யாரிடமும் வாய்ப்பு தேடி போக மாட்டேன்... நல்ல வாய்ப்புகள் தேடி வந்தால் நடிப்பேன் - சினேகா

யாரிடமும் வாய்ப்பு தேடி போக மாட்டேன்... நல்ல வாய்ப்புகள் தேடி வந்தால் நடிப்பேன் - சினேகா

சென்னை: வாய்ப்பு கொடுங்கள் என யாரிடமும் போக மாட்டேன், ஆனால் நல்ல வாய்ப்புகள் தேடி வந்தால் நடிப்பேன், என்கிறார் நடிகை சினேகா.

பிரசன்னாவைத் திருமணம் செய்த பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் சினேகா. ஆனால் முன்பு மாதிரி நிறைய படங்களில் நடிக்காமல், தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதே நேரம் நடிப்புக்கு முழுக்குப் போடும் திட்டமும் இல்லை என்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளேன். திருமணத்திற்கு முன்பு ஹரிதாஸ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனால் திருமணத்துக்கு பிறகுதான் அதன் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியானது.

எல்லா பெண்ணும் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என எண்ணுவார்கள், அதைத்தான் இப்போது நான் செய்து கொண்டிருக்கிறேன்.

நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் ஏற்பேன். அதுவும் என்னை தேடி வர வேண்டும். வாய்ப்பு தரும்படி யாரிடமும் கெஞ்சி நிற்கமாட்டேன்," என்றார்.

 

சாரி, டங்க் ஸ்லிப்பாகிடுச்சு... நா அப்டி சொல்ல வரல

சென்னை: ட்வீட்டரில் அம்மா ஆக ஆசை என ஒரு ஆர்வத்தில் கூறிவிட்ட வசந்தமான காத்தாடி நாயகியின் ஸ்டேட்மெண்டால் ஆந்திராவில் அலறிப் போனார்களாம் ரசிகர்களும், தயாரிப்பாளர்களும்.

இன்னும் காதலையே கன்பார்ம் பண்ணலையே, அதுக்குள்ள புள்ளகுட்டி பெத்துக்கணும்னு இப்படி ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடுறியே, இது சரியானு ஏகத்துக்கும் அட்வைஸ் மழைல அவர குளிப்பாட்டிட்டாங்களாம்.

பயந்து போன நடிகை, இதனால் பட வாழ்க்கை பாதிக்கப் படுமேனு அரண்டு போன நடிகை, தன் தவறை அப்போது தான் உணர்ந்தாராம். சார், டங்க் ஸ்லிப்பாகிடுச்சுனு பாக்குறவங்க,கேட்குறவங்க கிட்ட எல்லாம் வைகைப்புயல் ரேஞ்சுக்கு புளி போட்டு விளக்குறாங்களாம்.

அப்பாடி, கல்யாணம், புள்ளகுட்டினு இவ செட்டிலாகிடுவா, நம்ம லைன் கிளீயராகிடும்னு நினைச்சுகிட்டு இருந்த போட்டி நடிகைகளுக்குத் தான் இத கேட்டு, புஸ்வானம் ஆகிடுச்சாம்.

 

சித்தார்த்தின் பெற்றோரை சந்தித்து திருமணத்துக்கு சம்மதம் வாங்கிய சமந்தா!

சித்தார்த்தின் பெற்றோரை சந்தித்து திருமணத்துக்கு சம்மதம் வாங்கிய சமந்தா!  

நடிகர் சித்தார்த்தின் பெற்றோரை நேரில் சந்தித்து தங்கள் திருமணத்துக்கு சம்மதம் பெற்றார் சமந்தா என செய்திகள் பரபரக்க ஆரம்பித்துள்ளன.

இதன் மூலம் சித்தார்த்-சமந்தா திருமணம் நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது.

சிந்துபாதின் கதையைப்போல தொடர்ந்து கொண்டே இருக்கிறது சித்தார்த்தின் காதல் விவகாரம்.

ஏற்கெனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்த சித்தார்த், அதன் பிறகு நான்கு நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். ஸ்ருதியுடன் ஒன்றாக குடும்பம் நடத்தியதாகக் கூட பேசப்பட்டது.

இந்த நிலையில் புதிதாக சமந்தாவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் சமந்தாவின் பெற்றோர் இந்தக் காதலை ஏற்கவில்லை. சித்தார்த்தின் பெற்றோருக்கும் இதில் சம்மதமில்லையாம்.

இதையடுத்து பெற்றோரை சமரசபடுத்தி சம்மதம் வாங்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டனர். சமந்தா நேரடியாக சித்தார்த் வீட்டுக்கு சென்று, அவரது பெற்றோரை சந்தித்தார். நீண்ட நேரம் அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். சித்தார்த் உறவினர்களையும் சந்தித்து விட்டு திரும்பினார்.

நீண்ட யோசனைக்கு பிறகு சித்தார்த் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து உள்ளனர். கைவசம் உள்ள படங்கள் முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தில் உள்ளாராம் சமந்தா.

 

தீயில் கருகியது மணிரத்தினத்தின் சினிமா குடோன்

தீயில் கருகியது மணிரத்தினத்தின் சினிமா குடோன்

சென்னை: இயக்குநர் மணிரத்தின் திரைப்படப் பொருட்கள் தயாரிப்புக் கூடம் தீவிபத்தில் சிக்கிய சேதமடைந்தது.

இந்த கிட்டங்கியானது தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டது. மின்சாரக் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடிய தீயை அணைத்தனர். இருப்பினும் கிட்டங்கி முழுவதுமாக எரிந்து போய் விட்டது.

 

ஜெயம் ரவிக்கு ஜோடியானார் நயன்தாரா!

ஜெயம் ரவிக்கு ஜோடியானார் நயன்தாரா!

நயன்தாரா மீதான கோலிவுட் மோகம் இப்போதைக்கு குறைவதாக இல்லை போலிருக்கிறது. அடுத்தடுத்து புளியங்கொம்புகளாக அம்மணியைத் தேடிப் போகின்றன.

இந்த ஆண்டு மட்டும் உதயநிதி ஸ்டாலின், அஜீத், ஆர்யா ஆகியோர் ஜோடியாக நடித்துவருகிறார் நயன்தாரா. மேலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் அனாமிகா என்ற தமிழ் - தெலுங்கு இருமொழிப் படத்திலும் நடித்து வருகிறார்.

இப்போது தமிழில் அடுத்த பெரிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் அவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாகிறார்.

படத்தை இயக்கவிருப்பவர் ஜெயம் ராஜா. தில்லாலங்கிடிக்குப் பிறகு ராஜா - ரவி இணையும் இந்தப் படத்தை கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஏற்கெனவே நிமிர்ந்து நில் படத்தில் ரவியின் ஜோடியாக நயன்தாராதான் ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களால் அவருக்குப் பதில் அமலா பால் ஒப்பந்தமானார். இப்போது மீண்டும் இருவரும் இணைகிறார்கள். ஜெயம் ரவி - நயன்தாரா இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை.

படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

 

பாரதிராஜாவின் அன்னக்கொடிக்கு யு/ஏ சான்று!

பாரதிராஜாவின் அன்னக்கொடிக்கு யு/ஏ சான்று!

பாரதிராஜா இயக்கியுள்ள அன்னக்கொடி படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா தனது மனோஜ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் அன்னக்கொடி. இந்தப் படத்துக்கு முதலில் அன்னக்கொடியும் கொடிவீரனும் எனப் பெயரிட்டிருந்தார் பாரதிராஜா.

பின்னர் படத்தின் பெயரை அன்னக்கொடி என மாற்றிவிட்டார். இப்படத்தின் மூலம் லஷ்மன் நாராயண் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கார்த்திகா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பாரதிராஜா மற்றும் அவரது மகன் மனோஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதனிடையே அன்னக்கொடியும் கொடிவீரனும் படம் தணிக்கைக் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. படம் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

 

கோச்சடையானுக்கு முன்பே ரஜினியின் புதுப் படம் - கே எஸ் ரவிக்குமார் இயக்குகிறார்!

கோச்சடையானுக்கு முன்பே ரஜினியின் புதுப் படம் - கே எஸ் ரவிக்குமார் இயக்குகிறார்!

சென்னை: கோச்சடையான் படத்துக்கு முன்பாக ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கப் போவதாகவும், இதுகுறித்த ஆலோசனை தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வருகிறது ‘கோச்சடையான்'. இதில் ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி தீபிகா படுகோனே நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆனால் படத்தின் ட்ரைலரே இன்னும் வெளியாகவில்லை. காரணம், ரஜினி எதிர்ப்பார்த்த சர்வதேச தரத்துக்கு ஏற்ப படத்தை மெருகேற்ற இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.

எனவே கோச்சடையான் படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக ஒரு புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் ரஜினி. கோச்சடையான படம் தொடர்ந்து தள்ளிப் போவதுதால் ரசிகர்கள் சோர்ந்து போகாமலிருக்கவே இந்த முடிவு என்கிறார்கள்.

இந்தப் படத்தை ரஜினியின் ஆஸ்தான இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார்தான் இயக்குகிறார். அண்மையில் இது குறித்து கே.எஸ்.ரவிக்குமார் அழைத்து பேசிய ரஜினி, ‘முத்து', ‘படையப்பா' பாணியில் காமெடி, அதிரடி கலந்த கதையை தயார் செய்யச் சொல்லி இருக்கிறாராம். மேலும் படத்தை இரண்டு மாதத்தில் முடித்துவிட வேண்டும் என்றும் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகுதான் படம் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் அப்போது கண்டிஷனும் போட்டிருக்கிறார்.

ஏற்கெனவே இருவரும் இணைந்த படங்களான ‘ஜக்குபாய்', ‘ராணா' ஆகிய இரண்டு படங்களும் பூஜையுடன் நின்றுவிட்டன. அதனால் இந்தமுறையும் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதற்காக படம் பற்றிய அனைத்து தகவல்களையும் மிக ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறார்களாம்.

 

பாலிவுட்டில் படம் இயக்கினால்தான் இந்திய டைரக்டர் தகுதி கிடைக்குமாம்: சொல்கிறார் சுசி கணேசன்!

பாலிவுட்டில் படம் இயக்கினால்தான் இந்திய டைரக்டர் தகுதி கிடைக்குமாம்: சொல்கிறார் சுசி கணேசன்!

மும்பை: பாலிவுட்டில் படம் இயக்கினால்தான் இந்திய டைரக்டர் என்ற தகுதி என கிடைக்கும் கோலிவுட்டா தமிழ் சினிமா உலகில் இருந்து மும்பைக்கு போய் குடியேறிய சுசி கணேசன் கருத்து உதிர்த்திருக்கிறார்.

தமிழில் கந்தசாமி, திருட்டு பயலே உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சுசிகணேசன் பாலிவுட்டுக்காக மும்பையில் குடியேறிவிட்டார். தமது திருட்டு பயலேவை லேசாக மாற்றி ஹிந்தியில் ஷார்ட்கட் ரோமியோ படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் வரும் 21-ந் தேதி வெளியாகிறது.

இதையொட்டி ஆங்கில தொலைக்காட்சி ஒன்றின் இணைய தளத்தில் சுசிகணேசனுடனான சாட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முதல் கேள்விக்கே தடாலடியாக பதிலளித்தார் சுசிகணேசன். "பாலிவுட்டில் படம் எடுத்தால்தான் "இந்திய இயக்குநர்" என்ற அங்கீகாரம் கிடைக்கும். 100 தமிழ் திரைப்படம் எடுத்தாலும் தென்னிந்திய தமிழ் இயக்குநர் என்றுதான் சொல்லப்படுவோம். அதனால் பாலிவுட்டுக்கு வந்தேன் என்று சொல்லியிருக்கிறார்.

இன்னும் 5 ஆண்டுகாலத்துக்குள் அதாவது ‘இந்திய இயக்குநர்" அடையாளத்தை எட்டிவிடுவேன் என்றும் சொல்லி இருக்கிறார் சுசி கணேசன்.

மேலும் திருட்டு பயலே படத்தை விட 10 மடங்கு சூப்பரா இருக்கிறதாம் ஹிந்தி படைப்பான ஷார்ட்கட் ரோமியா என்று தமது மனைவி, தயாரிப்பாளர் எல்லோரும் புகழ்ந்து தள்ளிவிட்டனராம். என்று அந்த சாட்டிங்கில் தமக்கு புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கிறார் சுசி கணேசன்.

இந்திய இயக்குநர் அடையாளம் தேடி தஞ்சம் அடைந்திருக்கிறீர்கள்...அப்படித்தான் பேசுவீங்க

 

விஜய்யுடன் ஆட்டம் போடும் ஜிவி பிரகாஷ்!

விஜய்யுடன் ஆட்டம் போடும் ஜிவி பிரகாஷ்!

தலைவா படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாருடன் நடனம் ஆடுகிறார் ஜிவி பிரகாஷ் குமார்.

இசையமைப்பாளர்கள் அனைவருமே இப்போது திரையில் தோன்ற அல்லது நடனமாட ஆரம்பித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா கூட ஒரு படத்தில் முழுப் பாடலுக்கும் தோன்றுகிறார். அவர் மகன் யுவன் சங்கர் ராஜாவை நிறைய படங்களில் பாடலுக்கு நடனமாட வைக்கின்றனர் இயக்குநர்கள்.

ஏ ஆர் ரஹ்மான் ஏற்கெனவே தனி இசை வீடியோவே வெளியிட்டுள்ளார். அதில் அவர் நடனமும் இடம்பெற்றுள்ளது. அடுத்து இமானும் அதே போல ஒரு பாடலுக்கு தோன்றுகிறார். தேவி ஸ்ரீ பிரசாத்தும் நடிக்கிறார்.

விஜய் ஆன்டனியோ முழுப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்தப் பட்டியலில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமாரும் இணைகிறார். விஜய் நடிக்கும் தலைவா படத்தில், ஒரு பாடலுக்கு அவருடன் இணைந்து ஆடுகிறார். சமீபத்தில் இணையதளங்களில் லீக்கான 'வாங்கண்ணா...' என்ற பாடலுக்குத்தான் இருவரும் ஆடுகிறார்களாம்.

தலைவா பட ஆடியோ, விஜய்யின் பிறந்த நாளான 22-ம் தேதிக்கு ஒரு நாள் முன்பாக வெளியாகிறது.

 

என்னுடன் மட்டும்தான் ஜோடியா நடிக்கணும் - தனுஷுக்கு சோனம் போட்ட கண்டிஷன்!

என்னுடன் மட்டும்தான் ஜோடியா நடிக்கணும் - தனுஷுக்கு சோனம் போட்ட கண்டிஷன்!   

சென்னை: இனி நடிக்கும் இந்திப் படங்களிலும் தனுஷ் தன்னுடன்தான் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளார் சோனம் கபூர்.

தனுஷ் நடிக்கும் முதல் இந்திப் படம் ராஞ்ஜ்ஹனா. ஆனந்த் ராய் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருப்பவர் சோனம் கபூர்.

இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் அபாரமாக இருப்பதாக மீடியாக்கள் கொளுத்திப் போட்டுள்ளன. ஏற்கெனவே காதலில் சொதப்பி மன வருத்தத்தில் இருந்த சோனம், இந்தப் படத்தில் தனுஷுக்கு மிக நெருக்கமாகிவிட்டாராம். இதை தனுஷும் கூட மறுக்கவில்லை.

இந்த நிலையில் இன்று ராஞ்ஜஹனா படத்தின் தமிழ் டப்பிங்கான அம்பிகாபதி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

இதில் படத்தின் நாயகி சோனம் கபூர் கலந்து கொண்டார். வட இந்தியப் பெண்ணான அவர் தமிழ் பெண் போல புடவை, ரவிக்கை, தலை நிறைய மல்லிகைப்பூ அணிந்து வந்திருந்தார் (அந்தப் புடவை அடிக்கடி சொன்ன பேச்சைக் கேட்காமல் இடுப்பைவிட்டு நழுவப் பார்க்க, அதை சோனம் சமாளித்த அழகுக்காகவே அரங்கை விட்டு வெளியேறாமல் கடைசி வரை பலர் நின்றது தனி கதை! ). தனுஷ் பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளை கெட்டப்பில் வந்திருந்தார்.

இருவரும் ஜோடியாக நின்று போஸ் கொடுத்துவிட்டு, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்க பதில் சொல்ல ஆரம்பித்தனர்.

அப்போது ஒரு நிருபர், "பாலிவுட்டில் அழகழகான ஹீரோயின்கள் நிறைய இருக்கிறார்கள். இப்போது சோனம் கபூருடன் ஜோடி போட்டுவிட்டீர்கள். நீங்கள் அடுத்து ஜோடி சேர விரும்பும் அழகிய நாயகி யார்?" என்றார்.

உடனே தனுஷ் அதை பக்கத்திலிருந்த சோனம் கபூருக்கு மொழி பெயர்த்துச் சொன்னார்.

உடனே, தனுஷிடம், அடுத்தடுத்த படங்களிலும் நான் மட்டுமே உங்களுக்கு ஜோடியாக நடிக்கவேண்டும் என்றார்.

அதை அப்படியே நிருபருக்கும் பதிலாகத் தந்தார் தனுஷ். "அடுத்தடுத்த படங்களிலும் அவங்கதான் எனக்கு ஜோடியா நடிக்க விரும்பறாங்களாம்... அவங்கதான் இப்படி சொல்றாங்க.. இது கெமிஸ்ட்ரி... அது இதுன்னு என்ன வேணா நினைச்சுக்கங்க. இந்த பீல்டுல இருந்தா இதையெல்லாம் பேஸ் பண்ணித்தான் ஆகணும்... என்னைப் பொருத்த வரை கதைதான் முக்கியம். நல்ல கதை கிடைச்சா போதும். ஹீரோயின் யாருன்னு அப்புறம் பார்த்துக்கலாம்," என்றார்.

 

ரஜினி பற்றி நான் சொன்னதை தப்பா எழுதிட்டாங்க - நிருபர் மீது தனுஷ் வருத்தம்

ரஜினி பற்றி நான் சொன்னதை தப்பா எழுதிட்டாங்க - நிருபர் மீது தனுஷ் வருத்தம்

சென்னை: ரஜினிக்கு மருமகனாக இருப்பதால் தனக்கு எந்த பலனும் இல்லை என்று தான் சொன்னதாக வந்தது தவறு என்றும், தான் சொன்னதை தவறாக எழுதிவிட்டார்கள் என்றும் தனுஷ் கூறியுள்ளார்.

ரஜினி பற்றி தனுஷ் அடிக்கடி எதையாவது பேசி வைப்பதும், பின்னர் அதற்கு விளக்கம் சொல்வதும் வாடிக்கையாகிவிட்டது.

முன்பு ஒரு முறை, ரஜினிக்கு மருமகனாக இருப்பது தனக்கு மைனஸ்தான் என்று ஒரு இணையதளத்துக்கு பேட்டி கொடுத்து, பின்னர் அதை மறுத்திருந்தார் தனுஷ்.

இப்போதும் கிட்டத்தட்ட அதே போல பேச ஆரம்பித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினிக்கு மருமகனாக இருப்பதால் எனக்கு எந்தப் பலனுமில்லை என்று அவர் கூறியதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இன்று அதை மறுத்துள்ளார் தனுஷ்.

இன்று சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்த அம்பிகாபதி பிரஸ் மீட்டில், அவரிடம் இதுகுறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த தனுஷ், "நான் சொன்னதை தவறான பொருளில் எழுதியுள்ளார் அந்த நிருபர். அவர் யார் என்று தெரியவில்லை. ரஜினியின் மருமகனாக இருப்பது எனக்கு பலமும் இல்லை, பலவீனமும் இல்லை என்றுதான் நான் கூறியிருந்தேன். இதை தனக்கு ஏற்ற மாதிரி எழுதியுள்ளார் அந்த நிருபர். ரஜினி அவர் வேலையில் பிஸியாக இருக்கிறார். நான் என் வேலையில் பிஸியாக இருக்கிறேன். அதே நேரம் அவரோடு என்னை ஒப்பிடுவது தவறு. நான் இருபத்தைந்து படங்கள்தான் பண்ணியிருக்கிறேன். அவரோ சினிமாவின் முகமாக இருக்கிறார். அவருடன் என்னை ஒப்பிடக் கூடாது," என்றார்.