜுன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகத்தான் அவரது சினிமா வாழ்க்கை ஆரம்பமானது.

சட்டென்று 'செல்லமே'யில் நடிகராகி, மளமளவென முன்னேறி இன்று முன்னணி ஆக்ஷன் ஹீரோவாக நிற்கிறார்.

பிரபு தேவா இயக்கத்தில் இவரும் சமீராவும் ஜோடி சேர்ந்திருக்கும் 'வெடி' வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி இந்தப்படத்துக்கு இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

வெடியின் ஸ்பெஷல் என்ன?

"இந்தப் படம் தெலுங்கில் வெற்றி பெற்ற சவுரியம் படத்தின் ரீமேக். ஆனால் அதை விட மிக அழகாக படத்தை மெருகேற்றியுள்ளார் பிரபு தேவா மாஸ்டர்.

பொதுவா தெலுங்கில் எந்தப் படம் ஜெயித்தாலும் உடனே அதை தமிழில் நாம பண்ணனும் என்பதுதான் என் ஆசை. ஆனா எல்லா படத்தையும் பண்ண முடியாது. என்னைத் தவிர யார் பண்ணாலும் அதை தாங்கவும் முடியாது. அப்படி நான் மிஸ் பண்ண படம் சந்தோஷ் சுப்ரமணியம்.

தெலுங்கில் சவுரியம் ரிலீஸ் ஆனதும் நாங்க அதன் ரீமேக் ரைட்ஸை வாங்கிட்டோம். அப்போதே தீர்மானிச்ச ஒரு விஷயம், படத்தின் இயக்குநர் பிரபுதேவா மாஸ்டர்தான் என்பது.

இந்தப் படத்துக்கே புதிய கலர், ஃபீலைக் கொடுத்துள்ளார் பிரபுதேவா. அவன் இவன் படத்தில் என் நடிப்பை எல்லோரும் புகழ்ந்தார்கள். இந்தப் படத்தில் அந்தப் பெயரை காப்பாத்திக்குவேன்னு நினைக்கிறேன்," என்றார்.

தீபாவளிக்கு மூன்று வாரங்கள் இருக்கும் நிலையில் படத்தை வெளியிடுகிறார்கள். காரணம் கேட்டால், "இப்போல்லாம் எந்தப் படமாக இருந்தாலும் இரண்டு வாரங்கள்தான் கலெக்ஷன். தசரா, காலாண்டு லீவ் என நல்ல டைம் இது. அதனால்தான் தீபாவளிக்கு வெளியிடாமல் இப்போதே ரிலாஸ் செய்கிறோம்," என பக்காவாக பிஸினஸ் பேசினார் விஷால்.

அடுத்தடுத்து பெரிய பட்ஜெட், பெரிய இயக்குநர்களின் படங்கள் என விஷால் பிஸியாக இருந்தாலும், உள்ளுக்குள் அந்த இயக்குநர் ஆசை அப்படியே இருக்கிறதாம்.

எப்போது இயக்குநராகும் ஐடியா?

"விஜய்க்காக ஒரு கதை வச்சுருக்கேன். நடிச்சா அவர் மட்டும்தான் அதில் நடிக்க முடியும். ரொம்ப நாளா அவருக்காக நான் உருவாக்கி வைத்திருக்கும் கதை அது. அவர் சம்மதிச்சா இயக்க நான் இப்போதே ரெடி" என்றார் விஷால்.

விஜய் ரெடியா?
 

சன் குழுமத்திலிருந்து விலகினார் சக்சேனா!!


சென்னை: சன் பிக்சர்ஸ் மற்றும் சன் குழுமத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகிவிட்டதாக தனது வழக்கறிஞர் மூலம் ஹன்ஸ்ராஜ் சக்சேனா அறிவித்துள்ளார்.

சன் குழுமத்தில் மிகவும் பலம் வாய்ந்த மனிதராக உலா வந்தவர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. சன் குழுமம், தனியாக சன் பிக்சர்ஸ் என்ற திரைப்பட வர்த்தகப் பிரிவை தொடங்கியபோது, அதன் தலைமைப் பொறுப்பேற்றார். சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன் படத்ன் நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்தார் சக்சேனா.

ஆனால் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, பல்வேறு மோசடி, மிரட்டல் வழக்குகளில் சக்சேனாவைக் கைது செய்தது அதிமுக அரசு.

கடந்த மூன்று மாத காலமாக ஏராளமான வழக்குகளில் அடுத்தடுத்து கைதாகி, நீதிமன்ற காவல், போலீஸ் காவல் என தொடர் சிறைவாசம் அனுபவித்து வந்தார் சக்சேனா.

இந்த நிலையில், அனைத்து வழக்குகளிலும் நிபந்தனை ஜாமீன் பெற்று இப்போது வெளியில் வந்துள்ளார். இனி அவர் சன் குழுமத்தில் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்தது. மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் நீடித்திருக்குமா என்றும் கேள்வி எழுப்பினர்.

சன் பிக்சர்ஸ் ஏற்கெனவே சக்சேனாவின் இடத்தில் தற்காலிகமாக செம்பியன் என்பவரை சிஇஓவாக நியமித்தது. அதன் பிறகுதான் மங்காத்தா படத்தை வெளியிட்டு வசூலை அள்ளியது. தொடர்ந்து வெடி, நண்பன், ஏழாம் அறிவு என மெகா பட்ஜெட் படங்களை கைவசம் வைத்துள்ளது.

ஆனால் சக்ஸேனாவின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் சன் குழும தலைவர் கலாநிதி மாறனைத் தொடர்பு கொண்ட சக்சேனா, தன் மீதுள்ள வழக்குகளால் நிறுவனத்துக்கு தேவையற்ற கெட்ட பெயர் வரக்கூடாது என்பதால், சன் குழுமத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்வதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தையும் அவர் கலாநிதி மாறனுக்கு அனுப்பி வைத்தார். அக்கடிதத்தை கலாநிதியும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இத்தகவல்களை சக்சேனாவின் வழக்கறிஞர் இன்று தெரிவித்தார்.
 

'மேண்டலின்' சீனிவாசுக்கு விவாகரத்து: மனைவிக்கு ரூ10 லட்சம் ஜீவனாம்சம்!


சென்னை: மேண்டலின் இசைக் கலைஞர் சீனிவாஸ், தனது மனைவியிடம் பெற்ற விவாகரத்தை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் ஜீவனாம்சமாக மனைவிக்கு ரூ 10 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டது.

மேண்டலின் இசைக் கலைஞர் சீனிவாஸ். இவருக்கும், ஸ்ரீ என்பவருக்கும் 1996-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

எனவே சென்னை குடும்பநல கோர்ட்டில் மேண்டலின் சீனிவாஸ் வழக்கு தாக்கல் செய்தார். அதில், 'மனைவி தன்னை மன ரீதியாக கொடுமைப்படுத்துவதாகவும், ஆந்திராவில் விஜிலன்ஸ் கமிஷனராக இருக்கும் அவரது தந்தையும் தன்னை மிரட்டுவதாகவும் அதில் சீனிவாஸ் கூறியிருந்தார்.

எனவே இந்த காரணங்களுக்காக தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கி உத்தரவிட வேண்டும் என்று வழக்கில் சீனிவாஸ் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை குடும்பநல கோர்ட்டு, சீனிவாஸ்- ஸ்ரீ தம்பதியினருக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீ மேல்முறையீட்டு மனு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவில், "கடந்த கால வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை குழியில் போட்டு மூடிவிட்டு, சீனிவாசும், ஸ்ரீயும் அடுத்ததாக புதுவாழ்க்கையை தொடங்க வாய்ப்பு இல்லை. ஏற்கனவே அவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொருவரையும் பிரிந்து தனியாகத்தான் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த காலகட்டத்தில் தங்கள் விருப்பம்போல் வாழ்க்கையை நடத்தியுள்ளனர். எனவே அவர்கள் மீண்டும் கணவன், மனைவியாக இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பு இல்லை. அவர்கள் பிரச்சினையின் முடிவுக்கு, விவாகரத்து மட்டும்தான் ஒரே நிவாரணமாக இருக்கும்.

குடும்பநல நீதிமன்ற உத்தரவின்படி, மனைவிக்கும், மகனுக்கும் ஜீவனாம்சமாக தலா ரூ.5 லட்சம் தொகையை சீனிவாஸ் கொடுத்துள்ளார். இந்த ஜீவனாம்ச தொகை மேலும் ரூ.5 லட்சம் அதிகரிக்கப்படுகிறது. அந்தத் தொகையை ஒரு மாதத்துக்குள் சீனிவாஸ் வழங்க வேண்டும்," என்று கூறினர்.
 

எதிர்ப்பை மீறி வெளியாகும் 'சத்யானந்தா'


போலிச்சாமியார்கள் பற்றிய திரைப்படம் ஒன்று சத்யானந்தா என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகிறது.

இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என நித்யானந்தா வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அந்த எதிர்ப்பையும் மீறி இந்தப் படத்தை திரையிடுகிறார்கள்.

படத்தின் டப்பிங், ரீ ரிக்கார்டிங் போன்ற பணிகள் முடிந்துள்ளது. தற்போது தணிக்கை குழுவுக்கு இப்படம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் சத்யானந்தா படத்தை ரிலீஸ் செய்வதற்கு நித்யானந்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். படத்துக்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் ஒரு வழக்கும், அத்துடன் ரூ. 3 கோடி கேட்டு தனியாக மானநஷ்ட வழக்கும் தொடர்ந்துள்ளார். இதற்கு படக்குழு சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் மதன்படேல் கூறுகையில், "சத்யானந்தா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. தணிக்கை குழுவுக்கும் அனுப்பி விட்டோம். தமிழகத்தில் ரிலீஸ் செய்ய தயாராகி வருகிறோம். நித்யானந்தா இந்த படத்தை தடை செய்ய முயற்சிப்பது வியப்பாக உள்ளது. படத்தை பார்க்காமலே அவர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று புரியவில்லை. உலகம் முழுவதும் போலி சாமியார்கள் உள்ளனர். அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவதே இப்படத்தின் நோக்கம்.

இந்த படம் ஒரு கற்பனை கதை. ஆன்மீகவாதிகள் போர்வையில் உள்ள போலிகளிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற சமூக அக்கறை யோடு இப்படத்தை எடுத்துள்ளோம். நித்யானந்தா ரூ.3 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளார். பணத்தை கொடுத்தால் ரிலீசுக்கு சம்மதிப்பாரா?," என்றார்.

இப்படத்தில் சத்யானந்தாவாக ரவி சேட்டன் நடித்துள்ளார். இத்தாலி நடிகை அனுகி, நேகா மிஸ்ரா ஆகியோரும் நடித்துள்ளனர்.
 

பிரபல தயாரிப்பாளரை சந்திக்க மறுத்ததால் மலையாளத்தில் நடிக்க நித்யா மேனனுக்கு தடை!


பிரபல மலையாளத் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப்பை நேரில் சந்தித்துப் பேச மறுத்ததால் முன்னணி நடிகை நித்யா மேனனுக்கு மலையாளத்தில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார் நித்யா மேனன். தமிழில் 180, வெப்பம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கேரள திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரும் மம்முட்டியின் நண்பருமான ஆண்டோ ஜோசப் ஒரு படத்தில் நித்யா மேனனை ஒப்பந்தம் செய்ய விரும்பினார்.

எனவே நித்யா நடித்துக் கொண்டிருந்த மலையாள பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று நித்யா மேனனை சந்தித்துப் பேச விரும்பினார் ஆண்டோ ஜோசப். இந்த தகவல் நித்யாமேனனிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆண்டோ ஜோசப்பை சந்திக்க நித்யாமேனன் மறுத்து விட்டார். எதுவாக இருந்தாலும் எனது மானேஜரிடம் பேசுங்கள் என்று கூறிவிட்டாராம்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆண்டோ ஜோசப் இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தார்.

மூத்த தயாரிப்பாளரை அவமதித்ததாக நித்யா மேனனுக்கு தயாரிப்பாளர் சங்கம் நடிக்க தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சுரேஷ்குமார், பிறப்பித்துள்ளார்.

இதேபோல தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதிக்குமாறு அந்தந்த மாநில தயாரிப்பாளர் சங்கத்துக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
 

மீண்டும் ஒன்றுசேரும் சல்மான், கத்ரீனா?


நடிகர் சல்மான் கானும், நடிகை கத்ரீனா கைபும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தார்கள் என்பது உலகம் அறிந்ததே. ஆனால் அவர்களுக்குள் மீண்டும் காதல் உணர்வு துளிர்விட்டுள்ளது என்று பேசப்படுகிறது.

யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஏக் தா டைகர் என்ற இந்தி படத்தில் சல்மான் கானும், கத்ரீனா கைபும் ஜோடி சேர்ந்துள்ளனர். படப்பிடிப்பில் சல்மானும், கத்ரீனாவும் மிக நெருக்கமாக உள்ளனராம்.

சல்மானுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் தான் நரம்புக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் படப்பிடிப்பில் கத்ரீனா சல்மானை விழுந்து விழுந்து கவனித்துக் கொள்கிறாராம்.

கத்ரீனா கைப் படப்பிடிப்பில் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததும் அவரை தூக்கிவிட முதலில் வந்தது சல்மான் தான். அது மட்டுமின்றி கத்ரீனா மினி ஸ்கர்ட் போட்டுக் கொண்டு சைக்கிளில் ஏறும்போது அவரது உள்ளாடை தெரியவே அதை யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக அவரை மறைத்துக் கொள்ள சல்மான் ஓடினார். ஆனால் அதற்குள் புகைப்படக்காரர்கள் போட்டோ எடுத்துவிட்டனர்.

போகிற போக்கை பார்த்தால் இருவரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் போலும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
 

'கடிதம் மூலம் வருத்தம்'... சரணுடன் நடிகை சோனா 'சமரசம்'!


சென்னை: எஸ்.பி.பி.சரண் கடிதம் மூலம் வருத்தம் தெரிவித்ததால் அவருடன் நான் சமரசம் செய்து கொண்டேன் என்று நடிகை சோனா கூறினார்.

நடிகர் வைபவ் வீட்டில் நடந்த மது விருந்துக்கு நடிகை சோனா சென்றபோது அவரிடம் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மகன் சரண் பாலியல் பலாத்காரத்துக்கு முயன்றதாக புகார் செய்தார்.

சரண் 10 நாட்களுக்குள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் என் சாவுக்கு அவர்தான் காரணமாக இருப்பார் என்று சோனா கூறியிருந்தார்.

அத்துடன் எஸ்.பி.பி.சரண் மீது சென்னை பாண்டிபஜார் போலீசிலும் புகார் செய்தார்.

இந்த புகார் தொடர்பாக தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக எஸ்.பி.பி.சரண் கோர்ட்டில் முன்ஜாமீனுக்கு மனு செய்தார்.

மேலும் தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி, போலீஸ் மூலம் சோனாவை மிரட்டியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சோனா-எஸ்.பி.பி.சரண் விவகாரம் நேற்று முடிவுக்கு வந்தது. எஸ்.பி.பி.சரண் வருத்தம் தெரிவித்து கடிதம் மூலம் என்னிடம் மன்னிப்பு கேட்டதால் நான் அவருடன் சமரசம் செய்து கொண்டேன் என்று சோனா கூறினார்.

ஆனால் இதுபற்றி சரண் வெளிப்படையாக எதுவுமே கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்ப்பந்தம்?

சோனா தன் வழக்கை வாபஸ் பெற முக்கிய காரணம், அவருக்கு திரையுலக மற்றும் அரசியல் புள்ளிகளிடமிருந்து வந்த நெருக்கடிகள்தான் என்று கூறப்படுகிறது.

சரணுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யாமல் சோனா அமைதியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், உள்ளே தூக்கிப் போட்டுவிடுவோம் என போலீசாரே சோனாவை மிரட்டியது நினைவிருக்கலாம். இதைத் தொடர்ந்து, திரையுலக முக்கிய பிரமுகர்கள், நடிகர் சங்க நிர்வாகிகள் சிலர் கொடுத்த நிர்ப்பந்தம் காரணமாக சோனா இந்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டாராம்.