-எஸ் ஷங்கர்
நடிகர்கள்: விஷால், த்ரிஷா, சுனைனா, ஜான் விஜய், சம்பத், ஜெயப்பிரகாஷ்
பிஆர்ஓ: நிகில் முருகன்
இசை: யுவன் ஷங்கர்ராஜா, பேக்கிரவுண்ட்: ஸ்கோர் தரன்குமார்
ஒளிப்பதிவு: ரிச்சர் எம் நாதன்
தயாரிப்பு: ஜெய பாலாஜி ரியல் மீடியா
இயக்கம்: திரு
(நேற்று நம் துணை ஆசிரியர் ஒருவர் குடும்பத்தாரோடு இந்தப் படத்துக்குப் போய் விட்டு வந்து எழுதிய விமர்சனத்தைப் படித்தீர்கள்.. நம் சினிமா நிருபரின் விமர்சனம் இன்று.. இதோ)
பண்டிகைக் கால படங்கள் பெரும்பாலும் ஆர்ப்பாட்டமான பப்ளிசிட்டியோடு வந்து புத்தூர் கட்டோடு பெட்டிக்குப் போவது வழக்கம். ஆனால் சத்தமில்லாமல் வந்து நல்ல பெயரைத் தட்டிக் கொள்ளும் படமாக இந்தப் பொங்கலுக்கு வந்திருக்கிறது விஷால்- திரு கூட்டணியின் சமர்.
அப்படியொன்றும் அசாதாரண படமில்லைதான். நிச்சயம் ஏதோ ஒரு ஹாலிவுட் அல்லது ஸ்பானிஷ் பாதிப்பு இருந்திருக்கலாம் என்பதில் எத்தனை சதவீத உண்மை என்பதைச் சொல்வதற்கில்லை. ஆனால் நிச்சயம் இந்தக் கதை ஒரு வித்தியாசமான முயற்சி... கச்சிதமான, விறுப்பான ஒரு பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் தரும் படம் என்பது மட்டும் நூறு சதவீதம் நிஜம்.
ரொம்ப வழக்கமான ஆரம்பம்தான். காட்டில் மரங்களை வெட்டிக் கடத்த வருகிறது ஒரு கும்பல். அவர்களை ஒன்மேன் ஆர்மியாக விரட்டியடிக்கிறார் விஷால். சண்டை முடிந்ததும் அடுத்த நிமிடமே, ஒரு ஹீரோயிசப் பாட்டு.
சுனைனாவுக்கும் விஷாலுக்கும் மூன்றாண்டுகளாக காதல். ஆனால் எப்போதும் காட்டைக் கட்டிக் கொண்டு அழும் விஷாலை (அப்பா வன அதிகாரி அழகம் பெருமாள். மரக் கொள்ளையர்களை அப்பா போட்டுக் கொடுக்க, மகன் போட்டுத் தாக்குவது வழக்கம்.. மிரட்ட வருபவர்களை அழகம் பெருமாள் சமாளிக்கும் விதமும் சுவாரஸ்யம்!),
'இத்தனை வருஷம் காதலிச்சும் உனக்கு என் இடுப்பு சைஸ் கூட தெரியல...போய்யா நீயும் உன் காதலும்' என்று கடுப்புடன் கூறிவிட்டுப் பிரிந்து பாங்காக் போகிறார். அப்புறம் மூன்று மாதங்களுக்குப் பிறகு அவரிடமிருந்து ஒரு கூரியர் வருகிறது... அதில் காதலைப் புதுப்பிக்க ஒரு கடிதம், உடன் ப்ளைட் டிக்கெட்.
முதல் முறையாக பாங்காக் போகிறார் விஷால்... விமானத்தில் அவருக்கு உதவுகிறார் அனுபவசாலி த்ரிஷா.
போன இடத்தில், சுனைனா வரச் சொன்ன இடத்தில் காலையிலிருந்து காத்திருக்கிறார். இரவான பிறகும் சுனைனா வரவில்லை. அப்போது அவருக்கு உதவ வருகிறார் ஐபிஎஸ் அதிகாரி சம்பத். அடுத்த நாளும் அதே இடத்தில் காத்திருக்க, சுனைனா வரவே இல்லை. சரி, இரண்டு நாளில் ஊர் திரும்பலாம் என முடிவு செய்து, பாங்காக்கை சுற்றிப்பார்க்கக் கிளம்பும்போது, வழியில் த்ரிஷா எதிர்ப்படுகிறார்.
அடுத்த சில நிமிடங்களில் விஷாலுக்கு நேர்வதெல்லாம், அவர் மட்டுமல்ல, பார்வையாளர்களே எதிர்ப்பாராத திருப்பங்கள்.
திடீரென ரூ 5000 கோடிக்கு அதிபதியாகிறார். அடுத்த சில தினங்களில் தரைமட்டத்துக்கு வருகிறார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது... தேடிவந்த காதலியும் கிடைக்காமல், ஊரைப்பார்க்கப் போகவும் முடியாமல் தவிக்கும் விஷால், அந்த சுழலிலிருந்து எப்படி வெளியில் வருகிறார்.. அவரை இப்படியெல்லாம் ஆட்டுவிக்கும் ஆண்டவர்கள் யார் என்பதெல்லாம் சுவாரஸ்யமான க்ளைமாக்ஸ்!
முதல்10 நிமிடங்களுக்குள் அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என பரபரக்க வைக்கும் திரைக்கதை க்ளைமாக்ஸ் வரை அதே வேகத்துடன் செல்வதுதான் இந்தப் படத்தின் ஸ்பெஷல். இந்த வேகத்தில் படத்திலிருக்கும் சின்னச் சின்ன லாஜிக் மிஸ்டேக்குகள் கூட தெரியாமல் போகின்றன.
இந்தக்கதையில் வெகு கச்சிதமாகப் பொருந்துகிறார் விஷால். காமெடி என்ற பெயரில் நெளிய வைக்காமல், ஆக்ஷன் என்ற பெயரில் அலட்டாமல் அழுத்தமாக நடித்துள்ளார் விஷால். காதல் தோல்வியை சகித்துக் கொள்வது, தன்னைச் சுற்றியுள்ள குழப்பத்தை அவர் பிரதிபலிக்கும் விதம்.. யதார்த்தம். விஷாலின் இந்த வகை நடிப்புதான் அவருக்கே கூட நல்லது!
விஷாலின் இரண்டு காதல்களும் ஆரம்பிப்பதைக் காட்டி நீட்டி முழக்காமல், நேராக விஷயத்துக்கு வந்ததுதான் இந்த ஜெட் வேகத்துக்கு காரணம்.
மங்காத்தாவுக்குப் பின் த்ரிஷா நடித்துள்ள தமிழ்ப் படம். இடைவெளி சற்று அதிகம் என்றாலும், ஒரு நல்ல பிரேக்கை அவருக்குத் தந்துள்ளது சமர். இன்னொரு நாயகி சுனைனா கொஞ்சமாக தாராளம் காட்டி, ஒரு பாடலுக்கு ஆடிவிட்டுப் போகிறார்.
ஜான் விஜய், சம்பத், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தங்கள் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். விஷாலின் வாழ்க்கையில் கண்ணாமூச்சு ஆடும் ஆண்டவர்களாக வரும ஜேடி சக்ரவர்த்தியம் மனோஜ் பாஜ்பாயும் கொஞ்சம் வித்தியாச வில்லன்கள்தான்!!
படத்தின் எந்த இடத்தில் காமெடியனைப் புகுத்தினாலும் பெரிய ஸ்பீட் பிரேக்கராகிவிடும் என்ற இயக்குநரின் முடிவு மெச்சத்தக்கது. அதை பாடல் காட்சிகளிலும் செயல்படுத்தியிருக்கலாம்!
வசனத்தை எஸ் ராமகிருஷ்ணனும் இயக்குநர் திருவும் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். 'சண்டை போடாத பொண்ணும் சரக்கடிக்காத பையனும் கிடைப்பது கஷ்டம்' போன்ற வசனங்களில் எஸ்ரா தெரிகிறார்.
ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவில் சில காட்சிகள் அபாரம். குறிப்பாக ஜான் விஜய்யை விஷால் சேஸ் பண்ணுவது. ஆனால் வீடியோ காமிரா காட்சிகள், டெலிஷோவை நினைவூட்டுகின்றன.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் நன்றாக உள்ளன. ஆனால் தரன்குமாரின்
பின்னணி இசையில் 'பெப்' போதவில்லை!
மற்றபடி மன்னிக்கக் கூடிய சின்னச் சின்ன குறைகள்தான். தீராத விளையாட்டுப் பிள்ளையில் சேர்ந்து சறுக்கிய திருவும் விஷாலும் இந்தப் படத்தை புதிய முறுக்குடன் இணைந்தே நிமிர்ந்திருக்கிறார்கள்.
ரொம்ப நாளைக்குப் பிறகு கடைசிவரை ஒரு ஈர்ப்போடு பார்த்த படம் சமர் என்று தாராளமாகச் சொல்லலாம். பொங்கல் ரேஸில் நம்பர் ஒன்!