ரஜினி, அஜீத் நடித்துள்ள 'பில்லா' படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய வேண்டும் என ரசிகர்கள் சரமாரியாக இமெயில் அனுப்பி உள்ளனர். பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்யும் பாணி 'கர்ணன்' படம் மூலம் தொடங்கியது. அந்த வரிசையில் சில மாதங்களுக்கு முன் ரிலீஸ் செய்யப்பட்ட புதிய படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. திரையுலகில் நடக்கும் வேலை நிறுத்தத்தால் பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்கள் அடுத்த 2 மாதத்துக்கு ரிலீஸ் ஆகாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சக்ரி இயக்கத்தில் அஜீத் நடிக்கும் 'பில்லா 2' ரிலீஸும் தள்ளிப்போகிறது. வரும் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாள். அந்த நேரத்தில் அவர் நடித்து ஏற்கனவே வெளியான 'பில்லா' படத்தை வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் இமெயில் மூலம் அவருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார். நயன்தாரா, நமீதா ஆகியோர் நடித்துள்ளனர். அதேபோல் ரஜினியின் 'கோச்சடையான்' படமும் தீபாவளியை ஒட்டியே வரும் என்பதால் அவர் நடித்த பழைய 'பில்லா' படத்தை ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் அவரது மன்ற வெப் சைட் மூலம் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
பெப்சி - தயாரிப்பாளர் பிரச்னையால் வாய்ப்பை இழந்தார் பிந்து மாதவி
பெப்சி, தயாரிப்பாளர்கள் மோதலால் படப்பிடிப்புகள் தடைபட்டுள்ளது. இந்நிலையில் இப்பிரச்னையால் ஒப்பந்தமான பட வாய்ப்பை இழந்துள்ளார் பிந்து மாதவி. 'வெப்பம்', 'கழுகு' படங்களில் நடித்திருப்பவர் பிந்து மாதவி. சீனு ராமசாமி இயக்கும் 'நீர் பறவை' படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமானார். இதன் ஷூட்டிங் இம்மாதம் தொடங்க இருந்தது. ஆனால் சம்பள விவகாரம் தொடர்பாக பெப்சி அமைப்புக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. மே 2ம் தேதி முதல்தான் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதனால் 'நீர் பறவை' ஷூட்டிங்கை தள்ளிவைக்க படக்குழு முடிவு செய்தது. அந்த நேரத்தில் தெலுங்கு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால் 'நீர் பறவை' படத்தில் நடிக்க முடியாத சூழல் பிந்து மாதவிக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர் படத்திலிருந்து விலகியுள்ளார். இது பற்றி சீனு ராமசாமி கூறுகையில்,'ஸ்டிரைக் பிரச்னையால் ஷூட்டிங் தள்ளிப்போகிறது. அந்த நேரத்தில் கால்ஷீட்டை மாற்றியமைக்க முடியாத நிலையில் பிந்து மாதவி இருக்கிறார். இதனால் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்கிறோம்' என்றார். இப்போது பிந்து மாதவிக்கு பத¤லாக 'நீர் பறவை' படத்தில் சுனேனா நடிக்க உள்ளார்.
மருத்துவமனையில் இருந்து மனோரமா டிஸ்சார்ஜ்
பழம்பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா, மூட்டு வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சைப் பிரிவில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். பிறகு டீலக்ஸ் வார்டுக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்றார். உடல்நிலை தேறிய அவர், நேற்று மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பிறகு தி.நகரிலுள்ள வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். மனோரமாவை அவரது மகன் பூபதி உடனிருந்து கவனித்துக் கொள்கிறார்.