இளையராஜா - வைரமுத்து இணைவார்களா.. மாட்டார்களா என்ற கேள்வி கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்கிறது.
இந்தக் கேள்விக்கு இருவரிடமிருந்தும் இணக்கமான பதில் இல்லை. இனி அது சாத்தியமா... சாத்தியப்பட்டாலும் பெரிய வெற்றி கிடைக்குமா என்ற கேள்வியை வைரமுத்து எழுப்பி விட்டார்.
இளையராஜாவோ இதைப் பற்றி பொது வெளியில் பேசுவதே இல்லை. எந்த சூழலிலும் இதுபற்றிப் பேசுவதை தவிர்த்து வருகிறார்.
எனவே இந்த சிகரங்கள் இணைவதற்கான சாத்தியங்கள் குறைவு என்றாகிவிட்டது.
ஆனால் இளையராஜா, வைரமுத்து அன்பர்களுக்கு இனிப்பான சேதி ஒன்று... அதுதான் இளையராஜாவின் இசை இளவல் யுவன் சங்கர் ராஜாவுடன் கைகோர்க்கிறார் வைரமுத்து என்பது.
ஆம்... இது ஏதும் புனையப்பட்ட செய்தி அல்ல. முழுக்க முழுக்க அதிகாரப்பூர்வமான செய்தி.
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கும் புதிய படமான இடம் பொருள் ஏவலில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, அத்தனை பாடல்களையும் எழுதுகிறார் வைரமுத்து!
எப்படிச் சாத்தியமாயிற்று இது?
யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டுகளில், வைரமுத்து ஒரு முன்னணி பாடல் ஆசிரியராக இருந்தாலும், அவருக்கு யுவன் எந்த வாய்ப்பும் தரவில்லை. தந்தைக்கும் வைரமுத்துவுக்குமான பிணக்கில் அவர் குறுக்கிடவும் இல்லை. அப்பாவுக்கு ஆகாதவர் தனக்கும் ஆகாதவரே என்ற நினைப்போடு அவர் புதியவர்களுடன் கைகோர்த்து தனி ட்ராக்கில் பயணித்தார்.
சீனு ராமசாமி - லிங்குசாமி வேண்டுகோள்
இந்த நிலையில் இடம் பொருள் ஏவல் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தமானார். சீனு ராமசாமியின் ஆஸ்தான இசையமைப்பாளர் ரகுநந்தன். ஆனால் லிங்குசாமிக்குப் பிடித்தவர் யுவன். தயாரிப்பாளர் சொன்னதற்காக ரகுநந்தனை ட்ராப் செய்து, யுவனை ஒப்பந்தம் செய்தார் சீனு ராமசாமி. அடுத்து தனது விருப்பத்துக்காக வைரமுத்துவை பாட்டெழுத வைக்க வேண்டும் என்று யுவனை கேட்டுக் கொண்டார்.
அப்பாவின் சம்மதத்துடன்...
ஆனால் முதலில் இதற்கு உடனடியாக சம்மதிக்காத யுவன், தன் அப்பா இளையராஜாவிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். அவர் அனுமதி கொடுத்த அடுத்த நிமிடம் லிங்குசாமி மற்றும் சீனு ராமசாமிக்கு போன் செய்து சம்மதம் தெரிவித்தாராம் யுவன்.
முதல் முறை
யுவன் - வைரமுத்து கூட்டணி சேர்ந்திருப்பது இதுதான் முதல் முறை. சீனு ராமசாமி படத்துக்கு இது பெரிய பப்ளிசிட்டி பலமாக அமைந்திருக்கிறது. சீக்கிரமே இளையராஜா - வைரமுத்து கூட்டணிக்கு இந்த புதிய கூட்டணி வழி சமைக்குமா.. பார்க்கலாம்!