தனுஷ் பாட்டைக் கிண்டல் செய்ய வேண்டாம் - சொல்கிறார் சிம்பு


கொலவெறிடி பாட்டில் தமிழைக் கொலை செய்கிறார் தனுஷ் என்று தனது ரசிகர்கள் கிண்டலடித்து வருவது தவறு என சிம்பு கூறியுள்ளார்.

3 படத்துக்காக தனுஷ் எழுதிப் பாடியுள்ள வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் இன்று இந்தியா முழுக்க முணுமுணுக்கப்படும் பாடலாகிவிட்டது. பாலிவுட் சாதனையாளர் அமிதாப் பச்சன், அவர் மகன் நடிகர் அபிஷேக் பச்சன் என பலரும் இந்தப் பாடலை தங்களுக்குப் பிடித்த ஒன்றாகக் கூறியுள்ளனர்.

வட இந்திய செய்திச் சேனல்கள் இந்தப் பாடலை வைத்து அரசியல் தலைவர்களை கிண்டலடித்து அரசியல் காமெடி நிகழ்ச்சிகளை தயாரிக்க ஆரம்பித்துள்ளன.

ஆனால் சிம்புவின் ரசிகர்களோ, தமிழ்க் கொலை செய்கிறார் தனுஷ் என இணையதளங்கள், போஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர்.

ரசிகர்களின் இந்தச் செயலை கண்டித்துள்ளார் நடிகர் சிம்பு.

தனது பேஸ்புக்ஸகில் இதுகுறித்த அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

தனுஷ் எழுதி பாடியுள்ள பாடலை எனது பாடல்களுடன் ஒப்பிட வேண்டாம். தனுஷ் சிறந்த நடிகர் மற்றும் எனது நண்பர். இருவருமே ஒரே துறையில் இருக்கிறோம்.

ஒரு பாடலை எழுதி பாட எல்லோருக்கும் உரிமை உண்டு. தற்போது சிறு சிறு ஆங்கில வார்த்தைகளை சேர்த்து பாடலாக்குவது ஒரு ட்ரெண்டாகிவிட்டது.

அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். எனவே பாடலை கேட்டு சந்தோஷப்படுங்கள். பாட்டை கேலி செய்த ரசிகர்கள் மீது கோபமாக இருக்கிறேன். கேலி செய்வதை நிறுத்துங்கள்," என்று கூறியுள்ளார்.
 

தமிழ் ரசிகர்களை இழிவாகப் பேசினேனா? - நடிகர் கார்த்தி விளக்கம்


தமிழ் ரசிகர்களை இழிவாக பேசியதாக நடிகர் கார்த்தி சர்ச்சையில் சிக்கியுள்ள கார்த்தி அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் கார்த்தி ஐதராபாத்தில் நடந்த விருது வழங்கும் விழா நிகழ்ச்சியொன்றில் பேசிய கார்த்தியிடம், 'உங்களுக்கு தமிழ் ரசிகர்களை பிடிக்குமா? தெலுங்கு ரசிகர்களை பிடிக்குமா?' என கேள்வி கேட்டார் விழாவைத் தொகுத்தளித்த பெண்.

அதற்கு கார்த்தி, "நிச்சயமாக தெலுங்கு ரசிகர்களைத்தான் பிடிக்கும். தெலுங்கு ரசிகர்கள் ஒவ்வொரு சீனுக்கும் ஒவ்வொரு பிரேமுக்கும் கைதட்டி விசிலடிப்பார்கள். ஆனால் தமிழ் ரசிகர்கள் அப்படி இல்லை," என்று பதில் சொல்வது போல் வீடியோ இண்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழ் ரசிகர்களை இழிவாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தி கார்த்தி வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடத்த போலீசில் அனுமதி கேட்டுள்ளோம் என்று ஒரு கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து கார்த்தியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அப்படி பேசவில்லை என்று மறுத்தார்.

கார்த்தி கூறுகையில், "தமிழ்நாடும், தமிழ் ரசிகர்களும் எனது பெற்றோர் போன்றவர்கள். பெற்றோரை பற்றி யாராவது தவறாக பேசுவார்களா? கனவில் கூட யாரையும் நான் தவறாக நினைத்தது கிடையாது. தமிழக மக்களுக்கு என்னை பற்றி தெரியும். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது.

தமிழ் ரசிகர்கள் என்னை வளர்த்து ஆளாக்கியவர்கள். தமிழ் ரசிகர்கள் படங்களோடு உணர்வு பூர்வமாக ஒன்றி போக கூடியவர்கள். தெலுங்கு ரசிகர்கள் பொழுதுபோக்கு அம்சமாகத்தான் படங்களை பார்ப்பார்கள்.

ஹைதராபாத்தில் நடந்த விழாவில் ஆந்திராவில் எனது படங்களை பார்த்து வரவேற்பு கொடுப்பதற்காக தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி சொன்னேன். தெலுங்கில் பேசியதால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது," என்றார்.
 

மனைவியுடன் நடிகர் சினேகன் கள்ளத் தொடர்பு: தந்தையுடன் குழந்தை வசிக்க நீதிமன்றம் உத்தரவு


சென்னை: சினேகனுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ள தன் மனைவியிடம் குழந்தையை ஒப்படைக்காமல், தன்னுடன் வசிக்க அனுமதிக்க வேண்டும் என்ற மடிப்பாக்கம் எஞ்ஜினீயர் பிரபாகரன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற குடும்பரநல கோர்ட் ஏற்றுக் கொண்டது.

மனுவை விசாரித்த பின் பிறப்பித்த உத்தரவில், தந்தை பிரபாகரனுடனே குழந்தை வசிக்கலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.

மடிப்பாக்கம் சக்திநகரை சேர்ந்த பிரபாகரன் தனது மனைவியுடன் நடிகர் சினேகன் தொடர்பு வைத்து இருப்பதாக சென்னை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், "என் மனைவி ஜமுனா கலாதேவிக்கும் நடிகர் சினேகனுக்கும் கள்ளத் தொடர்பு உள்ளது. ஜமுனாவிடம் சினேகன் நாட்டியம் கற்றார்.

எனது மனைவியிடம் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர் ஆக்குவதாக ஆசைவார்த்தை கூறினார். என் பேச்சை கேளாமல் ஜமுனா சினேகனுடன் சுற்ற தொடங்கினார். அவர்கள் தவறான உறவை ஏற்படுத்திக் கொண்டனர். ஒரு கட்டத்தில் என்னுடன் வாழமாட்டேன் என்று கூறிவிட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

எங்களுக்குப் பிறந்த 5 வயது பெண் குழந்தை என்னுடன் வசிக்கிறாள். குழந்தையை அபகரிக்க ஜமுனா முயற்சிக்கிறார். என்னிடமே குழந்தை வாழ உத்தரவிட வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ராஜாசொக்கலிங்கம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது குழந்தை சஞ்சனாஸ்ரீ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டாள். குழந்தை தந்தையுடன் மகிழ்ச்சியாக இருந்தாள். தொடர்ந்து அப்பாவுடன் இருப்பதாக கூறினாள். இதையடுத்து பிப்ரவரி 1-ந்தேதி வரை தந்தையுடன் குழந்தை சஞ்சனாஸ்ரீ வசிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
 

கோவா பட விழாவில் எம்.எப். ஹுசைன் படம் உள்பட 2 ஆவணப் படங்களுக்கு தடை- தமுஎகச கண்டனம்


கோவா: கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் 2 திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதற்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

கோவாவில் ஆண்டுத்தோறும் நடைபெறும் இந்திய பன்னாட்டு திரைப்பட விழா, திரைப்பட ஆர்வலர்களால் பெரிதும் வரவேற்கப்படுகிற ஒரு நிகழ்வாகும். தற்போது 42வது இந்திய பன்னாட்டுத் திரைப்பட விழா - கோவா 2011 திரையிடலில் இருந்து 2 முக்கியமான படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திரைப்பட ஆர்வலர்களுக்கும், கருத்து சுதந்திரத்தை நேசிப்பவர்களுக்கும் இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற இந்திய ஓவியர் அமரர் எம்.எப்.உசேன் இயக்கிய ‘த்ரூ தி அய்ஸ் ஆஃப் தி பெயின்டர்’ என்ற ஒரு ஓவியரின் பார்வையில் வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிற ஒரு ஆவணப் படம் இந்த விழாவில் திரையிடப்படுவதாக இருந்தது. இந்த படத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (நவ.27), அதன் திரையிடல் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்து ஜனஜாக்ருதி சமிதி என்ற இந்துத்துவ அமைப்பு ஒன்று இந்தப் படத்தைத் திரையிட்டால் அதனை எதிர்த்துப் போராட்டம் நடத்துவோம் என்று அச்சுறுத்தியதன் பின்னணியிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதே போல் 2 நாட்களுக்கு முன்பாக ‘இன்குலாப்’ என்ற குறும்படத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

கவுரவ் சாப்ரா இயக்கிய இந்தக் குறும்படம் பகத்சிங் தியாகத்தை பின்னணியாகக் கொண்டு, இன்று நாட்டில் தலைவிரித்தாடும் சமத்துவமின்மை, மதவெறி, சாதியம், ஊழல், வேலையின்மை, பன்னாட்டு நிறுவனங்களுக்காக வளைக்கப்படும் சட்டங்கள், மரபணு நீக்கப்பட்ட விதைகளுக்கு அனுமதி போன்ற கேடுகள் பற்றி 2 இளைஞர்கள் உரையாடுவதாக அமைந்ததாகும்.

தேச விரோத கருத்துகளை இந்தப் படம் கொண்டிருப்பதாகக் கூறி, இதற்கு தணிக்கைச் சான்று வழங்க தணிக்கை குழு மறுத்துள்ளது. இதனால் இந்த விழாவில் இந்தப் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த 2 படைப்புகளும் அவமதிக்கப்பட்டிருப்பதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இது கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, மக்கள் தங்கள் தேர்வுப்படி கலையாக்கங்களைக் காணும் சுதந்திரத்தின் மீதான கொடூரத் தாக்குதலாகும். எனவே இந்திய பன்னாட்டு திரைப்பட விழா அமைப்பாளர்கள் இந்த 2 திரைப்படங்களையும் தடையின்றித் திரையிட நடவடிக்கை எடுக்க வேண்டும். தணிக்கைக் குழு ‘இன் குலாப்’ படத்திற்குச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சங்கம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ஜெயம் ரவி குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரஜினி!


ஜெயம் ரவியின் தந்தையும் தயாரிப்பாளருமான எடிட்டர் மோகனுக்கு நேற்று 70 வது பிறந்த நாள். இயக்குநர் ஜெயம் ராஜா, ஜெயம் ரவி ஆகியோருக்கு திருமணமாகி, குழந்தைகள் பிறந்த பின்னரும் இன்றும் ஒரு கூட்டுக்குடும்பமாகவே வசித்து வருகின்றனர்.

தந்தையின் 70வது பிறந்த நாளை இந்த குடும்பம் சந்தோஷத்துடன் கொண்டாட ஆரம்பித்த தருணத்தில், அவர்களை உற்சாகத்தின் எல்லைக்குப் போகவைத்தது ஒரு சம்பவம்... அது அவர்களே சற்றும் எதிர்ப்பார்க்காத சூப்பர் ஸ்டார் ரஜினியின் வருகை.

இப்போதெல்லாம் அவர் எந்த நிகழ்ச்சிக்கு வருவார், எப்போது வருவார் என்பதை யாராலும் கணிக்க முடிவதில்லை. உடல் நிலை காரணமாக அவரை யாரும் கட்டாயப்படுத்துவதில்லை. எனவே அவர் விருப்பப்படி, திடீரென வந்து பலருக்கும் இன்ப அதிர்ச்சி தந்து வருகிறார் ரஜினி.

ரஜினியின் வருகையால் துள்ளிக் குதித்த ஜெயம் ரவி, உடனே தனது ட்விட்டரில், "இன்று எங்கள் குடும்பத்துக்கு இன்ப அதிர்ச்சி... அப்பாவின் 70 வது பிறந்த நாளுக்கு நேரில் வந்து வாழ்த்தினார் ரஜினி சார்... என் குழந்தை ஆரவ்வின் கைகளைப் பிடித்து ரஜினி சார் கொஞ்சியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது...", என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெயம் ரவிக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி இன்னும் பலருக்கும் கிடைக்கட்டும்!
 

சினேகனுடன் மனைவிக்கு கள்ளத் தொடர்பு - குழந்தையையாவது என்னுடன் வாழ விடுங்கள் - கணவர் வழக்கு


சென்னை: நடிகர் சினேகனுடன் எனது மனைவிக்கு தொடர்பு இருப்பது உண்மையே. இப்போது என் மனைவி விவாகரத்து கேட்டுள்ளார். எனவே குழந்தையாவது என்னுடன் வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும். சினேகனும் என்மனைவி ஜமுனா கலாதேவியும் இதற்கு இடையூறு செய்வதை தடை செய்ய வேண்டும்' என்று சென்னை குடும்பநல கோர்ட்டில் கணவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை குடும்பநல கோர்ட்டில் மடிப்பாக்கம் சக்திநகர் விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்த ஏ.பிரபாகரன் (வயது 35) தாக்கல் செய்த மனுவில், "எனது சகோதரியின் மகனை நாட்டியப் படிப்புக்காக அழைத்து செல்லும்போது 2002-ம் ஆண்டு ஜமுனா கலாதேவி (29) எனக்கு அறிமுகமானார். அதன் பின்னர் 2 ஆண்டுகளாக இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் காதலித்தோம்.

கடுமையான எதிர்ப்புக்கு இடையே 1.12.04 அன்று வடபழனி கோவிலில் திருமணம் செய்துகொண்டு, திருமணத்தை பதிவு செய்தோம். என்னை திருமணம் செய்வதற்காக கட்டிய துணியோடு ஜமுனா வந்துவிட்டார். எல்லா செலவுகளையும் நானே கவனித்துக் கொண்டேன்.

நாட்டியப் பள்ளி

நான் தனியார் கம்பெனி நிறுவனம் ஒன்றின் மேலாளர். 7.10.06 அன்று எங்களுக்கு சஞ்ஜனாஸ்ரீ என்ற பெண் குழந்தை பிறந்தது. நாட்டியப் பள்ளி வேண்டுமென்று என்னை ஜமுனா வற்புறுத்தியதால், அதற்கு நான் அனுமதி அளித்தேன்.

அதன் பிறகு நாட்டியத்திலேயே ஜமுனா கவனம் செலுத்தியதால், குழந்தையை முழுக்க முழுக்க நானே கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஜமுனா பெற்றோரும் எங்களுக்கு ஆதரவளிக்கவில்லை.

இந்த நிலையில் மற்றொரு நாட்டியப் பள்ளியை 2009-ம் ஆண்டு செப்டம்பரில் வேளச்சேரியில் ஜமுனா தொடங்கினார். தொடக்க நிகழ்ச்சிக்கு 'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா' என்ற பாடலை எழுதிய சினிமா பாடகர் சினேகன் வந்திருந்தார்.

அதன்பின்னர் நாட்டியப் பள்ளிக்கும், வீட்டுக்கும் சினேகன் அடிக்கடி வரத் தொடங்கினார். பல தவறான வாக்குறுதிகளை ஜமுனாவுக்கு அளித்து, அவரது மனதை கலைத்துவிட்டார்.

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மட்டுமே நாட்டியம் கற்றுத்தர வேண்டும் என்ற பள்ளி விதியை மீறி சினேகனுக்கு ஜமுனா நாட்டியம் கற்றுத் தந்தார். சினிமாவில் நாட்டிய இயக்குனராக வாய்ப்பு வாங்கித் தருவதாக ஜமுனாவிடம் சினேகன் ஆசை காட்டியுள்ளார்.

இதற்கு ஆசைப்பட்ட ஜமுனாவும், எனது பேச்சை கேளாமல் சினேகனுடன் சுற்றத் தொடங்கினார். அவர்களின் சினேகம் கட்டுப்பாட்டை தாண்டிச் சென்றது. தவறான உறவை ஏற்படுத்திக் கொண்டனர்.

நான் தூங்கிய பிறகு மொட்டை மாடிக்குச்சென்று இரவு முழுவதும் செல்போனில் பேசிக்கொண்டே இருந்தார். இதுபற்றி நான் எவ்வளவோ அறிவுரை கூறியும் அவற்றை ஜமுனா நிராகரித்தார். என்னையும், குழந்தையையும் கவனிக்கவில்லை.

ஒரு கட்டத்தில் என்னுடன் வாழமாட்டேன் என்றும், பெற்றோர் வீட்டுக்கு செல்லப் போவதாகவும் கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பரில் கூறினார். அதன் பின்னர் எல்லா உடமைகளையும் எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

எதையுமே அவரது பிறந்த வீட்டில் இருந்து கொண்டு வரவில்லை என்றாலும், பல நகைகளை வீட்டில் இருந்து கொண்டு சென்றுவிட்டார். புதிய உறவு ஏற்பட்டதால் நாட்டிய பள்ளியை கவனிக்க முடியாமல் அவற்றை மூடினார்.

எனக்கு கடந்த மார்ச் மாதம் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு நான் விரும்பவில்லை. ஆனாலும் என்னுடன் சேர்ந்து வாழ மறுத்துவிட்டார்.

குழந்தையையாவது வாழ விடுங்கள்...

என்னை விட்டு ஜமுனா பிரிந்து சென்று, தனது சகோதரர் விஜய் ஆதிராஜ், தாயார் விஜயகுமாரி, மற்றும் தந்தையுடன் சேர்ந்து எனது குழந்தையை அபகரிக்க முயன்றார்.

தற்போது என்னுடன் குழந்தை வசிக்கிறாள். எனவே என்னிடமே குழந்தை வாழ வேண்டும் என்றும், அதற்கு இடையூறு செய்வதற்கு ஜமுனா, சினேகன் உள்ளிட்டோருக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜமுனாகலாதேவி புகார்

இந்த நிலையில் நேற்று காலையில் ஜமுனாகலாதேவி, தனது வக்கீல் வானதி சீனிவாசனுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் கொடுத்தார்.

பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், "எனது மார்பில் சினேகன் பெயரை பச்சைகுத்தி இருப்பதாக பொய்யான தகவலை எனது கணவர் பரப்பிவிட்டுள்ளார். நான், எனது மகளின் பெயரைத்தான், பச்சை குத்தி உள்ளேன். எனது மகளை மீட்டுத்தரும்படி நான் ஏற்கனவே மடிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளேன். அந்த புகார் மீது நடவடிக்கை எடுத்து, எனது மகளை மீட்டுத்தரும்படி வேண்டுகிறேன். நான் சினேகன் கட்டுப்பாட்டில் இல்லை," என்றார்.

குழந்தையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வழக்குப் போடவிருப்பதாகவும் ஜமுனா கலாதேவி கூறினார்.
 

பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடிக்கும் நாடகம்... பிக்கி மாநாட்டில் அரங்கேறுகிறது!


சென்னையில் நடக்கும் இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (பிக்கி) விழாவில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாஸன் நடிக்கும் புதிய நாடகம் நடக்கிறது. இந்தத் தகவலை கமல்ஹாஸன் நேற்று தெரிவித்தார்.

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு, நடிகர் கமல்ஹாசன் தலைமையில், சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது.

இதுதொடர்பாக ஃபிக்கியின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறை தலைவர் நடிகர் கமல்ஹாசன், சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு, சென்னையில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் டிசம்பர் 1, 2 ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாடு, இரண்டாவது முறையாக சென்னையில் நடைபெறுகிறது.

இந்த தொழிலில் உள்ள சிக்கல்களை எடுத்துரைக்க ஒரு அரங்கம் தேவைப்பட்டது. அதற்காகவே இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியால் ஆரம்பிக்கப்பட்டது. அவருடைய தீர்க்க தரிசனங்களில் நம்பிக்கை உள்ளவர்களில் நானும் ஒருவன்.

மும்பையில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியை, சென்னையிலும் நடைபெறுவதற்கு நானும், நண்பர் முராரியும் பாடுபட்டோம். தொழில் கட்டுக்கோப்பாக நடப்பதற்கு நம் குரல் மத்திய-மாநில அரசுகளுக்கு கேட்க வேண்டும். இதில், சினிமா மட்டுமல்லாமல் பத்திரிகை உலகமும் புரிந்து கொள்ளும் விஷயங்கள் இருக்கிறது.

கே பி இயக்கத்தில் நாடகம்

சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் வெவ்வேறு தொழில்நுட்ப அறிஞர்கள், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் 800 பேர் கலந்துகொள்கிறார்கள். தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொள்கிறார்கள்.

பிரச்சினைகளை விட, தொழில் முன்னேற்றத்துக்கான விஷயங்கள் அதிகமாக விவாதிக்கப்படும். நமக்கு உரிய உரிமைகள் என்ன என்பதை கலைஞர்கள் புரிந்துகொள்ளும் பயிலரங்கமாக இது இருக்கும்.

மாநாட்டில் ஒரு சின்ன நாடகம் அரங்கேற்றப்படுகிறது. அந்த நாடகத்தை டைரக்டர் கே.பாலசந்தர் எழுதியிருக்கிறார். நான் (கமல்ஹாசன்), கிரேஸி மோகன், ரமேஷ் அரவிந்த் ஆகியோர் நடிக்கிறோம். இது, டிஜிட்டல் சினிமா பற்றிய நகைச்சுவை நாடகமாக இருக்கும்.

தமிழக அரசிடம் நிதி கேட்போம்

சினிமா இன்னும் தொழிலாக அங்கீகரிக்கப்படாததால், படம் தயாரிப்பதற்கு வங்கிகள் கடன் வழங்க தயங்குகின்றன. இதனால்தான் இந்தி பட உலகில் கறுப்புப் பணம் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டது.

கடந்த முறை சென்னையில் இந்த மாநாடு நடைபெறுவதற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கியது. இந்த முறையும் அரசிடம் நிதி உதவி கேட்கப்படும். அவர்கள் தருகிறார்களா இல்லையா என்பது ஒரு பக்கமிருக்கட்டும். கேட்பது எங்கள் கடமை,'' என்றார்.

பேட்டியின்போது, இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த லீனா ஜெய்சானி, பி.முராரி ஆகியோர் உடன் இருந்தார்கள். பத்திரிகைத் தொடர்பாளர் நிகில் முருகன் வரவேற்றுப் பேசினார்.
 

வெளியில் சொல்ல முடியாத என் வாழ்க்கை ரகசியங்கள்! - சோனியா அகர்வால் பேட்டி


"வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு, என் வாழ்க்கையில் சில ரகசியங்கள் உள்ளன. அவற்றை எப்போதும் சொல்ல மாட்டேன்,'' என்று நடிகை சோனியா அகர்வால் கூறினார்.

ஒரு நடிகையின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கருவாக வைத்து, 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' என்ற படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில், நடிகையாக சோனியா அகர்வால் நடித்து இருக்கிறார். ராஜ்கிருஷ்ணா டைரக்டு செய்துள்ளார். புன்னகைப்பூ கீதா தயாரித்து இருக்கிறார்.

படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் ஸ்டூடியோவில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட்டு பேசினார்.

அவர் பேசுகையில், "எல்லோருடைய வாழ்க்கையையும் போல் நடிகையின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, சோகம், இன்பம், துன்பம், ரகசியம் இருக்கும். குறிப்பாக, நடிகையின் வாழ்க்கையில் பல ரகசியங்கள் இருக்கும். வெளியே தெரியாத பக்கங்கள் இருக்கும். அந்த பக்கங்களை இந்த படத்தில் காட்டியிருப்பதாக சொன்னார்கள்.

நடிகையின் வாழ்க்கையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று எல்லோருக்கும் ஆவல் இருக்கும். எனக்கும் அந்த ஆவல் நிறைய உண்டு. இந்தப் படம் எனக்கே பெரிய எதிர்ப்பார்ப்பை உண்டு பண்ணியிருக்கிறது. இந்தப் படம் பெறவிருக்கும் வெற்றிக்கு அதுவே பெரிய உதாரணம்,'' என்றார்.

சோனியா அகர்வால் பேசும்போது, "நான் மூன்று வருடங்களாக நடிக்கவில்லை. மறுபடியும் நடிக்க வந்தபோது, ஒரு புதுமுகம் போல் உணர்ந்தேன். உடன் நடித்தவர்கள், இயக்குநர் போன்றவர்கள்தான் என்னை மிக இயல்பாக இருக்க உதவினர்,'' என்றார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

இந்தப் படத்தில் உங்கள் வாழ்க்கையின் ரகசியங்களைச் சொல்லியிருக்கிறீர்களா?

எல்லோருடைய வாழ்க்கையிலும் ரகசியங்கள் இருக்கும். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல. என் வாழ்க்கையிலும் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு சில ரகசியங்கள் உள்ளன.

நான் நடிகையாக இருப்பதால், என் மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள். என் வாழ்க்கையில் உள்ள ரகசியங்களை வெளியில் சொல்ல விரும்பவில்லை. `ஒரு நடிகையின் வாக்குமூலம்' படத்தின் கதைக்கும், என் சொந்த வாழ்க்கைக்கும் தொடர்பே இல்லை. ஒரு சதவீதம் கூட, என் சொந்த வாழ்க்கையை இந்தப் படத்தில் சொல்லவில்லை.

டர்ட்டி பிக்சர் என்று இந்தியில் இதே மாதிரி படம் வருகிறது. மதுர் பண்டார்கரின் ஹீரோயின் படமும் துவங்கப் போகிறது. நடிகை பற்றி படங்கள் அதிகம் வருவது குறித்து...

'டர்ட்டி பிக்சர்' என்ற இந்தி படத்தின் கதை வேறு. நடிகையின் வாழ்க்கையை பற்றிய படங்கள் இதற்கு முன்பு நிறைய வந்துள்ளன. மதூர் பன்டார்கரின் 'ஹீரோயின்', 'திரைக்கதா' போன்ற படங்கள் வருவதெல்லாம் தற்செயலானது. நடிகை பற்றிய ரசிகர்களின் ஆவலைப் புரிந்து எடுக்கிறார்கள். அதேநேரம், அந்த படங்களில் இருந்து மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம், 'ஒரு நடிகையின் வாக்குமூலம்.'

குணச்சித்திர வேடங்கள் வந்தால் நடிப்பீர்களா?

எனக்கு கதாநாயகியாக நடிக்க அதிக சந்தர்ப்பங்கள் வருகின்றன. அதனால், குணச்சித்திர வேடங்களில் நடிக்க மாட்டேன்.''

இவ்வாறு சோனியா அகர்வால் கூறினார்.

இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் பி.எல்.தேனப்பன், பொருளாளர் எஸ்.தாணு, பட அதிபர் கே.ராஜன், ஒளிப்பதிவாளரும் பட அதிபருமான கேசவன், நடிகர் ராஜ்கபூர் ஆகியோரும் பேசினார்கள்.

பட அதிபர் புன்னகைப்பூ கீதா வரவேற்றுப் பேசினார். இயக்குநர் ராஜ்கிருஷ்ணா நன்றி கூறினார்.

நிகழ்ச்சிகளை பத்திரிகையாளர் அமலன் தொகுத்து வழங்கினார்.