36 வயதினிலேவைத் தொடர்ந்து... மீண்டும் ஒரு படத்தில் நடிக்கும் ஜோதிகா

சென்னை: நடிகை ஜோதிகா ஒரு புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்று உறுதியற்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமிழின் முன்னணி நடிகையாக வலம்வந்த ஜோதிகா திருமணம் செய்து கொண்ட பின் நடிப்பிற்கு முழுக்குப் போட்டு குடும்பத் தலைவியாக மாறினார்.

Jyothika's Next Movie Details

திருமணத்திற்குப் பின் சுமார் 8 ஆண்டுகள் கழித்து 36 வயதினிலே படத்தின் மூலமாக மீண்டும் நடிக்க வந்த ஜோதிகாவை ரசிகர்கள் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்றனர்.

நீண்ட வருடங்கள் கழித்து நடித்தாலும் முன்பு இருந்து அதே துள்ளலும் துறுதுறுப்பும் ஜோதிகாவிடம் மாறாமல் அப்படியே இருந்தது, இது ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டது.

எனவே ஜோதிகாவின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர், தற்போது ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் விதமாக ஜோதிகா ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இயக்குநர் மற்றும் படம் சம்பந்தப்பட்ட முறையான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறுகிறார்கள், இதுவும் நாயகியை மையப்படுத்தும் ஒரு கதையாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.

படம் மட்டுமன்று நிறைய விளம்பரங்களில் நடிக்கவும் ஜோதிகாவுக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. தற்போது ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்காக மும்பையில் முகாமிட்டிருக்கிறார் ஜோதிகா.

வாடி ராசாத்தி...

 

கார்த்திக் - வைபவ் இணையும் ஜிந்தா!

அனேகன் படம் மூலம் மறுபிரவேசம் செய்துள்ள நடிகர் கார்த்திக் அடுத்து வைபவுடன் கை கோர்க்கிறார். இந்தப் படத்துக்கு ஜிந்தா என்று தலைப்பிட்டுள்ளனர்.

Karthik - Vaibav in Jindha

இந்தப் படத்தின் நாயகியாக ‘இந்தியா பாகிஸ்தான்' படத்தில் நடித்த சுஷ்மா ராஜ் நடிக்கிறார். படத்தில் வைபவ் நாயகன் என்றாலும், அவருக்கு சற்றும் குறையாத முக்கியத்துவம் கொண்ட பாத்திரத்தில் கார்த்திக் நடிக்கிறாராம்.

Karthik - Vaibav in Jindha

இந்த படத்தை எஸ்.ஏ.எப்.சினிமாஸ் என்ற புதிய நிறுவனம் சார்பாக எஸ்.ஏ.ராஜா தயாரிக்கிறார். இயக்குனர் வசந்திடம் பணியாற்றிய எஸ்.கே.வெற்றி செல்வன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரியின் மகன் ஹசார் காசிப் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

Karthik - Vaibav in Jindha

படம் குறித்து வெற்றிச் செல்வன் கூறுகையில், "இந்தக் கதை முற்றிலும் ஒரு புதிய முயற்சி. இந்தக் கதைக்கு உற்சாகமும், துள்ளலும்தான் மூலதனம். இந்தக் கதையை நான் எழுதும் போதே என் மனதில் வந்து அமர்ந்தவர்கள் கார்த்திக்கும், வைபவும்தான். அவ்வளவு பொருத்தமாக இருந்தனர். தயாரிப்பாளர் ராஜா என்னுடைய நெருங்கிய நண்பர்.

Karthik - Vaibav in Jindha

என்னுடைய கதையைக் கேட்ட உடனே எனக்கு முதல் படம் இயக்க வாய்ப்பு அளித்தமைக்கு நான் என்றென்றும் கடமைபட்டு இருக்கிறேன். இந்தப் படத்தில் ஒளிபதிவாளராக பணியாற்றுபவர் போஜன் கே தினேஷ். படத்தொகுப்பு கே எம் ரியாஸ் முஹம்மது . 'ஜிந்தா' எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும்," என்றார்.

 

வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விசாரணை!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விசாரணை' திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க தேர்வாகியுள்ளது.

இந்த திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவுக்கு தேர்வாகியுள்ள முதல் படம் விசாரணைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Visaranai to be screened at Venice Film Festival

72-ஆவது வெனீஸ் திரைப்பட விழா அந்நாட்டின் லீடா மாநகரத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கியது. உலக அளவில் சிறப்புப் பெற்ற பல திரைப்படங்கள் இவ்விழாவில் பங்கேற்றுள்ளன. வரும் 12-ஆம் தேதி வரை இத்திரைப்பட விழா நடைபெறுகிறது.

இந்த திரைப்பட விழாவில் இதற்கு முன் தமிழ்த் திரைப்படங்கள் பங்கேற்றிருந்தாலும், போட்டி பிரிவுக்கு எந்தப் படம் தேர்வானதில்லை.

அட்டக்கத்தி தினேஷ், ஆனந்தி, கிஷோர், சமுத்திரக்கனி, முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை தனுஷ், வெற்றிமாறன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரகுமார் எழுதிய 'லாக் அப்' நாவலைத் தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

பாகுபலி 2: நடிக்க ஆசைப்படும் ஸ்ரீதேவி... வாய்ப்புக் கொடுப்பாரா ராஜமௌலி?

ஹைதராபாத்: பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியைப் பார்த்து வியந்து போன நடிகை ஸ்ரீதேவி தற்போது உருவாகி வரும் 2 வது பாகத்தில் நடிக்க மிகவும் ஆசைப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வெளியான படம் பாகுபலி.

Baahubali 2: Sridevi Ask Opportunity to Director Rajamouli?

படத்தின் பிரம்மாண்டமும், காட்சியமைப்புகளும் வசூலில் பாகுபலியை உச்சம் தொடவைத்தன, மேலும் தற்போதைய நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது படத்தைப் பார்த்த ஒவ்வொரு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பாகுபலி படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் அதிகம் பேசப்பட்டன என்றாலும், அதில் முக்கியமான கேரக்டர் ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி கேரக்டர்தான்.

கம்பீரமும், ஆழமான வசனங்களும் நிறைந்த அந்த கேரக்டருக்கு முதலில் கேட்கப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி தான், ஆனால் அவர் கேட்ட பெருந்தொகை காரணமாக வாய்ப்பு ரம்யா கிருஷ்ணன் வசம் சென்றது.

தற்போது புலி படத்தின் மூலம் தென்னிந்தியப் படங்களுக்கு வருகை தந்திருக்கும் ஸ்ரீதேவி, ரம்யா கிருஷ்ணன் கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து மிகவும் வருத்தத்தில் உள்ளாராம்.

இந்த வருத்தத்தைப் போக்கும் முயற்சியாக இப்போது உருவாகி வரும் பாகுபலியின் இரண்டாம் பாகத்தில் தான் நடிக்க விரும்புவதாக இயக்குநர் ராஜமௌலியிடம் கூறியிருக்கிறாராம்.

ஏற்கனவே படத்தின் பாத்திரங்கள் முதல் காட்சிகள் வரை பார்த்துப் பார்த்து வடிவமைத்து வைத்திருக்கும் ராஜமௌலி திடீரென இந்த பாகத்தில் ஒரு புது கேரக்டரோ அல்லது பழைய கேரக்டர்களில் மாற்றங்களோ செய்து ஸ்ரீதேவியை நடிக்கவைப்பாரா? என்கிற கேள்வி தற்போது திரையுலகினர் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கான விடையை ராஜமௌலி தான் சொல்லவேண்டும், ஸ்ரீதேவிக்கு வாய்ப்பு கிடைக்குமா? பார்க்கலாம்...

 

நாய்களைக் கொல்லாதீங்க, நிறுத்துங்க.. கேரள முதல்வருக்கு சோனாக்ஷி கோரிக்கை

மும்பை: கேரளாவில் தெரு நாய்கள் கொலை செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று பாலிவுட் நடிகை சோனாக்க்ஷி சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கேரளாவில் தெருக்களில் உள்ள நாய்கள் மனிதர்களுக்கு இடையூறாக இருக்கின்றன என அவைகளை கொடூரமாக கொலை செய்து வருகிறார்கள். இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள், சமூக வலைகளில் எதிர்ப்புகள் நடந்து வருகின்றன.

கேரளாவில் தெருவில் உள்ள நாய்களை கொலை செய்வதை தடை செய்ய வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஷால் உண்ணாவிரதம் இருந்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

விஷாலைத் தொடர்ந்து பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் கேரள முதலைமச்சர் உம்மன் சாண்டிக்கு கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்.

அதில் கேரளாவில் தெரு நாய்களை கொலை செய்வதை தடுக்க வேண்டும் என கேரள முதலமைச்சரிடம் விண்ணப்பித்து இருக்கிறார் மேலும் 'இந்த மனிதநேயமற்ற செயலை தயவு செய்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கண்டிப்பாக இதைச் செய்ய வேண்டும்' எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் சோனாக்க்ஷி சின்ஹாவின் இந்த கோரிக்கைக்கு ஆதரவு எழுந்திருக்கும் அதே நேரத்தில், பல பேர் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

பாயும் புலி விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
3.0/5

நடிகர்கள்: விஷால், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, ஜெயப்பிரகாஷ், சூரி, வேல ராமமூர்த்தி, அருள்தாஸ், ஆர்கே

Paayum Puli (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

ஒளிப்பதிவு: வேல்ராஜ்

இசை: டி இமான்

தயாரிப்பு: எஸ் மதன்

இயக்கம்: சுசீந்திரன்

இன்னுமொரு தங்கப் பதக்கம் டைப் கதை. மதுரை எப்பவோ நவீனத்துக்கு மாறிவிட்டாலும் தமிழ் சினிமா அதை இன்னும் ரவுடியிசம், கொலை கொள்ளையிலிருந்து விடுவிக்காது போலிருக்கிறது!

மதுரையில் கொலை, மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் கும்பலை போலீசார் சுற்றி வளைக்கும்போது ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்படுகிறார். அவரைச் சுட்டுக் கொன்ற தாதா தானாகவே போய் சரணடைகிறார். ஒரு போலீஸ்காரனைக் கொன்ற தாதாவையும் அவன் கும்பலையும் எப்படி விட்டு வைக்கக் கூடாது என்பதற்காக, திருச்சியில் பணியாற்றும் விஷாலை, அவரது சொந்த ஊரான மதுரைக்கு அன்டர்கவர் ஆபரேஷனுக்காக அனுப்புகிறது காவல்துறை. வந்த உடனே, சாலையைக் கடக்கவும், யு டர்ன் அடிக்கவும் பயப்படும் காஜல் அகர்வால் கண்ணில் பட, அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் விஷால்.

Paayum Puli Review

மதுரையில் ஆதிக்கம் செலுத்தும் அத்தனை ரவுடிகளையும் பொட்டு பொட்டென்று சுட்டுத் தள்ளுகிறார் விஷால். மெயின் தாதாவான பவானியைப் போட்டுத் தள்ளும்போது, 'எனக்கும் மேல ஒருத்தர் இருக்கார்..' என்று கூறவிட்டு சாகிறான்.

யார் அந்த தாதா... அவனை விஷால் எப்படி ஒழித்தார்? என்பது மீதி.

விஷாலுக்கென்றே அளவெடுத்துத் தைத்த மாதிரியான போலீஸ் வேடம். மனிதர் சின்ன அலட்டல் கூட இல்லாமல் பிறவி போலீஸ்காரர் மாதிரி நடித்திருக்கிறார். மதுரையின் மொத்த குற்றங்களுக்கும் பின்னணி யார் என்பதைக் கண்டுபிடிக்கும் விதமும், கண்டுபிடித்தபிறகு கலங்கித் தவிப்பதும் நிறைவான நடிப்பு.

Paayum Puli Review

துப்பாக்கி முனையில் காஜல் அகர்வாலை ஐ லவ் யூ சொல்ல வைக்கும் காட்சி புதுசு.

முந்தைய இரு படங்களைவிட இதில் காஜல் அகர்வால் பார்க்க அழகாக இருக்கிறார். அவருக்கான நடனங்களை இன்னும் கூட அழகான மூவ்மென்ட்டுகளுடன் வைத்திருக்கலாம். ஏதோ வாங்கின சம்பளத்துக்கு ஆடின மாதிரி இருந்தது.

ஹெல்மெட்டோடு குளிக்கப் போய் மனைவியிடம் மாட்டிக் கொள்ளும் இடத்தில் மட்டும் சூரியின் காமெடி ரசிக்க வைக்கிறது.

ஹீரோவுக்கு இணையான வேடம். கலக்கியிருக்கிறார் சமுத்திரக்கனி. அமைச்சராக வரும் ஆர்கே, தொழிலதிபர் ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ், ஆனந்த்ராஜ், வேல ராமமூர்த்தி என அனைவரும் மிகையற்ற நடிப்பைத் தந்துள்ளனர்.

Paayum Puli Review

இரண்டு மணி பத்து நிமிடமே ஓடும் படத்தில் முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் நல்ல விறுவிறுப்பு. சமுத்திரக் கனிக்கும் விஷாலுக்குமான அந்த துரத்தலைப் படமாக்கிய வேல்ராஜைப் பாராட்ட வேண்டும்.

இமானின் இசையில் சிலுக்கு மரமே, மருதைக்காரி.. பாடல்கள் கேட்கும்படி உள்ளன. விஷால் - காஜல் காதல் காட்சிகளில் ஜில்லா பாடலை பின்னணி இசையாகப் பயன்படுத்தியிருக்கிறார் இமான்.

Paayum Puli Review

சுசீந்திரன் இயக்கியுள்ள முதல் போலீஸ் கதை. இடைவேளையில் அவர் வைத்திருக்கும் ட்விஸ்ட்டே கதையின் முடவை யூகிக்க வைத்துவிடுகிறது. அதை க்ளைமாக்ஸ் வரை தொடர்ந்திருந்தால் படம் வேறு ரேஞ்சில் இருந்திருக்கும்!

 

தீயாய் வேலை செய்யும் நடிகர்... ஆடிப்போன நாட்டாமை

சென்னை: என்னதான் சங்கத் தலைவராக இருந்தாலும் தோரணை நடிகரின் செயல்பாடுகளைக் கண்டு கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறாராம் நாட்டாமை நடிகர்.

சங்கத் தேர்தல் விவகாரத்தில் நாளுக்குநாள் இளம் நடிகரின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது, பத்தாததற்கு முன்னணி நடிகர்கள் தொடங்கி இளம் நடிகர்கள் வரை அனைத்து நடிகர்களையும் சந்தித்து ஆதரவை திரட்டிக் கொண்டிருக்கிறார் நடிகர்.

இதில் நாட்டாமை நடிகரை ஆட்டிப் பார்த்த சம்பவம் ஒன்றும் சமீபத்தில் நடந்திருக்கிறது, அதாவது முன்னாள் சங்கத் தலைவர் நடிகரை சமீபத்தில் இளம் நடிகரின் அணி சந்தித்து விட்டு வந்தது.

வெறும் சந்திப்பாக மட்டும் இல்லாமல் அரசியலின் பல்வேறு சூட்சுமங்களையும் தோரணை நடிகருக்கு சொல்லிக் கொடுத்து அனுப்பியிருக்கிறார் முன்னாள் சங்கத் தலைவர்.

அந்த சந்திப்பைத் தொடர்ந்து தோரணை நடிகர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியுமே நச்சென்று நங்கூரம் பாய்ந்தது போன்று இருக்க, இதனைக் கண்டு ஆடிப் போயிருக்கின்றனராம் நாட்டாமை அணியினர்.

அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா...

 

வில்லனாகவே தொடர விருப்பமில்லை!- அரவிந்த்சாமி

ஒரு ஹீரோ அல்லது வில்லன் கோட் சூட்டில் நடித்த ஒரு படம் ஜெயித்துவிட்டால், அந்த கோட்டும் சூட்டும் பல படங்களுக்கு அவர்களை விடாமல் துரத்துவது தமிழ் சினிமா வழக்கம்.

கோட் சூட்டு மட்டுமல்ல... தலைப்பு, பேய் சமாச்சாரம் என அனைத்திலும் இந்த ஈயடிச்சான் காப்பி தொடர்கிறது.

தனி ஒருவன் படத்தின் இந்த பிரமாண்ட வெற்றிக்கு அந்தப் படத்தின் வில்லன் வேடத்தில் கலக்கிய அரவிந்த்சாமியும் ஒரு காரணம்.

Arvindswamy not willing to continue villain roles

அவருக்கு ஒருபக்கம் பாராட்டுகள் குவிகிறது. மறுபக்கம் இதே டைப் வில்லன் வாய்ப்புகளும் வருகின்றனவாம்.

இதுகுறித்து அரவிந்த்சாமி கூறுகையல், " வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. தனி ஒருவன் படத்தில் வில்லன் வேடம் என்றாலும் வித்தியாசமான, எனக்கு பிடித்தமான வேடம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். நான் நினைத்ததுபோலவே ‘தனிஒருவன்' படம் நன்றாக வந்திருக்கிறது.

ஹீரோ - வில்லன் என்பதைவிட கதை ரசிக்கும்படி இருக்கவேண்டும். அது போன்ற கதை என்பதால் இதில் நடித்தேன். இயக்குநர் ராஜா என்னிடம் என்ன சொன்னாரோ அதை அப்படியே எடுத்தார். அதுதான் இந்த பெரிய வெற்றிக்குக் காரணம்.

இந்த படத்தில் நான் நடித்திருக்கும் வேடத்துக்கும் என் குணத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த படம் எனக்கு புதிய அனுபவம். என்றாலும் தொடர்ந்து வில்லன் வேடத்தில் நடிக்க விருப்பம் இல்லை.

நானும் ஒரு கதை தயாரித்து வைத்திருக்கிறேன். அதை இயக்க வேண்டும் என்ற ஆசையும் உண்டு. இதற்கு கொஞ்சநாள் ஆகும்," என்றார்.

 

பாயும் புலி Vs தியேட்டர்காரர்கள்... தீர்த்து வைத்த விஷால்!

ஒருவழியாக இன்று செங்கல்பட்டு ஏரியாவிலும் விஷாலின் பாயும் புலி படம் வெளியாகிவிட்டது. பிற்பகல் 12 மணிக்கு மாயாஜால் உள்ளிட்ட செங்கல்பட்டு ஏரியா அரங்குகளில் பாயும் புலி வெளியானது.

பாயும் புலி படத்தை செங்கல்பட்டு ஏரியாவில் உள்ள திரையரங்குகளில் வெளியிட, படத்தின் தயாரிப்பாளரான வேந்தர் மூவீஸ் கணிசமான பணம் தரவேண்டும் என்று நிபந்தனை விதித்து தடை போட்டனர் ரோகினி பன்னீர் செல்வம் தலைமையில் இயங்கிய சிலர்.

இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு தவிர பிற ஏரியாக்களில் படத்தை வெளியிட முடிவு செய்தனர் தயாரிப்பாளர்கள்.

Vishal resolved Paayum Puli issue

இந்த நிலையில் படம் வெளியாக 12 மணி நேரமே இருந்த நிலையில், செங்கல்பட்டு பகுதி திரையரங்க உரிமையாளர்களிடம் விடிய விடிய பேச்சு நடத்தினார் படத்தின் நாயகன் விஷால்.

இறுதியில் படத்தை வெளியிட ஒப்புக் கொண்டனர் தியேட்டர்காரர்கள். பேச்சுவார்த்தை முடிய தாமதமானதால், படத்தின் க்யூபுக்கான கேடிஎம் வழங்குவது தாமதமானது. எனவே பிற்பகல் 12 மணிக்குதான் செங்கல்பட்டு பகுதிகளில் பாயும் புலி ரிலீசானது.

 

எந்திரன் 2... தீபிகா படுகோன் நாயகி... ஜனவரியில் ஷூட்டிங்!

ரஜினியின் கபாலி பட வேலைகள் கனஜோராக ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஷங்கர் இயக்கும் எந்திரன் 2 படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

எந்திரன் 2 படத்தில் ரஜினிக்கு ஜோடி யார் என்று மீடியா பெரும் அக்கப்போரே நடத்தி வருகிறது.

Enthiran 2 latest updates: Deepika on board

எந்திரனில் ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்தார். அதனால் அவர்தான் இரண்டாம் பாகத்திலும் தொடர்வார் என்று ஒரு தரப்பு எழுதிக் கொண்டிருக்க, இல்லையில்லை கத்ரீனா கைஃப்தான் ரஜினியின் புதிய ஜோடி என்று இன்னொரு பக்கம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்தப் படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக எந்திரன் 2 படக்குழுவிலிருந்து தகவல் கசிந்துள்ளது.

இந்தப் படத்தின் ஸ்க்ரிப்டை ஷங்கருடன் இணைந்து எழுதியிருப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன்.

எந்திரன் 2 திரைக்கதை வேலைகள் முழுமையடைந்துவிட்டதாக சமீபத்தில் ஜெயமோகன் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கப் போகும் நடிகர், நாயகி மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரங்களை டிசம்பரில் வெளியிடவிருக்கிறார்களாம். ஷூட்டிங்கை 2016 ஜனவரியில் தொடங்கப் போகிறார்களாம்.

அதே போல இப்போதைக்கு எந்திரன் 2 என்று அழைக்கப்பட்டாலும் படத்துக்கு வேறு தலைப்பை பதிவு செய்துள்ளாராம் ஷங்கர்.

 

டி ராஜேந்தர் புகார்: நயன்தாராவிடம் நடிகர் சங்கம் விசாரணை!

இது நம்ம ஆளு பட விவகாரத்தில் நயன்தாரா மீது டி ராஜேந்தர் கொடுத்த புகார் குறித்து நடிகர் சங்கம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் 'இது நம்ம ஆளு'. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் முழுமையாக முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்தாலும், படத்தில் இரு பாடல்களைச் சேர்க்க வேண்டும் என்பதால் காத்திருக்கின்றனர்.

Ithu Namma Aalu issue: Sarath Kumar inquires Nayanthara

இந்தப் பாடல் காட்சிகளுக்கு நயன்தாரா கால்ஷீட் தர மறுப்பதாகக் கூறி ‘இது நம்ம ஆளு' படத்தின் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் சங்கத்தில் நயன்தாரா மீது புகார் கொடுத்துள்ளார். அதில், நயன்தாரா பாடல் காட்சியை முடித்துக் கொடுத்தால்தான் படத்தை வெளியே கொண்டுவரமுடியும். சம்பள பாக்கி முழுவதையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.

பாடல் காட்சியில் அவர் நடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் நடிகர் சங்கத்துக்கு அனுப்பப்பட்டது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

நயன்தாராவிடம் விளக்கம் கேட்டபோது, குறிப்பிட்ட இரு பாடல் காட்சிகளுக்காக தான் கொடுத்த கால்ஷீட்டை வீணடித்துவிட்டார்கள் என்று பதிலளித்துள்ளார்.

இப்போது வேறு படங்களில் பிஸியாக இருப்பதால் அவர்கள் கேட்கும் தேதியில் என்னால் நடிக்க முடியாது என்றும், வேறு தேதிகளை ஒதுக்க முயல்வதாகவும் நயன்தாரா கூறியுள்ளாராம்.

பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க முயன்று வருவதாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

 

புற்று நோய் பாதிப்பு: இசையமைப்பாளர் ஆதேஷ் ஸ்ரீவத்சவா 40 வயதில் மரணம்!

மும்பை: புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல இந்திப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஆதேஷ் ஸ்ரீவத்சவா தனது 40 வயதில் மரணமடைந்தார்.

இந்தித் திரையுலகில் 90-களில் பாடகராக அறிமுகமானவர் ஆதேஷ் ஸ்ரீவத்சவா.

தன்னுடைய ஒப்பற்ற இசையறிவால் படிப்படியாக முன்னேறி நூற்றுக்கும் மேற்பட்ட இந்தித் திரைப்படங்களுக்கு பின்னணி இசை மற்றும் பாடல்களை இசையமைத்தார்.

Bollywood mourns death of music composer Aadesh Shrivastava

கடந்த 2010-ம் ஆண்டு இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது முதல் முறையாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக ‘கீமோதெரபி' சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளித்து அவர் வெகு விரைவாகவே குணமடைந்தார்.

புதிய படங்களுக்கு இசையமைத்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் மீண்டும் புற்றுநோயின் தீவிரத்தால் பாதிப்படைந்து மும்பையின் அந்தேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், இந்த முறை எந்த சிகிச்சையும் ஆதேஷுக்கு கைகொடுக்கவில்லை. இதனால், நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

ஷகிரா, ஏகான் உட்பட பல்வேறு உலகலாவிய நட்சத்திரங்களுடனும் இவர் பணிபுரிந்திருந்தார். இவரது இசையமைப்பில் சல்தே சல்தே, பாக்பன் மற்றும் கபி குஷி கபி கம் போன்ற படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.

குழந்தைகளை பாலியல் தொழிலாளிகள் ஆக்குவது பற்றிய குறும்படம் ஒன்றையும் இயக்கியுள்ளார்.

ஆதேஷுக்கு நேற்றுதான் பிறந்த நாள். அன்றுதான் அவரது இசையில் உருவான ‘வெல்கம் பேக்' படம் வெளியாகி பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. அதற்குள் இவரது மரணம் குடும்பத்தினர் மட்டுமின்றி திரையுலகினர் மற்றும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.