தூங்காவனம் டிரெய்லர் ரிலீஸ்... சந்தன நிற சேலையில்.. சொக்கத் தங்கமாக ஜொலித்த திரிஷா!

சென்னை: சற்று முன்பு வெளியான தூங்காவனம் படத்தின் டிரெய்லர் விழாவில் சேலை அணிந்து கலக்கிக் கொண்டிருக்கிறார் நடிகை த்ரிஷா.

படத்தின் டிரெய்லருக்கு சமமாக த்ரிஷா அணிந்து வந்த சேலையும் பலரின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. இந்த விழாவுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சேலையுடன் த்ரிஷா வந்தபோது அனைவரின் கண்களும் அவரின் சேலை மீதே இருந்தது.

Trisha Comes in Designer Saree For Thoongavanam Trailer Launch

வெளிர் சந்தன நிறத்தில் பூ போட்ட சேலையில் பூக்கள் ப்ரிண்ட் செய்யப்பட்ட ப்ளவ்ஸும் அஸ்தக் ஜக்வானியால் டிசைன் செய்த கல் பொருத்தப்பட்ட தோடும் என த்ரிஷாவின் இந்த "சேலை"புகைப்படம் தற்போது இணையத்தில் சுற்றி வந்துகொண்டிருக்கிறது.

பல பேரின் கவனத்தை ஈர்த்த அந்த சேலையின் விலை எவ்வளவு தெரியுமா? நாம் விசாரித்துப் பார்த்ததில் குறைந்த பட்சம் 50,000 தொடங்கி அதிகபட்சமாக 1.50 லட்சங்களைத் தொடலாம் என்று கூறுகின்றனர்.

ஆடை வடிவமைப்பாளர் வருண் பாலின் எந்த ஒரு சாதாரண உடையும் 15 ஆயிரத்துக்கு மேல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வருண் பால் த்ரிஷா மட்டுமின்றி பல நாயகிகளின் சினிமா நிகழ்ச்சிகளுக்கான பிரத்யேக ஆடை வடிவமைப்பாளராக விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தூங்காவனம் டிரெய்லர் முழுவதுமே த்ரிஷாவின் உடைகள் மேற்கத்திய பாணியிலேயே அமைந்திருந்த நிலையில், சேலை கட்டும் ஆசையை டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் வெளிபடுத்தியிருக்கிறார் த்ரிஷா.

தற்போது தூங்காவனம் டிரெய்லருக்கு சமமாக சமூக வலைதளங்களில் புகழ்பெற்று வருகிறது த்ரிஷாவின் கிராண்டான சேலை.

 

நிறைய பேர் தற்காப்புக்காகத்தான் படம் எடுக்கிறார்கள்! - ஜெயம் ரவி

இங்கே நிறைய பேர் நாலு பைட், நாலு பாட்டு என்று தற்காப்புக்காகத்தான் படம் எடுக்கிறார்கள் என்றார் நடிகர் ஜெயம் ரவி.

தற்காப்பு பட விழாவில் அவர் பேசுகையில், "என் பழைய நண்பர்களில் சக்தியும் ஒருவர். என் அப்பாவும் சுலபமாகப் பாராட்டமாட்டார். நடிக்கும்போது சுற்றிலும் இருக்கிற 40 பேரை மனதில் வைத்து நடிக்காதே தியேட்டரில் இருக்கிற பல கோடி பேருக்காக நடி என்பார்.

Jayam Ravi's speech at Tharkappu audio launch

என் படங்களைப் பார்த்து விட்டு அது சரியில்லை இது சரியில்லை என்று குறையாகவே சொல்வார். சரியில்லாத எல்லாவற்றையும் தூக்கிவிடலாம் என்பார்.

அப்போ எது சரின்னாவது சொல்லுங்கப்பா, என்பேன்.

அதற்கு அவர் கெட்டதை எல்லாம் எடுத்து விட்டால் மீதி எல்லாம் நல்லதுதானே என்பார். 'தற்காப்பு' நல்ல தலைப்பு. நிறைய பேர் தற்காப்புக்காகப் படம் எடுக்கிறார்கள். நாலு பாட்டு, நாலு பைட்டு கதை சுமாரா இருந்தால் போதும் என்று நிறைய பேர் தற்காப்புக்காகப் படம் எடுக்கிறார்கள். அப்படித் தற்காப்புக்காகப் படம் எடுக்காதீர்கள். நானும் அப்படித் தற்காப்புக்காக சில படங்கள் நடித்திருக்கிறேன்.

சினிமா பொழுது போக்கும் இல்லை. கலையும் இல்லை. பார்ப்பவரை கட்டிப் போட வேண்டும் சினிமா அது போதும். நான் நடிக்க 3 ஆண்டுகள் எடுத்த படம்'தனி ஒருவன்' . அப்போது என்ன கேப் சார் 3 ஆண்டுகள் படமே இல்லை என்றார்கள். இந்த ஒரே ஆண்டு 3 படம் கொடுத்தேன். என்ன சார் இந்த ஒரே ஆண்டு 3 படம் என்கிறார்கள். மற்றவர் பேசுவதைப் பற்றி கவலைப்படாமல் உழைக்க வேண்டும் பலன் நிச்சயம் உண்டு. உதாரணம் என் 'தனி ஒருவன் 'வெற்றி," என்றார்.

 

மகன்கள் ஆளாகும் வரை அப்பாக்கள் கஷ்டம் தெரியாது!- பி வாசு

மகன் ஆளாகும் வரை அப்பாக்களின் கஷ்டம் அவர்களுக்குத் தெரிவதில்லை என்று இயக்குநர் பி வாசு கூறினார்.

பி வாசு மகன் சக்திவேல் நாயகனாக நடித்துள்ள தற்காப்பு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது.

விழாவில் இயக்குநர் பி வாசு கூறுகையில், "கடந்த 30 ஆண்டுகளாக நான் சினிமா விழாக்களில் கலந்து கொண்டு வருகிறேன். இன்று எனக்கு பிறந்தநாளும் கூட. என் படக்குழுவினர் தொழில்நுட்பக் குழுவினரை விட்டு விட்டு நான் கலந்து கொள்ளும் முதல் விழா இதுதான். இங்கே என் மகனுக்காக வந்துள்ளேன்.

P Vasu releases Tharkappu audio

ஒரு பெண்ணுக்கு பிறந்த வீடு புகுந்த விடு என்று இரு வாழ்க்கை இருக்கும் என்பார்கள். ஆண்களுக்கும் இரண்டு வாழ்க்கை இருக்கும். ஒன்று நமது வாழ்க்கை இன்னொன்று பிள்ளைகளால் வரும் வாழ்க்கை. மகன் ஆளாகும்வரை அப்பாக்கள் படும் கஷ்டம் எல்லாருக்கும் புரியாது. எங்கப்பா என்னை ஆளாக்கப் பட்டது இப்போது ஒரு தகப்பனாக எனக்குப் புரிகிறது.

எல்லா இயக்குநரும் என்னிடம் கதை சொல்ல வேண்டுமே என்று நினைத்து சக்தியிடம் கதை சொல்ல தயங்குகிறார்கள்.ஆனால் நான் சக்திக்காக கதை கேட்பதில்லை. சக்தி கேட்கச் சொன்னால் மட்டும்தான் கேட்பேன். நான் வரிவிலக்குக் குழு, தணிக்கைக் குழுவில் எல்லாம் உறுப்பினராக இருக்கிறேன்.

பார்க்கிற படங்களில் சிலர் நல்ல கதையை சரியாகச் சொல்லாத போது சில காட்சிகளில் கோட்டை விட்டதை எல்லாம் பார்த்தால் வருத்தப் படுவேன்.

50 படங்கள் இயக்கிவிட்டேன். நடிப்பது சிரமம் என்பது எனக்குத் தெரியும். என்னை விஜயகாந்தும் மகராஜனும் நடிக்கக் கூப்பிட்டார்கள். நான் எவ்வளவோ பேருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து இருக்கிறேன். ஆனால் முதல்நாள் படப்பிடிப்பில் நடிக்க பதற்றமாக இருந்தது எனக்குள் யாரோ புகுந்து விட்டமாதிரி பதட்டமாக இருந்தது. அப்போது எல்லா கண்களும் சுற்றிலும் பார்க்க அமைதியான சூழலில் நடிப்பது எவ்வளவு சிரமம் என்று புரிந்தது.

சக்தியைப் பொறுத்தவரை அவனை நான் பாராட்டவில்லை என்று தன் அம்மாவிடம் சொல்வானாம், அப்பா பாராட்டவில்லையே என்று குறை படுவானாம்.

இந்தப்படம் 'தற்காப்பு' திருப்தியாக வந்து இருக்கிறது. எனக்கு பிடித்தது. இனி சக்திக்கு நல்ல நேரம் வரும். இனி மற்றவர்கள் அவனைப் பாராட்டுவார்கள். நான் என்றும் சொல்வேன் மக்கள் கதாநாயகன் யாரென்று பார்ப்பதில்லை. கதையைத்தான் பார்க்கிறார்கள். அதற்குத்தான் இயக்குநர் தேவை. இப்படம் நல்ல கதையுடன் வந்திருக்கிறது," என்று வாழ்த்தினார்.

சக்திவேல் வாசு

சக்திவேல் வாசு பேசும் போது, "இந்தப் படத்துக்கு நிறைய பாசிடிவ் எனர்ஜி இருக்கிறது. காரணம் நாங்கள் எல்லாருமே நல்லவர்கள். சமுத்திரக்கனி என்றாலே பாசிடிவ் எனர்ஜிதான் அது பெரிய பலம். என் அப்பா எனக்காகப் போய் வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குநர் மிஷ்கின் சார்தான். இங்கே அவர் வந்திருக்கிறார். ஜனநாதன் சார் வந்திருக்கிறார். கார்த்தி அண்ணா வந்து இருக்கிறார். அவர் சிறுத்தையில் நடித்த போலீஸ் கேரக்டர் எனக்குப் பிடிக்கும். காரணம் சிக்ஸ் பேக்ஸ் இருக்காது. அதே போல தல அஜீத்தும் நடிக்கும் யதார்த்தமான போலீஸ் கேரக்டர் எனக்குப் பிடிக்கும். யதார்த்தமான போலீஸ் தொப்பையுடன்தான் வருவார். தொப்பை இல்லை என்றால் தமிழ்நாடு போலீசே கிடையாது.

அப்பாவுக்கும் எனக்கும் நெருக்கம் குறைவு. அப்பா பேச மாட்டாரா என்று நினைத்து ஏங்கி இருக்கிறேன். அப்பா எப்போதும் சினிமா சினிமா என்று பரபரப்பாக இருப்பார். ஆனால் அதெல்லாம் குடும்பத்திற்காக என்று எனக்கு மனைவி மகன் என்று வந்த பிறகுதான் இப்போது புரிகிறது. அப்பா மகன் மீது வைத்திருக்கும் பாசம் வெளியில் தெரியாது. என் அப்பா சந்தோஷ் சுப்பிரமணியம் பிரகாஷ்ராஜ் மாதிரி. நான் ஜெயம்ரவி மாதிரி. அப்படித்தான் பலநாள் நினைத்திருந்தேன். அப்போது புரியவில்லை. இப்போது புரிகிறது. என் குடும்பம் மனைவி மகன் என்று வந்த பிறகுதான் புரிகிறது.

இந்தப் படத்துக்காக நாங்கள் வியர்வை தான் சிந்தினோம். ஆனால் தொழில்நுட்பக் கலைஞர்கள் தொழிலாளர்கள் எல்லாமே ரத்தம் சிந்தினார்கள். ஒருவருக்கு 6 வது மாடி யிலிருந்து விழுந்து மண்டை உடைந்து விட்டது. படப்பிடிப்பு மறுநாள் நிறுத்தப்பட்டுவிட்டது.

மருத்துவமனை போய் பார்த்தபோது எப்படி இருக்கிறீர்கள் என்றேன் 'நான் நல்லாருக்கேன். படப்பிடிப்பு எப்படி போய்க் கொண்டு இருக்கிறது?' என்றார். எனக்கு அழுகையே வந்துவிட்டது, தொழிலாளர்கள் அவர்கள் இல்லாமல் சினிமா இல்லை," என்றார்.

கார்த்தி

நடிகர் கார்த்தி பேசும்போது, "படத்தின் பெயர் 'தற்காப்பு' . போஸ்டரைப் பார்த்தாலே 'தற்காப்பு' நல்லபடம் எனறு தெரிகிறது. நம்பிக்கை வருகிறது. லிங்குசாமி சார் சொல்வார் நல்லபடமா இல்லையா என்பது போஸ்டரிலேயே தெரியும் என்று.

எனக்கும் என் அப்பா பற்றிய நினைவு வருகிறது. அப்போது அப்பா சொல்வார் அப்பாவிடமும் குருவிடமும் பாராட்டை எதிர்பார்க்கக் கூடாது அப்படி ஒரு பாராட்டு வரவே கூடாது. பாராட்டு வராத வரைதான் வேலை செய்வோம் என்று.

எனக்கு சக்தியை நன்றாகத் தெரியும். ஸ்டண்ட் க்ளாஸில் பார்ப்பேன். நானும் விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை. ஆனால் முயன்றால் முடியும்.

எதுவும்10 நாள் வரவில்லை என்றால், முயன்றால்11 வது நாள் வரும். முயற்சியை மட்டும் விடக்கூடாது. உடனே வெற்றிவராது. ஆனால் முயற்சி கவனிக்கப்படும் இதைத்தான் நானும் செய்கிறேன். சக்திக்கும் சொல்கிறேன், " என்றார்.

விழாவில் இயக்குநர் பி. வாசுவுக்கு கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி ஜனநாதன், சமுத்திரக்கனி , ஜி.என்.ஆர். குமரவேலன்,கிருஷ்ணா, நடிகர் வத்சன் சக்கரவர்த்தி, நடிகை வைஷாலி, தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால், 'ஆஸ்ட்ரோ' என்.சி. ராஜாமணி, கமலா திரையரங்க உரிமையாளர் கணேஷ், ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் ஆனந்த், இசையமைப்பாளர் எ.ஏச் ஃபைசல், பாடல்கள் எழுதிய மோகன்ராஜ், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள். முன்னதாக கினெடாஸ் கோப் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ள டாக்டர் எஸ்.செல்வமுத்து, என். மஞ்சுநாத் அனைவரையும் வரவேற்றனர். 'தற்காப்பு' பட இயக்குநர் ஆர்.பி.ரவி நன்றி கூறினார்.

 

நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதியின் மகன்?

சென்னை: விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் நானும் ரவுடிதான். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Vijay Sethupathi's Son Surya Sethupathi Playing in Naanum Rowdydhaan?

தற்போது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக விஜய் சேதுபதியின் 10 வயது மகன் சூர்யா சேதுபதி இந்தப் படத்தில் நடித்திருப்பதாக கூறுகின்றனர்.

இந்தப் படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதியாக நடிக்க ஒரு சிறுவனைத் தேடி யாரும் பொருத்தமாக இல்லாததால் விஜய் சேதுபதியின் நடிக்க வைத்திருக்கிறாராம் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

இதனை விஜய் சேதுபதியும் ஒப்புக் கொண்டிருக்கிறார் " நானும் ரவுடிதான் படத்தில் எனது மகன் சூர்யா சேதுபதி நடித்திருக்கிறார். ஆனால் அவர் எந்த மாதிரியான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதை நான் கூற மாட்டேன்.

அது என்ன வேடம் என்பதை நீங்களே திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். நடிகர் விஜயின் மகன் சஞ்சய் அவர் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்திருந்தார்.

மேலும் விக்ரமின் மகன் துருவ் தற்போது நடிகராக விரைவில் அறிமுகமாகவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இளைய தலைமுறைக்கு வழி விடுகிறதா கோடம்பாக்கம்?

 

அஜீத் 56... ஏதோ மதியம் 'விருந்து'ன்னாங்க... இப்படி 'காய' விட்டுட்டாங்களே!

சென்னை: அஜீத்தின் ரசிகர்களுக்கு இன்று மதியம் 1 மணியளவில் ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது என்று தல 56 படத்தில் நடித்திருக்கும் ரோபோ சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

Ajith's 'Thala 56' Title Revealed Today?

ஆனால் பிற்பகல் மூன்று மணிக்குப் பிறகும் எந்த அறிவிப்பும் அந்தப் படம் குறித்து வரவில்லை.


அனேகமாக படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவை இன்று வெளியாகும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்திருந்தனர். இதனை உறுதி செய்வது போல இன்று தலைப்பும் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகப் போவதாக அஜீத்தின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கொண்டாடட்டங்களை நடத்தி வந்தனர்.

ஏற்கெனவே, இப்படத்திற்கு ‘வரம்', ‘அடங்காதவன்', ‘ஆரவாரம்' ஆகிய தலைப்புகளை பரிசீலனையில் உள்ளதாம். இவற்றில், ஏதாவது ஒன்றை படத்தின் தலைப்பாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ஒருமணிக்கு அறிவிப்பு என ட்வீட்டியவர்கள், இப்போது அதுபற்றி எந்தத் தகவலும் வெளியிடாமல் உள்ளனர்.

ராத்திரி ஒரு மணிக்குள்ளயாவது அறிவிச்சிடுவீங்களா அந்த 'ஆச்சர்யத்தை?!'


 

எனக்கு ஜெயிக்கிற குதிரையில் பயணிக்கப் பிடிக்காது! - எஸ்ஏ சந்திரசேகரன்

எனக்கு ஜெயிக்கிர குதிரையில் பயணிக்கப் பிடிக்காது என்று இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் தெரிவித்தார்.

கிருமி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ராஜேந்திரன், எம்.ரஜினி ஜெயராமன், எல்.ப்ரிதிவி ராஜ், கே. ஜெயராமன் மற்றும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

I dont like to ride on winning horse, says SAC

சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகரன், தயாரிப்பாளர் கே.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

படத்தின் இயக்குநர் அனுசரண் பேசுகையில், "கிருமி திரைப்படம் உலக அளவில் புகழ் பெற்ற ஒரு திரைப்பட விழாவுக்கு தேர்வாகியுள்ளது. அந்த திரைப்படவிழாவில் திரையிடவிருக்கும் முதல் தமிழ் படம் இதுதான். எல்லாம் உறுதியான பின்பு, அது எந்த திரைப்பட விழா என்பதை நான் வருகிற 17 ஆம் அறிவிக்கிறேன்.

நாயகன் கதிரை வைத்து என்னுடைய முதல் படத்தை இயக்க நான் விரும்பவில்லை. ஆனால் என்னுடைய பெற்றோர்கள் வார்த்தைக்காகத்தான் அவரை வைத்து படம் இயக்கினேன்," என்றார்.

படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் பேசும் போது, "இந்த படத்தை நான் மூன்று றை நான் பார்த்துவிட்டேன் ஒரு முறை கூட படம் எனக்கு சலிக்கவில்லை என்பது தான் உண்மை. ரசிகர்கள் படத்தை பார்க்கும் போது படம் அவர்கள் மனதை விட்டு நிச்சயம் நீங்காது," என்றார்.

இறுதியாக பேசிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திர சேகரன், இந்த படத்தின் இயக்குநர் அனு சரணை எனக்கு படம் இயக்கச் சொல்லிக் கேட்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். நிச்சயமாக படம் வெற்றி பெற்ற பின்பு அவர் என்னிடம் வந்தால் நான் அவருக்கு படம் இயக்க வாய்ப்பு தரமாட்டேன். ஏன்னா எனக்கு ஜெயிக்கிற குதிரையில் பயணிக்கப் பிடிக்காது. நான் இந்தப் படத்தைப் பார்க்க வந்த போது, பாதி படம்தான் பார்ப்பேன் என்றேன். முழு படத்தையும் பார்த்து விட்டுத்தான் சென்றேன். அதற்க்கு காரணம் படம் அவ்வளவு அருமையாக இருந்தது," என்றார்.

 

விக்ரம் பிரபு - ஷாம்லி நடிக்கும் வீர சிவாஜி.. புதுவையில் நடந்த பூஜை!

ரோமியோ ஜூலியட் வெற்றிப் படம் தந்த தெம்பில், அடுத்த புதுப்படத்துக்கு பூஜை போட்டுவிட்டார் மெட்ராஸ் என்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால்.

வீர சிவாஜி என்று தலைப்பிட்டுள்ள இந்தப் படத்தில் விக்ரம் பிரபு - ஷாம்லி ஜோடி சேர்கிறார்கள்.

Veera Sivaji pooja at Puducherry

ரோபோசங்கர், ஜான்விஜய், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரும் படத்தில் நடிக்கின்றனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, டி இமான் இசையமைக்கிறார்.

Veera Sivaji pooja at Puducherry

எழுதி இயக்குபவர் - கணேஷ்விநாயக்.

இந்த படத்தின் துவக்க விழா இன்று ( 16.09.2015 ) புதுச்சேரியில் நடைபெற்றது. விழாவில் பிரபு, புனிதா பிரபு, இயக்குனர் லஷ்மன் ஆகியோர் கலந்துகொண்டனர். பூஜையுடன் இன்றே படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது.

 

தாரை தப்பட்டை... 130 நாட்கள் நடந்த படப்பிடிப்பு!

இயக்குநர் பாலாவின் தாரை தப்பட்டை படப்பிடிப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

இயக்குநர் பாலா எழுதி இயக்கி வரும் "தாரை தப்பட்டை" படத்தை சசிகுமார் தயாரித்து நாயகனாக நடிக்கிறார். நாயகியாக வரலக்ஷ்மி சரத்குமாரும் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து தஞ்சாவூரிலும் மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களிலும் நடைபெற்று வந்தது.

Bala wraps up Thaarai Thappattai shooting

தற்போது இப்படத்தின் படபிடிப்பு முழுவதுமாக முடிந்து, அடுத்த கட்டப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. மொத்தம் 130 நாட்கள் படபிடிப்பை நடத்தியுள்ளார் இயக்குநர் பாலா.

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 1000மாவது படம் தாரை தப்பட்டை என்பது குறிப்பிடதக்கது.

 

இன்று மாலை வெளியாகிறது கமலின் "தூங்காவனம்" டிரெய்லர்

சென்னை: கமலின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியிருக்கும் தூங்காவனம் திரைப்படத்தின் டிரெய்லர், இன்று மாலை வெளியாகும் என்று கமலின் பிஆர் நிகில் முருகன் கூறியிருக்கிறார்.

கமல், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், கிஷோர், உமா ரியாஸ்கான், ஆஷா சரத் மற்றும் மது ஷாலினி என்று ஏராளமான நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தூங்காவனம்.

இந்தப் படம் நவம்பர் வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது, ஒட்டு மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இன்று மாலை சுமார் 4.21 மணியளவில் தூங்காவனம் படத்தின் டிரெய்லர் உலகநாயகன் டியூப் - யூ டியூப் சேனலில் வெளியாகும் என்று கமலின் பிஆர் நிகில் முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.


தனது ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி விருந்தாக கமல் "தூங்காவனம்" படத்தின் டிரெய்லரை இன்று மாலை வெளியிடவிருக்கிறார்.

ஜிப்ரான் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படம், தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

சத்யராஜ் - சிபிராஜ் நடிப்பில் முடிந்தது "ஜாக்சன் துரை"

சென்னை: நடிகர் சத்யராஜ் பேயாக நடித்திருக்கும் ஜாக்சன் துரையின் படப்பிடிப்பு முழுவதும் தற்போது முடிவடைந்து விட்டது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

"பர்மா" படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் தரணி தரண் இயக்கத்தில் சிபிராஜ் நாயகனாக நடித்த ஜாக்சன் துரை திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் தற்போது முடிவடைந்து இருக்கிறது.

Sibiraj's Jackson Durai Completes its Shoots

1940களில் நடப்பது போன்ற இந்தக் கதையில் நடிகர் சிபிராஜ் காவலராகவும், சத்யராஜ் பேயாகவும் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் இணைந்து பிந்து மாதவி, "நான் கடவுள்" ராஜேந்திரன் மற்றும் கருணாகரன் ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

நகைச்சுவை கலந்த காமெடிப் படமாக உருவாகியிருக்கும் ஜாக்சன் துரை படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். பர்மா படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் தரணி தரண் கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கியிருக்கிறார்.

சுமார் 5 கோடி செலவில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்சன்ஸ் சார்பில் எம்.எஸ்.சரவணன் தயாரித்திருக்கிறார். படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் தற்போது ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

படத்தின் இசை வெளியீடு பற்றிய அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோடம்பாக்கத்தில் மீண்டும் பேய்களின் ஆட்டம் ஆரம்பம்.

 

நாளை தொடங்குகிறது ரஜினியின் கபாலி படப்பிடிப்பு!

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி ரஜினி நடிக்கும் புதிய படமான `கபாலி' படப்பிடிப்பு நாளை விநாயகர் சதுர்த்தியன்று பூஜையுடன் தொடங்குகிறது.

இதற்கு முன் இல்லாத அளவுக்கு இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

Kabali shooting from Tomoroow

ரஜினியுடன் ராதிகா ஆப்தே, பிரகாஷ்ராஜ், கிஷோர் போன்றவர்கள் நடிக்கின்றனர்.

படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன. பூந்தமல்லி அருகே பெரும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கிழக்குக் கடற்கரைச் சாலையிலும் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு அடுத்த மாதம் மலேசியாவில் நடக்கவிருக்கிறது.

நாளை நடக்கவிருக்கும் பூஜை, படப்பிடிப்பு பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்துள்ளனர் படக்குழுவினரும் தயாரிப்பாளர் தாணுவும்.

 

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா... லைவ் நிகழ்ச்சியில் அடித்துக் கொண்ட டைரக்டர்- பிரபல ஹீரோயின்!

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அதன் இயக்குநருக்கும் நாயகி கயல் ஆனந்திக்கும் பெரும் தகராறு, கைகலப்பு வரை போயுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் - ஆனந்தி நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ சான்று அளித்துள்ளது சென்சார்.

Heroine Anandhi clashed with her director

இந்தப் படத்தின் புரமோஷன் எனப்படும் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு சென்றுள்ளனர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும், நாயகி ஆனந்தியும். அங்கே படத்தில் தனக்கு சரியான பாத்திரம் அமையவில்லை என்று குறைபட்டாராம் ஆனந்தி. அங்கேயே இருவருக்கும் சண்டை ஆரம்பித்துவிட்டிருக்கிறது.

அடுத்து அங்கிருந்து நேராக ஒரு பண்பலை வானொலியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அங்குதான் பெரிய சண்டையாகிவிட்டதாம்.

தன் கேரியரையே இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சீரழித்துவிட்டார் என்று நிகழ்ச்சியில் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார் ஆனந்தி. காரணம் படத்தில் தன்னை ஆபாசமாகவும், மோசமான முறையில் காட்டியுள்ளதாக கூறினாராம். பதிலுக்கு அங்கேயே ஆனந்தியை திட்டியுள்ளார் இயக்குநர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் இருவரையும் விலக்கி அனுப்பியுள்ளனர்.